Aran Sei

நீர்மின் திட்டங்கள் – ஆறுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான நீரோட்டத்தை விடுவிக்க எதிர்ப்பு

Image credit : thewire.in

த்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைவின் பேரழிவு விளைவுகள் நீர்மின் திட்டங்கள் மீது கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வெள்ளப் பெருக்கு ஏராளமான உயிர்களை பலி கொண்டது, பலர் காணாமல் போயிருக்கின்றனர்.

இதனை தவிர்த்திருக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறும் நிலையில், சுற்றுச்சூழலை கவனத்தில் கொள்ளாமல் நீர்மின் திட்டங்களை அனுமதித்தற்காக மத்திய, மாநில அரசுகள் கடுமையான குற்றச்சாட்டிற்கு ஆளாயின. எனினும், அரசுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க போதுமான ஏற்பாடுகளை செய்திருந்ததாகக் கூறுகின்றன.

2018, அக்டோபரில் மோடி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நீர்மின் திட்டங்களிலிருந்து கங்கையில் திறந்து விடப்படும் நீரின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது நீர் சக்தி அமைச்சகம் என்று அழைக்கப்படும் நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி கங்கையின் மேல்மடை பகுதியில் உள்ள அனைத்து நீர்மின் திட்டங்களும் பல்வேறு பருவகாலங்களில் 20-30% நீரை திறந்து விட வேண்டும்.

சுற்றுச்சூழல் நீரோட்டம் (e-flow) என்பது ஆறுகளின் நலனை பாதுகாப்பதற்கும், அந்த ஆறுகளில் உள்ள நீர்வாழ் உயிரினங்களின் நலனையும் பாதுகாப்பதற்கும் தேவையான நீரின் அளவு ஆகும்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் நீரோட்டம் போதுமானதல்ல என்றும், அந்த அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்று வல்லுநர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கருதும் நிலையில், அரசு அதை மேலும் குறைக்க முயற்சிப்பது அதிகாரபூர்வ ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

தி வயர் தளம் திரட்டிய கோப்புகளின்படி, பரிந்துரை செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் நீரோட்டம் நீர்மின் திட்டங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்று நீர் சக்தித்  துறை கூறுகிறது. எனவே, சுற்றுச்சூழல் நீர் திறந்து விடுவது தொடர்பான அறிக்கையை வெளியிடும் போது செயல்பட்டுக் கொண்டிருந்த அல்லது கட்டப்பட்டுக் கொண்டிருந்த நீர்மின் திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது.

ஒரு வேளை இந்த ஒழுங்கு முறையின் காரணமாக நீர்மின் திட்டங்கள் இழப்பை எதிர் கொண்டால், அவற்றுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2019, மே 8 ம் தேதி மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) கீழ் இயங்கும் “நீர்மின் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் புலனாய்வு பிரிவு” தயாரித்துள்ள ஒரு குறிப்பின்படி, கங்கையில் திறந்து விடப்பட வேண்டிய சுற்றுச்சூழல் நீரோட்டம் குறித்த, நீர் சக்தி அமைச்சகத்தின் அறிவிப்பின் காரணமாக, மின் உற்பத்தியையும் கட்டணத்தையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கின்றது.

இந்த வாதத்தின் அடிப்படையில்தான், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நீர்மின் திட்டங்களுக்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நீர்மின் திட்டங்களுக்குப் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அல்லது இழப்பினை ஈடு செய்ய வேண்டும் என்றும் இந்த அமைச்சகம் கோரியுள்ளது.

Image credit : thewire.in
கங்கோத்ரியில் உள்ள பாகீரதி ஆறு – Image credit : thewire.in

சுற்றுச்சூழல் நீரோட்டம் தொடர்பான கட்டுப்பாடு காரணமாக அரசுக்கு 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

துணை இயக்குநர் முகேஷ் குமார் எரிசக்தித் துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் நீரோட்டத்தின் அளவு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பரிந்துரையிலிருந்து வேறுபட்டுள்ளது என்றும், செயல்பட்டுக் கொண்டிருக்கும் நீர்மின் திட்டங்களுக்கும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நீர்மின் திட்டங்களுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய மின்சார ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.

