Aran Sei

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு – ஆளுநரின் தாமதத்தால் நிகழவிருக்கும் ஆபத்து

ளநிலை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கும்வரை, மருத்துவக் கலந்தாய்விற்கான எந்தவித அறிவிப்பும் வராது எனத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. இது மருத்துவக்கல்வியில் மட்டுமல்லாது பொதுவாக உயர்கல்வியிலேயே கல்வியியல் ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மருத்துவக் கலந்தாய்வு தாமதத்தின் பாதிப்புகளைப் புரிந்துகொள்ள, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. அகில இந்திய அளவில் நடக்கும் நீட் தேர்வு முடிவுகளை மத்திய அரசின் சார்பில் தேசியத் தேர்வு முகமை நடத்தி வெளியிடுகிறது; தேர்வு முடிவு வெளியான பின்னர், தமிழக அரசின் சுகாதாரத்துறை மருத்துவக் கலந்தாய்வுக்கான அறிவிப்பை வெளியிடும். அந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை மாணவர்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும்.

விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தமிழக அளவில் மருத்துவத் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும். அதன் அடிப்படையில் நேரடியாக சென்னையில் மாணவர்களுக்கு 3 கட்டங்களாகக் கலந்தாய்வு நடத்தப்படும். முதற்கட்ட கலந்தாய்வு வழக்கமாக ஜுலை மாதத்தில் நடைபெறும்; ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகள் தொடங்கிவிடும்.

2017-ல் தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமான பிறகு, மருத்துவக் கலந்தாய்வு நடைமுறை என்பது சற்று தாமதமானது. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலால் நீட் தேர்வே பல்வேறு பிரச்சனைகளுக்குப் பின், 4 மாதங்கள் தாமதமாகத்தான் நடத்தப்பட்டது.

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி ஒரு மாத காலத்திற்கு மேல் ஆகியும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது; மேலும் ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல், மருத்துவக் கலந்தாய்வு தொடர்பான எவ்வித அறிவிப்பையும் அடுத்தகட்ட நகர்வையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆளுநரின் முடிவுக்கு நீதிமன்றத்தால் காலக்கெடு விதிக்கமுடியாது எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். ஆகவே ஆளுநரின் முடிவு தாமதமாகும் பட்சத்தில் மருத்துவக் கல்வியாண்டே முழுவதுமாகப் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

இத்தகைய சூழ்நிலையில் நாம் இன்னொன்றையும் இதோடு பொருத்திப் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது மருத்துவக் கலந்தாய்வு தாமதமாவது, வெறும் மருத்துவப் படிப்பை மட்டும் பாதிக்காது; ஏனெனில் ப்ளஸ் 2 மற்றும் நீட் தேர்வு இரண்டிலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு எல்லாப் படிப்புகளிலும் சேரும் வாய்ப்பிருந்தாலும் அவர்கள் பிரதானமாக முன்னுரிமை கொடுப்பது மருத்துவப் படிப்புக்குதான். அதனாலேயே மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பின்னரே மற்ற படிப்புகளான பொறியியல், சட்டம், கால்நடை மருத்துவம், வேளாண் படிப்புகளுக்குக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது.

நீட் தேர்வுக்குப் பின், மருத்துவக் கலந்தாய்வு தாமதமாவதால் முன்னதாகவே பொறியியல் கலந்தாய்வு நடத்தப்பட்டு விடுகிறது. அதனால் முன்னணி பொறியியல் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி (அண்ணா பல்கலைக்கழகம்), தியாகராஜர் பொறியியல் கல்லூரி போன்ற புகழ்பெற்ற கல்லூரிகளில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள், அவ்விடங்களை விட்டுவிட்டு மருத்துவப் படிப்பில் சேர்கின்றனர்.

பொறியியல் படிப்பில் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்படுவதில்லை என்பதால், முக்கிய அரசு பொறியியல் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகப் போகும் சூழல் உருவாகலாம். இதனால் உண்மையில் முன்னணி அரசு பொறியியல் கல்லூரிகளில் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு, மதிப்பெண்  இருந்தும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய அவ்விடங்கள் வீணாகப் போகும் அபாயம் ஏற்படும்.

