Aran Sei

அரசியலோ அரசியல் – நெடுந்தொடர் – 1

நாடோடிகளாய் இருந்த மனித சமூகம் வேளாண்மை சமூகமாக மாறும்போது கூடவே அரசுருவாக்கம் நிகழ்ந்தது. மனிதர்களை ஒழுங்குக்குக் கொண்டுவர சட்டதிட்டங்கள் உருவாயின. அதுவே அறங்களாகப் பேணப்பட்டன. ‘அறம் அதிகாரத்தைக் கட்டும்’ என்பார் தமிழியல் ஆய்வாளர் ராஜ்கௌதமன். அறமதிப்பீடுகள் எல்லாம் பல நேரங்களில் அதிகாரத்திற்கு சார்புடையதாக இருப்பதை நாம் அறிவோம். பேரரசுகளின் ஆட்சிகள் சிலரால் கொண்டாடப்பட்டாலும், தற்போது மேலெழுந்துவந்த புதிய ஆய்வுகள் அரசுகளின் புனித மதிப்பீடுகளையும் பிம்பங்களையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.

குடிகளைக் காப்பது மன்னர்களின் கடமை. ஆனால் இவர்கள் நாட்டின் எல்லைகளை விரிவாக்கும் அதிகார வேட்கையால் போரில் ஈடுபட்டனர். பத்தாண்டுகளுக்கு மேலாக போர் நிகழ்ந்தது என்பதை எல்லாம் வரலாற்றின்வழி அறிய வருகிறோம். மன்னர் ஆட்சியில் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலும்  தொடர்ந்து போருக்கு முக்கியத்துவம் அளித்ததாலும் மக்களிடையே மன்னராட்சி மீது மாபெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் மன்னர் ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்தியத் துணைக்கண்டத்தில் ஐரோப்பியரின் வருகையால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

கி.பி 1615 ஆம் ஆண்டு “சர் தாமஸ் ரோ” என்கிற ஆங்கில தூதுவர் ‘ஜஹாங்கீர்” அரசுடன் இணைந்து இந்தியாவுடன் வியாபாரம் செய்யவும் அனுமதியைப் பெற்றார் குஜராத்தின் முகலாய ஆளுனரான “குர்ராம்” ஆங்கிலேயர்களுக்கு வணிக உரிமைகளையும் வழங்கினார் இப்படியாக பல வணிக மையங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் நிறுவியது.

கிபி 1639 ஆம் ஆண்டு “பிரான்சிஸ் டே” என்கிற ஆங்கிலேய அதிகாரி “சந்திரகிரி” அரசிடமிருந்து ஒரு நிலப்பரப்பை விலைக்கு வாங்கி நிர்வகிக்கத் தொடங்கியது. அந்த நிலப்பகுதிதான் தற்போதைய சென்னை. மெட்ராஸ் மாகாணத்தில் பிரிட்டீஷார் தங்களுடைய நிர்வாகத் தேவைகாக கோட்டை அமைத்தனர். அதுதான் ‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை’. 1640 ஆம் ஆண்டு மெட்ராஸ் கடற்கரையில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் நினைவாக இன்றும் நிலைகொண்டுள்ளது. கிழக்கிந்திய கம்பெனியால் வாங்கப்பெற்ற நிலப்பரப்பு சென்னை பகுதியே ஆகும்.
இப்படி நிலப்பரப்பை பெற்று பிரிட்டிஷார் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு நிலப்பரப்புகளையும் பெற்றனர். வணிகம் செய்ய வந்தவர்கள் நம்மை ஆட்சி செய்ய தொடங்கினர். சுயராச்சியத்திற்கான கோரிக்கை எழுவதைப் புரிந்து கொண்ட பிரிட்டீஷ் தங்களுடைய நிர்வாகத்திற்குள் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்த்து. மெட்ராஸ் மாகணத்திற்குள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மக்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க ஒப்புக்கொண்டது.

