Aran Sei

பெட்ரோல் டீசல் விலை உயர்வு – பொய்யான தகவலை அளித்த ஒன்றிய அமைச்சர் – அரண்செய் உண்மை அறியும் ஆய்வில் அம்பலம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று (22.10.21) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி ஒன்றிய அரசின் கலால் வரியை குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியின் மீது வரும் வருவாயில்தான், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க முடியாததற்கு ஹர்தீப் பூரி சில காரணங்களை கூறியுள்ளார். அந்தக் காரணங்களின் உண்மைத் தன்மையை அரண்செய் ஆராய்ந்தது. அதன் முடிவுகளை பார்ப்போம்.

குருகிராமில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த எதிர்ப்பு தெரிவித்த இந்துத்துவவாதிகள் – ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கம் எழுப்பி போராட்டம்

அமைச்சர் கூறியது : இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பு மருந்து கொடுத்து முடித்திருக்கும் சமயம் உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறையும். அப்போது பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும்.

உண்மை : 2014 -15 ஆண்டில் சராசரியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 84 டாலராக இருந்தது. அந்த ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் மீது ஒன்றிய அரசின் வரி வருவாய் 1.26 லட்சம் ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு கச்சா எண்ணெயின் விலை 46 டாலராக குறைந்தது. ஆனால், ஒன்றிய அரசின் வரி வருவாயோ சுமார் 2 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆகவே, கச்சா எண்ணெயின் விலை 50 சதவீதம் குறைந்தாலும் ஒன்றிய அரசின் வருவாய் குறைவதற்கோ அல்லது அதே அளவு நீடிப்பதற்கோ பதிலாக சுமர் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. (இந்தச் சமயத்தில் கொரோனாவும் இல்லை, தடுப்பூசி போன்று திடீரென்று எதற்கும் செலவழிக்க வேண்டிய தேவையும் ஒன்றிய அரசுக்கு ஏற்படவில்லை)

அதேபோல், 2020 – 21 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெயின் விலை 45 டாலராக குறைந்தது. அப்போதும் ஒன்றிய அரசின் வரி வருவாய் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 4.20 லட்சம் கோடியாக உயர்ந்தது.

இதன் மூலம், சர்வேதச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தால், பெட்ரோல், டீசல் மீதான விலை குறைக்கப்படும் என்று அமைச்சர் கூறுவது இதுவரை நடந்ததை வைத்துப் பார்க்கும்போது தவறான தகவல் என்பது விளங்குகிறது.

தொடரும் சாதியப் பாகுபாடு – சேலத்தில் ஒடுக்கப்பட்டவருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சலூன் உரிமையாளர்

அமைச்சர் கூறியது : கச்சா எண்ணெயின் விலை 19 டாலராக இருந்தாலும் சரி, 84 டாலராக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசு கலால்வரியாக 32 ரூபாயை மட்டுமே தொடர்ந்து நிர்ணயித்து வருகிறது. மாநில அரசுதான் விரி விதிப்பை மாற்றி அமைத்து வருகிறது.

உண்மை: 2014 – 15 ஆண்டில் எரிபொருள் விற்பனை மூலம் ஒன்றிய அரசுக்கு 1.26 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது. 2020 – 21ஆம் ஆண்டில் இது 4.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் 2014 – 15 ஆண்டில் மாநில அரசுகளுக்கு எண்ணெய் விற்பனை மூலம் 1.6 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்தது. ஆனால் அடுத்த ஏழு ஆண்டுகளில் இது 2.17 லட்சம் கோடி என்ற அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆகவே, கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரியின் மூலம் ஒன்றிய அரசின் வருமானம், சுமார் 300 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசுகளின் வருமானமோ 50 சதவீதம் கூட உயரவில்லை.

ஆகவே, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அந்த பாரம் பொதுமக்களின் தலையில் விடிவதையும், விலை குறையும்போது அதன் பலன் பொதுமக்களுக்கு வழங்கப்படாததையும் இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

‘எல்லைப் பாதுகாப்பு படைக்கான அதிகார நீட்டிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்’ – பிரதமருக்கு பஞ்சாப் முதலமைச்சர் கோரிக்கை

அமைச்சர் கூறியது : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏறினால் நீங்கள் கலால் வரியை குறைக்க வேண்டியதுதானே என்று கேட்கிறார்கள். வெவ்வேறு காரணங்களுக்காக கச்சா எண்ணெயின் விலை ஏறும்போது நமது காலை நாம் வெட்டிக்கொள்ளவது போல் இது அமைகிறது. இந்த விவாதத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை.

