Aran Sei

“அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!” – பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட உணர்வு

Image Credit : thewire.in

ஞ்சாபில் ஒரு எழுச்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் மையமாக தாங்கள் இருப்பதை மாநில மக்கள் கூர்மையாக உணர்ந்துள்ளார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அனைவரது பார்வையும் விவசாயிகள் இயக்கத்தின் மீதே இருப்பதை அவர்கள் அறிவார்கள்.

இதில் பங்கேற்றுள்ளவர்களில் பலர் தங்கள் மீதான இந்த கவனத்தை மனமகிழ அனுபவிக்கிறார்கள். பிரபலங்களின் டிவிட்டர் மோதல்கள், நிமிடத்திற்கு நிமிடம் பேச்சுவார்த்தையின் நிலவரம், இயக்கத்தைப் பற்றிய ஊடகச் செய்திகள் ஆகியவற்றின் மீதான விரிவான விவாதங்கள் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கின்றன.

விவசாயத் தொழிற்சங்கங்களின் அடிமட்டம் வரையிலான நிர்வாகத்தின் மூலம், திருமண விழாக்கள், விவசாயப் பணிகள் மற்றும் மக்களின் அத்தியாவசியமான அனைத்து நிகழ்ச்சிகளும் எந்தவித இடையூறும் இன்றி திட்டமிட்டபடி நடக்கின்றன. கூடுதலாக, ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையங்கள், ரிலையன்ஸ் கடைகள், சுங்கச் சாவடிகள், அதானியின் குளிர்பதன நிலையங்கள் அனைத்தும் தொடர்ந்து விவசாயிகளின் முற்றுகையில் இருந்து வருகின்றன.

Image Credit : thewire.in
கக்காவில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான குர்பிரீத் கவுர் பராஸ் Image Credit : thewire.in

பாரதீய விவசாயிகள் சங்கத்தின் (ஏக்தா உக்ரகான்) உறுப்பினரான 68 வயதான பரம்ஜித் கௌர், பாட்டியாலா நகரில் மட்டும் இரவு-பகலாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேரணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன என்கிறார். கக்கா (Ghagga) எனுமிடத்தில் 32 கிராமங்கள் ஒன்றிணைந்து பொது காத்திருப்புப் போராட்டத்தை (sanjha morcha) 24 மணி நேரமும் நடத்தி வருகின்றனர். அங்கு போராடுபவர்கள் உரையாற்றுகின்றனர், பாடல்களை பாடுகின்றனர், பொது சமையலறையை நடத்துகின்றனர், பொதுவாக உற்சாகத்தை உயர்நிலையில் வைத்திருக்கின்றனர்.

இரண்டாம் முறை திக்ரி எல்லைக்குச் செல்வது வரையில், குர்ப்ரீத் கௌர் இந்தப் போராட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்றதும் அவரது கணவர் பொறுப்பேற்றுக் கொள்வார். போராட்டத்தில் பங்கு பெறாதவர்களை பங்கு பெறச் செய்வது, ஊடகங்களுடன் தொடர்பு கொள்வது அத்துடன் பொதுவாக போராட்டக் களத்திற்குத் தேவையானவற்றை கவனித்துக் கொள்வது ஆகியவை பொறுப்பாளரின் வேலை என்கிறார் குர்ப்ரீத் கௌர்.

பாராஸ், அதன் பஞ்சாயத்தில் 2500 பேரைக் கொண்ட பெரிய கிராமம். கிராம அளவிலான குழு ஒன்று விவசாயிகள் சங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அது, யாரெல்லாம் டெல்லியிலிருந்து திரும்பி வருகிறார்கள், யாரெல்லாம் டெல்லிக்குச் செல்கிறார்கள், எப்போது என்பதை கவனித்து வருகிறது. இந்தக் குழு, கொடிகள், வாகனங்களுக்கான தார்ப்பாலின்கள், உணவு மற்றும் பிற தேவைகளை கண்காணித்து முறைப்படுத்துகிறது.

பாராசிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் ஃபதேபூர் கிராமம் உள்ளது. இங்கு கமிட்டி எதுவும் அமைக்கப்படவில்லை. போராடும் விவசாயிகளில் ஒருவரான ஷிங்காரா சிங் டிசம்பர் 8-ம் தேதி தனது உருளைக் கிழங்கு வயலை பார்த்துக் கொள்வதற்காக சிங்கு எல்லையிலிருந்து திரும்பி இருக்கிறார். அடுத்த நாளே, போராட்டத்தின் தொடர் குழுவாக வேறு ஒரு குழு டெல்லிக்குச் சென்று விட்டது. கிராம மக்களைப் பொறுத்தவரை தங்கள் கிராமம் போராட்டத்தில் முறையாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.

