Aran Sei

அர்ச்சகராகும் லட்சியம் – நிறைவேறாமல் போன சோகம்

புதுவையின் வாழைக்குளம், குபேர் பாடசாலை வீதி, அர்ச்சக மாணவர்கள் சாதி பேதமின்றிக் கூடும் இடம். அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தில் தேர்ச்சி பெற்ற ப.பிரபாகரனின் குடியிருக்கும் பகுதிதான் இது.

அவரது வயதொத்த இளைஞர்கள் எல்லாம் பொறியியல், மருத்துவம் என்ற கனவோடு இருக்க, பிரபாகரனுக்கு அர்ச்சகராக வேண்டும். கடவுளை தொட்டு பூஜை செய்ய வேண்டும் என்ற விருப்பம். காலம் அதற்கான வாய்ப்புகளைக் கண்ணில் காட்டியது. தமிழ்நாடு அரசு அர்ச்சகப் பயிற்சி பள்ளியைத் தொடங்கியது, மிகுந்த ஆர்வத்தோடு இணைந்து பயின்றவர், தேர்ச்சியும் பெற்றார்.

ஆனால், சட்டம், ஆகமம், நீதிமன்றம், சாதி, மதம் அரசியல் என அவரது கனவுக்கு முட்டுக்கட்டை போட்டன. இறுதிவரை அர்ச்சகராகவே முடியாமல் ஒரு பைக் பயணத்தில் ஏற்பட்ட விபத்தில் 6-10-2020-ம் தேதி இரவு அவர் மரணித்தார். அவர் மரணத்திற்கு பின் உடற்கூராய்வில் மரணத்திற்கான காரணமாக விபத்து என்று கண்டறியப்படலாம். ஆனால், ஒரு விபத்தாக வன்னியர் என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்ததால் அர்ச்சகர் ஆகும் கனவு தள்ளிப் போனதை ஒரு மருத்துவ ஆய்வால் மட்டும் சொல்லிவிட முடியாது.

உச்சநீதிமன்றம் இறுதியாக அளித்த தீர்ப்பில், ஆகம விதிமுறைப்படி முறையாகப் பயிற்சி பெற்ற எந்தச் சாதியைச் சார்ந்தவரையும் நியமிக்கலாம் என்று தீர்ப்பெழுதிய பின்னர் இதுவரையிலும் 2 பேருக்குப் பணி நியமனம் கிடைத்திருக்கிறது. ஆனால், ஆகமத்தின் பெயரால் நுழைவு மறுக்கப்படும் பெரிய கோயில்களின் கருவறைகள் இன்றும் திறக்கப்படவில்லை. அரசும் அதில் தீவிரம் காட்டவில்லை. ஏன்? அண்ணாவின் வழிவந்தவரக்ளின் ஆட்சியின் ஏன் தீவிரம் காட்டப்படவில்லை? ஏன் இவ்வளவு தாமதம்? இந்தப் பிரச்சினையின் வரலாறுதான் என்ன?

பிரபாகரன் இல்லாது வெறிச்சோடிக் கிடக்கும் அந்த வீட்டில் இந்தக் கேள்விகள் உலா வந்த வண்ணம் இருக்கலாம். நாம் மறந்தும் போகலாம். அப்படி மறந்து போகாமல் இருக்க, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் இந்தப் பயணத்தைப் பற்றிய ஒரு நினைவூட்டல்.

20 மார்ச் 1927, அண்ணல் அம்பேட்கர் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு, சௌதார் குளத்தில் நீர் எடுக்கும் பொது உரிமையை நிலைநாட்டும் போராட்டத்தை நடத்தினார். பெருந்திரளாகக் கூடிய மக்கள், தண்ணீரைப் பருகினர்.

இது சாதி ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள் கடும் சினத்தை ஏற்படுத்தியது. ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த நீரைப் பருகியதால் தீட்டுப்பட்டுவிட்டெதெனக் கருதி 108 மண் பானைகளில் மாட்டு மூத்திரம், பால், தயிர் ஆகிய பொருட்களைக் கொண்டு சமஸ்கிருத மந்திரங்களை ஓதினர். அது அண்ணல் அம்பேட்கருக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதன் பிறகு மக்களிடம் பரப்புரையில் ஈடுபட்ட அண்ணல் அம்பேட்கர் டிசம்பர் 25, 1927 அன்று ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தார். அந்த மாநாட்டில் சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிராகப் பல்வேறு தீர்மானங்களில் முக்கியமானது, அர்ச்சகர் பயிற்சிக்குப் போட்டி தேர்வு வைக்க வேண்டும் என்பதுதான்.

நீட் போன்ற போட்டித் தேர்வுகள்தான் கல்வித்தரத்தை உயர்த்தும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படும் இந்தக் காலக்கட்டத்தில், அந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானம் மேலும் கவனம் ஈர்க்கிறது.

பிற்காலத்தில், அம்பேட்கரின் கொள்கை நண்பரான பெரியாரும் இதே கோரிக்கையை முன்வைத்து ஒரு இயக்கம் நடத்தினார்.

