Aran Sei

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?

மீபத்தில் சில அரசு அதிகாரிகளும், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ( ஐ.ஐ.டி) இயக்குநர்களும், ‘ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை’ என்பதால் அவற்றின் பேராசிரியர் நியமனத்திற்கு இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சகத்திடம் தெரிவித்தனர். இந்த கல்விக்கூடங்களின் ‘உயர் தகுதியை’ தக்கவைத்துக் கொள்ள, இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும் என்றனர். இந்த அறிக்கை, இடஒதுக்கீட்டின் வழியே நியமிக்கப்படுபவர்கள் தகுதியற்றவர்களாக இருப்பார்கள், அதனால் ‘செயல்திறனில்’ சமரசம் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கும் என மறைமுகமாக சொல்கிறது. 

கடினமான நுழைவு தேர்வுகளை வைத்து, இந்தியா முழுக்க இருக்கும் புத்திசாலியான மாணவர்களை ஐ.ஐ.டிக்களும், ஐ.ஐ.எம்களும் தேர்ந்தெடுக்கிறது. இந்த இரண்டு கல்விக் கூடங்களும், உயர்தர கல்வி, பயிற்சி திட்டங்களுக்கு மட்டுமல்லாமல் தொழில்துறை ஜாம்பவான்களையும், சந்தை தலைவர்களையும் உருவாக்குவதற்கும் பிரபலமானவை. புது தாராளமய பொருளாதாரத்தில் இந்தியாவிற்கு ஒரு சர்வதேச பிம்பத்தை உண்டாக்க, இங்கிருந்து செல்லும் மாணவர்கள் உதவுகிறார்கள். மேலும் பலர், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும்,சர்வதேச அமைப்புகளிலும் வேலை செய்கிறார்கள். மாணவர்களின் கல்வித்திறனிலும், மதிப்பெண் தகுதியிலும் சமரசம் செய்து கொள்வதில்லை என இந்த கல்விக்கூடங்கள் அடிக்கடி வாக்குறுதியளிப்பதுண்டு. 

ராஜஸ்தான் : நீண்ட போராட்டத்திற்கு பின் குஜ்ஜார் மக்களுக்கு இட ஒதுக்கீடு

இதைவிட முக்கியமாக, ஒடுக்கப்பட்ட சமூகங்கள், இந்த கல்விக் கழகங்களில் பல்வேறு விதமான சாதி ஒடுக்குமுறை நடப்பதாகவும், அரசின் இட ஒதுக்கீட்டு திட்டத்தை இவர்கள் பின்பற்றுவதில்லை என்றும் சொல்லி வருகின்றன. சமூக நீதிக்கான திட்டங்களை பின்பற்றுவதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டால், உடனடியாக அது, அந்நிறுவனத்தின் ‘முதன்மையான கல்வி தரத்தை’ பாதித்துவிடும் என்று சொல்லும் ஐஐடி, ஐஐஎம் நிர்வாகம், அநியாயமான குற்றங்களை அலட்சியமாக நிராகரிப்பதுண்டு. பேராசிரியர் பதவிகளில் மேல்தட்டு மக்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என அந்த கல்விக்கூடங்கள் விரும்புகின்றன;  அவை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தகுதியுடையதாகவும் மாறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகளை, தவிர்க்கவே நினைக்கின்றன என்பதைதான் பரிந்துரை குழுவின் அறிக்கை சொல்கிறது. 

`இதுதாய்யா மநு நீதி’- இட ஒதுக்கீடு பிரச்சனையில் வலுக்கும் கண்டனங்கள்

சர்வதேச அளவிலான முதல் 200 கல்வி நிறுவனங்கள் எனும் பட்டியலில் மிகச் சில இந்திய கல்வி அமைப்புகளே வருகின்றன. நம்முடைய ஆய்வு கழகங்களுக்கும், பல்கலைகழகங்களுக்கும்  நேர்த்தியான உள்கட்டமைப்பு, வேலைச்சூழல், தரமான நூலகங்கள், பரிசோதனைக்கூடங்கள், பதிப்பகங்கள், அறிவுசார் சொத்துரிமைகளை பதிவு செய்யும் முறைகள் என முக்கியமான வசதிகள் இருப்பதில்லை. ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதிகளும், அரசிடம் இருந்து முக்கியமான உதவிகளும் வந்தாலுமே, சர்வதேச அளவில் அவற்றின் (21 ஐஐடி மற்றும் 20 ஐஐம்) தகுதி நிரூபிக்கப்படுவதில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், டெல்லி பல்கலைகழகம், TISS போன்ற கல்வி நிறுவனங்களின் பெயர்களும் உலகின் நூறு தலை சிறந்த கல்விக்கூடங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. 

