அறிவியல் வளர்துக்கிட்டே இருக்க இந்த 21 ஆம் நூற்றாண்டுல சாதியின் பெயரால இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கு. அதுவும் 70 வயசான தலித் சமூகத்த சேர்ந்தவரோட சடலத்த 5 மணி நேரத்துக்குமேல வழிய மறச்சி, ரோட்டுலயே வச்சி, லத்தியோட நூறு காவலர்கள் காவல் காத்தா அது சாதாரன விஷயமா என்ன?
சரி அங்க என்ன தான் நடத்துச்சுனு விசாரிக்க “அரன் செய்” சார்பா அந்த ஊருக்கு கிளம்புனோம். புதுக்கோட்டை டவுனுல இருந்து 40 கீ.மில அறந்தாங்கிக்கு பக்கதுல வீரமங்களம்னு ஒரு ஊரு. நம்ப போனப்ப மொட்ட வெயில், ஒரு வழியா புதுக்கோட்டை-சிவகங்கை பார்டர்ல இருக்க வீரமங்களத்துக்கு வந்துசேர்ந்தோம். அங்க என்ன நடத்துச்சுனு பாப்போம் வாங்க!
வீரமங்களம் ஊராட்சியில் மொத்தம் 14 கிராமங்கள். தலித் குடும்பங்கள் உட்பட பெரிய வீரமங்களம் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பக்கத்து கிராமமான சின்ன வீரமங்களம், காமராஜர் நகரில் 70க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 02/09/2022 அன்று , காமராஜ் நகர், தலித் சமுகத்தை சார்ந்த விவசாயி(70) கந்தையா மரணமடைந்தார். அவரது சடலத்தை பெரிய வீரமங்களம் வழியாக செல்லும் நெடுஞ்சாலை துறையின் சாலை வழியாக எடுத்து செல்லகூடாது என உடையார் சமூகத்தைச் சேர்ந்தவங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சாதி பெயர் சொல்லி தலித்துகளை இழிவுகாக திட்டியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை அடுத்து அந்த பகுதியில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பரப்பரபாக காட்சியளித்த அந்த சம்பவத்தை சமூக ஊடகங்கள் மற்றும், விடியோ பதிவின் மூலமாக காண முடிந்தது
காமராஜர் நகரை சார்ந்த தலித் மக்கள் காலம் காலமாக இறந்தவர்களின் உடலை வயல்காடு வழியாக பாடைக்கட்டி தோளில் தூக்கி செல்லும் வழக்கம் இருந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் பொதுப்பாதை வழியாக ரதவாகனத்திலோ, அம்புலன்சிலோ இடுகாட்டுக்கு எடுத்து செல்ல முற்படும் போது சாதி இந்துக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
“எத்தன காலம் தான் நாங்க வயக்காட்டு வழியா தூக்கிகிட்டு போறது?கடன உடன வாங்கி ரதத்துல பொது வழியா எடுத்துட்டு போனா தீட்டுப்பட்டுறும்னு உடையார் ஆளுங்க சொல்றாங்க” என்றார் தலித் சமூகத்தை சார்ந்த பழனிவேல்.
இந்த ஆண்டு போலவே சென்ற ஆண்டும் இறந்தவரின் சடலத்தை ரதவாகனத்தில் எடுத்த செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தபட்டு, தாங்கள் வழக்கமாக பயன்படுத்திய வயக்காட்டு பாதையில் எடுத்து செல்லுப்படி வழி மறைத்தள்ளனர். சென்று ஆண்டு இருந்த கலெக்டர், வட்டாச்சியர் உள்ளிட்டவர்களின் தலையீட்டால் வாகனத்துடன் மூன்று பேர் மட்டும் அமைதியாக பொது வழியில் சடலத்தை எடுத்து செல்ல அனுமதிக்கபட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக சடலத்தை எடுத்து செல்ல மாற்று பாதை அமைத்து தரப்படும் என்ற வாக்குறுதியும் தந்ததுள்ளனர். தலித் தரப்பிலும் மாற்றுப்பாதை அமைத்து தரும் பட்சத்தில் தாங்கள் அந்த வழியாகவே சடலத்தை எடுத்துச் செல்வோம் என உறுதியும் தரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சென்ற வருடம் போலவே இந்த வருடமும் கடந்த 02/09/2022 அன்று ஆம்புலன்சில் உள்ள கந்தையாவின் உடல் காமராஜ் நகர் எல்லையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொது வழியில் சடலத்தை எடுத்து செல்லக்கூடாது என்றும், புதிதாக அமைக்கபட்டிருக்கும் பாதையில் எடுத்து செல்ல வேண்டும் என்றும் பெரியமங்களம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் லத்தியுடன் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
இது குறித்து பேசிய காமராஜ் நகர், கே.மகேந்திரன் “புதுசா போட்டுறுக்க பாதை நெடுஞ்சாலை துறை ரோடு(பொது வழி) மாதிரி தார் ரோடு இல்ல. அது கரடுமுரடான ஜல்லிக்கல் பாதை. பொது வழியை விட 3 கிமீ தூரம் அதிகம். அதுமட்டுமில்லாம அது பெருனாவலூர் ஊராட்சி வழியா ரோடு போயி மறுபடியும் எங்க பகுதிக்கு ரோடு வந்து சேறும் படி பாதைய போட்டுறுக்காங்க. சடலத்தை எடுத்துட்டு போன அவங்க எங்க கிட்ட வம்புக்கு வருவாங்க” என்றார்.
