இந்தியாவில் மத்திய அரசின்கீழ் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 27% இடஒதுக்கீடும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு முறையே 15% மற்றும் 7.5% இடஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும்.
- எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் — விடுதலைக்குப்பின் 1948-ம் ஆண்டு முதலும்,
- எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்குக் கல்வியில் — அரசமைப்பின் முதல் சட்டத்திருத்தத்தின்படி 1951-ம் ஆண்டு முதலும்,
- ஓ.பி.சி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் — மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் 1992-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முதலும்,
- ஓ.பி.சி பிரிவினருக்குக் கல்வியில் – 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கையில் இடஒதுக்கீடு சட்டத்தின்படியும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு உரிமையை, இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தி வருகிறது; இருப்பினும் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும், மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படாது, அப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சமீபத்தில் தெரியவந்துள்ளது.
அகில இந்திய ஓ.பி.சி மாணவர் சங்கத்தின் தலைவரும், பிஎச்.டி ஆய்வறிஞருமான ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரண்குமார் என்பவர் 40 மத்திய பல்கலைக்கழகங்களில் தற்போதுவரை நியமிக்கப்பட்ட மற்றும் காலியாக உள்ள ஓ.பி.சி பிரிவு பேராசிரியர் இடங்களின் தகவல்களை அளிக்குமாறு, ஆர்டிஐ- சட்டத்தின் வாயிலாக ஆகஸ்ட் மாதம் கேட்டிருந்தார்.
அதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அளித்த தகவல்களின் படி பேராசிரியர், இணை பேராசிரியர், உதவிப் பேராசிரியர், என அனைத்து ஆசிரிய நிலைகளிலும், ஓ.பி.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கும், தற்போது பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கைக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதைப் பார்க்க முடிகிறது.
பேராசிரியர்களுக்கு 313 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 9 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இணைப் பேராசியர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட 735 இடங்களில் 38 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல், உதவி பேராசிரியர்களுக்கு 2,232 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,327 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 1,906 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பது ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால் இதைவிட அப்பட்டமான விதிமீறல் என்பது, ஓ.பி.சி பிரிவினருக்கு உண்மையாக ஒதுக்கப்பட்ட இடங்களில்தான் நடைபெற்றுள்ளது. இந்த நாற்பது பல்கலைக்கழகங்களில் உள்ள மொத்த இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடங்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கணக்கிடுவதன்மூலம் இந்த உண்மை புலப்படும்.
இது ஒருபுறமிருக்க 2018-ம் ஆண்டு ‘த பிரிண்ட்’ ஆங்கில பத்திரிகை ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட தகவலுக்குப் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-ம் ஆண்டுக் கணக்கின்படி 40 மத்திய பல்கலைக்கழகங்களில், 80%-க்கும் அதிகமான எஸ்.சி., எஸ்.டிகளுக்கான பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்திருந்தது; அதிலும் டெல்லி, அலகாபாத் பல்கலைக்கழகங்களில் 90%-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன.
அதே ஆண்டு ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) அளித்த பதிலில், 40 மத்திய பல்கலைக்கழகங்களில் நிரப்பப்பட்ட பேராசிரியர் இடங்களில் ஒற்றை இலக்க சதவிகிதத்திலேயே எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதும், அதுமட்டுமன்றி ஒரு இடம்கூட ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்படாமல் இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக ஆர்.டி.ஐ. தகவல்களைப் பெற்ற அகில இந்திய ஓ.பி.சி மாணவர் சங்கத் தலைவர் கிரண்குமாரைத் தொடர்பு கொண்ட போது, “தனக்குத் தெரிந்து ஓ.பி.சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரிதாகவே மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக இருப்பதைக் கண்டறிந்தபோதும், சில ஐ.ஐ.எம் துணைவேந்தர்கள் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதைத் தவிர்க்கும்படி வெளிப்படையாகவே கடிதம் மூலம் மத்திய அரசிற்குக் கோரிக்கை வைத்ததைக் கேள்விப்பட்ட போதும், உண்மையாகவே ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த எத்தனைபேர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பியே, இந்தத் தகவலை ஆர்.டி.ஐ மூலம் கேட்டேன்” என்று தெரிவித்தார்.
“அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல தனியார் பல்கலைக்கழகங்களில், பேராசிரியர் இடங்களை உயர்சாதியினரே பெருமளவு ஆக்கிரமித்திருப்பதாகவும், ஆரம்பநிலை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களான உதவிப் பேராசிரியர் இடங்களில் மட்டுமே இடஒதுக்கீடு நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு ஓ.பி.சி. பிரிவினர் ஓரளவிற்கு நியமிக்கப்படுகிறார்கள் ” என்றும் கிரண்குமார் கூறுகிறார்.
“பதவி உயர்வைத் தீர்மானிக்கும் இடங்களில் பொதுவாக உயர்சாதிகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் நிர்வாகிகளுமே இருப்பதால், வெகுசிலரே பதவி உயர்வு அடைகின்றனர்” என்று கூறும் கிரண், “பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வை இன்னும் சாதியவாதமே தீர்மானிக்கும் அவலநிலையில் நாம் இருப்பதையே இது காட்டுவதாக” வேதனை தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் ஒரு முக்கியமான ஒரு கருத்தை அவர் முன்வைத்தார்; அதாவது “குறிப்பிட்ட பல்கலைக்கழகம் பதவி உயர்வுக்ககான ஆசிரியர் இடங்களுக்கு மூன்று முறை வரை அறிவிப்பு செய்யும்; அப்போது அந்த ஒதுக்கீட்டு இடங்களுக்குப் போதுமான அளவில் ஆட்கள் வராத பட்சத்தில், அவ்விடங்கள் பொதுப்பிரிவிற்கு மாற்றப்படும்; இதை நாம் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் மத்திய பல்கலைக்கழகங்களிலும் உயர்சாதியினர் செலுத்தும் ஆதிக்கத்துடன் பொருத்திப் பார்க்கலாம். இவ்வாறாக ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களும் வாய்ப்புகளும் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றன” என ஆணித்தரமாகக் குற்றம் சாட்டுகிறார் கிரண்குமார்.
அவர் சொல்லிய குற்றச்சாட்டை எளிதாகக் கடந்துவிடமுடியாது; ஏனெனில் மேற்குறிப்பிட்ட ஆர்.டி.ஐ. தகவலில் மத்திய அமைச்சகமே 90%-க்கும் அதிகமான மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் இடங்களில் பொதுப் பிரிவினரே இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, கடந்த ஆண்டு ஜுன் மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், “மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களில் 6%-க்கும் குறைவான பேராசிரியர் இடங்களிலேயே ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதில் 3%க்கும் குறைவான இடங்களிலே எஸ்.டி., எஸ்.டி. பிரவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட துறையிலும் சரி, கல்வி நிறுவனத்திலும் சரி, எந்த அளவிற்குப் பன்முகத்தன்மை உள்ளதோ அந்தளவிற்கு அது செழுமையாக மேம்படும். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும், தங்களின் வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் அதிகாரப் பரவலிலும் உயர் பொறுப்புகளையும் அடையவேண்டும் என்பதை உறுதி செய்யவே இடஒதுக்கீடு நடைமுறை பல்வேறு தடைகளைத் தாண்டி, போராட்டத்தின் மூலம் பெறப்பட்டது. ஆனால், மத்திய கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அது குறிப்பிட்ட பிரவினரின் ஏகபோக கூடாரமாகவே காலங்காலமாக இருந்து வருகிறது. அது இன்றும் தொடர்கிறது என்பதையே தரவுகள் நமக்குத் தெளிவுப்படுத்துகின்றன.
ஆனாலும் ‘மெரிட்’ என்ற மோசடியான வார்த்தையைச் சொல்லியே, ஒருவருக்குத் திறமை இருந்தும் கடின உழைப்பைச் செலுத்தத் தயாராக இருந்தும், தகுதி இல்லையென்ற ஒரே காரணத்தையே திரும்பத் திரும்பச் சொல்லி, உயர்கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஜனநாயகப் பரவலை ஏற்படுத்த விடாமல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செவ்வனே செய்து வருகின்றனர்.
(கட்டுரையாளர் நவநீத கண்ணன் மருத்துவ இளங்கலை மாணவர்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.