16.11.1969 அன்று திருச்சி பெரியார் மாளிகையில், தந்தை பெரியார் தலைமையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாக கமிட்டியில், ‘கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி’ 1970-ம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைபெறும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினார். சாதியைக் காப்பாற்றும் சட்டப்பிரிவு 25,26 ஐ முன்னிட்டு சட்டத்தை எரிக்கப் போவதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து, அன்றைக்கு ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி 17.1.1970 அன்று
”ஆலயங்களில் ஆண்டவன் முன்னே சாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட விதிமுறைகள் செய்திட அரசு முன் வருகின்றது” என்று வாக்குறுதி அளித்தார்.

பெரியார் அந்த உறுதிமொழியை ஏற்று, கர்ப்பகிரகக் கிளர்ச்சியை ஒத்தி வைத்தார். கலைஞரும் கொடுத்த வாக்குறுதியின் படி, தமிழ்நாடு அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார். தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து, பெரியார் சுட்டிக்காட்டிய 25, 26 பிரிவுகளின் அடிப்படையில், 12 ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வழக்கு தொடுத்திருந்த நபர்களில் ஒருவரான சேசம்மாள் பெயரில் இந்த வழக்கு இன்றளவும் பிரபலமாக வழங்கப்படுகிறது

வழக்கு இணைப்பு: b-seshammal-vs-tamilnadu

அவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமை கோர முடியாது என்றும், அதே வேளையில், அர்ச்சகர் நியமனத்தில் ஆகம விதிகள் மீறப்பட்டால், அச்சட்டத்தினை எதிர்த்த பார்ப்பனர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பினைப் பற்றி தந்தை பெரியார் “ஆபரேஷன் சக்ஸ்ஸ், பேஷன்ட் டெட்” என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தலையங்கத்தை விடுதலையில் எழுதினார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அரசியற் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானத்தையும், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் உலகநம்பி மூலம் நாடாளுமன்ற தனிநபர் மசோதாவினையும் 1974-ல் தலைவர் கலைஞர் கொண்டு வந்தார்.

பின்னர், முதல்வரான எம்.ஜி.ஆர், திராவிடர் கழகத்தின் தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தங்களுக்குப் பிறகு, நீதிபதி மகாராஜன் தலைமையில் ஒரு குழு (அரசு ஆணை எண் 1573 நாள் 24.09.1979) அமைக்கப்பட்டு, ஆகம விதிகள் மீறப்படாமல் அனைத்துச் சாதியினரும் எவ்வாறு அர்ச்சகராகலாம் என்ற ஆலோசனைகள் பெறப்பட்டன.

மகாராசன் குழு அமைக்கப்படுவதற்கு முன் திராவிடர் கழகத்தின் கோரிக்கைக்கு எதிராக வாதங்கள் அஇஅதிமுக தரப்பில் முன்வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி, 2002-ம் ஆண்டு கேரளாவில் ஈழவர் சாதியைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஆதித்யன் என்பவர் தொடர்ந்த வழக்கில், மரபு வழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது. பார்ப்பனரல்லாதோரும் அர்ச்சகராக முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை முன்மாதிரியாக வைத்து, ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி ஒரு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியும் உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்துச் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

இன்று விபத்தில் உயிரிழந்துள்ள பிரபாகரனும், கடவுளை பூஜிக்க அரசு வேலையா? என்று மிகுந்த பயிற்சியில் தன்னை இணைத்துக்கொண்டு கற்றார்.

ஆனால், 2006 ஆண்டு அவசரச் சட்டத்தை எதிர்த்து ஆதி சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் மற்றும் தென்னிந்தியத் திருக்கோயில் பரிபாலனை சபை ஆகியவற்றின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அர்ச்சக மாணவர்கள் சங்கமாக ஒருங்கிணைந்து பிரச்சாரம் மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் துணையோடு வழக்காடவும் செய்தனர். இறுதியாக தீர்ப்பும் வந்தது. சிவாச்சாரியர்கள் உள்ளிட்ட தரப்புக்காக பாபர் மசூதி வழக்கில் இந்துத்வர்களுக்கு ஆதரவாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பராசரன் வாதாடினார். அர்ச்சக மாணவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வேஸ் மற்றும் வழக்கறிஞர் கோவலின் பூங்குன்றன் ஆகியோர் வாதிட்டனர்.

தீர்ப்பும் வந்தது, சமீபத்தில் சர்ச்சையில் அடிபட்ட நீதிபதி கோகோய் “ ஆகம அடிப்படையில் எந்தச் சாதியைச் சார்ந்த இந்துவையும் அர்ச்சகராக நியமிக்கலாம்” என்று தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பின் இணைப்பு: saiva-sivachari-tn-govt

ஆனாலும், இதுவரையிலும் 2 பேருக்கு மட்டுமே பணி நியமனம் கிடைத்திருக்கிறது. மீதமுள்ள மாணவர்களின் நிலை குறித்து, அர்ச்சகர் மாணவர் சங்க தலைவர் அரங்கநாதனிடம் பேசும் போது பெரியாரின் வார்த்தைகளையே மீண்டும் சொல்கிறார்.

”ஆபரேசன் சக்சஸ், பேசண்ட் டெட்”

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்