Aran Sei

பெரியார் : இந்துத்துவத்திற்கு எதிரான பாதுகாப்பு அரண் – ர.முகமது இல்யாஸ்

நன்றி : பெரியாரிசம்

நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை நடத்துவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தங்கள் கனவுத் திட்டமான ’இந்து ராஷ்ட்ரம்’ உருவாகிவிடும் என்பதில் உறுதியாக இருக்கின்றன சங் பரிவார் அமைப்புகள். இந்திய அரசுக் கட்டமைப்பிலும், உயர்சாதி, நடுத்தர மக்களின் பொதுப் புத்தியிலும் கடுமையாக ஊடுறுவியிருக்கும் இந்த அமைப்புகள், தற்போது பெரும்பான்மைவாதத்தை அறுவடை செய்திருக்கின்றன. அரசுக் கட்டமைப்பு உற்பத்தி செய்திருக்கும் பெரும்பான்மைவாதம் ஒவ்வொரு நாளும் எளிய மக்களின் உரிமைகளையும், உயிர்களையும் நசுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்து ராஷ்ட்ரத்தின் போர் மேகங்கள் சூழ, அமைதியாகக் காத்திருக்கிறது தமிழ்நாடு; தமிழ்நாட்டின் உள்ளும், புறமுமாக இந்துத்துவம் தன்னை வளர்த்திக் கொள்ள முயல்கிறது. தேர்தல்களாலும், கட்சிகளின் நிலைப்பாடுகளாலும், சில நேரங்களில் தம் சுயத்தை இந்துத்துவத்துக்குப் பலிகொடுத்தாலும், தனது முழு அடையாளத்தை இழக்காமல் இருக்கிறது தமிழ்நாடு. கடந்த 70 ஆண்டுகளில், இந்துத் தேசியத்திற்கும், இந்தியத் தேசியத்திற்கும் தன்னை இழக்காமல் தமிழ்நாடு பெருமைகொள்வதற்கான காரணம் –  திராவிட இயக்க வளர்ச்சியையும், தமிழர் நலனையும், மானுட விடுதலையையும் தன் பணியாகத் தன்மேல் தூக்கிப் போட்டுப் பணியாற்றிய தமிழர்களின் தந்தை பெரியார்; இந்துத்துவத்திற்கு எதிரான தமிழ்நாட்டின் பாதுகாப்பு அரண்.

திராவிட இயக்கமும், இந்துத்துவ இயக்கமும் ஏறத்தாழ ஒரே ஆயுட்காலத்தைக் கொண்டவை. திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான பெரியாரும், இந்துத்துவம் என்ற தத்துவத்திற்கு உயிர்கொடுத்த சாவர்க்கரும் ஏறத்தாழ ஒரே காலத்தில் பிறந்து, வாழ்ந்தவர்கள். இருவரும் தங்கள் தொடக்க கால அரசியல் வாழ்வை ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தின் வழியாகத் தொடங்கியவர்கள். ஆங்கிலேயர் காலில் விழாத குறையாக சாவர்க்கர் பிற்காலத்தில் எழுதிய மன்னிப்புக் கடிதமும் வரலாற்றில் இருக்கிறது; இந்திய சுதந்திர நாளைத் ‘துக்க நாள்’ என்று பெரியார் அறிவித்ததும் நிகழ்ந்திருக்கிறது. இருவரும் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக எதிர்த்தவர்கள்.

பெரியாரும் சாவர்க்கரும் நாத்திகர்கள்; இருவருமே தங்கள் சாதி அடையாளத்தைத் துறந்ததாகப் பகிரங்கமாக அறிவித்தவர்கள். 1929ஆம் ஆண்டு, செங்கல்பட்டில் நடந்த ’சுயமரியாதை’ மாநாட்டில், தனது சாதிப் பெயரைத் தனது பெயரில் இருந்து நீக்கியதோடு, தனது தொண்டர்களையும் அதனைப் பின்பற்றுமாறு அறிவித்தார் பெரியார். 1930ஆம் ஆண்டு, ’இந்து ஒற்றுமை’ விழாக்களை முன்னின்று நடத்திய சாவர்க்கர், சம பந்தி விருந்து ஒன்றில், ஆச்சாரமான இந்துச் சனாதனிகளின் முன் பேசிய போது, “இன்று முதல் நான் சாதிகளில் உயர்வு, தாழ்வு பார்க்க மாட்டேன்; கலப்புத் திருமணங்களை எதிர்க்க மாட்டேன்; அனைத்து சாதிகளைச் சேர்ந்த இந்துக்களுடனும் உணவு உண்பேன்; பிறப்பாலும், தொழிலாலும் சாதிப் பட்டம் பெறுவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை; இனி நான் ஒரு இந்து – பிராமணனோ, வைசியனோ அல்ல” என்று ஆவேசமாகப் பேசினார்.

