Aran Sei

குடிகளின் நலன் காக்கும் அரசிற்கு மக்கள் தொகை பெருக்கம்: வரமா? சாபமா?

இந்த தலைப்பு ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ என்பது போல் பழைமையானதுதான். ஆனால் சரியான விடைதான் கிடைத்தபாடில்லை. அதற்கான உரிய விடையைத் தேடும் சிறு முயற்சியே இந்தக் கட்டுரை.

ஒன்பதாம் வகுப்பில் சமூக அறிவியல் பாடத்தில் பொருளாதாரம் பற்றிய பிரிவில்’ மக்கள் தொகை பெருக்கமும் நாட்டின் வளர்ச்சியும்’ என்ற பாடம் நடந்துக் கொண்டிருந்தது. முன்னுரையிலேயே மக்கள் தொகை பெருக்கத்திற்கான காரணமும் அதன் விளைவுகளும் கோடிட்டு காட்டப்பட்டிருந்தன. குறிப்பாக மக்கள் தொகை பெருக்கத்தால் அரசின் திட்டச் செலவுகள் கூடுவதையும், திட்டங்கள் முழுமையடையாமல், உரிய பயனளிக்காமல் போவதையும், இன்னும் இதனால் ஏற்படும் பிற பிரச்சனைகள் குறித்தும் விரிவாக பாடம் விளக்கியது. ஆசிரியரும் அன்றாட நிகழ்வுகளை எடுத்துக்காட்டி, வழக்கமான உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்தின் அடிப்படையில், அனைவருக்குமான கல்வி, மருத்துவ வசதி, வேலை வாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி குறைவது போன்ற மக்கள் தொகை அதிகரிப்பதன் பல்வேறு விளைவுகளை எடுத்துக் கூறினார். பாடம் முடிந்ததும் வழக்கமாக ஐயங்கள் இருந்தால் கேள்வி கேட்கலாம் என ஆசிரியர் கூற ஒரு மாணவன் எழுந்தான். அவன்,” சார், நான் என் வீட்டில் ஒரே பிள்ளை. நான் சிறு குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே குடும்பத்தில் வறுமை தான் உள்ளது. அதற்கு என்ன காரணம்?” என்று கேட்டான். பிரச்சனைகளுக்கான காரணத்தை ஆய்வு செய்வதைவிட ஏற்கனவே உள்ள கருத்தாக்கங்களை ஏற்றுக் கொள்ளும் எளிதான, வழக்கமான உலக நடைமுறையில் வளர்ந்த ஆசிரியரால் அப்போது இதற்கு பதில் கூற முடியவில்லை.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

எழுபதுகளில், ” நாம் இருவர். நமக்கிருவர்”, “இரண்டு பெற்றால் இன்ப மயம்” என்ற சிவப்பு முக்கோண விளம்பரம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவியது. அதன் தீவிரத்தில் அழிழ்ந்து போன மக்கள், ‘அதிக குழந்தைகள் ஆபத்து’ என்ற உணர்வில் கரைந்து தீவிர குடும்பக்கட்டுப்பாடு முறைகளை மேற்கொண்டு அரசுக்கு பேராதரவு அளித்தனர். அவசர நிலை காலத்தில் விரட்டி விரட்டி குடும்பக்கட்டுப்பாடு செய்த அவலமும் நடந்தேறியது. (அப்போது மா. சிவக்குமார் கணையாழியில் எழுதிய ‘கடவுள் வந்தார்’ என்ற கதை இங்கு நினைவு கூறத்தக்கது) இத்துறையில் சிறந்த பணியாற்றுபவர்களுக்கு அரசு விருதுகளையும் அளித்து ஊக்குவித்தது. ஆனால் நாட்டின் பிரச்சனைகள்தான் தீர்ந்தபாடில்லை. எனவே மீண்டும் அரசு “ஒன்று பெற்றால் ஒளிமயம்”, ” நாமிருவர். நமக்கொருவர்” என்று பரப்புரையை மேற்கொண்டது. இந்த விளம்பரக் கடலிலும் மூழ்கிய மக்கள் ‘சிறு குடும்பமே சீரான வாழ்வு ‘ என்ற அரசின் அறிவுரையை ஏற்று இன்னும் தீவிரமாக குடும்பக்கட்டுபாடு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் விளைவு இன்று பெரும்பாலான குடும்பங்களில் ‘கருவேப்பிலை கொத்து போல ஒரே பிள்ளை’ என்ற நிலை உருவானது. இதனால் இது வரை உயர்ந்து வந்த மக்கள் தொகை பெருக்க விகிதம் முதன்முறையாக குறைய ஆரம்பித்தது. அதனால் பிரச்சனை குறைந்து விட்டதா? அரசின் திட்டங்கள் முழுமையாக அனைத்து மக்களுக்கும் போய் சேர்ந்ததா? திட்டச் செலவுகள் கட்டுக்குள் வந்ததா? திட்டமிட்டபடி இலக்கை அரசு அடைய முடிந்ததா என்பதற்கான பதில் உள்ளங்கை நெல்லிக்கனி.
அது மட்டுமல்ல மக்கள் தொகை குறைந்ததால் அதனை மும்முரமாக செயல்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகள் புதிய மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டன. நலவாய்ப்பாக அவற்றைக் குறைக்க எடுத்த முயற்சிகள் தடுக்கப்பட்டன.

