Aran Sei

பாகிஸ்தான் மக்களை அவதூறாக பேசிய குற்றச்சாட்டு – ரிபப்ளிக் சேனலுக்கு அபராதம் விதிப்பு

பாகிஸ்தான் மக்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் விதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பியதற்காக, ரிபப்ளிக் குழுமத்தின் இந்தி தொலைகாட்சியான, ரிபப்ளிக் பாரத்திற்கு , இங்கிலாந்து தொலைக்காட்சி ஒழுங்குமுறை நிறுவனம் ஆஃப்காம், சுமார் 18 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஒளிபரப்பு, தொலைதொடர்பு மற்றும் அஞ்சல் துறைகளை மேற்பார்வை செய்யும் இங்கிலாந்து அரசின் அங்கீகாரம் பெற்ற மக்கள் தொடர்புத் துறை ( Office of Communications) அலுவலகமே ஆஃப்காம்  (OfCom)என்றழைக்கப்படுகிறது.

ஆஃப்காம் வெளியிட்ட விரிவான அறிக்கையில், ரிபப்ளிக் பாரத் வெளியிட்ட, அர்னாப் கோஸ்வாமி நடத்தும் ‘பூச்தா ஹே பாரத்’ எனும் நிகழ்ச்சி, ஆஃப்காமின் ஒளிபரப்பு விதிமுறைகளை மீறியதாக குறிப்பிட்டுள்ளது.

2019 , செப்டம்பர் ஆறாம் தேதி ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில்,  “நிகழ்ச்சியை தொகுத்தவர் மற்றும் அவருடைய விருந்தினர்கள் தெரிவித்த கருத்துக்கள், பாகிஸ்தான் மக்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும், பாகிஸ்தான் மக்களை அவமரியாதை செய்வதாகவும்  இருந்தது. அக்கருத்துகள் பாகிஸ்தான் மக்களின் உணர்வை புண்படுத்துவதாக இருந்தது. பேசுபொருளுக்கு தொடர்புடையதாகவும் இல்லை” என ஆஃப்காம் தெரிவித்துள்ளது.

டிஆர்பி முறைகேடு வழக்கு – ரிபப்ளிக் டிவி நிர்வாகிக்கு மூன்றே நாளில் ஜாமீன்

இந்தியா, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியதை பாகிஸ்தான் விமர்சித்துக் கொண்டிருந்த சமயத்தில் இது நடந்துள்ளது. இருப்பினும், ரிபப்ளிக் பாரத் செய்தது தவறு தான் என்கிறது ஆஃப்காம்.

செப்டம்பர் ஆறாம் தேதி, குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்னரே, ரிபப்ளிக் தொலைக்காட்சி “பாகிஸ்தான் மக்களை தொடர்ந்து இழிவு செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதாக, குறிப்பாக அம்மக்களை அருவருப்பானவர்கள்” என்று சொல்வதாக பல புகார்கள் ஏற்கனவே எழுந்துவிட்டதாக ஆஃப்காம் ரிபப்ளிக் தொலைக்காட்சியை எச்சரித்துள்ளது.

ரிபப்ளிக் பாரத்தை இங்கிலாந்தில் ஒளிபரப்பும் உரிமைதாரரான, வேர்ல்டு வ்யூ மீடியா நெட்வொர்க் லிமிடெட் ( World View Media Network Ltd.,), ஆஃப்காமின் அறிக்கையை, தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரிபப்ளிக் பாரத்தின் குறிப்பிட்ட நிகழ்ச்சியை மீண்டும் இங்கிலாந்தில் ஒளிபரப்ப தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் நிகழ்ச்சியில்,  இந்தியாவின் சந்திராயன் திட்டம் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. விவாதம், ஒரு கட்டத்தில், இந்தியா விண்வெளி அறிவியல் துறையில் முன்னேறியிருப்பதாகவும், பாகிஸ்தான் பின் தங்கியிருப்பதாகவும், அந்நாட்டை அவமரியாதை செய்யும் கோணத்தில் சென்றது.