புதிதாக போடப்பட்ட பாதையில் எடுத்து செல்ல முடியாத காரணத்தினால் பொது வழியாக தான் எடுத்து செல்வோம் என பட்டியல் சமூகத்தவரும், பொது பாதையில் தாங்கள் வழிபடும் கோயில் இருப்பதால் பறை சத்தம், வெடி சந்தம், ஆட்டம்பாட்டம எல்லாம் தங்கள் பழக்கவழக்கங்களை மீறும் செயல் எனவும் அதை அனுமதிக்க முடியாது என வீரமங்களம் சாதி இந்துக்களும் தெரிவித்துள்ளனர்.
வீரமங்களம் உடையார் சமூகத்தை சேர்ந்த கார்த்தி நம்மிடம் பேசிய போது “இவங்க வீம்புக்குனு வம்பு பன்றாங்க. அவ்வளவு செலவுபன்னி போட்ட ரோட்டுல போகாம வேணும்னே எங்க கோயில் வழி பாதைல போவனும்னு பிரச்சன பன்றாங்க. எங்க ஊருக்குனு ஒரு வழக்கம் இருக்கு அத மீறி ரோடெல்லாம் பூ தூவிக்கிட்டு, பறையடிச்சிக்கிட்டு போறது எங்களுக்கு பிடிக்கல” என்றார்.
பூ, பறை எல்லாம் எதும் இல்லாமல் அமைதியாக பொது வழியாக சென்றால் பராவில்லையா ? என்று நாம் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய அவர், மீண்டும் புதிதாக போடப்பட்டிருக்கும் சாலை மிகவும் நன்றாக இருப்பதாகவும், நேரம் மிச்சமாககும் எனவும் பொது வழியாக செல்வதை காட்டிலும் சடலத்தை புது பாதை வழியாக எடுத்து சென்றால் இடுகாட்டை சுலபமாக அடைந்துவிடலாம் என்றும் தெரிவித்தார்.
புதிதாக போடப்பட்டிருக்கும் சாலையை நேரில் பார்வையிட நாம் சென்றோம். ஊராட்சி நிதியின் கீழ் போடப்பட்டிருக்கும் தார் ரோடு அல்லாத அந்த ஜல்லிக்கல் பாதை பொது பாதையை காட்டிலும் தூரமாகவும் சற்று கரடுமுரடாகவும் இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.
“சடலத்த எடுத்துட்டு போக பொது பாதைய பயன்படுத்த கூடாதுனு எல்லா சமூக மக்களும் சொல்லல. அங்க 10 சமூகத்து ஆட்கள் இருக்காங்க. ஆனா அங்க இருக்க உடையார் சமூகத்த சேர்ந்த ஊர்தலைவர் ஆளுங்க தான் அப்படி பன்றாங்க. கடந்த இரண்டு வருஷமா தான் இந்த மாதிரி சாதி பிரச்சனைங்க வருது. இப்பையும் கூட எல்லாம் தாய புள்ளையாதான் பழகுறோம். ஆனா இந்த விசயத்துக்கும் மட்டும் எதிர்குறாங்க” என்றார் காமராஜ் நகர் செல்வி
மேலும் சம்பவ தினத்தன்று நெடுஞ்சாலை துறை பாதையை மறைத்து இந்த வழியாக சடலத்தை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று தர்னாவில் உடையார்கள் ஈடுபட்டதாகவும், “பற பயளோட பொனத்த இந்த வழியா தூக்கிட்டு போனா வெட்டுவோம்” என சாதியின் பெயரை சொல்லி இழிவான சொற்கள் பயன்படுத்தியதற்கும், பொதுபாதையை மறைத்து தீண்டாமை கடைபிடித்ததற்கும் உடையார் சமூகத்தை சார்ந்த பெண்கள் உட்பட 14 நபர்கள் மேல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இறந்த கந்தையாவின் தம்பி மகன் பழனிவேல் என்கிற குட்டையன் கொடுத்த புகாரின் அடிப்படையில் செப்டம்பர் 4 ஆம் தேதி ஆவுடையார் கோயில் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாதி அமைப்பு முறையை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? ஹரப்பாவினரா? – மரபணு சொல்வது என்ன?