இந்நிலையில் ஆளுநரின் முடிவு மேலும் தாமதமாகும் பட்சத்தில், மருத்துவக் கலந்தாய்வு தவிர, மற்ற கால்நடை மருத்துவம், சட்டம், வேளாண்மை போன்ற படிப்புகளுக்குக் கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதிக இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு, ஒருவேளை மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தால், அதை விட்டுவிட்டு மருத்துவப் படிப்பிலே அதிகம் சேருவர். ஆகவே இவ்விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தாமதமாகும் ஒவ்வொரு நாளும் பல்வேறு குழப்பங்களும் சிக்கல்களும் உயர்கல்வியில் நடப்பதற்குக் காரணமாகும்.

இதுதொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் இரவிந்திரநாத்திடம் அரண்செய் பேசியபோது, “தமிழக அரசு இவ்விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காதவரை மருத்துவக் கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு இருக்காது என்று தெரிவித்திருப்பது ஆளுநருக்கு ‘சட்ட ரீதியாக’ அழுத்தம் தருவதற்கான முயற்சியே; ஆனால் அது மட்டுமே போதாது; தமிழக அரசு விரைவில் இதுதொடர்பாக ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, அதில் விவாதிக்கப்பட்டதை அக்கட்சி பிரதிநிதிகளுடன் சேர்ந்து ஆளுநரை நேரடியாகச் சந்தித்து, இவ்விசயத்தில் விரைவில் நல்லமுடிவை எடுக்குமாறு ‘அரசியல் ரீதியாக’ அழுத்தம் தரவேண்டும். அப்போதுதான் இதில் ஏதேனும் ஒரு முடிவு எட்டப்படும்.

மருத்துவர் இரவீந்திரநாத்
மருத்துவர் இரவீந்திரநாத்

ஆளுநரைப் பொறுத்தவரையில், அவராக எந்த ஒரு முடிவையும் எடுத்துவிடமுடியாது; மத்திய அரசின் பிரதிநிதியாகவே தமிழக ஆளுநரும் சரி, மற்ற மாநில ஆளுநர்களும் சரி செயல்படுகின்றனர்; ஆகவே மத்திய அரசு எடுக்கும் முடிவுகளைப் பிரதிபலிப்பவராகவே அவர் இருப்பார். மத்திய அரசு அனைத்து வகையான இடஒதுக்கீடுகளுக்கும் எதிராக இருக்கிறது; இதனை சமீபத்தில் அகில இந்திய தொகுப்பு மருத்துவப் படிப்பு இடங்களில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு விசயத்தில் அவர்கள் நடந்துகொள்வதைக் கவனித்தால் இது தெளிவாகப் புரியும். இதனால் பல நாட்கள் இழுத்தடிப்பு செய்து, வேறு வழியில்லாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த உள்ஒதுக்கீடு அளிக்காமலேயே மருத்துவக் கலந்தாய்வை நடத்திமுடிக்க மத்திய அரசு ஆளுநர் மூலமாக முயற்சிக்கிறதா என்கிற ஐயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவையும், பிற படிப்புகளில் சேரவிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் தலையெழுத்தையும் நிர்ணயிக்கும் இம்முக்கிய விவகாரத்தில், ஆளுநர் இவ்வளவு காலம் எந்த முடிவும் எடுக்காமல் பிற மசோதாக்களைப்போல் இதையும் கிடப்பில் போட்டிருப்பது, ஆளுநர் மாளிகையின் மெத்தனப் போக்கையும் இடஒதுக்கீடு போன்ற தமிழகத்தின் ஆதாரமான சமூகநீதி விசயத்தில் அவர்கள் காட்டும் கவனமின்மையையுமே எடுத்துக்காட்டுகிறது.

இது தொடர்பான விசாரணையின்போது கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கிருபாகரன், “அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவே முன்வரவில்லை என்பதன் மூலம், அவர்கள், உளவியல் ரீதியாக எவ்வாறு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்பது தெரியவருகிறது; உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பது அதிகரிக்கும். நான்கு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவழித்து, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற இயலாத நிலையில் கிராமப்புற மாணவர்கள் உள்ளனர்; கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும் வேதனைகளும் அளவிடற்கரியது; ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என எண்ணுகிறேன்” என மனமுருகினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்திருப்பதின் பின்னணியும் காரணமும்:

நீட் தேர்வு அமலான பின், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வது கணிசமான அளவு குறைந்துள்ளது; எடுத்துக்காட்டாகச் சென்ற 2019-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 17,630 மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர், அவர்களில் 2,557 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் அடிப்படை தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து 1,615 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். அவர்களில் 4 பேர் மட்டுமே 500 மதிப்பெண்ணுக்கு மேலும், 15 பேர் 400 மதிப்பெண்ணுக்கு மேலும் பெற்றிருக்கின்றனர்.