Image Credit : thewire.in
ஷிங்காரா சிங்கின் உருளைக்கிழங்கு வயல் Image Credit : thewire.in

“எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழு உருளைக்கிழங்கு அறுவடைக்காக திரும்பி வந்துள்ளது. இன்றைக்கு டெல்லிக்கு கிளம்பியிருப்பவர்கள் புறப்படுவதற்கு முன்பு அறுவடையை முடித்து விட்டார்கள். நான் நேற்று இரவு வந்தேன். இன்று உருளைக் கிழங்குகளில் பாதி அறுவடை முடிந்துவிடும். உருளைக் கிழங்கு அறுவடையைத் தவிர தற்போது நிலத்தில் பெரிய வேலை எதுவும் இல்லை.” என்கிறார் ஷிங்காரா சிங். அவர் கிராமத்தில் உள்ள மற்றவர்களைப் போலவே உருளைக்கிழங்கு,நெல், கோதுமை பயிரிடுகிறார்.

ஒவ்வொரு பருவத்திலும் உருளைக்கிழங்கை பெப்சிகோ நிறுவனத்துக்கு விற்கிறார், நெல் மற்றும் கோதுமையை விவசாய உற்பத்தி பொருட்கள் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் செல்கிறார். இந்தப் பருவத்தில் உருளைக் கிழங்கு நல்ல பலனைத் தரும் என நம்புகிறார்.

Image Credit : thewire.in
பதேபூரில் உள்ள அவரது உருளைக் கிழங்கு வயலில் ஷிங்காரா சிங் Image Credit : thewire.in

ஒரு ஆண்டுக்கு முன் அவர் மிகப் பெரும் நட்டத்தைச் சந்திக்க வேண்டியதாயிற்று. கோதுமை மற்றும் நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலைதான் அவரைக் கொஞ்சம் காப்பாற்றியது. தனது விவசாயத்தை விரிவாக்க உருளைக்கிழங்கு பயிரிட துவங்கினார். தற்போதைய விவசாயச் சட்டங்களால் நெல் மற்றும் கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்பட்டு, அவையும் உருளைக்கிழங்கைப் போலவே சந்தை விலை ஏற்ற இயக்கத்திற்கு உள்ளாகி விடும் என அஞ்சுகிறார். பெரிய கூட்டு நிறுவனங்களுக்கு தனது உற்பத்திப் பொருட்களை விற்பதால் ஏதும் நன்மை இல்லை என்பது அவரது அனுபவம். சந்தையில் புதிய தனியார் கார்ப்பரேட்டுகள் சேர்ந்து கொள்வது குறித்து அவருக்கு நம்பிக்கையில்லை.

விரைவில் முத்திரையிடப்பட்ட வறுவல்களாக (branded chips) , மாறப் போகும் புதிதாக அறுவடை செய்த உருளைக் கிழங்கு நிறைந்த வயலில் நின்று கொண்டிருக்கும் ஷிங்காரா சிங், “நான் மிக முக்கியமாக இதை அறுவடை செய்யத்தான் திரும்பி வந்தேன். எனது ‘டிராக்டரையும், ட்ராலியையும்’ போராட்டத்திலேயே விட்டுவிட்டு வந்து விட்டேன். சிங்கு எல்லையில் வரிசையாக நின்று கொண்டிருக்கும் வண்டிகளில் என்னுடையதை மட்டும் எடுத்து வருவது நன்றாக இருக்காது அல்லவா? எனவே அறுவடைக்கு எனது நண்பரின் டிராக்டரை கடன் வாங்கியுள்ளேன்” என்றார்.

ஒன்னே மென்னு பாய்ச்சாரே சே தே தித்தா(எங்களது சகோதர உணர்வு காரணமாக அவர் எனக்கு இந்த வண்டியைக் கொடுத்திருக்கிறார்.)”

Image Credit : thewire.in
ஷிங்காரா சிங்கின் மனைவி பல்ஜீத் கவுர், பதேப்பூரில் உள்ள அவர்களது வீட்டில் – Image Credit : thewire.in

சில மீட்டர்கள் தூரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த அவரது மனைவி பல்ஜீத் கௌர், “மக்கள் இப்போது செய்வது போல தமது உரிமைக்காகப் போராடுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது கணவரை மட்டுமல்ல எனது 29 வயது மகனையும் போராட்டத்திற்கு சில நாட்களுக்கு அனுப்பி உள்ளேன” என்கிறார்.

