”நீங்கள் நீதிமன்றம் சென்றால், உங்களுக்கு நீதி கிடைக்காது. அங்கு தொடர்ந்து செல்வதால் உங்கள் துணி அழுக்காகி, துணியைத் தான் வெளுக்க முடியும். இவ்வாறு கூறுவதில் எனக்கு தயக்கமில்லை. யார் இப்போது நீதிமன்றம் செல்கிறார்கள்? நீதிமன்றம் சென்றால், ஏன் அங்கு சென்றோம் என்று நீங்கள் வருத்தம் தான் அடைவீர்கள். நீங்கள் ஒரு கார்ப்பரேட்டாக இருந்தால் நீதிமன்றம் செல்லலாம்” என முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளாது.
இந்தியா டுடே நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் ”கான்கேலவ்” நிகழ்ச்சியியின், 2021 ஆம் ஆண்டு நிகழ்வில், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் கலந்துக் கொண்டுள்ளார். அந்த நிகழ்வில், மத்திய பாஜக அரசு ரஞ்சன் கோகாயை மாநிலங்களைவை உறுப்பினராக்கியது, அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு என அவரைச் சுற்றியிருக்கும் பல்வேறு சர்ச்சைகள் பற்றியும், இந்தியாவின் நீதித்துறைப் பற்றியும் அவர் நடத்திய உரையாடலின் சிறு பகுதி.
“நரேந்திர மோடி அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்ததா ? எனும் எழுப்பபட்ட கேள்விக்குப் பதிலளித்த கோகாய், ”நான் அவர்களிடம் (பாஜக அரசு) எதாவது பெற வேண்டுமென்றால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியையா கேட்டிருப்பேன்? அவர்களிடம் பேரம் பேசும் வாய்ப்பிருந்தால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கேட்டிருக்க மாட்டேன். பெரியதாக எதாவது கேட்டிருப்பேன். மாநிலங்களவை உறுப்பினர் என்பது நல்ல பேரம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
“தேச துரோக பிரிவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்று மனு – தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
மேலும் பேசிய அவர், சில ஆக்கபூர்வமான பணிகளைச் செய்வதற்காகத் தான் நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும், மாநிலங்களவையில் தனது பதவிக்காலத்தில் எந்தவிதமான ஊதியத்தையும் பெறமாட்டேன் என எழுத்துப்பூர்வமாகக் கொடுத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ”இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனைவராலும் நேசிக்கப்படும், மிகவும் பிரபலமான, துடிப்பான, தொலைநோக்கு எண்ணம் கொண்ட தலைவர்” என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தெரிவித்தது தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்குப் பதிலளித்த கோகாய், ”ஒரு கற்றறிந்த நீதிபதி அவ்வாறு தெரிவித்திருக்க கூடாது. அவருக்கு பிரதமர் மீது அவ்வளவு அபிமானம் இருந்தால் அதை அவர் மனதிலேயே வைத்துக் கொண்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
போராட்டம் செய்வதற்கான உரிமை வரையறைக்கு உட்பட்டது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் ரஞ்சன் கோகாய், மீது சுமத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை, ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வே விசாரித்ததை, கடுமையாக விமர்சித்த திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீது சட்டரீதியான நட்வடிக்கை எடுக்கப்படுமான என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ”நீங்கள் நீதிமன்றம் சென்றால், உங்களுக்கு நீதி கிடைக்காது. அங்கு தொடர்ந்து செல்வதால் உங்கள் துணி அழுக்காகி, துணியைத் தான் வெளுக்க முடியும். இவ்வாறு கூறுவதில் எனக்குத் தயக்கமில்லை. யார் இப்போது நீதிமன்றம் செல்கிறார்கள்? நீதிமன்றம் சென்றால், ஏன் அங்கு சென்றோம் என்று நீங்கள் வருத்தம் தான் அடைவீர்கள். நீங்கள் ஒரு கார்ப்பரேட்டாக இருந்தால் நீதிமன்றம் செல்லலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நீதித்துறை இடிந்து விழும் தருவாயில் உள்ளது என தெரிவித்த ரஞ்சன் கோகாய், மாவட்ட நீதிமன்றங்களில் 4 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதையும், உயர் நீதிமன்றங்களில் 44 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதையும், உச்ச நீதிமன்றத்தில் 70,000 வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொய்த்ரா முன் வைத்த குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை எனவும் இது போன்ற அவதூறுகள் தன்னை எதுவும் செய்யாது எனவும் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.