வாக்கெடுப்பின் மூலமாக பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது; அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அரசுடன் பேசி மக்கள் பிரச்சினைகளைத் தீர்வு காண்பது என்று இருந்தது. பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க எடுக்கும் முறையும் வாக்கெடுப்பின் மூலமாகவே பிரிட்டிஷ் அரசு நடத்தியது. மன்னராட்சி காலத்திலே குடவோலை முறை இருந்தது. குடவோலை முறை என்பது இரண்டு பானைகள் வைக்கப்பட்டு போட்டியிடும். யார் அதிக வாக்கு பெற்றார்களோ அவர்களே வெற்றி பெற்றார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டது அதுபோலவே வாக்கு அளிக்கும் முறையை பிரிட்டிஷார் கொண்டுவந்தனர். இது பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு ஜனநாயக அரசாங்கம் என்பதை காட்டிக் கொள்வதற்காகவே அமைந்தது.

வாக்குப் பெட்டி முறையில் மாற்றம் பெற்றது. பச்சை, மஞ்சள் ,சிவப்பு என மூன்று பெட்டிகள் அமைக்கப்பட்டு அதில் கட்சிகள் வேட்பாளர்களின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அப்படி வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் அந்தப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சியில் பங்கேற்பார்கள். சரி இந்தப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பவர்கள் யார் என்றால் இப்போது இருப்பது போல 18 வயது நிரம்பிய யாரும் வாக்களிக்கலாம் என்றால் அதுதான் முடியாது. 22 வயது நிரம்பியிருக்க வேண்டும். 22 வயது என்றால் ஆண்களுக்கு மட்டுமே தான் அப்படியானால் பெண்களுக்கு? வாக்களிக்கும் உரிமை இல்லை! 22 வயதான எல்லா ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டா? என்றால் அதுவும் இல்லை சொத்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு அதுமட்டுமல்லாமல் அரசுக்கு வரி செலுத்துபவர்கள் அடிப்படையிலே வாக்களிக்கும் உரிமை அப்போது உண்டு. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் வாக்களிக்கலாம் என்றால் அளிக்கலாம் அரசுக்கு ரூபாய் 10 வரி கட்டுபவராக இருக்க வேண்டும். நகர்புறத்தில் இருக்கிறவர்கள் நகராட்சிக்கு ரூபாய் மூன்று ரூபாய் வரி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.

முதலில் சென்னை மாகாணத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து 12 லட்சத்து 48 ஆயிரத்து 156 பேர் மட்டுமே வாக்களிக்கும் தகுதி பெற்று இருந்தார்கள். அப்போதைய சென்னை மாகாணத்தின் மக்கள் தொகை நான்கு கோடி. இப்படி வாக்களிக்க உரிமைகள், கட்டுப்பாடுகளை எல்லாம் இருந்தும் 3 லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 1914ஆம் ஆண்டு ஏற்பட்ட முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் படையில் இந்தியர்கள் பெருமளவு சேர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகப் போரிட்டு நேசக்கரம் நீட்டியதன் பிரதிபலனாக பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு அதிகாரம் வழங்கத் திட்டமிட்டு 1919 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கும் சில கட்டுப்பாடுகளுடன் ஆட்சி அமைக்கச் சட்டம் இயற்றியது. அப்படித்தான் 1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு முதல் தேர்தல் நடைபெற்றது. 1920 நடந்த தேர்தலில் தான் முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை வழங்கப்பட்டது. சொத்து இருப்பவர்கள்தான் வரி செலுத்துபவர்கள், கல்வியறிவு பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். சொத்து என்பது பெண்களின் தந்தை சொத்து மதிப்பு அல்லது திருமணமாகி இருந்தால் கணவரின் சொத்து மதிப்பு அடிப்படையில் வாக்குரிமை வழங்கப்பட்டது.

1926ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலாவது பெண் உறுப்பினராக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கவர்னரால் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தின் பழம்பெரும் நடிகரான ஜெமினி கணேசனுக்கு ஒரு வகையில் உறவினர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவிலே சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் மட்டுமல்ல, பேரவை துணைத் தலைவர். உலகிலேயே பேரவை துணைத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற பெருமையும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை சாரும். இப்போதும் சென்னை அடையாற்றில் இயங்கி வரும் “அவ்வை இல்லம்”1930 ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் தொடங்கப்பட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்