மொத்தமாக, நீட் கட்டாயமாக்கப்பட்டப்பின் இதுவரை கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள், வெறும் 11 பேர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களிலும் பெரும்பாலானோர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து ஓரிரு ஆண்டுகள் பயிற்சி பெற்றோ அல்லது தனிப்பட்ட முறையில் ஓரிரு ஆண்டுகளில் படித்தோ சேர்ந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

ஆகவே அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையே நிலவும் இந்த மிகப்பெரிய ஏற்றத்தாழ்வைச் சரிசெய்யும் வண்ணம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காகத் தனிச்சிறப்பாக ஒரு உள்ஒதுக்கீடு நடைமுறையைக் கொண்டு வருவதாகவும், நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு தேர்ச்சி பெறாமல் போவதற்கும், அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேராததற்குமான காரணங்களை ஆராயவும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கலையரசன் அவர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைப்பதாகவும்” அறிவித்தார்.

நீதிபதி கலையரசன் குழு நடத்திய ஆய்வின் முடிவில் “அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூக-பொருளாதார நிலையில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகவும், 2017-ம் ஆண்டில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5 மாணவர்களும், 2018-ம் ஆண்டில் 4 மாணவர்களும் 2019-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2 மாணவர்களும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடங்கள் பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் 40% அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தும், மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் வெறும் 0.1% மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது” எனவும் நீதிபதி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முதல் 10% வரை மொத்த இடங்களில் உள்ஒதுக்கீடு வழங்கலாம் எனவும் நீதிபதி கலையரசன் பரிந்துரை செய்திருந்தார்.

அதன்படி கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் “அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும், தனியாக 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வழிசெய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்றியது.

முடிந்தவரையில் அந்தச் சட்டத்தை நடப்புக் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் அடிப்படையில்தான் அந்தச் சட்ட மசோதாவைத் தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனிச்சிறப்பான உள்ஒதுக்கீடு வழங்குவதன் சாதக பாதகங்கள்:

சாதகங்கள்:

  • நீட் தேர்வு அமலானபின் கடந்த 3 ஆண்டுகளில், வெறும் 11 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்துள்ளனர் என்று பார்த்தோம். நீட்டிற்கு முன் 2007 முதல் 2017 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆண்டிற்குச் சராசரியாக 30-40 அரசுப் பள்ளி மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் மட்டுமே சேர்ந்து படித்துள்ளனர். ஆனால் இந்த உள்ஒதுக்கீடு அமலானால் ஆண்டிற்குக் கிட்டத்தட்ட 230 அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் சூழல் ஏற்படும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடப்பங்கீடு-7.5% உள்ஒதுக்கீடு அமல்படுத்திய பின்:

தமிழ்நாட்டின் மொத்த அரசு மருத்துவக்கல்லூரிகள் : 23 + 3 (தமிழக அரசு நிர்வாகம் செலுத்தும்)
மொத்த அரசு மருத்துவ இடங்கள் : 3100 (15% அகில இந்தியத் தொகுப்பு போக)
7.5% உள்ஒதுக்கீடு அமல்படுத்தினால் 230 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும்.

தனியார் மருத்துவக் கல்லூரி இடப்பங்கீடு:

மொத்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் : 15
மொத்த அரசு ஒதுக்கீட்டு இடங்கள் : 1365 (65%)
7.5% உள்ஒதுக்கீடு அமல்படுத்தினால் : சுமார் 100 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு

மேலும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பாண்டு முதலே நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு; அது எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. ஏனெனில் அவற்றுள் சில கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

எனினும் நம்பிக்கைக்குரிய விதத்தில் அணுகினால், இந்த 11 மருத்துவக் கல்லூரிகளின் மூலம் 1,400 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது; அதில் 7.5% அரசு பள்ளி உள்ஒதுக்கீட்டைக் கணக்கிட்டால், சுமார் 100 இடங்கள் கிடைக்கும். ஆகவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் சுமார் 330 (230+100) அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் பயில இந்த உள்ஒதுக்கீடு வழிசெய்யும்.

