Aran Sei

முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும் – சபா நாவலன்

இலங்கைப் பேரினவாத அரசிற்கு எதிரான அரசியல் செயல்திட்டம் தேவையானதுதான். ஆனால் அதுவே பாதிக்கப்பட்ட இனத்தின் அழிவிற்கான அரசியல் செயல்திட்டமாக இருந்துவிடக் கூடாது. தமிழராகத் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளாதவரும், இலங்கையில் இந்திய வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரருமான முத்தையா முரளிதரனை முன்வைத்துப் பரப்பப்படும், இந்த வகை தமிழ்த் தேசிய அரசியல் நேர்மறையான விளைவுகளை எப்போதும் ஏற்படுத்தாது. முரளிதரனைத் தமிழராகக் காட்ட முற்படுவது எவ்வளவு தவறானதோ அதைவிட தவறானது, ராஜபக்சேவின் பேரினவாத அரசிற்குத் துணை போகும் தமிழ்த் தேசிய அரசியல்.

மலையகத் தமிழர்கள்

இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மலையகத் தமிழர்கள், 19-ம் மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால், தென்னிந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு அடிமைகளாகப் பிடித்துவரப்பட்டவர்கள்.
இலங்கையின் முக்கிய அன்னியச் செலவாணி தேயிலை உற்பத்தியே. இலங்கைக்கு அத்தகைய வருமானத்தைத் தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக இருந்து ஈட்டித்தந்தவர்கள் மலையகத் தமிழகர்கள். 1948- ம் ஆண்டு, இலங்கை முன்னாள் பிரதமர் டி.எஸ் சேனாநாயக்காவின் ஆட்சிக்காலத்தில், நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தால் மலையக மக்களின் வாக்குரிமையும் குடியுரிமையும் பறிக்கப்பட்டன. அன்றைய குடியுரிமைப் பறிப்பிற்கு ஆதரவளித்த தமிழ்க் கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தான், இன்று வடக்குக் கிழக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் தலைமை தாங்கப்படும் கட்சி.

சிரிமா- சாஸ்திரி ஒப்பந்தம்

அதற்குப் பின், சிரிமாவோ பண்டாரநாயக்க பிரதமாரகப் பதவி வகித்த காலகட்டத்தில் சிரிமா- சாஸ்திரி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக்காவுக்கும் இடையில்  1964- ம்  ஆண்டு அக்டோபர் 30- ம் தேதி கையொப்பமானது இந்த ஒப்பந்தம்.

அந்த ஒப்பந்தத்தின்படி மலையகத் தமிழர்களில், ஒரு பகுதியினரை அங்கிருந்து அவர்களது விருப்பத்திற்கு மாறாக இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பவும், ஒரு பகுதியினருக்கு இலங்கை குடியுரிமை கொடுக்கவும் முடிவானது. ஆனால் மீதி ஒரு பகுதி மக்கள் விடுபட்டுப் போனார்கள். 1967- ம் ஆண்டு முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம், மலையக மக்களை, இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர் மற்றும் நாடற்றவர்கள் என மூன்று வகையாகப் பிரித்தது. காடு மலைகளாக இருந்த மண்ணை, வளப்படுத்தி அதில் வாழ்ந்து களித்த ஆயிரக்கணக்கானவர் அவர்களின் சொந்த மண்ணிலிருந்து பிடிங்கியெறியப்பட்டார்கள்.

தேசிய இனம்

மலையகத் தமிழர்கள் எப்போதும் ஒடுக்கப்படும் தனியான தேசிய இனமாகவே தங்களை உணர்கின்றார்கள். இலங்கையின் வட கிழக்கிலிருந்த (ஈழத்தமிழர்கள் பகுதி) அரசியல் கட்சிகள் பல மலையக மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க முயன்று தோல்வியைத் தளுவின.

நன்றி : theworldsikhnews.com

மலையக மக்கள் மத்தியில் அவர்களுக்கான பிரதியேகக் கட்சிகளே செயற்படுகின்றன. அவர்கள் தங்களை ஒரு தனியான தேசிய இனமாகவே உணர்கிறார்கள். மலையக மக்களின் கலை இலக்கிய மற்றும் கலாச்சார வடிவங்கள் ஆகட்டும், அரசியல் எழுச்சிகள் ஆகட்டும் அவர்களின் தேசிய இனம் சார்ந்த உணர்வையே வெளிப்படுத்தியிருக்கின்றன.