“நானும் போராட்டத்துக்குப் போக விரும்பினேன். ஆனால், இங்கேயும் யாராவது இருக்க வேண்டுமே” என்கிறார் அவர். “நாங்கள் எங்கள் வீட்டை புதுப்பித்தும் வருகிறோம், இங்கு நாள் முழுவதும் வேலை நடக்கிறது. வயல், வீடு, போராட்டம் எல்லாமே எங்கள் கவனத்தில் இப்போது உள்ளது” என்கிறார் ஷிங்கார சிங்

ஷிங்காரா சிங் வந்த மறுநாள் சிங்கு எல்லைக்கு போயுள்ள ஃபதேப்பூர் கிராமத் தலைவர் ஜக்ரூப் சிங், கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார். அவரது அண்ணன், சகோதரி, மனைவி, அம்மா அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Image Credit : thewire.in
டிசம்பர் 9 அன்று சிங்கு எல்லைக்குச் சென்ற ஜக்ரூப் சிங்கின் அம்மா Image Credit : thewire.in

80 வயதாகும் அவரது தாய், மோடி சாஹேப் எங்கள் பிள்ளைகள் சொல்வதை விரைவில் ஏற்க வேண்டும் என்கிறார். “நாங்கள் மோடியை எங்கள் சகோதரராக நினைத்து வாக்களித்தோம். அவரும் எங்களை சகோதரிகள் என்று அழைத்தே வாக்குகளைக் கேட்டார். பிறகு ஏன் இப்படி எங்களிடம் ‘ஏமாற்று வேலை (420 வாதம்)’ செய்கிறார். மோடி சாஹேப் எங்கள் பிள்ளைகள் சொல்வதை கேட்க வேண்டும்.” என்கிறார் அந்த மூதாட்டி.

போராட்டக் களத்தில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள், “எங்களுக்கு எந்த விதமான மன அழுத்தமும் இல்லை. ஏனெனில் எங்களைச் பொறுத்தவரை, இது நியாயமான போராட்டம். நாங்கள் இதில் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளோம்” என்றார்கள்.

“கோயி டென்ஷன் நஹி ஹை சன்னு (எங்களிடையே எந்த மன அழுத்தமும் இல்லை)’ என்கிறார் பல்ஜீத் கௌர். நான்கைந்து வீடுகள் தாண்டி, ஜக்ரூப் சிங்கின் வீட்டில் அவரது வயதான சகோதரி, போராட்டத்தில் செலவிடும் நேரம் எங்களுக்கு மன அழுத்தம் தரவில்லை. மோடிதான் எங்களுக்கு மன அழுத்தம் தருகிறார் என்று கூறுகிறார்.

பாராசில், குர்ப்ரீத் கௌர், “நாங்கள் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. எல்லையில் உயிரிழந்த அந்த அனைத்து விவசாயிகளும் எங்களுக்கு தியாகிகள் தான். நாங்கள் அவர்களை அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் எனக் கூற மாட்டோம். மரணம் வீட்டில்தான் வரும். போர்க்களத்தில் அது ‘ஷாஹிதி (தியாகம்)” என்கிறார் .

Image Credit : thewire.in
12 வயதான யாஷ்மீன் கவுர் – அவரது தாத்தா சிங்கு எல்லையில் உள்ளார் Image Credit : thewire.in

“ஜே மோடி நி மானயா, ஃபிர் மை வி ஜாவூங்கி மோர்ச்சே தே (மோடி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நானும் போராட்டத்திற்குச் செல்வேன)” என்கிறாள் 10 வயது சிறுமி யாஷ்மீன் கௌர். உரையாடலில் குதித்த அவளது ஐந்து வயது தம்பி “மைன் வி ஜாவாங்கா (நானும் போவேன்)” என்கிறான் எதற்காக நீ போகிறாய் எனக் கேட்டதற்கு, பொக்கைவாய் சிரிப்புடன் “ஓ! நி பதா, பர் ஜானா ஹை (எதற்கு என்று தெரியாது. ஆனால் போக வேண்டும்)”. என்று பதில் கூறுகிறான்.

கொரோனாவால் பள்ளிகள் மூடியிருக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு இப்போது நிறைய நேரமும், ஆற்றலும் உள்ளது. போராட்டம் பற்றி விரிவாக சிந்திக்கவும் பேசவும் முடிகிறது. “பச்சே, பச்சே நு பதா கி ஹோரேயா ஹை (ஒவ்வொரு குழந்தைக்கும் என்ன நடக்கிறது என்று தெரிந்துள்ளது.) என்கிறார் பாராஸ் கிராமத்தைச் சேர்ந்த தொழிற்சங்க உறுப்பினர் பரம்ஜீத் கௌர்.