  • 11, 12-ம் வகுப்புகளில் மட்டும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இந்த உள்ஒதுக்கீடு கொடுக்காமல், 6 -ம் வகுப்புமுதல் 12-ம் வகுப்புவரை அரசு பள்ளிகளில் படித்த, மாணவர்களுக்கே இந்த ஒதுக்கீடு என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஏனெனில், வசதி படைத்தவர்களும் கூட, இந்த உள்ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு, தங்கள் பிள்ளைகளை 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் அரசுப் பள்ளியில் பெயருக்குச் சேர்த்து படிக்கச் செய்துவிட்டுக் கூடவே தனியார் பயிற்சி நிறுவனங்களிலும் சேர்த்து பயிற்சி பெற வைத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்தத் தனி உள்ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கும் அபாயம் இதன்மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களையும், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (Right to Education Act) குறைந்த கல்விக் கட்டணத்தில் படிக்கும் மாணவர்களையும் இந்த உள்ஒதுக்கீட்டில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை அம்மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

  • மேலும், தனியார் மருத்துவக்கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இதை விரிவுபடுத்தி இருப்பது பாராட்டத்தக்கது; ஆனால் தனியார் கல்லூரிகளில் வசூலிக்கும் பெருமளவு கட்டணத்தை (கல்வி, விடுதி மற்றும் இன்னபிற), அரசுப் பள்ளியில் படித்த மாணவரின் குடும்பத்தால் கட்ட இயலுமா என்பது கேள்விக்குறியே. எனவே, இதனை கருத்தில் கொண்டு, இந்த உள்ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு அரசுக் கல்லூரியில் வாங்கும் அதே அளவு கட்டணத்தையே தனியார் கல்லூரியிலும் நிர்ணயிப்பதுதான் நியாமாக இருக்கும்; இல்லையேல் இந்த இடங்கள் பெருமளவு நிரப்பப்படாமல், பழைய நிலைக்கோ, பொது பிரிவிற்கோ போகும் ஆபத்து உள்ளது.

இந்த உள்ஒதுக்கீட்டின்மூலம் நீட் தேர்வு நியாயப்படுத்தப்பட வாய்ப்புள்ளது – பாதகங்கள்:

  • •ஒரு அரசுப் பள்ளி மாணவருக்கு, நீட் தேர்வுக்கு முன்பான காலத்தில் மருத்துவ இடத்தைப் பெறுவதற்கான ஒரே வழியாக இருந்தது, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதே ஆகும்; ஆனால் தற்போது அதனுடன் சேர்த்து நீட் தேர்வுக்கும் தயாராகும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவரால் இயல்பாகவே தனியார் பள்ளி மாணவரோடு போட்டி போடுவது கடினம்; அதற்கு அந்த மாணவரின் கற்றல் திறன் தவிர்த்த, பல சமூக-பொருளாதார காரணங்களும் உள்ளன. இந்த உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதற்கு அரசு தரப்பில் சொல்லப்பட்ட காரணமும் இதுவே; “அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க இந்தத் திட்டம் வழிவகுக்கும்” என்பது.

ஆனால் இந்த உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாலும், அரசுப் பள்ளி மாணவர்களிலும், பயிற்சி மையங்களுக்குச் சென்று ஓரிரு ஆண்டுகள் பயிற்சி பெற வசதிபடைத்த மாணவர்களால் மட்டுமே பெரிதும் சோபிக்க முடியும்; அதையே சமீபத்திய நீட் தேர்வு சம்பந்தமான தரவுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, தற்போது நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவன் ‘ஜீவித் குமார்’ கூட தன்னுடைய ஆசிரியர் மற்றும் சிலரின் நிதி உதவியால், தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து ஒருவருடம் முழுமையாகப் பயிற்சி பெற்றே 664 மதிப்பெண் பெற்றுள்ளார்.

ஆனால் எத்தனை அரசுப் பள்ளி ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு அத்தகைய நிதியுதவியும், நிச்சயமற்ற இந்தத் தேர்வுமுறைக்காக ப்ளஸ் 2 முடித்த பின் ஓரிரு ஆண்டுகள் முழுமையாக இதற்கு ஒதுக்கித் தயார்செய்ய அவர்களின் குடும்பச் சூழலும் ஒத்துழைக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே… அவர்களின் சமூகப் பொருளாதாரச் சூழல் காரணமாக மன உளைச்சல் ஏற்படவே அதிக வாய்ப்புள்ளது; அதையே நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பப் பின்னணியும் நமக்கு உணர்த்துகிறது.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக, 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் 3,081 மாணவர்களில் வெறும் 48 மாணவர்கள் (அதாவது 1.6%) மட்டுமே தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறாமல் தங்கள் பள்ளிப்படிப்பின் துணை கொண்டும் சொந்த முயற்சியிலும் படித்து மருத்துவம் சேர்ந்தவர்கள்; மற்ற 3,033 மாணவர்கள் (98.4%) தங்கள் பள்ளியில் பயில்வது உட்பட கூடுதலாகப் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று வந்துள்ளனர்.