ஆசிரியர் பணி மிகவும் மரியாதைக்குரிய ஒன்று. ஐஐடி போன்ற நிறுவனங்களில், பேராசிரியர்களின் தரம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால்,அவர்கள்தான் சர்வதேச அளவில் ஐஐடியை கொண்டு செல்லும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறார்கள். ஆனால், தொழில் நேர்மை, கல்விக்கடமையில் இருக்கும் ஈடுபாடு, தார்மீக கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு ஆசிரியரும் வேறுபடுவதுண்டு. வெகு சில ஆசிரியர்களே, அதீத புத்திசாலிகளாகவும், கற்பிக்கும் ஆர்வத்துடனும் இருப்பார்கள். 

புதிய கல்விக்கொள்கையில் ‘இடஒதுக்கீடு’ என்ற சொல்லே இடம் பெறாதது ஏன்? – சீதாராம் யெச்சூரி

சில ஆசிரியர்கள் நிர்வாக வேலைகளில் அதிக நேரம் செலவிடுவார்கள். மாணவர்களோடு நல்ல உறவை உருவாக்குவார்கள் அல்லது பொதுவாகவே கல்லூரி/பல்கலைகழக வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவார்கள். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் அறிவுசார் வளர்ச்சியையோ, அறநெறி சார்ந்த வளர்ச்சியையோ கண்டுகொள்ளாமல், ஆசிரியர் பணியை வெறும் வேலையாக மட்டுமே பார்ப்பார்கள். 

நீண்ட காலத்திற்கு ஆசிரியர் வேலை லாபகரமானதாக இருக்கவில்லை. குறிப்பாக, மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் நம்மை தீவிரமான ஆய்வாளர்களாக்குவதற்கோ, கற்பித்தல் ஒரு மேன்மையான பணி என பார்ப்பதற்கோ தயார் செய்வதில்லை. வேறு வேலைகளில் கிடைக்கும் வசதிகளையும், வருமானத்தையும் விட குறைவாகவே கிடைப்பதால் ஆசிரியர் வேலை பெரும்பாலும் இரண்டாம் தேர்வாகவே உள்ளது. 

இதனால் தான் வெளிநாட்டு நிறுவனங்களின் சந்தை, நம் பல்கலைகழகங்களைவிட திறமையானவர்களை கவர்ந்து கொள்கிறது; மீதம் இருக்கும் அறிஞர்கள், ஐஐடி உட்பட, பிற கல்வி நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். அறிஞர்கள், பேராசிரியர் வேலைகளிலும், ஆய்வுப்பணிகளும் ஏற்றுக் கொள்ளப்படாததால், கல்வி நிறுவனங்களின் தரம் பாதிக்கப்படுகிறது. 

பார்ப்பன மேலாதிக்கம்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமுக நீதி, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவது மற்றும் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படாதது என பல்வேறு பிரச்சினைகள் இந்நிறுவனங்களில் உள்ளன. உயர்நிலை கல்வி மற்றும் பேராசிரியர் பணிகளில் இடஒதுக்கீடு குறித்த பிரச்சினைகள் வரும் போது, அவை கல்வித் தரத்தையும், தகுதியையும் பாதிப்பதாக உள்ளது எனும் வாதங்களே முன் வைக்கப்படும். (உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வந்ததும், யூத் ஃபார் ஈக்வாலிட்டி [Youth For Equality] எனும் அமைப்பு, இடஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தியது நினைவுள்ளதா?)