மலையகத்தில் கட்சிகளும் இயக்கங்களும்

இலங்கையின் வட – கிழக்கில் ஈழப் போராட்டத்திற்கான ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோன்றிய போது, ’இடதுசாரி’ கருத்தியலைக் கொண்டவைகளாகக் கருதப்படும் செயலாளர் நாயகம் க.பத்மநாபாதோற்றுவித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்),  ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) போன்றவை மலையகத்தையும் தங்களது ஈழ வரைபடத்தில் இணைத்துக்கொண்டு, அங்கு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயன்றது. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை, மாறாக மலையக மக்கள் மத்தியிலிருந்தே, மலையக மக்கள் விடுதலை முன்னணி போன்ற தனியான இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்),  தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா) போன்ற வலதுசாரி இயக்கங்களாகக் கருதப்பட்டவைகளும் மலையக மக்கள் தனியானவர்கள் என்ற கருத்தை அவ்வப்போது முன்வைத்தன. அதேநேரம், அங்கு அவர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

ஒடுக்கப்பட்ட மலையக மக்கள்

மலையக மக்கள், இலங்கையில் உள்ள ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களைப் போல அல்லாமல், கல்வியறிவு கூட மறுக்கப்பட்டார்கள். அம்மக்கள் கூலித் தொழிலாளர்களாக மட்டுமே இலங்கை அரசு பார்த்து வந்தது. இலங்கைப் பேரினவாத அரசின் இந்த ஒடுக்குமுறை வட – கிழக்குத் தமிழர்கள் மத்தியிலிருந்தும், மலையக மக்கள் மீது செலுத்தப்படுகிறது.

மலையகத்தில் வேலை செய்த பெரும்பாலான நிர்வாகிகளும் ஆசிரியர்களும் யாழ்ப்பாணத்திலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டார்கள். கொழும்பில் வசிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் வீட்டு வேலைக்காரர்களாக மலையக மக்களே இருந்தார்கள்.

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இலங்கை அரசின் இந்த ஒடுக்குமுறையோடு, வட – கிழக்குத் தமிழர்களின் ஆதிக்கமும் இணைந்து அவர்கள் சமுக ரீதியாக தனிமைப்படுத்தியது. மேலும், 21-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்குச் சென்ற தென்னிந்திய வர்த்தகச் சமூகம் ஒன்றும், மலையகத் தமிழர்களை முற்றாகப் புறக்கணித்தது. மூவரும் மலையக மக்களை வெறும் கூலிகளாகவே நடத்த ஆரம்பித்தனர்.

நன்றி : theworldsikhnews.com

தென்னிந்திய வர்த்தகச் சமூகம்

தென்னிந்திய வர்த்தகச் சமூகம் யாழ்ப்பாணத் தமிழர்கள் போல அல்லாமல், இலங்கை அரசோடும் நல்லுறவையே பேணிவந்தது. இந்த வர்த்தகச் சங்கம், தங்களை சிங்களப் பெரும்பான்மையோடு அடையாளப்படுத்துவதையே விரும்பியது.

1983- ம் ஆண்டு இலங்கை முழுவதும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிராக வன்முறைகள் நடைபெற்றன. அந்த வன்முறையில் இந்தியத் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் சில தாக்கப்பட்டன. அப்போதும் அவர்களது, இலங்கை அரசு சார்ந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன் வர்த்தகச் சமூகத்தைச் சார்ந்ததவரே தவிர மலையகத் தமிழரல்ல. 1920- ம் ஆண்டு, இவரது தாத்தாவான பெரியசாமி சின்னச்சாமி தமிழகத்திலிருந்து வர்த்தகம் செய்வதற்காக இலங்கைக்கு வந்தார். சிறிது காலத்தில், அவர் இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிட்டார். ஆனால் முரளிதரனின் அப்பா முத்தையா கண்டியிலிருந்து வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டார்.

கண்டியின் குண்டசாலைப் பகுதியில், முத்தையா பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்தார். 1983-ம் ஆண்டு, அந்தத் தொழிற்சாலை சிங்கள-பௌத்த பேரினவாதிகளின் வன்முறையில் தீவைத்து எரிக்கப்பட்டது. தீவைப்பின் போது தொழிற்சாலையோடு அமைந்துள்ள வீட்டிலிருந்து, தொழிலாளர்களின் உதவியோடு காப்பாற்றப்பட்டார் முரளிதரன். இந்தியாவிலிருந்து குடியேறிய வியாபாரிகளான ஞானம் போன்றவர்களின் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட போதும், அவர்களது அரசு சார்பு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

முத்தையா முரளிதரன் இலங்கையில் உள்ள உயர்குடிப் பள்ளிகளில் ஒன்றான சென்ட் அந்தனிஸில் கல்வி கற்றார். தமிழர்களை விட சிங்கள இளைஞர்களே இவரின் நண்பர்களாக இருந்தனர். தமிழர்கள் மத்தியில் கூட சிங்கள மொழியிலேயே பேசினார். தன்னை தமிழராக அடையாளப்படுத்துவதை எப்போதும் முரளி விரும்பியதில்லை.