இருவரது ஒற்றுமைகளும் இப்படியிருக்க, அவர்களது லட்சியங்கள் வெவ்வேறானவையாக இருந்தன.  சாவர்க்கர் ’சுயராஜ்ஜியம்’ வேண்டும் என்று பேசிய போது, பெரியார் ‘சுயமரியாதை’ வேண்டும் என்று போராடினார். ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்க்காமல், இந்து ஒற்றுமையை வளர்த்து, இந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டும் என்பது மட்டுமே சாவர்க்கரின் நோக்கமாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அப்போதைய சர்சங்சாலக் கோல்வால்கர், தனது முந்தைய தலைவரான ஹெட்கேவாரிடம் கற்றுக் கொண்ட தந்திர உத்தி அது.

பெரியாரோ ஆங்கிலேய எதிர்ப்பை விட, தனக்கும் தனது மக்களுக்கும் சுயமரியாதையே முக்கியம் என்று முழங்கினார். சாவர்க்கரின் போராட்டம் வெறுப்பின் வழியாகப் பிறந்தது. பெரியாரின் போராட்டம் உரிமைகளின் வழியாகப் பிறந்தது; சாவர்க்கரின் நோக்கம், இந்து நாடு. பெரியாரின் நோக்கம், மானுட விடுதலை. சாவர்க்கர் ‘இந்தியாவைப் பித்ருபூமியாகவும், புண்ணிய பூமியாகவும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்துக்கள் அல்ல’ என்று தனது கனவுத் தேசியத்தைக் கட்டமைத்தார். பெரியார் “பார்ப்பனர்கள் தேசாபிமானம் என்கின்ற ஓர் ஆயுதத்தை வைத்துக் கொண்டே பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி ஆதிக்கம் பெறப் பார்க்கிறார்கள்” என்று தேசியம் குறித்து விளக்கம் தந்தார். சாவர்க்கர் ‘சிவாஜி!’ என்றார்; பெரியார் ‘வெங்காயம்!’ என்றார்.

பெரியார், சாவர்க்கர் ஆகிய இருவரும் காந்தியோடு கடுமையாக முரண்பட்டவர்கள். எனினும், கோட்சே காந்தியைச் சுட்டுக் கொன்ற போது, பெரியார் காந்திக்காக இரங்கல் தெரிவித்ததோடு, இந்தியாவுக்குக் ’காந்தி நாடு’ என்று பெயர் சூட்டுமாறு அறிவுரை செய்வதாக இருந்தது பெரியாரின் முரண். காந்தியின் படுகொலை குற்றவாளிகளுள் ஒருவராக அறிவிக்கப்பட்டிருந்தார் சாவர்க்கர். வெறுப்பு அரசியலின் மொத்த வடிவமாக அன்று வெளிப்பட்டது சாவர்க்கரின் இந்துத்துவம்.

பெரியார் குறித்த கட்டுரையில், பெரியாரையும், சாவர்க்கரையும் ஒப்பிடுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவைத் தற்போது ஆளும் கருத்தியலாக இருக்கிறது சாவர்க்கரின் இந்துத்துவம். பிற்காலத்தில், ஹெட்கேவார், கோல்வால்கர், தீனதயாள் உபத்யாய் முதலானோரின் கருத்துகளோடு தங்களைக் காலத்திற்குத் தக்கவாறு தகவமைத்துக் கொண்டாலும், இந்துத்துவத்தின் தொடக்கப் புள்ளியாக இருக்கிறார் சாவர்க்கர். சாவர்க்கரின் கருத்தியல் தமிழ்நாட்டில் வெல்ல முடியாதபடி அரணாக நிற்கிறது பெரியாரின் கருத்தியல்.