ஜஸ்பால் சிங்கின் பேத்தி யாஷ்மீன, “நாங்கள் எங்கள் நண்பர்களுடன் விளையாடும் போதும் அந்தப் போராட்டத்தைப் போலவே இங்கும் நடிப்போம். நாங்கள் எங்கள் தாத்தாவிற்கு முழு ஆதரவு தருகிறோம்.” என்கிறாள் .

Image Credit : thewire.in
12 வயதான புர்மான்ஜோத் சிங், பராஸில் – Image Credit : thewire.in

பாராசைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் திக்ரி எல்லையிலிருந்து அவனுடைய தந்தையுடனும் பாட்டியுடனும் திரும்பி வந்துள்ளான். எதற்காகப் போராடுகிறோம் எனக் கூறுவதற்கு சிறிதும் தயங்கவில்லை. “இந்தச் சட்டங்களை மோடி திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம்.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறான். மோடி, மோர்ச்சா, ஹக் (உரிமைகள்) ஆகிய சொற்கள் ஒவ்வொருவரின் உதட்டிலும் தவழ்கின்றன.

Image Credit : thewire.in
அவதார்சிங் நியாமியனும் அவரது நண்பர் குர்பிரீத் சிங்கும் நாளிதழ் வாசிக்கின்றனர். Image Credit : thewire.in

பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் நவம்பர், டிசம்பர் மாதம் திருமண காலம். பஞ்சாபின் கிராமப் புறங்களில் அனைத்து திருமண நிகழ்ச்சிகளும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் முடிந்து விடும். ஏனெனில் டிசம்பர் 15 லிருந்து ஜனவரி 15 வரை சீக்கியர்கள் தங்கள் பத்தாவது குரு, குரு கோபிந்த் சிங்கின் நான்கு மகன்களின் தியாகத்தைப் போற்றுவதற்கான நிகழ்ச்சிகளை நடத்துவர்.

ஆனால் திருமண நிகழ்வுகளை தள்ளிப் போடாமலேயே போராட்டத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன. “நான் எனது மகனது திருமண வேலைகளில் இருந்தேன். அதனால் எனது சகோதரன் ஜஸ்பாலுடன் சிங்கு எல்லைக்குப் போக முடியவில்லை. நேற்று இரவு என் திருமண நிகழ்வுகள் முடிந்து விட்டன. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போராட்டம் நடைபெறும் டெல்லி எல்லைக்கு செல்வேன்.” என்கிறார் அவ்தார் சிங் நியாமியான். அவரது சகோதரர் இவரது மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை.

திருமணத்திற்கு முன், நியாமியான் பெண்கள் ஒவ்வொரு வீடாகப் பாடிக் கொண்டே செல்லும் ‘ஜாகோ’ எனும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த முறை, பாடல்களுக்குப் பதில் அரசுக்கு எதிரான முழக்கங்களே இருந்தன” என்கிறார் அவ்தார் சிங்.

Image Credit : thewire.in
அவரது மகன் திருமணத்தில் குர்மீத் கவுர் – Image Credit : thewire.in

இவ்வாறு முழக்கங்களுடன் நடந்தபல்வேறு திருமண நிகழ்ச்சிகளின் காணொளிகள் இணையத்திலும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

ஒரு காணொளி, சீக்கியர்களின் திருமண விழாக்களில் குறிப்பிட்ட உணர்வுகளை அல்லது நிலைமைகளை வெளிப்படுத்தும் ‘ போலியான்’ (boliyaan) எனப்படும் இருவரிப் பாடல்களை கொண்டுள்ளது. அதில் மோடியோ, அவரது அப்பனோ, அவரது அப்பனுக்கு அப்பனோ (இயக்கத்தைத் தடுத்து நிறுத்த) வந்தால் கூட நாங்கள் அஞ்ச மாட்டோம்” என்று போலியான் ஒலித்தது.

விவசாயிகளின் போராட்டம் தோற்றுவித்துள்ள எழுச்சி பஞ்சாப் மக்கள் மத்தியில் பரவலாகவும் ஆழ வேரூன்றியதாகவும் உள்ளது .