மலையகத் தமிழ்த் தேசிய இனத்தோடு இவர்களுக்கு எந்த இணைப்பும் இருந்ததில்லை. இவர்களில் பெரும்பகுதியினர் இலங்கையில் குடியுரிமை பெற்றிருந்தாலும், தங்களது இந்தியக் குடியுரிமையையும் ஒருபுறம் பாதுகாத்தே வந்தனர். முரளிதரன் மட்டுமன்றி அவரது முழுக் குடும்பமும் இந்தியக் குடியுரிமையைப் பேணிகாத்து வருகிறது. முரளிதரன் இந்தியா வரும் பொழுது, இந்திய கடவுச் சீட்டில் இந்தியராகவே சென்று வருகிறார்.

மற்ற இலங்கை வாழ் இந்திய வியாபாரச் சமூகத்தைப் போன்று முரளியும் தன்னை மலையகத் தமிழராகவோ, யாழ்ப்பாணத் தமிழராகவோ அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. மாறாக தன்னைப் பெரும்பான்மைச் சிங்களச் சமூகத்தில் ஒருவராகவே கருதிக்கொண்டார்.

இந்திய வர்த்தகர்கள் ஒரு புறத்தில் மலையகத் தமிழர்களாகத் தம்மை அடையாளப்படுத்த விரும்பாத அதே வேளை, மறுபுறத்தில் அவர்களுக்கும் யாழ்ப்பாண வர்த்தகச் சமூகத்துக்கும் போட்டி காணப்பட்டது. சிங்களப் பேரினவாதத்தின் கோரம், வட கிழக்குத் தமிழர்களைப் பாதித்த அளவிற்கு இவர்களைப் பாதிக்கவில்லை.

நன்றி : kyrosports.com

முரளிதரன் பல தடவைகள் தன்னைச் சிங்களச் சமூகத்தைச் சேர்ந்தவராகவே அடையாளப்படுத்தியிருந்தார். ஆனாலும் அவரது ராஜபக்ச ஆதரவு அரசியல் பிரவேசம் 2013-ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் (காமன்வெல்த் நாடுகளின்) உச்சி மாநாட்டின் பின்னரே தீவிரமடைகிறது. முரளிதரனின் சகோதரர் சசிதரன் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். அதன் தயாரிப்பிற்கான எதனோலை இறக்குமதி செய்வது தொடர்பான குற்றச்சாட்டில் ராஜபக்ச அரசினால், 2013-ம் ஆண்டு கைதாகிறார். பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டில், விடுதலை செய்யப்படுகிறார்.

முத்தையா முரளிதரனை முன்வைத்து நடத்தப்படும் அரசியல்

ஈழத்தில் 1980-ம் ஆண்டுகளில் முக்கிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மட்டுமன்றி பாராளுமன்றவாத அரசியல் கட்சிகள் கூட, மொழியை மட்டும் தேசிய இனத்திற்கான அடிப்படையாகக்கொண்ட தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டை முன்வைத்ததில்லை. பொதுவாக வட-கிழக்கைச் சார்ந்த தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்த அனைவருமே, முஸ்லிம் தமிழர்கள் தனியானவர்கள் என்றும் மலையக மக்கள் தனியான தேசிய இனம் என்றும் இறுதிக்காலங்களில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை தமிழரசுக் கட்சி, மலையக மக்களின் பிரதிநிதியாகத் தொண்டைமானை ஏற்றுக்கொண்டு அவரது கட்சியையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை (டிஎன்ஏ) உருவாக்கிய போது சிறுபான்மைத் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகவே அதனை முன் நிறுத்தியது.

இன்று தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தமிழ் தேசியம் என்ற பிற்போக்கான இனவாதக் கருத்தியல் இவை அனைத்தையும் நிராகரித்து வட கிழக்கில் தோன்றும் தமிழீழத்தை மட்டுமே மையமாக வைக்கிறது. இது அனைத்துச் சிறுபான்மை தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையையும் மறுக்கிறது. மற்றொரு பாசிசக் கோட்பாடாகவே மட்டுமே இது உருவெடுத்து வருவது ஆபத்தானது.

நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து, சமீபத்தில் கட்சியில் இருந்து வெளியேறிய ராஜீவ் காந்தி, முத்தையா முரளிதரனின் திரைப்படம் குறித்து கருத்துத் தெரிவித்த போது, மலையகத் தமிழரை வந்தேறிகள் எனக் குறிப்பிடுகிறார். இலங்கைப் பேரினவாத அரசு கூட அப்படி இன்று குறிப்பிடுவதில்லை.

பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கைப் பூர்வீகமாகக்கொண்ட தமிழர்களைத் தெலுங்கர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் கூறிப் பழகிப் போன அருவருப்பான இனவாத அரசியலை மலையக மக்கள் மீது பிரயோகிக்காதீர்கள். மலையகம் அவர்களது சொந்த மண், அவர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்தான தனியான ஒரு தேசிய இனம்.

தமிழர் அல்லாத முத்தையா முரளிதரனை தமிழராக முன்வைத்து திரைப்படம் எடுப்பது தவறானதுதான். ஆனால் அதன் பின்னணியில் செயற்படும் வியாபார அரசியல் அதைவிட கேவலமானது. கொரோனா உச்சமடைந்திருந்த கடந்த ஏப்ரல் மாதமளவில், இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது சிங்களவர்கள் மட்டுமே வாழும் பல பகுதிகளில் லைகா பவுண்டேஷன் ஊடாக உணவு விநியோகம் ஒன்று நடைபெற்றது. தமிழர்கள் வாழுகின்ற எந்தப்பகுதிக்கும் இது செல்லவில்லை. இந்த லைகா பவுண்டேஷனின் இலங்கையின் பிராண்ட் அம்பாசிட்டராகச் செயற்படுபவர் முத்தையா முரளிதரன். லைகா நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசுடன், குறிப்பாக ராஜபக்சே அரசுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகிறது.

நன்றி : inioru.com

லைகா தொடர்பாக சீமானிடம் வினவிய போது, ”அவர் (லைகா நிறுவன உரிமையாளர் சுபாஷ்கரன்) தமிழர் என்பதால் ஆதரிக்கிறோம்” என்று பதிலளித்தார். கத்தி, எந்திரன் 2.0 உட்பட இன்று பல திரைப்படங்கள் லைகாவின் தயாரிப்பாகவே வெளிவருகின்றன. இங்கு பிரச்சனை லைகாவோ முரளிதரனோ அல்ல, அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலே.

தமிழ்த் தேசியம் என்ற பெயரில் ஈழத்தை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்யும் சீமானாகட்டும், தோல்வியடைந்த திரைப்பட இயக்குநர்களாகட்டும் லைகாவிற்கு எதிராக மூச்சுகூட விட்டதில்லை. இந்தச் சூழலில்தான் விஜய் சேதுபதிக்கு எதிராக மட்டுமே முன்வைக்கப்படும் கருத்துகளில் ஏதாவது உள் நோக்கம் காணப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து முடிந்த காலத்திலிருந்து இன்று வரைக்கும், ஈழத்தைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியவாதிகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் வெற்று முழக்கங்களையும் வெறித்தனமான சுலோகங்களையும் காரணம் காட்டியே சிங்கள மக்களைப் பேரினவாதத்தை நோக்கி அணிதிரட்டும் பணியை ராஜபக்சே அரசு கச்சிதமாகச் செய்து முடிக்கிறது. சிங்களப் பெண்களின் மார்பகங்களை அறுப்பேன் என்ற சீமானின் பேச்சு மொழியாக்கம் செய்யப்பட்டு சிங்கள ஊடகங்களில் பரப்பப்பட்டது.

கமல்ஹாசன், ரஜனி காந்த், அஜித் விஜய் போன்றவர்களை முன்வைத்து விதைக்கப்படும் பிற்போக்குக் கருத்துகளால் கட்டுண்டு போயிருக்கும் சமூகத்தின் ஒரு பகுதியை மீட்டெடுக்க,  800 திரைப்படத்திற்கு எதிரான விமர்சனங்களின் ஊடாக புதிய அரசியலை முன்னெடுக்கலாமே? கமல்ஹாசன், ரஜனிகாந்த், விஜய், அஜித், விஜய் சேதுபதி உட்பட அனைத்து சினிமா சாகச நாயகர்ளும் வியாபாரிகளே என மக்களிடம் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாமே? தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து ஈழத் தமிழர்கள் மீதான பிண அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளலாமே?

சபா நாவலன் எழுதிய கட்டுரையின் விரிவு செய்யப்பட்ட பதிப்பு.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்