கொரானாவை கையாளாததால் விசாரணைக்கு உள்ளாகும் பிரேசில் அதிபர் – எப்போது மோடி?

மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்குத் தரப்படும் நிதி ஒதுக்கீடு குறைந்து போனதும் அதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாநிலங்கள் குரல் எழுப்புவதை நாம் கண்டிருக்கிறோம். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் புதிய திட்ட ஒதுக்கீடு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இருக்கக் கூடாது என்று வாதாடி வருகின்றன. உண்மையில் ஆட்கள் குறைந்தால் பங்கு அதிகமாகும் என்பதால்தானே இத்தனை முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனால் நிலைமை முன்பை விட மோசமாகி விட்டது. இதற்கிடையில், அண்மையில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யதாத் தனக்கே உரிய பாணியில் இது குறித்து ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். அதன்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலைத் தரப்படாது. அரசின் மானியங்கள் கிடைக்காது என ஒரு புதிய சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்றி உள்ளார். இதுவரை ஆண்டாண்டு காலமாக இத்தகைய குடும்பக் கட்டுப்பாடு சட்டங்களும், திட்டங்களும் நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதாகக் காட்டித்தான் கொண்டு வரப்பட்டன. இதற்கு சிலர் அமர்த்தியா சென் போன்ற மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர்.

இந்தியாவை சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டனர் – சர்வதேச பத்திரிகைகள் நடத்திய புலன்விசாரணையில் அம்பலம்

யோகி ஆதித்யநாத்திற்கு இனிமேலும் தான் சார்ந்துள்ள பாஜகவின் ஓட்டையாகிப் போன கொள்கைத் திட்டங்கள் எந்த அளவு கைகொடுக்கும் எனத் தெரியவில்லை (அதற்கு சமீபத்திய கேரளா, மே.வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அவரது பாஜக வாங்கிய அடி ஒரு காரணம்) எனினும் அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழலில், கொரோனா நோய் தொற்றை மிக மோசமாக பாஜகவின் ஒன்றிய, மாநில அரசுகள் கையாண்டதால் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு உணர்வை சமாளிக்க அந்த முதலமைச்சர் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். இதன்மூலம் ஏற்கனவே தானும், பிற இந்துத்துவா வாதிகளும் பிதற்றி வந்ததை மேலும் வலுவாக்க அவர் நினைத்திருக்கலாம். அதாவது இஸ்லாமியர்கள் இந்த நாட்டை அபகரிக்க தங்கள் மக்கள் தொகையை பெருக்கி வருகின்றனர். அந்த நோக்கில் ஒவ்வொரு இஸ்லாமிய குடும்பமும் ஐந்திலிருந்து பன்னிரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதாக பொது மேடைகளில் அவர்கள் கூவி வந்தனர். அதோடு அதுதான் இன்றைய பிரச்சனைகளுக்குக் காரணம் என மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்.

‘பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக்கி எதிராக வலதுசாரிகளின் இனவெறி பரப்புரை கவலையளிக்கிறது’ – பத்திரிகையாசிரியர்கள் சங்கம்

அதன் ஒரு பகுதிதான் ஆதித்யநாத்தின் புதிய சட்டம். ஏற்கனவே மக்கள் தொகைப் பெருக்கம்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாக பரப்பட்டுள்ள, மக்கள் மனதில் ஆழப் பதித்துள்ள கருத்தாக்கத்தை இன்னும் ஒருபடி மேலே சென்று மதவாதச்சாயம் பூசி ஏற்கனவே காட்டி வரும் மோடி வித்தையில் புதிதாக ஒரு கீரிப்பிள்ளையைச் சேர்த்து வித்தைக் காட்டுவது போலக் காட்டி, இந்துக்களின் வாக்குகளை அள்ளி விடலாம் என்பது அவரது திட்டமாக இருக்கலாம்.

அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கேள்விக்கு நாம் வேறு வகையில்தான் விடை தேட முடியும். தேசிய வளங்கள் அதிக அளவில் கூடாதபோது மக்கள் தொகை பெருக்கம் நிச்சயம் வளர்ச்சிக்குத் தடையாகத்தான் இருக்கும் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அதாவது ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வருவாய் ஈட்டுபவராக இருந்து அதிக குடும்ப உறுப்பினர்கள் இருப்பதும், அது மேலும் கூடுவதும் குடும்பத்தின் பொருளாதாரத்தை மோசமடையச் செய்யும் என்பதும் நியாயமான வாதமே. அதே வேளையில் மூன்றிலிருந்து ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தால்? இத்துடன், நமது நாட்டின் நிலையைப் பின்வரும் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கொரானாவை கையாளாததால் விசாரணைக்கு உள்ளாகும் பிரேசில் அதிபர் – எப்போது மோடி?