ஆகவே மிகவும் சொற்பமான எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறாமல் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அரசு சார்பில் நடத்தப்படும் இலவசப் பயிற்சி வகுப்புகளிலும் நீட் தேர்வுக்கான கற்பித்தல் மற்றும் பயிற்சி வழங்குதல் போதுமானதாக இல்லை என்பதை, இதுவரை அரசு பயிற்சி மையத்தில் பயின்ற ஒரு மாணவர்கூட மருத்துவப் படிப்பில் சேரவில்லை என்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

  • தமிழக அரசின் இந்த 7.5% இடஒதுக்கீடு ” சட்டபூர்வமான ஆய்வுகளுக்கு உட்பட்டு அரசமைப்பின்படி செல்லுபடியாகுமா” என்கிற சட்டம் சார்ந்த ஐயத்தை சட்டவல்லுநர்கள் எழுப்புகின்றனர். அதைப் புறந்தள்ளவும் முடியாது; ஏனெனில் 1997-ல் அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி, கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவம், பொறியியல், சட்டம் உட்பட தொழில்முறை படிப்புகளுக்கு 15% சிறப்பு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்.

2001-ம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெ.ஜெயலலிதா அதை 25% ஆக உயர்த்தினார்; ஆனால் அடுத்த ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம் “ஒருவர் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் யாருக்கும் தனித்துவமான சலுகைகள் வழங்க சட்டத்தில் இடமில்லை” என்று மேற்கோள்காட்டி, அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. சென்னை, நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தனியார் பயிற்சி நிறுவனங்கள் இதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்குச் சென்றால், இந்த உள்ஒதுக்கீட்டிற்கும் அதேமாதிரியான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுக்க முடியாது.

  • இறுதியாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிப்பதன்மூலம், அரசு தனது நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து விலகி, இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும், வடஇந்தியப் பெரும்பான்மை மையநீரோட்டத்துடனும் இணைவது வெளிப்படையாக தெரிகிறது. இதனால் மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் இயக்கங்களின் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைத் திசைதிருப்பி நீர்த்துப்போகச் செய்யும் அபாயம் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால், அதை நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வாங்கிக்கொண்டும் நடைமுறைப்படுத்தலாமே; நீட் தேர்விற்கு முன்பும் பின்பும் அரசுப் பள்ளி மாணவர்களின் பிரதிநிதித்துவம் மருத்துவக் கல்லூரிகளில் மிக மிகச் சொற்பமே; நீட்டுக்கு முன் இரட்டை இலக்காக இருந்தது, இப்போது நிலைமை மிகவும் மோசமாகி ஒற்றை இலக்காக உள்ளது.

அரசு சார்பில் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையிலேயே கிட்டத்தட்ட 40%-க்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும் 20% மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கடந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி படிக்கின்றனர். அவர்களுக்கு எப்படி இந்த 7.5% உள்ஒதுக்கீடு போதுமானதாகும்? காலங்காலமாக வஞ்சிக்கப்பட்டும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் வருகின்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்தபட்சம் 50% ஒதுக்கீடு இடங்கள் மருத்துவக் கல்வியில் ஒதுக்கப்படுவதுதான் தார்மீக ரீதியில் நியாயமானதாக இருக்கும்.

பல்வேறு பாடப்பிரிவுகளின்கீழ் படிக்கும், பல தரப்பட்ட மாணவர்களுக்கிடையே முரண்பாடுகளையும் சமத்துவமின்மையையும் மட்டுமே தேசம் முழுவதும் கற்பிக்கும், தூக்கிப்பிடிக்கும் இந்த நீட் தேர்வு முற்றுமுதலாக அரசு மருத்துவக் கல்லூரிகளிலிருந்தேனும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும்; அதை விடுத்து இம்மாதிரியான உள்ஒதுக்கீடு அளிப்பதன் மூலம் நீட்டால் ஏற்படும் சமத்துவமின்மையைச் சமூக அநீதிகளை மறைத்துத் திசைதிருப்பி, நீட் தேர்வை நியாயப்படுத்தியும் நீட் எதிர்ப்புகளை மட்டுப்படுத்தியும் நீர்த்துப்போகச் செய்யும் அபாயம் உள்ளது.

(கட்டுரையாளர் நவநீத கண்ணன் மருத்துவ இளங்கலை மாணவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்