Aran Sei

யார் இவர்கள்? எதற்கு சிறையில் உள்ளார்கள்? என்ன குற்றம் செய்தார்கள்?

நீதிமன்ற கருணைக்காக காத்து கிடக்கும் செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள், மற்றும் எழுத்தாளர்களின் நீண்ட பட்டியல்

செப்டம்பர் 9-ம் நாள், மும்பை தேசிய புலனாய்வு முகமை (NIA) அலுவலகத்தில் நடைபெற்ற தொடர் விசாரணைக்குப்பின், ‘கபீர் கலா மஞ்ச்’ அமைப்பைச் சேர்ந்த சாகர் கோர்கே, ரமேஷ் கெய்சோர் என்ற இரு செயற்பாட்டாளர்கள் 2018-ம் ஆண்டு எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்புடையவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ஒரு சில நாட்களுக்குப் பிறகு கலை இலக்கிய அமைப்பின் இன்னொரு இளம் கலைஞர் ஜோதி ஜக்தப்பும் கைது செய்யப்பட்டார். இந்த மூவரும் புனே காவல்துறையால் ஜனவரி 2018-ல் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறிப்பிட்டவர்கள்‌. இவர்கள்தான் டிசம்பர் 31,2017 ல் நடந்த பீமா கோரேகான் வெற்றி தின நினைவு விழாவை ஏற்பாடு செய்தவர்களில் முதன்மையானவர்கள் என குற்றம் சாட்டப்பட்டனர்.

அதன்பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் தேசிய புலனாய்வு முகமையும், புனே காவல்துறையும் 12-க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களையும், வழக்கறிஞர்களையும் கைது செய்துள்ளன. அவர்கள் எவருடைய பெயரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவே இல்லை. கபீர் கலா மஞ்சின் மூன்று பேரும் ஆச்சரியப்படும் விதமாக விட்டு வைக்கப்பட்டனர்.

‘தலித் மக்களுக்கான ஆயுதப்படை’ உருவாக்க முயற்சி – என்ஐஏ குற்றச்சாட்டு

அந்த மூவரையும் கைது செய்த போது அவர்களது வழக்கறிஞர்கள் இரண்டு ஆண்டுக்கு முன்பு போட்ட வழக்கிற்கு எதற்காக இப்போது கைது செய்ய வேண்டும் எனக் கேட்டனர். அப்போது அவர்கள் இது வஞ்சக எண்ணத்துடன் செய்யப்படும் அரசியல் நகர்வு என்றும் கூறினர். அப்போதே ஒரு பிணை மனுவும் முறையாக பதிவு செய்யப்பட்டது.

2018 முதல் தகவல் அறிக்கையிலேயே இவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் போது இவ்வளவு கால தாமதமாக இப்போது திடீரென கைது செய்திருப்பதை ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டிருப்பதுடன் ஒப்பிட்டு நோக்கத் தக்கது‌‌. 2018-ல் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த இரண்டு வழக்குகளும் நீதிமன்றத்தால் கையாளப்பட்டுள்ள விதம் முற்றிலும் வெவ்வேறாக உள்ளது‌. கோஸ்வாமியின் வழக்கு தலைமை நீதிமன்றத்தில் அவசர விசாரணை பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர் ஆறு நாட்களில் பிணையில் வெளி வந்து விட்ட நிலையில், கபீர் காலா மஞ்சின் செயற்பாட்டாளர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரே ஒரு முறையான விசாரணைக்குக் கூட மல்லாடிக் கொண்டுள்ளனர்.

கால தாமதமான விசாரணைக்கு, இவர்கள் மூவர் மட்டும் விதிவிலக்கல்ல, அது இந்திய நீதித்துறை அமைப்பை பீடித்துள்ள நோயின் பொதுவான இயல்பாகும்.

‘தி வயர்’ கடந்த ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்கள் முறையான விசாரணைக்காகவும், அடிப்படை தேவைகளுக்காகவும் அல்லது இரண்டிற்காகவும் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கோஸ்வாமியின பிணை மனு மீதான விசாரணையில் தலைமை நீதிமன்றம் தனிநபர் சுதந்திரத்தில் காட்டிய உறுதியை இது துலக்கமாக அம்பலப்படுத்துகிறது.

