Aran Sei

எஸ்.சி பட்டியலிலிருந்து நீக்குக: தேவேந்திர குல வேளாளர்கள் போராட்டம்

credit: புதிய தமிழகம் கட்சி

தேவேந்திர குல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் சாதிகள் பட்டியிலிருந்து தேவேந்திர குல வேளாளர்களை வெளியேற்ற கோரி இன்று புதிய தமிழகம் கட்சி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறது.

காலை ஒன்பது மணிக்கு தொடங்கி போராட்டம், தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் தொடங்கி பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் வரையில் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

தேவேந்திர குல வேளாளர் அரசாணைக் கோரியும் பட்டியல் சாதிகள் பட்டியலிலிருந்து நீக்கக் கோரியும் பல ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேசி வருகிறார்.

இது குறித்து தமிழர் தேசிய கழகத்தின் தலைவர் மு.கா.வையவனுடன் அரண்செய் பேசியபோது, “தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு சாதி பெயர்களில் பிரிந்து கிடக்கும் தேவேந்திர குல வேளாளர் மக்களை, ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில்  தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட வேண்டும் என்பது தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட கால கோரிக்கை” என்று தெரிவித்தார்.

“இந்தியாவில் நிலவக்கூடிய தேர்தல் ஜனநாயகத்தில் வாக்கு எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பாம்மைவாத அரசியலே நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படையாக சாதியும் மதமும் இருக்கிறது. வெவ்வேறு சாதி பெயர்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர்கள் இருப்பதினால், அவர்களுக்கு பிரதிநிதித்துவம் முழுமையாக கிடைக்காமல் இருக்கிறது” என்று வையவன் கூறினார்.

“தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர்கள் இருக்கின்றார்கள். தேவேந்திர குல வேளாளர் பிரிவில் உள்ள ஒரு சாதியான பள்ளர் என்ற சாதியை மட்டும் எடுத்துக்கொண்டு தேவேந்திர குல வேளாளர்களின் எண்ணிக்கை 25 லட்சம் என்று கணக்கிடப்படுகிறது. உண்மையில், இச்சாதி 80 முதல் 90 லட்சம் வரையில் மக்கள் தொகையை கொண்டுள்ளது. இவர்கள் அனைவரையும் தேவேந்திர குல வேளாளராக அறிவிக்கும் பட்சத்தில், இவர்களுக்கு இன்னும் பெரியளவுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும்.”

“பட்டியலிருந்து தேவேந்திர குல வேளாளர்கள் வெளியேறினால் அவர்கள் நன்மை பெறும் நன்மை என்ன?” என்ற கேள்விக்கு, “சாதிகள் அடிப்படையில்தான் இழிவுகள் இருக்கிறது. சாதிகளை தொகுப்பாக்கி பட்டியலாக மாற்றும் போது, அந்தப் பட்டியலுக்கும் அந்த இழிவுகள் வந்துவிடுகின்றன”.

“இந்தப் பட்டியலில் இருப்பதினால், தேவேந்திர குல வேளாளர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் சற்றே முன்னுக்கு வந்திருந்தாலும் வணிகம், பொருளாதாரம் சார்ந்து போகும்போது இந்த பட்டியலில் இருப்பது மிகப்பெரிய தடையாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக: பட்டியலில் இருப்பதினால் வங்கியில் கடன் பெறுவது சிரமமாக இருக்கிறது. கடன் பெறுவதற்கு பிணையம் (surety) கொடுத்தாலும் கூட வங்கிகள் ஏதாவது ஒரு காரணம் காட்டு தட்டிக்கழிக்கின்றன. எனவே, பட்டியலிலிருந்து நீக்கினால் நிலைமை நிச்சயமாக மாறும்” என்று கருதுவதாக மு.கா.வையவன் தெரிவித்தார்.

பட்டியலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கை பற்றியும் பட்டியலில் இருப்பதினால் தங்களுக்கு லாபம் ஒன்றுமில்லை என்று வைக்கப்படும் வாதம் பற்றியும் தலித் முரசு இதழாசிரியர் புனித பாண்டியனுடன் அரண்செய் பேசியபோது, “பட்டியல் கொண்டு வரப்பட்டு ஒரு நூற்றாண்டு காலம் இருக்கும். சாதி ஒரு நூற்றாண்டு காலமாகத்தான் இருக்கிறதா? சாதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. பட்டியல் கொண்டு வருவதற்கு முன்பு சாதி இருந்ததா? இல்லையா?” என்ற கேள்வியை எழுப்பினார்.

“சாதியால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தீண்டத்தகாதவர்களாக வைக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்குவதே பட்டியல். அதாவது, பிற்படுத்தப்பட்டதன்மையையும் தீண்டாமையையும் போக்குவதற்குதான் பட்டியல் உருவாக்கப்பட்டது.”

“பட்டியலுக்குள் இருக்கும் சாதிகள் பட்டியலினால் இழிவுபடுத்தவில்லை மாறாக அவர்கள் பட்டியலினால் உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுக்கால அநீதிக்கு கடந்த ஒரு நூற்றாண்டுகளாக நீதி வழங்கப்பட்டு வருகிறது.”

“பட்டியல் சாதிகள் என்பது அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமை. பட்டியல் சாதிக்குள் இருக்க விருப்பமில்லாதவர்கள் தங்களது சாதி சான்றிதழை கிழித்து தூரப்போடலாம். இது பட்டியலிலிருந்து வெளியேறுவதற்கான எளிமையான வழி. அனைத்து மக்களையும் பட்டியலிலிருந்து வெளியேற கூறுவதில் அர்த்தமில்லை.”

“ஒருபுறம் தேவேந்திர குல வேளாளர்கள் தங்களை பட்டியலை விட்டு வெளியேற்றுங்கள் என்று கூறுகிறார்கள். மறுபுறம், ஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம் என்றும் ஒரு முழக்கம் மேலெழுந்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது தலித் அரசியல் முன்னோக்கி செல்லுகிறதா? அல்லது பின்னோக்கி செல்லுகிறதா?” என்ற கேள்விக்கு, “பின்னோக்கி செல்லுகிறது” என்று தலித் முரசு இதழாசிரியர் தெரிவித்தார்.

புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி தனது ’Capital and Ideology’ என்ற நூலில், அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர்களுக்கும் வெள்ளை இனத்தவர்களுக்கு இடையில் நிலவக்கூடிய ஏற்றாதாழ்வை காட்டிலும் இந்தியாவில் தலித்களுக்கும் பிற மக்களுக்கும் இடையில் குறைவான வேறுபாடே நிலவுகிறது. இதற்கு இந்தியாவில் நடைமுறை செய்யப்பட்டுவரும் இட ஒதுக்கீடு முறை முக்கியமான பங்களிப்பு செய்கிறது என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்