இந்த நிகழ்ச்சியில், மேஜர் கௌரவ் ஆர்யா, மேஜர் ஜெனரல் கே.கே.சின்ஹா, பாஜகவின் பிரேம் சுக்ளா ஆகியோரும் பாகிஸ்தானின் ஒமர் இனாம் மற்றும் ஒமர் அல்தாஃப் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் ஆஃப்காமால் அடையாளம் காணப்படாத  பாகிஸ்தான் விருந்தினர் ஒருவர் நிகழ்வில் பங்கேற்றதாகவும், நிகழ்ச்சியில் அவர் பேச இடம் தரப்படவில்லையெனவும் ஆஃப்காமின் அறிக்கை தெரிவிக்கிறது.

டிஆர்பி வழக்கில் ரிபப்ளிக் டிவியைக் காப்பாற்ற முயல்கிறதா யோகி ஆதித்யநாத் அரசாங்கம்?

“நிகழ்ச்சி தொகுப்பாளரும் இந்திய பேச்சாளர்களும் மட்டுமே விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தினர். பாகிஸ்தான் பேச்சாளர்கள் பதிலளிக்க முயன்ற போதெல்லாம், தொகுப்பாளர்களும் இந்திய பேச்சாளர்களும் அவர்களை நோக்கி சத்தம் போட்டு அவர்களை பேச விடாமல் செய்தனர்” என்கிறது ஆஃப்காம்.

நிகழ்ச்சி விவரங்களை தொகுத்து எழுதியவரை, குழம்ப செய்யும் அளவு கலவரமாக இருந்த விவாதத்தில் , “பாகிஸ்தானில் உள்ள சில குழுக்களாலும், குறிப்பிட்ட மக்களாலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதாக அல்லாமல், அத்தனை பாகிஸ்தான் மக்களும் இந்தியாவிற்கும் பிறருக்கும் அச்சுறுத்தல் தான் எனும் தொனியில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன” என்று ஆஃப்காம் சொல்கிறது.

தொகுப்பாளர் கோஸ்வாமி உட்பட பிற விருந்தினர்கள், “அனைத்து பாகிஸ்தான் மக்களும் பயங்கரவாதிகள். அவர்களுடைய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் என அத்தனை பேரும் பயங்கரவாதிகள். அவர்களுடைய விளையாட்டு வீரர்களும், ஒவ்வொரு குழந்தையும் தீவிரவாதி தான். ஒவ்வொரு குழந்தையும் தீவிரவாதி. பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நிறுவனம்.” என்றனர். ஒரு பேச்சாளர் பாகிஸ்தான் விஞ்ஞானிகள் எல்லோரும் திருடர்கள் என்றார். மற்றொருவர் பாகிஸ்தான் மக்கள் பிச்சைகாரர்கள் என்றார்” என ஆஃப்காம் குறிப்பில் தெரிவித்துள்ளது.

“பாகிஸ்தான் மக்களுக்கு எதிரான சகிப்பின்மையை இந்த நிகழ்ச்சி பரப்பியது, விளம்பரப்படுதியது, நியாயப்படுத்தியது” என்றும் ஆஃப்காம் சொல்கிறது. இதனால், ஒளிபரப்பு விதிமுறைகளை ரிபப்ளிக் பாரத் மீறியுள்ளது என்கிறது ஆஃப்காம்.

‘ரிபப்ளிக் டிவி பொய்யான தகவலைப் பரப்புகிறது’ – அர்னாப் மீது பிஏஆர்சி குற்றச்சாட்டு

விதிமுறை 3.2 : “வெறுப்பு பேச்சு உள்ள நிகழ்வுகள், தொலைக்காட்சியிலும், நிகழ்ச்சிகளிலும் இருக்கக் கூடாது. பேசுபொருளுக்கு தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே அது அனுமதிக்கப்படும்”

விதிமுறை 3.3 : “தனி நபர்கள், குழுக்கள், மதங்கள் அல்லது இனங்களை இழிவுபடுத்தும் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் அனுமதிக்கப்படாது”