ஜாமியா முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள்

  • ஏப்ரல் ஒன்றாம் நாள் மீரான் ஹைதர் என்ற ஜாமியாவின் ஆய்வு மாணவர் (PhD) டெல்லியில் பிப்ரவரி மாதம் மிகப் பெரிய கலவரத்தைத் தூண்ட சதி செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் டெல்லி கிளையின் தலைவரும் ஆவார். குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட ஜாமியாவின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் அடங்கிய குழுவான ‘ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவில்’ அவர் மிகவும் வலுவாக வாதாடி வந்தார்.
  • ஆசிஃப் இக்பால் தன்ஹா என்ற மூன்றாமாண்டு இளங்கலை (பாரசீக மொழி) மாணவர் மே 16-ம் நாள் டெல்லி காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் மீது, 2019, டிசம்பர் 15-ம் நாள் நடந்த ஜாமியா கலவரத்திலும், வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்திலும் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் இஸ்லாமிய மாணவர்கள் சங்கத்தை சேர்ந்தவர். டிசம்பரில் துவங்கிய CAA எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கு பெற்றவர்.
  • ஷிஃபா உர் ரகுமான் வடகிழக்கு டெல்லி கலவரத்தை நடத்தியதில் பங்கு கொண்டார் என குற்றம் சுமத்தி கடந்த ஏப்ரல் 16ல் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்தது. அவரது சங்கத்துடனும், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவுடனும் சேர்ந்து கலவரப் பகுதிகளுக்குச் சென்றார் என்கிறது காவல் துறை. இவர்கள் மூவரும் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்..

அக்டோபர் 27-ல் ஆசிஃப் இக்பால் தன்ஹாவின் பிணை மனுவை இரண்டாவது முறையாக டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி கலவர சதி வழக்கில் முதல் தகவல் அறிக்கை 59/20-ல் குறிப்பிடப்பட்டுள்ள 15 பேரில் தன்ஹாவின் பெயரும் உள்ளது. இவர்கள் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வழக்கு விசாரணையின்போது தன்ஹாவின் வழக்கறிஞர், “கலவரம் நடந்த அந்த பிப்ரவரி மாதம் அவர் வடகிழக்கு டெல்லியில் இருக்கவே இல்லை.” என வாதாடினார். அடுத்தக் கட்ட விசாரணைக்காக ஹைதர் சிறையில் காத்துக் கொண்டு இருக்கிறார்.

டெல்லி கலவரம் – மாணவர் தலைவர் கலிதாவுக்கு ஜாமீனை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நவம்பர் 3-ல் நடைபெற்ற விசாரணையில் அவரது வழக்கறிஞர், கூடுதல் நீதிபதி அமிதாப் ராவத் திடம் மீரான் ஹைதர் “போதுமான உடைகள் இல்லாமல் இருப்பதாகவும்” சிறையில் அவருக்கு குளிர்கால உடைகளோ, மருந்தோ அவருக்கு கிடைக்கவில்லை” எனக் கூறினார்.

செப்டம்பர் 15-ம் நாள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிஃபா உர் ரகுமானின் மீது டெல்லி காவல் துறை அவர் மீதும் மற்றவர்கள் மீதும் பதிவு செய்துள்ள உபா வழக்கில் கால நீட்டிப்புக் கோரிய மனு மீதான விசாரணையில், திகார் சிறை அதிகாரிகளை கண்டித்த நீதிபதிகள், ரகுமான் தன் வழக்கறிஞருடன் காணொளி மூலம் கலந்துரையாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தும் அதை அவருக்கு தர மறுத்ததேன் என கேள்வி எழுப்பியது.

மீரான் ஹைதர்
மீரான் ஹைதர்

“இந்த நாட்டில், நீங்கள் மிக எளிதாக ஒருவரைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டு, அவரிடம் அவரது வழக்தறிஞரைக் கூட பார்க்கக் கூடாது எனக் கூற முடியாது.” என நீதிபதி விபு பக்ரூ கூறியுள்ளார். கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கறிஞரை சந்திக்கவிடவில்லை. பல முறை வழக்கறிஞர் மின்னஞ்சல் மூலம் சிறை அதிகாரிகளுக்கு காணொளி சந்திப்பை ஏற்படுத்தக் கோரியும் அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார் வழக்கறிஞர்..