இந்தியத் தேசியம் உருவான காலத்திலேயே, அது பார்ப்பனர்களின் நலன்களுக்காக செயல்படும் ஒன்றாக இருக்கப் போகிறது என்று அறிவித்தார் பெரியார். இந்தியத் தேசியத்தின் அன்றைய செயல்பாடுகளும், பிற்காலச் செயல்பாடுகளும் அதை உறுதிப்படுத்தின. பிற்காலத்தில், இந்தியத் தேசியம் என்பது இந்துத் தேசியமாக மாறிவருவதை நம்மால் காண முடிகிறது. பெரும்பான்மைவாதம், பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் மீதான வன்முறை அதிகரிப்பு, அரசு இயந்திரம் முழுவதும் உயர்சாதியினர் ஆக்கிரமிப்பு, இட ஒதுக்கீடு மறுப்பு, இந்தி திணிப்பு, கல்வி மறுப்பு முதலான விவகாரங்கள் முன்பை விட மூர்க்கமாகத் தற்போது நிகழ்ந்து வருகின்றன. இவற்றிற்கு மாற்றாக, அதிதீவிர தேசியவாதம் முன்வைக்கப்படுகிறது. காஷ்மீர் சிறப்புச் சட்டம் நீக்கம், ராணுவத்தை வலிமைப்படுத்துவதாக எழும் வெற்று முழக்கம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் ராமர் கோயிலைத் ‘தேச ஒற்றுமையின் சின்னம்’ என்று அறிவிப்பது தொடங்கி, தடைசெய்யப்பட்ட ’பப்ஜி’ விளையாட்டுக்கு மாற்றாக, ‘ஃபௌ-ஜி’ என்ற இந்திய ராணுவக் கதாபாத்திரங்கள் கொண்ட விளையாட்டை முன்னிறுத்துவது வரை இந்துத் தேசத்தின் பெயரால் மக்கள் குறிவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

’மக்கள் சாதி பேதத்தையும், மத பேதத்தையும் ஒழிக்கத் தேசியவாதிகள் கவனிக்காமல் இருப்பது மாத்திரமல்லாமல், அவற்றை நிலைநிறுத்தவும் வலுப்படுத்தவும் முயற்சிக்காமலிருப்பதும் இல்லை’ என்றார் பெரியார். இது தற்காலத் தேசியவாதிகளும் பொருந்தும் கருத்தாகவே இருக்கிறது. பெரியார் காலத்தில், அன்றைய இந்தியத் தேசியவாதிகள் இந்திய அரசை மதச்சார்பற்றதாக அறிவித்தனர்; எனினும், சாதி, மொழி, தேசிய இனம் குறித்த பிரச்னைகளில் இந்தியத் தேசியவாதம் தலைதூக்கியது. பெரியார் மறைந்த சில பத்தாண்டுகளில், இந்தியத் தேசியவாதம் தன்னிடம் இருந்த ஒரே சிறப்பு இயல்பான மதச்சார்பின்மையையும் படிப்படியாக இந்துப் பெரும்பான்மைவாதத்திடம் பலிகொடுத்திருக்கிறது. தான் வாழும் போதே, இதனைக் கணித்து, தமிழர் நலனை முன்னிறுத்தியவர் பெரியார்.

அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் இந்து மதத்தைக் கடுமையாக விமர்சித்து, அதில் இருந்து வெளியேறிய போதும், ஆர்.எஸ்.எஸ் அவரை ஏற்றுக் கொள்வதோடு, பௌத்த மதமும் இந்திய மதம் தான் என்றும் கூறி, அம்பேத்கரைத் தனதாக்கிக் கொள்ள முயல்கிறது. அதே வேளையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பார்வையில் பெரியார் என்பவர் ‘இந்து விரோதி’, ‘தேச விரோதி’, ‘பிரிவினைவாதி’. பெரியார் வழிகாட்டித் தந்த தேசியம் குறித்த முரண்பாடு தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அச்சப்படுத்துவதோடு, பெரியாரைத் தமிழ்நாட்டின் அரணாகவும் முன்னிறுத்துகிறது. ‘ஹிந்தி தெரியாது போடா!’ என்று இளைஞர்கள் டீ ஷர்ட் அணிவது, பெரியாரையும், இந்துத் தேசியக் கொடுங்கனவிற்கு எதிரான அவரது செயல்பாடுகளையும் சங் பரிவாருக்கு நினைவூட்டுகின்றன.