விதிமுறை 2.3 : ”ஒளிபரப்பு செய்பவர்கள், உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கும் கருத்துக்கள், பேசுபொருளுக்கு தொடர்புடையதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.. இழிவு செய்யும்படியான மொழி, மத மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒடுக்குமுறையான அணுகுமுறை அல்லது பேச்சு ஆகியவை பேசுபொருளுக்கு தொடர்புடையதாக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை இழிவு செய்யாமல் இருக்கும் நோக்கில், தேவையான தகவல்களையும் நிகழ்ச்சியோடு ஒளிபரப்பு செய்ய வேண்டும்”

எந்த நாட்டையோ, அதன் குடிமக்களையோ விமர்சனம் செய்யக் கூடாதென விதிமுறைகள் சொல்லவில்லை. மாறாக, விமர்சனம் எனும் பெயரில் மக்களை இழிவு செய்யக் கூடாது என்று ஆஃப்காம் சொல்கிறது.

தொடர்ந்து இழிவு செய்யப்படும் பாகிஸ்தான் 

அர்னாப் கோஸ்வாமியின் நிகழ்ச்சி குறித்து விரிவான பதிவுகளை ஆஃப்காம் முன் வைக்கிறது. இந்தி விவாதத்தை மொழிப்பெயர்ப்பு செய்திருப்பதாகவும், ரிபப்ளிக் தொலைக்காட்சி மொழிப்பெயர்ப்பை ஏற்றுக் கொள்ளாத பகுதிகளில், இந்தி பகுதிகளை அப்படியே சேர்த்திருப்பதாகவும் ஆஃப்காம் குறிப்பிட்டுள்ளது.

ஆஃப்காம் ஃபெப்ரவரி மாதம் அளித்த எச்சரிக்கை அறிவிப்பிற்கு பதிலளித்த ரிபப்ளிக் தொலைக்காட்சி,  குறிப்பிட்ட விவாத நிகழ்ச்சி உணர்வு பெருக்கில் நடைபெற்றதாகவும், எந்த விதத்திலும் பயங்கரவாதத்தையோ, வெறுப்பையோ விளம்பரப்படுத்தவில்லை என்றும், குறிப்பாக வெறுப்பை விளம்பரப்படுத்தவோ, நியாயப்படுத்தவோ இல்லை என்று கூறியது.

ஆனால், நிகழ்ச்சியின் எழுத்துப்படியை பார்க்கும் போது, பாகுபாடான பேச்சும், இழிவு செய்யும் தொனியும் இருப்பது தெளிவாக தெரிகிறது.

குறிப்பாக மேஜர் கௌரவ் ஆர்யா பேசும்போது, “அர்னாப், குறிப்பாக பாகிஸ்தான் எனும் வார்த்தையே உலகில் கெட்ட வார்த்தையாகி விட்டது… அந்த வார்த்தையே இழிவான வார்த்தையாகிவிட்டது. அவர்கள் பச்சை பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு போகும் போது, அவர்களை உடைகளை களைந்து சோதனை நடத்துகிறார்கள். அவர்களுடைய முன்னால் பிரதமரை அமெரிக்கர்கள் இப்படி சோதனை செய்தார்கள். இது தான் ஒரு பாகிஸ்தான் பாஸ்போர்ட்டின் மதிப்பு. இன்று, பாகிஸ்தானி எனும் வார்த்தை, உலகில் கெட்ட வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானி என்பது இப்போது ஒரு இனத்தையோ, ஒரு நாட்டையோ குறிப்பது அல்ல. அது இப்போது ஒரு கெட்ட வார்த்தை.. பாக்கி என்று மக்கள் சொல்கிறார்கள்.. பாக்கி எனும் வார்த்தை ஒரு கெட்ட வார்த்தை. அமெரிக்காவிற்கோ, ஐரோப்பாவிற்கோ போகும் போது அந்த வார்த்தையை பயன்படுத்தினால், அது அவமானத்திற்குரிய வார்த்தையாக இருக்கிறது. அது இழிவான வார்த்தையாக இருக்கிறது. அவர்களுக்கு தெரியவில்லை.” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ரிபப்ளிக் நிறுவனம்,  ‘பாக்கி’ என சொன்னது இழிவு செய்யும் நோக்கில் சொல்லப்படவில்லை எனவும், “பாகிஸ்தான் மக்களை குறிக்க” சொல்லப்பட்டது எனவும் தெரிவித்ததாக ஆஃப்காம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வார்த்தை இழிவு செய்யும் வார்த்தை இல்லையெனவும், பாகிஸ்தான் மக்களை அந்த வார்த்தையை மீட்டெடுத்து பயன்படுத்துகிறார்கள் எனவும் ரிபப்ளிக் நிறுவனம் கூறியுள்ளது. இதை ஆஃப்காம் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும், ஆஃப்காம் வெறுப்பு பேச்சு என குறிப்பிட்டுள்ளவை பலவும் உருவகங்கள் தான், அவற்றுக்கு நேரடியான அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது, அது ஆசிய பார்வையாளர்களுக்கு புரியும் எனவும் ரிபப்ளிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில், பிரேம் சுக்ளா பாகிஸ்தான் மக்களை கழுதைகளோடு மேம்போக்காக ஒப்பிட்டு பேசியது குறிப்பிடப்பட வேண்டியது.