உண்மை : 2020 பிப்ரவரி மாதம் கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 55 டாலராக இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கச்சா எண்ணெய்யின் விலை மார்ச் மாதம் 33 டாலராக குறைந்தது. பின்னர் ஏப்ரல் மாதம் 20 டாலராக குறைந்த கச்சா எண்ணெய்யின் விலை மே மாதம் 30 டாலர் என்ற அளவிலேயே விற்பனை செய்யப்பட்டது.

ஆகவே, 2020 மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 20 டாலர் அளவிற்கு வீழ்ச்சியடைந்த நிலையில், உண்மையில் பெட்ரோல், டீசலின் விலை குறைந்திருக்க வேண்டும் ஆனால், ஒன்றிய அரசு இந்தக் காலகட்டத்தில், பெட்ரோல் மீதான வரியை 65 சதவீதமும், டீசல் மீதான வரியை 101 சதவீதமும் உயர்த்தியது. அதனால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தாலும் பெட்ரோல் டீசல் விலை குறைவதற்கு பதிலாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில்தான் (2020 – 21) முன் எப்போதும் இல்லாதவகையில், ஒன்றிய அரசு பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரியின் மூலம் 4.2 லட்சம் கோடி ரூபாய் வருவாயைப் பெற்றது.

சமத்துவத்திற்கான நீண்ட போராட்டமும் மறுக்கப்படும் அரசியல் உரிமைகளும் – மீனா கந்தசாமி

ஆகவே, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் வரியை குறைப்பது காலை வெட்டிக்கொள்வதற்கு சமம் என்று கூறும் அமைச்சர், கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதுவும் கொரேனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்திலும் கூட, பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்காதது ஏன் என்பதற்கு பதில் அளிக்க வேண்டும்.

அமைச்சர் கூறியது : 2010ஆம் ஆண்டு பெட்ரோல் விலையை கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும் முடியவை எடுத்த காங்கிரஸ் அரசு, அதன் பின்னர் விலையைக் கட்டுப்படுத்த 1.4 லட்சம் கோடி எண்ணெய் பத்திரிங்களை வெளியிட்டுள்ளது. அப்போதைக்கு பிரச்சனையைத் தீர்க்க காங்கிரஸ் அரசு எடுத்த இந்த முடிவு இன்று வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை: கடந்த 2015 – 16 ஆம் நிதி ஆண்டிலிருந்த தற்போது வரை, எண்ணெய் நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் மீது ஒன்றிய அரசு வட்டியை மட்டுமே செலுத்தி வந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இவ்வாறாக கடநத் 6 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் கோடி வட்டியை மட்டுமே ஒன்றிய அரசு செலுத்தி வந்துள்ளது சாகேத் கோகலே என்பவர் ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலில் தெரியவந்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் பெட்ரோலி பொருட்களின் மீதான வரி விதிப்பின் மூலம் ஒன்றிய அரசு 4.5 லட்சம் கோடி ரூபாய் வாருவாயை பெற்றள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்திருந்தார். கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி விதிப்பின் மூலம் ஒன்றிய அரசு சுமார் 15.5 லட்சம் கோடி ரூபாய் வருவாயை பெற்றுள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது எண்ணெய் பத்திரிம் மீதான 1.4 லட்சம் கடன், ஒன்றிய அரசுக்கு பெரும் சுமையாக இருப்பதாக அமைச்சர் கூறுவது முற்றிலும் தவறு என்பது விளங்குகிறது.

(கச்சா எண்ணெய் விலை, பெட்ரோல்டீசல் விலை, ஒன்றியமாநில அரசுகளின் வருவாய் மற்றும் வரிவிதிப்பு போன்ற விபரங்கள் www.ppac.gov.in (Petroleum Planning & Analysis Cell) என்ற அரசு இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்