Aran Sei

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு சாத்தியமா? – சீ.நவநீத கண்ணன்

மிழகம் உட்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு மூலமே மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு 3 ஆண்டுகள் கடந்து விட்டன.

“நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பதே அரசின் பிரதான நிலைப்பாடு” என்றும், அதையே மத்திய அரசுக்கு கோரிக்கையாக தொடர்ந்து வைத்து வருவதாகவும், நீட் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சட்டப் போராட்டம் நடத்தி வருவதாகவும் தமிழக அரசு தெரிவிக்கின்றது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்த நீட் எதிர்ப்பு சட்டம்-2017, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக குடியரசுத் தலைவர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தொடர்ந்து கூறிவந்தது; ஆனால்,  அந்தச் சட்டத்தை குடியரசுத் தலைவர் 2017-ம் ஆண்டிலேயே நிராகரித்து திருப்பி அனுப்பிவிட்டதாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டது.

மேலும், நீட் அமலான பின் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வது கணிசமான அளவு குறைந்துள்ளது; எடுத்துக்காட்டாக சென்ற 2019-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 17,630 மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர், அதில் 2,557 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் அடிப்படை தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தனர்- ஆனால் அதில் ஒரு மாணவர்கூட மருத்துவக் கல்லூரியில் சேரவில்லை; அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற கீர்த்தனா என்ற மாணவி மட்டும் 453 மதிப்பெண்கள் பெற்று, தனலட்சுமி சீனிவாசன் தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடத்தில் MBBS படித்துவருகிறார்.

மொத்தமாக, நீட் கட்டாயமாக்கப்பட்டப்பின் இதுவரை அரசுப் பள்ளி மாணவர்கள் வெறும் 14 பேர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களிலும் பெரும்பாலானோர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து ஓரிரு ஆண்டுகளில் பயிற்சி பெற்று சேர்ந்திருக்கவே அதிக வாய்ப்புண்டு.

ஆகவே அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையே நிலவும் இந்த மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை சரிசெய்யும் வண்ணம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக தனிச்சிறப்பாக ஒரு உள்ஒதுக்கீடு நடைமுறையை கொண்டுவருவதாகவும், நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு தேர்ச்சி பெறாமல் போவதற்கும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேராததற்குமான காரணங்களை ஆராயவும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கலையரசன் அவர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைப்பதாகவும்” அறிவித்தார்.

நீதிபதி கலையரசன் குழு நடத்திய ஆய்வின் முடிவில் “அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூக-பொருளாதார நிலையில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகவும், 2018-ம் ஆண்டில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களும், 2019-ம் ஆண்டில் 5 மாணவர்களும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் 2017-ம் ஆண்டில் நீட் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு அரசுப் பள்ளி மாணவர்கூட அரசு ஒதுக்கீட்டில் இடம்பெறவில்லை” என்பது தெரிவிக்கப்பட்டது.

“கடந்த 3 ஆண்டுகளில் 5 மாணவர்கள் மட்டுமே நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் 40% அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தும், மருத்துவ நிறுவனங்களில் மொத்த இடங்களில் வெறும் 0.1% மட்டுமே அவர்களுக்கு கிடைக்கிறது” எனவும் நீதிபதி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முதல் 10% வரை மொத்த இடங்களில் உள்ஒதுக்கீடு வழங்கலாம் எனவும் நீதிபதி கலையரசன் பரிந்துரை செய்திருந்தார்.

அதன்படி கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் “அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும், தனியாக 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வழிசெய்யும் சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது.

முடிந்தவரையில் அந்தச் சட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த உள்ஒதுக்கீடு ஏற்பாட்டின் சாதக – பாதகங்கள் என்ன?