2013, ஜூன் மாதம் நிகழ்ந்த உத்தரகண்ட் பேரழிவினைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13-ம் நாள் அளித்த தீர்ப்பில், உத்தரகண்ட் மாநில அரசு இனி நீர்மின் திட்டங்களுக்கு காடுகளை அழிக்கும் அனுமதியையோ சுற்றுச்சூழல் அனுமதியையோ தரக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட ஒரு வல்லுநர் குழு 2017 செப்டம்பரில் அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளது. சில திட்டங்களை கவனமாக பரிசீலிக்கும்படியும், பிற நீர்மின் திட்டங்களிலிருந்து சுற்றுச்சூழல் நீரோட்ட அளவு நீரை திறந்து விடுவது குறித்தும் அந்த அறிக்கை பரிந்துரைத்தது.

“தொழிற்சாலைகளிலிருந்து குறிப்பாக தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படும் கழிவு நீர் கலப்பதுதான் கங்கையின் மாசுபாட்டிற்கு காரணமாக உள்ளது என்று மத்திய மின்சார ஆணையம் கூறியுள்ளதை முறையாக கவனிக்க வேண்டும்,” என்று அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், சுற்றுச்சூழல் நீரோட்ட தேவைக்கு ஏற்ற அளவில் போதுமான நீர் கங்கையில் திறந்து விடப்படுமானால் கங்கையே பெரும்பாலான மாசுகளை சுத்தம் செய்து விடும் என்று பரிந்துரைக்கும் அரசின் சொந்த கருத்தாக்கமான தொடர்ச்சியான நீரோட்டம், மாசற்ற நீரோட்டம் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

கங்கையின் மேல் பகுதிகளில் 2,524 மெகாவாட் மின்சார உற்பத்தி திறனுள்ள நீர்மின்திட்டங்கள் செயல்படுவதாகவும், மேலும் மொத்தமாக 2,310 திறனுள்ள மெகாவாட் திட்டங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் துணை இயக்குநர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“பொதுவாக, தற்போதுள்ள நீர்மின் திட்டங்களில், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் நீரோட்ட அளவிலான நீரை வெளியேற்ற போதுமான ஏற்பாடுகள் இல்லை. தொழில்நுட்ப ரீதியாக அவ்வாறு செய்வதற்கு சாத்தியமான இடங்களில் புதிய முதலீடுகள் தேவைப்படும்.” என்று அறிக்கை கூறுகிறது.

கட்டுமானத்தில் உள்ள நீர்மின் திட்டங்களைப் பொறுத்தவரை நீர் சக்தி அமைச்சகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள சுற்றுச்சூழல் நீரோட்ட அளவை விட ஒப்பீட்டளவில் குறைவான அளவு நீரை வெளியேற்றும் வகையிலேயே கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிகரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் நீரோட்ட அளவு, திட்டங்களின் வடிவமைப்பு ஆற்றல் ஒட்டு மொத்தமாக 20% உற்பத்திக் குறைப்புக்கு உள்ளாகும். இதனால் ஆண்டு வருவாய் இழப்பும், கட்டண உயர்வும் ஏற்படும்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.”

கூடுதலாக, குறைந்தபட்ச சுற்றுச்சூழல் நீரோட்டத்தின் அளவை மறுபரிசீலனை செய்யவது குறித்தும் செயல்படுத்துவது குறித்தும் 2018, நவம்பர் 28 ம் நாள் மத்திய நீர் சக்தி அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மத்திய மின் ஆணையம் தெஹ்ரி போன்ற திட்டங்கள் உத்திரப்பிரதேசத்தின் நீர்ப்பாசனத் தேவையை ஈடுசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் கட்டாய சுற்றுச்சூழல் நீரோட்ட வெளியேற்றங்கள் அதன் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுட்டிக் காட்டியது.

