Aran Sei

ரஜினிகாந்த் : விளக்கம் தருவாயோ வதந்தியே?

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமான இரண்டு பிரச்சனைகள் என்று சொன்னால், ஒன்று ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் எப்போது வரும்? இரண்டாவது, ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்? இதில் தோட்டா பாய்ந்து போய்விட்டது. ஆனால் போயஸ் கார்டனிலிருந்து இமயமலைக்கு வருசத்துக்கு  இரண்டு மூன்று ஷேர் ஆட்டோக்கள் ஓடுகிறதே தவிர, ஜார்ஜ் கோட்டைக்கு ஒரு அண்ணாமலை சைக்கிள் கூட கிளம்பும் அறிகுறி இல்லை.

நேற்று ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற வதந்தி குறித்து, ஒரு வதந்தி வந்ததால், அந்த வதந்தியை வதந்தி என்று சொல்லி, அந்த வந்திக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக செய்தி நிறுவனங்களில் இருந்து வதந்தி வந்தது.

முன்பு எல்லாம் ‘மாப்ள இவருதான் ஆனா மாப்ள போட்ருக்க சட்ட என்னோடது இல்ல’ என்ற ரீதியில் ரஜினி தரப்பில் இருந்து அறிக்கை வரும், அதற்கு ரஜினி ரசிகர் செந்திலாக மாறி, சட்டையை கழற்றி எறிந்துவிட்டு போவார்கள். ஆனால் இந்த முறை வந்த சீர் வரிசை கொஞ்சம் வித்தியாசமாக, அவர் நண்பர் ஸ்டைலில் இருந்தது. ‘நா எங்க கடவுள் இல்லனு சொன்னே இருந்தா நல்லாயிருக்கும்னு தான் சொன்னேன்’ என்ற ரீதியில் வந்த அறிக்கையை பார்த்த ரஜினி ரசிகள்கள், ஆழ்வார்பேட்டை அவசர உதவி மய்யத்திற்கே போன் போட்டு, ‘விளக்கம் தருவாயோ வதந்தியே’ என்று கோரிக்கை வைத்ததாகவும்  வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.

“அறிக்கை வதந்தினு சொன்னேனே தவிர அறிக்கைல இருக்கது வதந்தினு சொல்லல”

நன்றி : Youtube

ஏற்கனவே கல்யாண மண்டபம் சர்ச்சையில், மண்டையை பிய்த்துக்கொண்ட ‘அனுபவமே பாடம்’ ரஜினி ரசிகர்களுக்கு இருந்தாலும், ’சத்தியமா விடக்கூடாது’ என்ற முடிவில் இருக்கிறார்கள்.

அந்த வதந்தி அறிக்கையில் ஒரு வதந்தி வந்திருக்கிறது. அதாவது கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்ட பின் தான், ரஜினி அரசியலுக்கு வரயிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதில்  ’கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுப்பிடிப்பு’ வதந்தியா? இல்லை ’ரஜினி அரசியலுக்கு வரயிருப்பதே’ வதந்தியா என்ற கேள்வியை கடவுளிடம் விட்டு விடுகிறேன்.

ரஜினி விடும் அறிக்கைகளை விட, வதந்தியாக வரும் அறிக்கைகள் தெளிவாக உள்ளது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளே, சான்றிதழ் தரும் வகையில் இருந்தது. அதை ‘குறுக்க இந்த கவுசிக் வந்தா?’ என்று மறு(ப்பு) அறிக்கை விட்டு, கெடுத்துவிட்டார். ’இப்படி எதற்கெடுத்தாலும், மறு(ப்பு) அறிக்கை விட்டுக்கொண்டிருந்தால், போயஸ் கார்டனே கமலாலயம் ஆகிடும்’.

எனவே இனிவரும் காலங்களில், கொள்கைகள் பற்றிய வதந்திகள் வராமல் இருக்க, வதந்திகள் பற்றிய கொள்கைகளை சரியாக வரையறுக்க வேண்டும். அப்போது தான் வாடகை கொடுக்க வசதியில்லாமல் திரியும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

– அரவிந்ராஜ் ரமேஷ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்