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது – உச்ச நீதிமன்றம்

பட்டியலின மக்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை இந்த முதன்மை பணியிடங்களில் ஏற்றுக் கொள்வது, நிறுவனத்தின் தரத்தையும், தகுதியையும் பாதிக்கும் என்பார்கள். அதனால், இந்த மதிப்பிற்குரிய கல்வி நிறுவனங்களில் எல்லாம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டுமாம். மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை அனுமதித்தாலுமே, அதிகார நிலைகளில் இடஒதுக்கீடு இருப்பது பெரிய பாவமாகவே வெறுப்பாளர்களால் பார்க்கப்படுகிறது. 

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடு குறைப்பு – திருமாவளவன் கடும் கண்டனம்

ஐ.ஐ.டிக்களும், ஐ.ஐ.எம்களும், எய்ம்ஸும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கிறது. ஆனால், கல்வி நிறுவனங்களின் பிற பகுதிகளை பார்க்கும் போது, தலித்-பகுஜன் குழுக்கள் பேராசிரியர் பதவிகளிலும், வேறு நிர்வாக பதவிகளிலும் இல்லை என்பது தெரியும். ஐஐடிக்களில் இருக்கும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பேராசிரியர்களின் எண்ணிக்கை மூன்று சதவிகிதத்திற்கும் கீழ் தான். பேராசிரியர் மற்றும் நிர்வாக பொறுப்புகளில், தங்களை திறமைசாலிகளாக நினைத்துக் கொள்ளும் மேல்தட்டு மக்கள் மட்டுமே இருக்கிறார்கள். தலித்-பகுஜன் மக்கள் சம பங்குதாரர்களாக வரவே கூடாது என தடுத்துவிட்டு, அதிகார நிலைகளை ஒரே ஒரு சாதியினர் மட்டுமே கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். 

அரசு நிறுவனங்கள் ஜனநாயகமானவையாக, அனைவரையும் உள்ளடக்கியதாக, வேறுபட்ட சாதிப்பின்புலங்களை சேர்ந்தவர்கள் இருக்கக் கூடிய இடமாக மாற வேண்டும் என்பதற்காகவே இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், கல்வியின் கதவுகளை திறந்து  சென்று, அறிவுஜீவிகளின் வட்டத்தில் பங்காற்றுவதற்கு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலான நேரங்களில், இந்த மாணவர்கள் முதல் தலைமுறையாக கல்வியை பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். இதைப் போன்ற நிறுவனங்களில் பிழைத்துக் கொள்வதற்கான சமூக உதவியும், மன நல உதவியும் கிடைப்பதில்லை. 

ஐஐடி களில் இடஒதுக்கீடு ரத்து : அறிக்கையைக் குப்பையில் எறியுங்கள் – சு. வெங்கடேசன்

நிறைய தலித்-பகுஜன் மாணவர்கள், இந்தக் கல்வி நிறுவனங்களில் இருக்கும் மேலாதிக்க மேற்தட்டு மக்களால் நேரடியாக தீண்டாமைக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகிறார்கள். மாணவர்களும், ஆய்வாளர்களும் அவர்களுடைய பின் தங்கிய பின்புலத்தை வைத்து கிண்டல் செய்யப்படுகிறார்கள்; அவர்களுடைய மொழித் திறன்களுக்காக கிண்டல் செய்யப்படுகிறார்கள்; மேல்சாதி மாணவர்களோடு அல்லது பேராசிரியர்களோடு போட்டி போட்டால் தண்டிக்கப்படுகிறார்கள். 

சமூகத்தில் மேல்தட்டு மக்களாக இருப்பவர்களின் கலாச்சார மற்றும் சித்தாந்த கொள்கைகள்தான் பல்கலைகழக வளாகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த இடத்தில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் தலையிடும் போது, அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது வன்முறைக்கு ஆளாகிறார்கள். உதாரணமாக, மெட்ராஸ் ஐஐடியின் அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டத்தை கடந்த வருடம் பீமா கோராகான் வழக்குடன் இணைக்க கடந்த வருடம் முயற்சிகள் நடந்தது.