Image credit : thewire.in
ஹரித்வார் – Image credit : thewire.in

புதிய ஒழுங்குமுறை பின்பற்றப்பட்டால், மின் உற்பத்தி குறைவால் ஏற்படும் வருவாய் இழப்பை மாநில அரசு சந்திக்க நேரிடும் எனவும் துணை இயக்குநர் மதிப்பிட்டுள்ளார். சராசரியாக ஒரு யூனிட்டிற்கு நான்கு ரூபாய் வீதம் ஆண்டுக்கு சுமார் 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என அவர் மதிப்பிட்டுள்ளார்.

“கட்டுமானத்தில் இருக்கும் 2,310 மெகாவாட் நீர்மின் திட்டங்களும் வருவாய் இழப்பைச் சந்திக்கும். இந்நிலையில் இத்திட்டங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் அல்லது பொருத்தமான இழப்பீடு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்,” என்ற அவர் கடிதத்தில் கூறி உள்ளார்.

நீர் சக்தி அமைச்சகம் மட்டுமின்றி உத்தரகண்ட் அரசும் இந்தத் திட்டங்களுக்கு நீர் வெளியேற்றம் தொடர்பான விதிகளைத் தளர்த்த வேண்டும் எனக் கோரியுள்ளது.

நீர்வளத்துறையின் ஒரு பிரிவான தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் (NMCG) யிடம் தற்போதைய சுற்றுச்சூழல் நீரோட்டத்தின் படி நீர் திறந்து விடப்பட்டால் மாநில திட்டங்கள் ரூ 3,500 கோடி இழப்பை சந்திக்கும் என உத்தரகண்ட் மாநில அரசுச் செயலாளர் கூறியுள்ளார் என்பதை தி வயர் முன்னர் வெளியிட்டிருந்தது.

மாநில நீர்மின் திட்டங்களிலிருந்து குறைந்த நீரை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் ஏற்பாடுகளை தளர்த்துமாறு தலைமைச் செயலாளர்  மத்தி ய அரசிடம் கோரியுள்ளார். மாநில அரசு இதே போன்ற கோரிக்கையை நாடாளுமன்றக் குழுவிடமும் வைத்தது.

இது தொடர்பாக எரிசக்தி அமைச்சகமும் மாநில அரசின் கோரிக்கைகளுக்கு ஆதரவளித்துள்ளது.

2019 ஜனவரியில் நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர், “நாங்கள் உத்தரகண்ட் அரசு கூறுவதை முற்றிலும் வழி மொழிகிறோம். இதற்கு உயர்மட்டத்தில் தீர்வு காண முயன்று வருகிறோம். அரசு வெவ்வேறு கருத்துகளை கொண்டிருக்க முடியாது. இது வரை ஒரு பொதுக் கருத்து எட்டப்படவில்லை என்றாலும் கூட எரிசக்தி அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், நீர்வளத்துறை அமைச்சகம் ஆகியவை ஒன்றிணைந்து, அத்தகைய ஒரு பொதுக் கருத்தை எட்ட முயல்கிறோம். நாங்கள் மாநிலத்தில் உள்ள திறனை முழுமையாக பயன்படுத்த விரும்புகிறோம்.. நமது திட்டங்களில் மாநில அரசின் பங்களிப்பு மிக முக்கியமானது,” என்று கூறி உள்ளார்.

“தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை (15% சுற்றுச்சூழல் நீரோட்டத்தை உறுதிபடுத்தும்) நடைமுறைப்படுத்தினால், ஏற்கனவே உள்ள முந்தைய திறன் அடிப்படையில் ரூ 120 கோடி இழப்பு நேரிடும்.” என்று உத்தரகண்ட் அரசு நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், கூறி உள்ளது.

“தற்போதைய ஆணையைப் பொறுத்தவரை அது நீர்மின் உற்பமத்தித் துறையையே முற்றிலும் நாசமாக்கி விடும்” என்று அது கூறியுள்ளது.

ஒத்த கருத்து இல்லை

இந்த விவகாரத்தில் எல்லா அமைச்சகங்களும் இணைந்து ஒருமனதாக முடிவு எடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக எரிசக்தித் துறை இதில் உடன்படவில்லை என நீர்வள அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சசி சேகர் கூறுகிறார். நீர்வள அமைச்சகம் சுற்றுச் சூழல் நீரோட்டத்தை கங்கையை புனரமைப்பதற்கான வழியாகப் பார்க்கிறது. எரிசக்தித் துறையோ சுற்றுச்சூழல் நீரோட்டத்தை அதிகரித்தால் நீர்மின் திட்டங்கள் பாதிக்கப்படும் என கருதுகிறது.