“இங்கே பாருங்கள் அர்னாப், ஒரு கழுதையிடம் சென்று அறிவியல் பேசினால், உதைப்பதை தவிர வேறென்ன செய்யும்? பாகிஸ்தான் கழுதைகளின் நாடு. அவர்களுக்கும் விண்வெளி அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் விருந்தினர்கள் இந்திய விண்வெளி சாதனைகள் குறித்து உயர்வாகவே பேசிக் கொண்டிருந்தனர்.  இருப்பினும், ஒரு கட்டத்தில் நிகழ்ச்சி பாகிஸ்தானுக்கு போர் மிரட்டல் கொடுக்கும் நிலைக்கு சென்றது.

உதாரணமாக ஜெனரல் சின்ஹா, “ என்ன? நீங்கள் ஒரு செயற்கை சிங்கம். எதற்கும் உதவாத மக்கள். பிச்சைக்காரர்கள். 1.25 கிலோ, .75 கிலோ, இரண்டடிகளை (குண்டு) வைத்து உங்களை நாசம் செய்து விடுவோம். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீருக்கு நாங்கள் வருகிறோம்.கைபர் பக்துன்க்வாவிற்கு, கில்ஜித், பல்திஸ்தானிற்கு நாங்கள் வருகிறோம். நாங்கள் வருவோம், தயாராக இருங்கள். இந்திய இராணுவம் வந்து விடுமென உங்கள் மக்கள் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். பலுச்சிஸ்தானுக்கு, கைபர் பக்துன்கவாவிற்கும், காரச்சிக்கு, உங்கள் பகுதிக்கு, முல்தானிற்கும் ராவல்பிண்டிக்கும் வந்து உங்கள் வீட்டில் புகுந்து உங்களை கொல்வோம். எங்களிடம் கட்டுப்பாடு இருக்கும் போது லாகூரில் இருந்து, கராச்சியில் இருந்து கில்ஜித் – பல்திஸ்தான் வரை வருவோம்” என்றார்.

ஆஃப்காம் வெளியிட்டுள்ள ஆணையில், விதிமுறைகளை மீறியதற்காக இதற்கு முன் விதிக்கப்பட்ட அபராதங்களை பட்டியலிட்டுள்ளது. ஓர்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் யூத மக்களுக்கு எதிராக வெறுப்பை விதைத்த கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

ஆஃப்காம் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகளில் இரண்டு, சமாதானம் டிவியுடன் ( Peace TV ) தொடர்புடையது. இந்த சேனலை நடத்துவது மலேசியாவை சேர்ந்த மத பிரச்சாரகரான சாகீர் நாயக். இவருக்கு எதிராக இந்தியாவில் வழக்கு உள்ளது.

இஸ்லாமை விட்டு நீங்கினால் அதற்கான தண்டனை மரணம் மட்டுமே என இஸ்லாம் சொல்வதாக சமாதானம் டிவி தெரிவித்தது தொடர்பாகவே முதல் வழக்கு. இது பேசுபொருளுக்கு தொடர்பில்லாத வெறுப்பு பேச்சு என்ற ஆஃப்காம், விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுப்பதாக சேனல் தெரிவித்ததால், எந்த அபராதமும் தண்டனையும் விதிக்கவில்லை.