ஐஐடி பேராசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு தேவையில்லை – கல்வித் தரம் பாதிக்கும் என்று மத்தியக் குழு கருத்து

பின் தங்கிய சமூகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது, நேர்காணல்களில் அவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை நடைபெறுகிறது, கல்வித் தேவைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என தண்டனையளிக்கப்படுகிறது (தோரட் குழு அறிக்கையை பார்க்கவும்) என ஏகப்பட்ட செய்திகளும், குழு அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. தகுதி-அடிப்படையிலான இந்த கல்வி நிறுவனங்கள் சமூக நீதியை மறுப்பது கண்டுகொள்ளப்படுவதில்லை; தலித்-பகுஜன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலையை மேம்படுத்துவதற்கு எந்தத் திட்டமும் முன் வைக்கப்படுவதும் இல்லை. 

தகதி-அடிப்படையிலான, உள்ளடக்க நிறுவனங்கள் உருவாக…

ஆசிரியர்கள் பெரிய தாக்கத்தை உண்டாக்கக்கூடியவர்கள். இந்து சாதி அமைப்பில், பிராமணர்களுக்கு மட்டும்தான் கல்வி கற்பிப்பதற்கும், ‘குரு’ ஆவதற்கும் உரிமை இருந்தது. மற்ற சாதிகள் ஆசிரியரிடம் இருந்து கற்றுக் கொள்ள மட்டுமே முடியும். பெண்கள், சூத்திரர்கள், தீண்டத்தகாத சாதிகளை சேர்ந்தவர்களுக்கு கல்வி கற்பிக்க மட்டுமல்ல, கற்கவும் தடை இருந்தது ( ஏகலைவா, சம்புக் கதைகள்). எந்த ஆலோசனையும், விவாதமும் இல்லாமல் மேல்தட்டு மக்களுக்கு சேவை செய்வது மட்டும் தான் அவர்களுடைய முக்கியப் பணி. 

நவீன காலத்தில், இதைப் போன்ற வழக்கங்கள் சீர்திருத்தப்பட்டன. ஆனால், உயர்கல்வி நிலைகளில் மேல்தட்டு மக்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் ,ஆதிக்க நிலையில் உள்ளனர், மற்ற சமூகங்களை சேர்ந்தவர்கள் வெளியே இருக்கிறார்கள். நம் கல்வி அமைப்புகளின் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். 

சின்னப்பம்பட்டி டூ சிட்னி – கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு அவசியமா? – நவநீத கண்ணன்

இப்போதைய அரசுகள் தயாரித்திருக்கும் புது பொருளாதார திட்டம், உயர்கல்வியில் சமூக நீதி திட்டங்கள் அமல் செய்யப்படும் என்பதற்கு உறுதியளிக்கவில்லை; சந்தைக்கு ஏற்றது போல கல்வி நிறுவனங்களை தயார் செய்வதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை மட்டும் தான் அப்பட்டமாக காண்பிக்கிறது. இந்நிறுவனங்களில் கலந்திருக்கும் வரலாற்று தவறுகளை சரி செய்யாமல், என்ன திட்டங்களை கொண்டு வந்தாலும் அது செயல்படாது.  ‘தகுதியான’ பேராசிரியர்களை தேர்ந்தெடுக்கவும், சமூக ரீதியில் அனைவரையும் உள்ளடக்கிய நிறுவனமாக மாற்றவும் ஒருசேர வேலை செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. 

ஐஐடியில் இடஒதுக்கீடு மறுப்பு `மநு’வை நடைமுறைப்படுத்தும் திட்டம் – திருமுருகன் காந்தி

ஆசிரியர் மற்றும் நிர்வாக பொறுப்புகளில் திறமையானவர்களை கவர்வதற்காக அனைத்து நிறுவனங்களிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம். கல்வி நிறுவனங்கள் உண்மையாகவே அனைவருக்குமானதாகவும், ஜனநாயகமானவையாகவும் இருக்க, சமூக நீதி கொள்கைகளை மதித்து, நடைமுறை செய்ய வேண்டியதும் அவசியம். இவை இரண்டையும் செய்யாமல், ஐஐடிகள், ஐஐஎம்கள் எல்லாம் “திறமையும், அறிவும்” இருக்குமிடம் என்பது, வெறும் பேச்சாக மட்டுமே இருக்கும். 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்