1947 ல் நமது உணவு தானிய உற்பத்தி 50 லட்சம் டன்கள் அது 2019-20 ல் 285.21 லட்சம் மெட்ரிக் டன்கள். 1947ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.7 லட்சம் கோடியாக இருந்தது, 2018-19 ல்147.79 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 54 மடங்கு உயர்ந்துள்ளது. இதே காலத்தில் மக்கள் தொகை 37.63 கோடியிலிருந்து 145.74 கோடியாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இவை மக்கள் தொகை பெருக்கத்திற்கு மிக அதிக அளவில் உற்பத்தி கூடியிருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆக இங்கு மக்கள் தொகை பெருக்கத்தை காரணம் காட்டுவது வடிகட்டிய ஏமாற்று வேலை என்பது சாதாரண குடிமகனுக்கும் புரியும் ஒன்று.

ஒரு வேளை மக்கள் தொகை பெருக்கம்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடை என இன்னும் கருதினால் மேலும் ஒரு வாதத்திற்குள் செல்வோம். அமெரிக்கா சுதந்திரம் அடைந்து, அனைத்து வளங்களையும் வைத்துக் கொண்டு உலக நாடுகளின் ஒத்துழைப்போடு நூறு ஆண்டுகளில் சாதித்த வெற்றிகளை, சோவியத் ரஷ்யா புரட்சிக்குப் பின் வெறும் நான்காண்டுகளில் சாதித்துக் காட்டியது. இத்தனைக்கும் அமெரிக்கா சுதந்திரம் அடைந்த போது கொண்டிருந்த வளத்தோடு ஒப்பிடுகையில் குறைவான வளத்தையே அப்போது சோவியத் ரஷ்யா கொண்டிருந்தது. அத்துடன் கம்யூனிச பரவலுக்கு அஞ்சி முதலாளித்துவ நாடுகளால் பிற நாடுகளிலிருந்து சோவியத் தனிமைப் படுத்தப்பட்டிருத்தது. அத்தகைய சூழலில் அமெரிக்காவுக்கு நிகராக அறிவியல், பொருளாதாரம், கல்வி, மக்கள் நல்வாழ்வு ஆகிய அனைத்துத் துறைகளிலும் சோவியத் முன்னின்றது. அனைத்து மக்களுக்கும் தரமான இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவம், அனைவருக்கும் வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம் ஆகியவற்றை சாதித்துக் காட்டியது மட்டுமல்ல அதிக குழந்தை பெறுபவர்களுக்கு நட்சத்திர விருதும் வழங்கியது.

ஒன்றிய அரசின் சட்டங்களும் – நிலைமை மாறாத ஜம்மு காஷ்மீரும்

இதற்கு அடிப்படை காரணம் அவர்கள் நமது அரசியல்வாதிகளைப் போல் பிறக்கும் குழந்தைகள் வெறும் வயிற்றுடன் மட்டுமே பிறப்பதாகக் கருதவில்லை மாறாக கைகால்களோடும், மூளையோடும் பிறக்கிறது என்றும், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் நாட்டின் கூடுதல் மனித வளமாக, மற்ற வளங்களை விட முக்கியமானதாக பார்த்ததுதான். இது ஒரு குடும்பத்தில் அதிக உறுப்பினர்களை வருவாய் ஈட்டுபவர்களாக உருவாக்குவது போன்றது. (இங்கு தற்போதைய சோவியத்தின் நிலை பற்றிய விவாதத்தை முன் வைத்து சிலர் தங்கள் வாதத்தை நியாயப்படுத்த நினைக்கலாம்.

1917 ல் சோவியத்தில் நடந்தது ஒரு பரிசோதனை முயற்சியே. ஒரு உண்மையான மக்கள் நல அரசு எப்படி இருக்கும் என்பதை உலக மக்களுக்கு எடுத்துக் காட்டிய ஒரு செய்முறை ஆய்வுதான் என்பதை நினைவு படுத்துவது அவசியம்). இவ்வளவு அறிவியல் முன்னேற்றம் மற்றும் உலக நாடுகளின் உதவி இருந்த போதும், விடுதலை அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியா போன்ற நாடுகள் மக்கள் தொகை பெருக்கத்தைக் காரணம் காட்டிக் கொண்டிருப்பது சரியானதுதானா? சோவியத் ரஷ்யா அதிக குழந்தைகள் பெற்றால் பரிசளித்த நிலையில் நமது ஆதித்யநாத் அரசு போன்றவை இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்குத் தண்டனைக் தருவது ஏன்?

கண்காணிப்பின் அரசியல் – அமேசானும் தொழிலாளர் பிரச்சினையும்

மனித வளம், கல்வி, வேலை வாய்ப்பு, தேவை, உற்பத்தி, பங்கீடு ஆகியவற்றை முறையாக சரியாக இணைத்து திட்டமிடாததே முக்கிய காரணம் ஆகும். இதனை உணர்ந்த பெரும்பான்மை மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட அரசு அமைவதே இதனை தீர்ப்பதற்கான ஒரே வழியாகும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்