நவம்பர் 9-ல் டெல்லி உயர்நீதிமன்றம், தன் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுப்பதை எதிர்த்து ரகுமான் கொடுத்துள்ள மனு மீதான உத்தரவில் டெல்லி காவல் துறை நான்கு வாரத்தில் நிலை அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி விசாரணையை ஜனவரி 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

JNU மாணவர் தலைவர்கள்

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்தை டெல்லி கலவர வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கூறி செப். 13-ம் நாள் காவல்துறை கைது செய்தது. முதல் தகவல் அறிக்கை 59/20ன் படி அவர்தான் டெல்லி கலவரத்தின் முக்கிய சதிகாரர் என்ற குற்றம் சாட்டி, அவரையும் மேலும் பலரையும் உபா சட்டத்தின்படி கலவரம் செய்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

செப்டம்பர் 21-ல் காவல் துறை வசம் உள்ள உமர் காலித் தன் குடும்பத்தினரை சந்திக்கக் கோரி தொடர்ந்த மனு டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அக்டோபர் 1-ம் தேதி இரண்டாவது முதல் தகவல் அறிக்கையையும் அவர்மீது பதிவு செய்துள்ளனர் குற்றப்பிரிவு போலீசார்.

எனக்கு ஏன் இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது? – உமர் காலித்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாஃப்ராபாத்தில் பிப்ரவரி மாதம் நடந்த போராட்டம் தொடர்பாக “கூண்டை உடை” (பிஜ்ரா தோட்) இயக்கத்தை துவக்கிய மாணவிகளான நடாஷா நார்வால் மற்றும் தேவங்கனா கலீதா ஆகிய இருவரையும், பிற ஆய்வு மாணவிகளையும் மே 23-ம் தேதி டெல்லி காவல்துறை கைது செய்தது. அடுத்த நாள் டெல்லி நீதிமன்றம் அவர்களுக்கு பிணை விடுதலைக்கு உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற உத்தரவு வந்த உடனேயே, டெல்லி காவல்துறை வேறொரு வழக்கில் அவர்களை விசாரிக்க வேண்டும் என கோரி மீண்டும் கைது செய்து விட்டது.

கொலை, கலவரம், சதி செய்தல் ஆகிய குற்றங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடாஷாவையும் கலீதாவையும் உபா சட்டத்தின் கீழும் கைது செய்துள்ளனர். செப்டம்பர் 1-ம் தேதி, குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களைத் தூண்டியதாகவும், வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சுக்களைப் பேசியதாகவும் காவல் துறையினர் கலீதா மீது பதிவு செய்த வழக்கில், ஆதாரங்களைக் காட்டத் தவறி விட்டதாகக் கூறி அவருக்கு பிணைய விடுதலை கொடுத்தது நீதிமன்றம். எனினும் இதனை எதிர்த்து தலைமை நீதிமன்றத்தில் காவல்துறை வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ஆசிஃப் இக்பால் தன்ஹா
ஆசிஃப் இக்பால் தன்ஹா

தலைமை நீதிமன்றம், அக்டோபர் 28-ல் காவல் துறை கூறி இருப்பது போல் கலீதா செல்வாக்குள்ளவர், சாட்சியங்களைக் கலைத்து விடுவார் என்பதை ஏற்க மறுத்து அவரது பிணைக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. இதற்கெல்லாம் பிறகும் கலீதா உபா சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள ஒரு முதல் தகவல் அறிக்கையால் இன்னும் சிறையிலேயே இருக்கிறார்.

இதேபோல நார்வாலுக்கும் டெல்லி, கர்கர்டூமா நீதிமன்றம் பிணை விடுதலைக்கு உத்தரவிட்டும், கொடிய உபா சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு முதல் தகவல் அறிக்கையால் இன்னும் திகார் சிறையில் இருக்கிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதற்காக சார்ஜீல் இமாம் என்ற ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக (JNU) ஆராய்ச்சி மாணவரை அவரது சொந்த ஊரான பீகாரில் உள்ள ஜெகனாபாத்தில் வைத்து ஜனவரி 28-ல் கைது செய்தது காவல்துறை. அவர் தேச விரோத கருத்துக்களை வெளியிடுவதாக கூறப்படும் ஒரு காணொளி விரிவாக இணையத்தில் பரப்பப்பட்டதாகக் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன. வண்டிகள் வைத்து சாலை மறியல் (Chakkajam) செய்ய அழைப்பு விடுத்ததாகக் கூறி அவர் மீது டெல்லி காவல்துறை தேசத் துரோக வழக்கையும் பதிவு செய்துள்ளது. அசாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அவர் மீது வழக்குகள் உள்ளன.