11, 12-ம் வகுப்புகளில் மட்டும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இந்த உள்ஒதுக்கீடு கொடுக்காமல், 6 -ம் வகுப்புமுதல் 12-ம் வகுப்புவரை அரசு பள்ளிகளில் படித்த, மாணவர்களுக்கே இந்த ஒதுக்கீடு என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஏனெனில், வசதி படைத்தவர்களும் கூட, இந்த உள்ஒதுக்கீட்டை பெறுவதற்கு, தங்கள் பிள்ளைகளை 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் அரசுப் பள்ளியில் படிக்கச்செய்துவிட்டு, கூடவே தனியார் பயிற்சி நிறுவனங்களிலும் சேர்த்து பயிற்சி பெற வைத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த தனி உள்ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கும் அபாயம் இதன்மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் இந்த உள்ஒதுக்கீட்டில் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் அம்மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், தனியார் மருத்துவக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இதை விரிவுபடுத்தி இருப்பது பாராட்டத்தக்கது; ஆனால் தனியார் கல்லூரிகளில் வசூலிக்கும் பெருமளவு கட்டணத்தை (கல்வி, விடுதி மற்றும் இன்னபிற), அரசுப் பள்ளியில் படித்த மாணவரின் குடும்பத்தால் கட்ட இயலுமா என்பது கேள்விக்குறியே.

எனவே, இதனை கருத்தில் கொண்டு, இந்த உள்ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு அரசுக் கல்லூரியில் வாங்கும் அதே அளவு கட்டணத்தையே நிர்ணயிப்பதுதான் நியாமாக இருக்கும்; இல்லையேல் இந்த இடங்கள் பெருமளவு நிரப்பப்படாமல், பழைய நிலைக்கோ பொது பிரிவிற்கோ போகும் ஆபத்து உள்ளது.

நீட் அமலானபின் கடந்த 3 ஆண்டுகளில், வெறும் 14 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்துள்ளனர் என்று பார்த்தோம். நீட்டிற்கு முன் 2007 முதல் 2017 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆண்டிற்கு சராசரியாக 30-40 அரசுப் பள்ளி மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் மட்டுமே சேர்ந்து படித்துள்ளனர். ஆனால் இந்த உள்ஒதுக்கீடு அமலானால் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 230 அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் சூழல் ஏற்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி இடப்பங்கீடு:

தமிழ்நாட்டின் மொத்த அரசு மருத்துவக் கல்லூரிகள் : 23 + 3 (தமிழக அரசு நிர்வாகம் செலுத்தும்)
மொத்த அரசு மருத்துவ இடங்கள் : 3100 (15% அகில இந்திய தொகுப்பு போக)

7.5% உள்ஒதுக்கீடு அமல்படுத்தினால் 230 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும்.

பிரிவுவாரியாக தோராயமாக ஒதுக்கப்படும் இடங்கள்:

பொதுப் போட்டி (OC) 70
பிற்படுத்தப்பட்டோர் (BC) 60
பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்) BC(M) 9
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) 46
தாழ்த்தப்பட்டோர் (SC) 34
தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) SC(A) 7
பழங்குடியினர் (ST) 4

தனியார் மருத்துவக் கல்லூரி இடப்பங்கீடு:

மொத்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் : 15
மொத்த அரசு ஒதுக்கீட்டு இடங்கள் : 1365 (65%)
7.5% உள்ஒதுக்கீடு அமல்படுத்தினால் சுமார் 100 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு

மேலும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பாண்டு முதலே நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு; அது எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. ஏனெனில் அவற்றுள் சில கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

எனினும் நம்பிக்கைக்குரிய விதத்தில் அணுகினால், இந்த 11 மருத்துவக் கல்லூரிகளின் மூலம் 1400 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது; அதில் 7.5% அரசு பள்ளி உள்ஒதுக்கீட்டை கணக்கிட்டால், சுமார் 100 இடங்கள் கிடைக்கும். ஆகவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் சுமார் 330 (230+100) அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் பயில இந்த உள்ஒதுக்கீடு வழிசெய்யும்.