“ஆற்றிற்கு உயிர் இருக்கிறது என்று சொல்ல வேண்டுமானால் ஆற்றில் போதுமான நீர் இருக்க வேண்டும்” என்கிறார் சசி சேகர். “ஆனால், நமது பொறியாளர்கள் இதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு துளி நீரிலிருந்தும் வருவாயை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால் அணைகளில் நீரைச் சேமிப்பது அதை வீணாக்கவே செய்கிறது”, என்கிறார் அவர்.

“உண்மையில் அரசு இதில் உறுதியாக இருந்தால், எல்லா அமைச்சகங்களையும் ஒத்த கருத்துக்குக் கொண்டு வர வேண்டும்,” என்கிறார் அவர்.

2015 ல் சசி சேகர் தலைமையிலான குழு, சுற்றுச்சூழல் நீரோட்டம் 50% ஆக இருக்க வேண்டும் என பரிந்துரை செய்து அறிக்கை கொடுத்திருந்தது. அன்றைய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஒப்புதல் அளித்த போதும் அதை நடைமுறைப்படுத்த இயலவில்லை.

சுற்றுச்சூழல் நீரோட்டத்தின் அவசியம் என்ன?

எளிமையாகக் கூற வேண்டுமெனில் சுற்றுச்சூழல் நீரோட்டம் என்பது ஒரு ஆறு நீடித்திருக்கத் தேவையான குறைந்தபட்ச நீரோட்டம் ஆகும். இயற்கை பாதுகாப்பிற்கான பன்னாட்டுச் சங்கத்தின் (IUCN) வரையறைப்படி சுற்றுச்சூழல் நீரோட்டம் என்பது, ஒரு ஆற்றில், சதுப்பு நிலத்தில் அல்லது கடற்கரைப் பகுதியில், சுற்றுச்சூழலைப் பராமரிக்கவும், போட்டியிடும் நீர் பயன்பாடுகளுக்கு நன்மை பயக்கவும் நீரோட்டத்தை ஒழுங்குபடுத்துவதாகும்.

ஆனால் நீர்மின் திட்டங்களை கட்டுவது ஆற்றில் இருக்க வேண்டிய நீரின் அளவைப் பாதிக்கிறது. சுற்றுச்சூழல் நீரோட்டம் ஆற்றில் ஒரு தங்குதடையற்ற நீரோட்டத்தை உறுதி செய்ய முயற்சிக்கிறது.

நீர்மின் திட்டங்கள் காளான்களைப் போல் முளைத்து விட்ட பிறகு, ஆறுகளில் போதுமான நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே கோரிக்கை எழுந்து வருகிறது. 2006-லிருந்து 2018 வரை இது குறித்து பல்வேறு மட்டங்களில் 12 அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுற்றுச்சூழல் நீரோட்ட அளவு குறித்த ஒன்றுபட்ட கருத்தை வல்லுநர்களுக்கிடையே எட்ட முடியவில்லை.

சுருக்கமாகக் கூறினால், நான்கு அறிக்கைகள் 50% நீரோட்டத்தை பரிந்துரை செய்தன, வேறு மூன்று அறிக்கைகள் சுற்றுச்சூழல் நீரோட்டத்தை 20-30% அளவில் பராமரிக்கும்படி பரிந்துரைத்தன.

நீர் சக்தித் துறை 20-30% பரிந்துரையையே நடைமுறைப் படுத்த உகந்ததாகக் கருதியது.

அக்டோபர் 2018 ல் வெளியான அரசின் அறிவிப்பு “போதுமானதல்ல” என்று கூறப்பட்டு, உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் அதற்கெதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

(இந்தியில் நௌஷின் ரஹ்மான்)

www.thewire.in இணையதளத்தில் நீரஜ் மிஸ்ரா எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்