ஆனால், வேறொரு நிகழ்ச்சிக்காக சமாதானம் டிவிக்கு ஒரு லட்சம் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நிகழ்வில் இமாம் ஒருவர், “எந்த மத புத்தகத்தின் கருத்தோடும் தொடர்பில்லாமல் தொடர்ந்து ஓர்பால் ஈர்ப்பை தாக்கிக் கொண்டிருந்தார், அநாவசியமாக, திரும்ப திரும்ப சொல்லப்பட்ட கருத்துக்கள் புண்படுத்துபவையாக இருந்தன” என்று ஆஃப்காம் தெரிவிக்கிறது.

ரிபப்ளிக் பாரத்தின் இங்கிலாந்து உரிமதாரர், ரிபப்ளிக்கின் வழக்கு சமாதானம் டிவின் முதல் வழக்கு போலவே உள்ளது எனவும், அதற்கு தண்டனை வழங்கப்படாதது போல தங்களுக்கும் தண்டனை வழங்கப்படக் கூடாது எனவும் வாதிட்டுள்ளார். ஆனால், ஆஃப்காம் நிறுவனமோ, “அபராதத்தை கருத்தில் வைக்கும் போது நிகழ்ச்சியின் அளவும், வருவாயும் கணக்கில் எடுக்கப்படும்” என்று தெரிவித்து, அந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆஃப்காம், ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சிக்கு விதிமீறல் குறித்து எச்சரிக்கை அளிப்பது இது முதல் முறை அல்ல.

ஜனவரி மாதத்தில், கோரக்பூர் விபத்தின் வீடியோ காட்சியை ஒளிபரப்பியது, குழந்தைகளை பாதிக்கக் கூடிய வன்முறையான காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது எனும் விதிமுறையை மீறுவதாக இருந்ததென ஆஃப்காம் முடிவு செய்தது.

அதற்கு ஒரு மாதம் பிறகு, இரண்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் மடிக்கணினியில் ஒரு நிதிமாற்று விநியோக நிறுவனத்தின் லோகோ , புல்லட் 100, தெரியும்படி இருந்தது விதிமுறை 9.5-ஐ மீறுவதாக இருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. அதே மாதத்தில்,  நிகழ்ச்சி விதிமீறலாக இருக்கிறதென ஆஃப்காம் முதல் எச்சரிக்கையை வெளியிட்டது. அதற்காக அபராதம் விதிக்கப்படலாம் எனவும் ஆஃப்காம் தெரிவித்தது.

“இந்த வழக்கில், குழுக்களுக்கும் இனங்களுக்கு எதிரான, பேசுபொருளோடு தொடர்பில்லாத வெறுப்பும், தாக்குதலும், அவமரியாதையான அணுகுமுறையும் தீவிரமாக உள்ளதாக கருதினோம். இந்த விதிமீறல்களால் அபராதம் விதிக்கப்படலாம் என உரிமதாரருக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளோம்” என ஆஃப்காம் தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்கள் கழித்து, மீண்டும், ரிபப்ளிக் பாரத் விதிமீறல் செய்ததாக ஆஃப்காம் குற்றம் சாட்டியது, அந்த குறிப்பில், “இந்திய பேச்சாளர்கள் முன் வைத்த கருத்துக்களுக்கு எதிர்கருத்துக்களை தொகுப்பாளர் வைக்கவில்லை, மேலும், பேசுபொருளுக்கும் கருத்துகளுக்கும் உள்ள தொடர்பையும் விளக்கவில்லை. மாறாக, பேச்சாளர்களை ஊக்குவித்து, அவர்கள் கருத்தை ஆதரித்தார். இதனால் நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் மற்றும் தொகுப்பாளர் வைத்த அவமரியாதையான, தாக்குதலான கருத்துக்களின் தாக்கம் அதிகமாக இருந்தது என நாங்கள் கருதுகிறோம்” என ஆஃப்காம் தெரிவித்தது.

இந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டிற்காக எந்த அபராதமும், தண்டனையும் அறிவிக்கப்படவில்லை.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்