டெல்லி வன்முறை : இசுலாமியர்களுக்கு எதிராக போலீஸ் பாரபட்சம்

பல இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும் , உபாவிலும் அவர் மீது வழக்குகள் உள்ளன. 88 நாட்களில் அவர் போட்ட பிணை மனுவும் தள்ளுபடி ஆனது. (உபா சட்டப்படி 90 நாட்களுக்குப் பிறகே பிணை மனு போட முடியும்) இமாம் தனது கைதை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கச் கோரிய காவல்துறை மனுவை எதிர்த்த மனுவும் ஜுலை 10-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. நவம்பர் 13 வரை 289 நாட்களை இமாம் சிறையிலேயே கழித்துள்ளார்.

ஷிஃபா உர் ரகுமான்
ஷிஃபா உர் ரகுமான்

செய்தியாளர்கள்

கடந்த அக்டோபர் 6-ம் நாள் ஹத்ராஸுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற கேரளாவின் அழிமுகம் செய்தித் தள நிருபர் சித்திக் காப்பன் மதுரா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியுடன் தொடர்பு கொண்டவர் என்று (அவரது குடும்பத்தினர் இதை அடியோடு மறுத்துள்ளனர்) கூறி உபா உள்ளிட்ட பல இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார். இறுதியில் ஹத்ராஸ் “சதிதிட்ட” வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மனைவி அவருடன் பேசவும் அவரது உடல்நிலை பற்றி அறியவும் கூட அனுமதிக்கவில்லை என கூறி உள்ளார். அவரது வழக்கறிஞரைக் கூட சந்திக்க அனுமதி மறுத்து விட்டது உ.பி. காவல்துறை.

பத்திரிகையாளர் மீது தேச விரோத வழக்கு – உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை

அர்னாப் கோஸ்சுவாமிக்கு பிணை தரப்பட்ட பிறகு கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தலைமை நீதிமன்றத்தில் பிணைக்காக மனு பதிவு செய்துள்ளது. அது நவம்பர் 16-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

ஆசிஃப் சுல்தான் தனது மாதப் பத்திரிகையான ‘காஷ்மீர் நரேட்டரில்’ செல்வாக்கு மிக்க போராளி படைத்தலைவர் புர்ஹான் வானி பற்றிய ஒரு கட்டுரை எழுதியதற்காக ஆகஸ்ட் 31-ம் நாள் கைது செய்யப்பட்டார். புர்ஹானின் மரணம் அரசுக்கெதிராக அலையை எழுப்பி 2016-ல் மிகப்பெரும் பேரணிகள் நடைபெற்றன. 2018-ல் தீவிரவாத அமைப்புகளுக்கு பொருளுதவி செய்ததாக சுல்தான் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் இருக்கிறார். நவம்பர் 28-ல்அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்டதாகவும், 2019-ல் காவல்துறை அவர் மீது தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்ததாக புதிய குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன..

அவர் தற்போது 805 நாட்களை சிறையில் கழித்துள்ளார்.. அவரது நண்பர்கள் அவரை விடுவிக்க கோரி இணையத்தில் பரப்புரை செய்து வருகிறார்கள். (#FreeAasifSultan).

காஷ்மீர்: உரிமைகள் மறுக்கப்பட்டதன் நினைவு நாள் -ஆகஸ்ட் 5

மேகாலயா உயர் நீதிமன்றம் நவம்பர் 10-ல் பத்திரிகையாளர் பாட்ரிக்கா முகிமின் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. அவர் முகநூலில், அரசின் பழங்குடியினர் மீதான தொடர் தாக்குதலுக்கு எதிராக பதிவிட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவரது பதிவில் லாவ்சோதுன் எனுமிடத்தில் ஒரு கூடைப்பந்து மைதானத்தில் பழங்குடி மற்றும் பழங்குடி அல்லாதோருக்கிடையிலான இளைஞர்களின் சிறு சண்டையே பிரச்சனைக்கு காரணம். அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவே இல்லை என கூறியிருந்தார்.

முகிமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அந்தப் பதிவு மேகாலயாவில் இருபிரிவினருக்கும் இடையே உள்ள சுமுகமான உறவை பிளவு படுத்துவதாக இருக்கிறது என கூறினார்.

முகிமின் மீது இவ்வாறு நடவடிக்கை எடுப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு ஷில்லாங் டைம்ஸ் பத்திரிகையில் நீதிபதிகள் ஓய்வு பெறும் பெறும் போது கிடைக்கும் பயன்களை அரசு பல ஆணைகள் மூலம் தன்னிச்சையாக உயர்த்தி கொண்டு வந்திருப்பதை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதியதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதை தலைமை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

தேவாங்கனா கலிதா
தேவாங்கனா கலிதா

“எல்கர் பரிஷத்” வழக்கு

“எல்கர் பரிஷத்” வழக்கை ஜனவரியில் தேசிய புலனாய்வு முகமை எடுத்த உடன் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான கவுதம் நவ்லகா மற்றும் கல்வியாளரும், மக்கள் உரிமை செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே ஆகியோரை கைது செய்தது. அவரது வழக்கறிஞர்கள் பிணைக்காக மனு போட்டுள்ளனர்.

நீதிமன்ற நடைமுறைப் படி நான்கு முறை வழக்கை எடுத்துக் கொள்ளக் கோரியும், நவ்லகாவின் (67) வழக்கறிஞர்கள் பலமுறை நீதிமன்ற பதிவாளருக்கு நினைவூட்டல் கடிதம் எழுதிய பிறகும் , இது ஒரு “மூத்த குடிமகனின் தனிநபர் சுதந்திரம்” பற்றியது என எடுத்துக் காட்டிய பிறகு இறுதியில் பட்டியலிடப்பட்ட போது மிகவும் கடைசியில் இருப்பதால் விசாரணைக்கு வரவே இல்லை.

83 வயதான பழங்குடியினர் உரிமைப் போராளி ஸ்டேன் ஸ்வாமி – என்ஐஏவால் கைது

ஜார்கண்ட்டில் பழங்குடி மக்களின் உரிமைகாகாகப் போராடி வரும், 83 வயதான கிறித்துவ பாதிரியார் ஸ்டான்சுவாமி ‘எல்கர் பரிஷத்’ வழக்கின் 16-வது நபராக கைது செய்யப்பட்டார். நடுக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட அவருக்காக போடப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. கடந்தவாரம் நீரை கண்ணாடிக் கோப்பையைப் பிடித்து குடிக்க இயலாததால் தான் கொண்டு வந்துள்ள உறிஞ்சியையும் உறிஞ்சிக் கோப்பையையும் கொடுக்கக் கோரி மனு அளித்த போது தேசிய புலனாய்வு முகமை அதற்கு 20 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளது. சுவாமி உட்பட 16 பேரும் “நகர்ப்புற நக்சல்கள்” என்றும் “தடை செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள்” எனவும் உளவுத்துறை கூறி வருகிறது..

79 வயதான உரிமைகளுக்கான போராளி வரவரராவும் தனக்குத் தேவையான மருத்துவ வசதிக்கும் கூட படாதபாடு பட வேண்டியுள்ளது. ஆகஸ்ட் 2018-ல் கைது செய்யப்பட்ட அவர் கொரோனா நெருக்கடியால் மேலும் அவதியுற்று வருகிறார். வழக்கின் தன்மை அடிப்படையிலும் உடல்நிலை காரணம் காட்டியும் போடப்பட்ட பிணை மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

கடந்த ஆறுமாத காலமாக அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு போவதும் வருவதுமாக உள்ளார். அவரது குடும்பத்தினர் தேசிய புலனாய்வு முகமையும், சிறைத் துறையும் அவருக்கு போதிய வசதியை வழங்காதது மட்டுமல்ல சுயமரியாதையோடு வாழவும் அனுமதிப்பதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

நவம்பர் 12 அன்று நடைபெற்ற விசாரணையில் அவரது வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அவரது உயிர் போய்விடுமோ என அஞ்சுவதாகவும், அவ்வாறு நடந்தால் அது அவர் சிறையில் தொடர்ந்து இருந்ததே காரணமாக இருக்கும் என்று நீதிமன்றத்தில் கூறினார்.

“அவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். படுத்த படுக்கையாக கிடக்கிறார். சிறுநீர் வடிகுழாய் 40 நாட்கள் ஆனாலும் மாற்றப்படுவதில்லை. படுத்த படுக்கையாய் கிடக்கும் மனிதர் பறந்து போய் விடுவார் என நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.

இந்த செயற்பாட்டாளர்களுக்காக வழக்காடும் நிஹால் சிங் ரத்தோர், “தொடர்ந்து கடந்த இரண்டாண்டுகளாக பல்வேறு நிலைகளில், அடிக்கடி பிணை மனுக்கள் போடப்படுகின்றன. ஆனால் அதன்மீது எந்த அவசரமும் காட்டப்படுவதில்லை.” என்கிறார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதைக் கூட எதிர்த்து அவர் வழக்குத் தொடுத்துள்ளார். அது நீதிமன்றத்தில் தூங்கிக் கொண்டுள்ளது.

ஷர்ஜீல் இமாம்
ஷர்ஜீல் இமாம்

முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

இஷ்ரத் ஜஹான், டெல்லி கலவரம் தொடர்பாக பிப்ரவரி 26 ம் நாள் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் உபா மற்றும் பல சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. அவருக்காக வாதாடிய ஜாகிர்ராஜா, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் 49 நாட்கள் அமைதியாகவே நடந்தது. போராடியவர்கள் மீது எந்த குற்றவியல் புகாரும் பெறப்படவில்லை. அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதற்காகவே “அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்” கைது செய்யப்பட்டுள்ளார். எனக் கூறினார்.

நவம்பர் 3-ல் விசாரணை நடைபெற்ற போது அவரது வழக்கறிஞர் அவரது சிறையில் ஐந்து பேர் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் அவருக்கு கம்பளி ஆடைகளை கொண்டு வந்ததை அனுமதிக்க மறுத்து விட்டதையும் கூறினார். அவர்கள் குடும்பத்தினர், “எங்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை அவளுக்கு குளிர்கால உடைகளை கொடுக்கவாவது ஒரு பொது உத்தரவு போடுங்கள்” என கேட்டனர். சிறையில் அவரை கொடுமைப் படுத்தியதாகவும் அவர்கள் கூறினர்.

இஷ்ரத் ஜஹான்
இஷ்ரத் ஜஹான்

ஜஹான் இடைக்கால பிணையில் அவரது திருமணத்திற்காக வந்தார். அவரது வழக்கறிஞர் லலித் வலேச்சா, புலன் விசாரணை முடிந்து விட்டதால் அவர் மீண்டும் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவருடைய கணவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறியும், நீதிபதி அவரது பிணையை நீட்டிக்க மறுத்துவிட்டார். அவர் இன்னும் சிறையிலேயே உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் தாஹிர் உசைன் மார்ச் 5-ம் நாள் டெல்லி கலவரத்தின் போது ஒரு புலனாய்வுத் துறை அலுவலரை கொலை செய்ததாகக் கூறி கைது செய்தனர். கொலை செய்யப்பட்டவரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 22-ம் தேதி நடந்த அவரது பிணை மனு மீதான விசாரணையில், கலவரத்தின் போது, பதவியிலிருக்கும் மக்கள் பிரதிநிதியாக “தனது வலிமையையும், அரசியல் பின்புலத்தையும் பயன்படுத்தி, சமூக மோதலுக்கு தலைமை ஏற்று, திட்டமிட்டு, தூண்டிவிட்டு, ஊக்குவித்துள்ளார்” என டெல்லி நீதிமன்றம் கூறி அவரது பிணை மனுவை தள்ளுபடி செய்தது. தாஹீரின் வழக்கறிஞர் மனன், “அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் எனது கட்சிக்காரர் மீது அவரது நற்பெயரை கெடுப்பதற்காக போடப்பட்டுள்ள வழக்கு இது. அவர் கலவரத்தில் பங்கு கொண்டதற்கான ஒரு சிசிடிவி பதிவுகூட சாட்சியாக இல்லை.” என வாதிட்டார். ஹூசைன் கைது செய்யப்படுவதற்கு முன்பு அளித்த பேட்டியில், தான் கலவரத்தால் பாதிக்கப்பட்டவன் என்றும் குற்றவாளி அல்ல என்றும் கூறினார்.

