Aran Sei

ரஃபேல் ஒப்பந்தம் – இந்திய இடைத்தரகருக்கு 8.62 கோடி ரூபாய் ‘அன்பளிப்பாக’ கொடுக்கப்பட்டது – அறிக்கை

image credit : scroll.in

ஃபேல் விமானத்தைத் தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் இந்திய இடைத்தரகருக்கு €10 லட்சம் (சுமார் ரூ 8.62 கோடி) கொடுத்துள்ளது என்றும் பிரான்ஸ் நாட்டின் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு அது குறித்து அந்த நிறுவனம் எந்த விளக்கமும் தர முடியவில்லை என்றும் அந்நாட்டின் இணைய இதழான மீடியாபார்ட் ஞாயிற்றுக் கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

ரஃபேல் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் மிகப் பெரிய போர்விமானங்கள் வாங்கல் ஆகும்.

2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரான்சின் லஞ்ச ஒழிப்புத் துறை, இந்தத் தொகை கொடுக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்து ரஃபேல் விமானத் தயாரிப்பாளரான டசால்டிடம் விளக்கம் கேட்டுள்ளது என்று தனது மூன்று பகுதி புலனாய்வு அறிக்கையின் முதல் பகுதியில் மீடியா போர்ட் கூறியுள்ளது.

2016 செப்டம்பர் 23-ல் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதும், இந்தியாவில் உள்ள தனது துணை ஒப்பந்ததாரர் ஒருவரான டெஃப்சிஸ் சொல்யூஷன்ஸ் (Defsys Solutions) என்ற நிறுவனத்திற்கு டசால்ட் அந்தத் தொகையை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. ரஃபேல் ஜெட் விமானங்களைப் போன்ற 50 மாதிரி போர் விமானங்களைத் தயாரித்து கொடுத்ததற்காக இந்தத் தொகைத் தரப்பட்டதாக டசால்ட் கூறியுள்ளதாக மீடியாபார்ட் கூறுகிறது. ஆனால் அந்த மாதிரிகள் உண்மையில் உற்பத்தி செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் டசால்ட் கொடுக்க முடியவில்லை.

பிரான்ஸ் நாட்டின் பட்ஜெட் அமைச்சகத்திற்கும், நீதித்துறை அமைச்சகத்திற்கும் பதில் கூற வேண்டிய லஞ்ச ஒழிப்புத் துறை, இந்த அப்பட்டமான முறைகேடு குறித்து, அரசு வழக்கறிஞர்களிடம் தெரிவிக்கவில்லை என்று மீடியா பார்ட் கூறுகிறது.

மற்றொருபுறம், இந்தப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் டெஃப்சிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் பூஷன் குப்தா  என்பவருக்குச் சொந்தமானது. அவர், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் விவகாரத்தில், பணமோசடி வழக்கில் 2019 மார்ச் மாதம் அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த முறைகேட்டை கண்டுபிடித்தது எப்படி?

2017-ம் ஆண்டில், பிரான்ஸ் நாட்டுச் சட்டம் வரையறுத்துள்ள சபின் 2 (Sapin 2) என்று அறியப்படும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளை பெரு நிறுவனங்கள் நடைமுறைப் படுத்துகின்றனவா என கண்காணிப்பதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை (AFA) உருவாக்கப்பட்டது.

2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருக்கலாம் என பல்வேறு செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை டசால்ட்டை தணிக்கை செய்ய முடிவெடுத்தது.

இந்தத் தணிக்கையின் போது டசால்ட்டின் 2017-ம் ஆண்டு கணக்குகளில் “வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பு” என்ற தலைப்பில் €5.08 லட்சம் (சுமார் ரூ 4.39 கோடி) செலவாகக் காட்டப்பட்டிருந்தது. இந்தச் செலவு கணக்கு “அதே தலைப்பில் உள்ள பிற செலவு கணக்குகளுக்குடன் பொருந்தாமல்  தோன்றியதாக” லஞ்ச ஒழிப்புத் துறையின் தணிக்கை அறிக்கை கூறியுள்ளது.

இதுபற்றி விளக்கம் கேட்டதற்கு டெஃபைசிஸ் நிறுவனத்தின் 2017 மார்ச் 30 தேதியிட்ட விலைவிபரப் பட்டியலை டெசால்ட் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் காட்டி உள்ளது. கார் அளவிலான 50 ரஃபேல் விமான மாதிரிகளை தயாரிப்பதற்கான இந்த விலை விபரப் பட்டியல் 10 லட்சம் யூரோ மதிப்புடையது லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை கூறுகிறது.

எனினும், தனது சொந்தத் தயாரிப்பான ரஃபேல் விமானத்தின் மாதிரியை தலா 20,000 யூரோ (சுமார் ரூ 17.24 லட்சம்) விலையில் ஒரு இந்திய நிறுவனத்திடம் ஏன் தயாரித்துத் தரக் கோர வேண்டும் என்றும், அந்தத் தொகையை “வாடிக்கையாளருக்கான அன்பளிப்பு” என ஏன் குறிப்பிட வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை கேள்வி எழூப்பியது. அதற்கு டசால்ட் நிறுவனம் திருப்தி தரும் பதிலை அளிக்கவில்லை. இதற்கும் மேலாக அத்தகைய மாதிரிகள் தயாரித்துக் கொடுத்ததற்கான ஆதாரமாக ஒரு புகைப்படத்தைக் கூட டசால்ட்டால் காட்ட முடியவில்லை.

எனவே நிதி பரிமாற்றத்தை மறைக்க செய்யப்பட்ட போலி பொருள் வாங்கல் கணக்கு இது என லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் சந்தேகப்பட்டுள்ளனர் என்கிறது மீடியாபார்ட்.

இவ்வளவு நடந்தும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் சார்லஸ் டச்சேன் இது பற்றி மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல், இறுதி தணிக்கை அறிக்கையில் ஒட்டு மொத்த விவரத்தையும் இரண்டு சிறிய பத்திகளில் மட்டும் காட்டி உள்ளார் என மீடியாபார்ட் செய்தி தெரிவிக்கிறது.

இது குறித்து விசாரிக்க மீடியாபார்ட் தொடர்பு கொண்ட போது டச்சேன் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார். இதற்கிடையில் டசால்ட் செய்தி தொடர்பாளரும் இதுபற்றி நிறுவனம் கருத்துத் தெரிவிக்காது என மீடியாபார்ட்டிடம் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம்

மோடி அரசு, 36 போர் விமானங்களை வாங்குவதற்கான ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்திட்டது. அதன்படி 2022-ம் ஆண்டிற்குள் 36 விமானங்களையும் டசால்ட் நிறுவனம் கொடுத்தாக வேண்டும்.

2019-ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலின் போது இது முக்கிய அரசியல் பிரச்சினையாக விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மற்றவர்களும், மோடி இதில் அனில் அம்பானிக்குத் தரகு வேலை பார்த்து, தேசத் துரோகம் செய்து விட்டதாகவும் ஊழலில் ஈடுபட்டதாகவும் பல முறை குற்றம் சாட்டினர்.

முதல் ரஃபேல் விமானம் 2019, அக்டோபரில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்ட பிரான்சில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 2020 செப்டம்பர் 10 அன்று அது முறைப்படி இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது.

www.scroll.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்