“நான் மோடிக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: இந்த இயக்கத்தின் காரணமாக, நாங்கள் எங்கள் குழந்தைகளின் திருமணத்தை மிகக் குறைவான அளவு விருந்தினர்களைக் கொண்டே நடத்தி இருக்கிறோம். நான் எனது மகனின் திருமணத்திற்காக மூன்றே மூன்று நாட்கள் தான் ஒதுக்க முடிந்தது. இருப்பினும் நாங்கள் அதை நடத்தி முடித்திருக்கிறோம். விவசாயிகளின் கொடிகளைக் கொண்டே நடத்தி இருக்கிறோம். நான் அவருக்கு சொல்லிக்கொள்வது, இனி எங்கள் எல்லா விழாக்களிலும் ‘போராட்டம்’ இருக்கும். கொடிகள் இருக்கும்” என்கிறார் மருதாணி நிறம் படிந்த தனது கரங்களை உயர்த்திக் கொண்டே குர்மீத் கௌர்.

பாராசில், பொறுப்பாளர் குர்ப்ரீத் வீட்டில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் கூடி இருந்தனர். அவர்களது ஒவ்வொரு சொல்லிலும் இந்தப் போராட்டத்தில் வென்றே தீருவது என்ற உறுதி தெளிவாக எதிரொலித்தது. இந்தச் சட்டங்களைப் பொறுத்தவரை அரசிடமிருந்து’ இல்லை’ என்ற பதிலை ஏற்க ஒருவரும் தயாராக இல்லை.

“நாங்கள் இங்கு எல்லாவற்றையும் கவனத்தில் வைத்திருக்கிறோம். எங்கள் வீடுகளைக் கவனித்துக் கொள்கிறோம், தினமும் அருகில் நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்கிறோம், எங்கள் வயலிலும் வேலை செய்கிறோம். நாங்கள் பெரிய பாத்திரத்தில், பெரிய அடுப்பில் கூட்டாக சமைக்கிறோம்‌. சகோதரிகள் யாராவது சமையலுக்கு வர முடியவில்லை என்றாலோ அல்லது வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர இயலவில்லை என்றாலோ எங்களுக்குள் அந்த வேலையைச் பகிர்ந்து கொள்கிறோம்.” என்கிறார் ஒரு பெண்.

இந்தப் போராட்டத்தில் ஆண்களை விட பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது‌ அவர்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வதுடன் வீட்டு வேலைகளுக்கும் போராட்டத்திற்கும் சம அளவு கவனம் செலுத்தி வருகின்றனர்.

பஞ்சாபில் இந்த விவசாய சட்டங்கள் தொடர்பான கோபம் மூன்று பேர் மீது குவிந்துள்ளது – மோடி, அதானி, அம்பானி. டெல்லி போராட்டமும், பிற போராட்டங்களும் அவர்களுக்கே நேரடியாக சவால் விடுகின்றன. இந்த ‘மும்மூர்த்திகளின்’ பெயரும் பெண்கள், ஆண்கள், குழந்தைகளின் வாயிலிருந்து ஒரே சொல்லாக வெளிவருகிறது. ஆனால், இந்த புதிய சட்டங்களைக் கொண்டு வந்து முன்னெப்போதையும் விட பஞ்சாபை ஒன்று படுத்தியதற்காக மோடிக்கு அவ்தார் சிங் நன்றி கூறுகிறார்.

“நான் மோடிக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஏனெனில் அவர் எங்கள் கிராமத்தில் உள்ள எல்லோரையும் ஒன்று படுத்திவிட்டார். எங்களுக்குள் இருந்த வேறுபாடுகள் யாவும் ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டன. பஞ்சாப் மாநில அளவில் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாகி விட்டனர்.” என்கிறார் பெருமிதத்துடன்.

“அசி இக் ஓர் இக் கியாரா ஹோகயே – ஒன்றும் ஒன்றும் பதினொன்றாகி விட்டது‌.” என்கிறார் அவர்.

உத்தர பிரதேசம், ஹரியானா மாநிலங்களைப் போல அன்றி, கடந்த மூன்று மாதங்களாக அமைதியாக நடந்து வந்த எதிர்ப்பு போராட்டங்களிலும், விவசாயிகளை அணி திரட்டும் போராட்டங்களிலும் பஞ்சாப் மாநில நிர்வாகம் தலையிடவே இல்லை. பஞ்சாபில் போராட்டம் விரைவில் நான்கு மாதங்கள் ஆகப் போகிறது. சட்டங்களை திரும்பப் பெறுவது மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தியாகங்களுக்கும், கடின உழைப்பிற்கும் நீதி தருவதாக அமையும்.

பவன்ஜோத் கௌர்

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்