ஒரு அரசுப் பள்ளி மாணவருக்கு, நீட் தேர்வுக்கு முன்பான காலத்தில் மருத்துவ இடத்தைப் பெறுவதற்கான ஒரே வழியாக இருந்தது, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதே ஆகும்; ஆனால் தற்போது அதனுடன் சேர்த்து நீட் தேர்வுக்கும் தயாராகும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவரால் இயல்பாகவே தனியார் பள்ளி மாணவரோடு போட்டி போடுவது கடினம்; அதற்கு அந்த மாணவரின் கற்றல் திறன் தவிர்த்த, பல சமூக-பொருளாதார காரணங்களும் உள்ளன. இந்த உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதற்கு அரசு தரப்பில் சொல்லப்பட்ட காரணமும் இதுவே; “அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க இந்தத் திட்டம் வழிவகுக்கும்” என்பது. ஆனால் இந்த உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாலும், அரசுப் பள்ளி மாணவர்களிலும், பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களால் மட்டுமே பெரிதும் சோபிக்க முடியும்; அதையே சமீபத்திய நீட் தேர்வு சம்பந்தமான தரவுகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, கடந்த 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் 3,081 மாணவர்களில் வெறும் 48 மாணவர்கள் (அதாவது 1.6%) மட்டுமே தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறாமல் தங்கள் பள்ளிப்படிப்பின் துணை கொண்டும் சொந்த முயற்சியிலும் படித்து மருத்துவம் சேர்ந்தவர்கள்; மற்ற 3,033 மாணவர்கள் (98.4%) தங்கள் பள்ளியில் பயில்வது உட்பட கூடுதலாக பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று வந்துள்ளனர்.
அதிலும் ‘கோவை, தர்மபுரி, தூத்துக்குடி உட்பட 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில்’ பயிலும் அனைத்து மாணவர்களும் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயின்றே, தற்போது MBBS படித்துவருகின்றனர்.

ஆகவே மிகவும் சொற்பமான எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறாமல் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அரசு சார்பில் நடத்தப்படும் பயிற்சி மையங்களில் கற்பித்தல் போதுமானதாக இல்லை என்பதை, இதுவரை அரசு பயிற்சி மையத்தில் பயின்ற ஒரு மாணவர்கூட மருத்துவ படிப்பில் சேரவில்லை என்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

தமிழக அரசின் இந்த 7.5% இடஒதுக்கீடு ” சட்டப்பூர்வமான ஆய்வுகளுக்கு உட்பட்டு அரசமைப்பின்படி செல்லுபடியாகுமா” என்கிற நீதித்துறை சார்ந்த ஐயத்தை சட்டவல்லுநர்கள் எழுப்புகின்றனர். அதை புறந்தள்ளவும் முடியாது; ஏனெனில் 1997-ல் அப்போதைய முதல்வராக இருந்த மு. கருணாநிதி, கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவம், பொறியியல், சட்டம் உட்பட தொழில்முறை படிப்புகளுக்கு 15% சிறப்பு இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.

2001-ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெ. ஜெயலலிதா அதை 25% ஆக உயர்த்தினார்; ஆனால் அடுத்த ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம் “ஒருவர் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் யாருக்கும் தனித்துவமான சலுகைகள் வழங்க சட்டத்தில் இடமில்லை” என்று மேற்கோள்காட்டி, அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேமாதிரியான நிலை இதற்கும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுக்க முடியாது.

இறுதியாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிப்பதன்மூலம், அரசு தனது நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து விலகி, இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும், வடஇந்திய பெரும்பான்மை மையநீரோட்டத்துடனும் இணைவது வெளிப்படையாக தெரிகிறது. இதனால் மற்ற எதிர்கட்சிகள் மற்றும் அரசியல் இயக்கங்களின் நீட் எதிர்ப்புப் போராட்டத்தை திசைதிருப்பி நீர்த்துப்போகச் செய்யும் அபாயம் உள்ளது.

முரண்பாடுகளையும் சமத்துவமின்மையையும் மட்டுமே தேசம் முழுவதும் கற்பிக்கும், தூக்கிப்பிடிக்கும் நீட் என்ற இந்த தேர்வுமுறையிலிருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்காது, நாட்டின் அனைத்து மாநிலங்களும் எதிர்த்து முற்றுமுழுதாக ஒழித்துக்கட்ட வேண்டிய தார்மீக பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் உள்ளது.

அதுவே இந்த அநீதிக்கான நிரந்தரத் தீர்வாகும்.

(கட்டுரையாளர் மருத்துவ இளங்கலை மாணவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்