மேலும் இது தொடர்பாக பேசிய பெரியமங்களம் ஊராட்சி தலைவர் ரத்தினத்தின் கணவர் அன்பழகன் “பெரியமங்களம் ஊராட்சி மக்கள் ஒற்றுமையாகவே இருக்க விரும்புகிறோம் அவர்களுக்கு மாற்று பாதை கொடுத்தும் அது வழியாக செல்ல மறுக்கிறார்கள். நான் சாதி பார்க்காமல் அனைவருக்குமான சுமூக தீர்வை ஏற்படுத்த விரும்புகிறேன். எங்கள் கிராமத்தில் இருக்கும் தேவேந்திர குல வேளாளர்களை எங்கள் சகோதரர் போல் நடத்துகிறோம். காமராஜ் நகர் மக்கள் தான் ஊர் பிரச்சனையில் கட்சிகாரர்களை அழைத்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகத்துடன் நடக்கும் அமைதி பேச்சு வார்த்தையில் நிச்சயமாக அவர்கள் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.
ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்த RDO சொர்னராஜ் பொது வழியை பயன்படுத்த கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் தலித்துகள் தரப்பில் வரவில்லை. மீண்டும் அழைத்துள்ளேன், பேச்சுவார்த்தைக்கு பிறகு தீர்வு எட்டப்படும் என்றார்.
இது குறித்து அறந்தாங்கி பகுதியின் விசிக நிர்வாகி தொல்காப்பியன் நம்முடன் பேசிய போது “இந்த ஊராட்சி தலைவர் பாஜக கட்சி காரு, இவரு தலைவரான இரண்டு வருடங்களாக தான் இவ்வளவு பிரச்சினையே. போன வருஷமும் சடலத்த 8 மணி நேரம் காக்க வச்சாங்க. புது பாதையே போட்டாலும் நெடுஞ்சாலை துறை பாதையில் போகிற யாரையும் தடுக்க முடியாது. நாங்க போன மட்டும் தடுக்குறது தீண்டாமை இல்லாம வேற என்ன? RDO உட்பட்ட அதிகாரிகள் முழுக்க சாதி இந்துகளுக்கு சாதகமா இருக்காங்க புகார் கொடுத்து ஒரு வாரமாச்சி ஏன் நடவடிக்கை இல்ல? அமைதி பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டு பாரம்பரியம், கலாச்சாரமுனு பாடம் நடத்துவாங்க. அதுனால தான் நாங்க அமைதி பேச்சு வார்த்தைய புறக்கணிச்சோம்” என்றார்.
கூறியது ஒன்று செய்தது வேறு – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என். வி. ரமணாவின் செயல்பாடுகள்
கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி அறந்தாங்கி வட்டாச்சியர் சொர்னராஜ், டி.எஸ்.பி உட்பட அதிகாரிகள் பேச்சு வார்தையில் ஈடுபட்டதை அடுத்து சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பறை அடிக்காமல், பூ தூவாமல், சடலத்தை அம்புலென்சில் பொதுவழியாக எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட காலவர்கள் இடுகாடு வரை சடலத்துக்கு பாதுகாப்பு கொடுத்தது குறிப்பிடதக்கது.
உடையார் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் தலித் சமூகத்தை சார்ந்தவரின் சடலத்தை சாலையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக வைத்து சட்டத்திற்கு புறம்பாக நடந்தவர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் பேச்சு வார்த்தை நடத்தியும், கொடுத்த வன்கொடுமை தடுப்பு புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கமால் இருப்பதாகவும் இறந்த கந்தையாவின் தம்பி மகன் பழனிவேல் என்கிற குட்டையன் அறந்தாங்கி வருவாய் கோட்டாச்சியர் சொர்னராஜ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீதும், வீரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உள்ளிட்ட ஆணையங்களில் புகார் அளித்துள்ளார்.
கட்டுரையாளர்: பியர்சன், ஊடகவியலாளர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.