பின்னர் அவர் மீது பண மோசடி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நிதி உதவி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அமலாக்கப் பிரிவு சுமத்தி அதன் அடிப்படையில், பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனந்த் டெல்டும்டே
ஆனந்த் டெல்டும்டே

செயற்பாட்டாளர்கள்

ஏப்ரல் 9-ல் ஜாஃப்ராபாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக 28 வயதான முதுகலை மேலாண்மைப் பட்டம் பெற்றுள்ள குல்ஃபிஷா ஃபாத்திமாவை உபா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

செப்டம்பர் 21-ம் தேதி நடந்த விசாரணையில் ஃபாத்திமா,” சிறை அதிகாரிகள் எனக்கு மனரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தொல்லை தருகிறார்கள். என்னை அவர்கள் மத ரீதியான அவதூறு வார்த்தைகளால் திட்டி, ‘படித்த பயங்கரவாதி’ என்றும், நீ வெளியே கலவரத்தை நடத்தி இருக்கிறாய். உள்ளே செத்து போ.” எனக் கூறியதாக நீதிபதியிடம் தெரிவித்தார். ஆனால் திகார் சிறை அதிகாரிகளோ அவர் மிகவும் எதிர்ப்புணர்வுடன் இருப்பதாகவும் ” மூன்று முறை அவரது தவறான நடத்தைக்காக தண்டிக்கப் பட்டுள்ளார்.” எனவும் தெரிவித்தனர்.

குல்பிஷா பாத்திமா Credit : thewire.in
குல்பிஷா பாத்திமா Credit : thewire.in

அக்டோபர் 21 அன்று நீதிபதி ராவத் அவரது பிணை மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார். குல்ஃபிஷா தனது மனுவில், தான் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி கைது செய்யப்பட்டதாகவும் அக்டோபர் 12 வரை 183 நாட்களாகியும் தன்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், எனவே நிர்ணயிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் குற்றவியல் சட்டம் 167(2) பிரிவின் படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி இருந்தார்.. முன்னதாக ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட அவரது பிணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜாமியா மாணவி குல்பிஷா பாத்திமா – சிறையில் மதரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகப் புகார்

பிப்ரவரி மாதம் சந்த்பாக் பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறை காலித் சைஃபி என்பவரை கைது செய்தது. அவர் ‘வெறுப்புக்கு எதிராக ஒன்றிணைவோம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர். அவர் மீது உபா உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காலித்தின் வழக்கறிஞர் ரபேக்கா ஜான், காலித் ஜகத்புரி காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். மார்ச் 21 ம் தேதிய விசாரணையில் அவரது மனுவும் தள்ளுபடி ஆனது.
செப்டம்பர் 11 டெல்லி நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. அவர் கடந்த மார்ச் மாதம் முதல் முறையாகவும் ஜுலை மாதம் 2-ம் முறையாகவும் மனு செய்திருந்தார்.

சித்திக் காப்பன்
சித்திக் காப்பன்

சமீபத்தில் அவருக்குப் பிணை வழங்கிய நீதிபதி வினோத் யாதவ், டெல்லி காவல்துறை முக்கியத்துவம் இல்லாத காரணங்களைக் கூறி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதை அறிந்து, ” காவலர்கள் சிறிதும் அறிவைச் செலுத்தாமல் (முட்டாள் தனமாக)” “கண்டனத்திற்கு உரிய வகையில்” செயல்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஃபாத்திமாவும் சைஃபியும் இன்னும் சிறையிலேயே உள்ளனர்.

டெல்லி கலவர வழக்கில், உபா சட்டத்தில் கைதானவர்களில் வெறும் இரண்டு பேர் மட்டுமே பிணை பெற்றுள்ளனர். ஒருவர் ஜாமியா மாணவி சஃபூரா சர்கர். அவர் கைது செய்யப்பட்ட போது கருவுற்றிருந்தார். மற்றொருவர் கைப்பேசி விற்பனையாளர் ஃபைசன் கான். இவர் மீதான குற்றச் சாட்டிற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என நீதிமன்றம் கூறிவிட்டது.

(www.thewire.in இணையதளத்தில் இஸ்மத் ஆரா மற்றும் சுகன்யா சாந்தா எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்