பெரியார் காலத்தைய காங்கிரஸ் பார்ப்பன இந்தியத் தேசியமாக இல்லாமல், தற்போது பிரச்னைகளின் அளவுகளிலும், பண்புகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தாராளவாதப் பொருளாதாரப் பார்ப்பனிய ஆதிக்கம், இந்துத்துவ நாஜி அரசாக உருப்பெற்றிருக்கிறது. இது தற்காலத்திற்கேற்ற தாராளவாதப் பொருளாதார எதிர்ப்பையும், இந்துத்துவ அரசு எதிர்ப்பையும் ஒருசேர நிகழ்த்தும் பெரியாருக்கான இடத்தை வெற்றிடமாகக் கொண்டிருக்கிறது.

பெரியார் முன்வைத்த திராவிடம் என்பது அதிதீவிர தேசியவாத, ஆண் மைய வாத, ராணுவ அரசாக இல்லாமல், பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை முதலானற்றின் அடிப்படையில் இருந்தது. இந்துத்துவத்தைப் போல அல்லாமல், “முஸ்லிம்கள், ஆதிதிராவிடர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் ஆகியவர்கள் அவர்களும் திராவிடர்களே ஆனதால் அவரவர்கள் சமயம், ஆத்மார்த்தம் என்பவற்றின் உணர்ச்சி இன்றுள்ளது போலவே அவரவர்கள் இஷ்டப்படி இருக்கும்” என்று அனைவருக்குமான தேசியமாக முன்வைக்கப்பட்டது பெரியாரின் திராவிடக் கொள்கை.

’’இந்திய தேச அபிமானம்’ என்பது, தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்துப் பல நாட்டாருக்கு அடிமையாய் இருப்பதாகும். அரசியல் துறையிலும் நாம் வேற்று நாட்டானுக்கே அடிமையாய் இருக்க வேண்டுமானால், அது மேல் நாட்டானுக்கு அடிமையானால் என்ன? வடநாட்டானுக்கு அடிமையானால் என்ன?’ என்று பெரியார் முன்வைத்த கேள்வியின் வீரியம், இன்றைய ஜி.எஸ்.டி விவகாரத்திலும், நீட் தேர்வு விவகாரத்திலும், புதிய கல்விக் கொள்கை விவகாரத்திலும் தென்படுகிறது. ”இந்தியத் தேசாபிமானம் என்பதே இன்று இந்தத் தேசப் பணக்காரர்களுடைய சவுகரியங்களைக் குறியாய்க் கொண்டதும், பணக்காரர்கள் பண வருவாய் முறையைச் சிறிதும் மாற்ற முடியாததும், பணக்காரர்களுக்குப் பணம் பெருகிக் கொண்டு போவதைத் தடுக்க முடியாததும், தேசச்செல்வம் எல்லாம் ஒருவன் கைக்கே போவதானாலும் ஆட்சேபிக்க முடியாத கொள்கை தான்” என்றார் பெரியார். அம்பானியும், அதானியும் அதை ஒவ்வொரு நாளும் நிரூபித்தும் வருகிறார்கள்.

இந்துத்துவத்தின் மின்னல் வேக வளர்ச்சியில் பெரும்பான்மைவாதம் தலைதூக்கி வருகிறது. பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணா தொடங்கிய கட்சியும், அண்ணா பெயரால் தொடங்கிய கட்சியும் தற்போது தங்களைப் பெரும்பான்மை இந்துக்களின் கட்சி என்றே அறிவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது இந்துத்துவம். ராமர் கோயில், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு முதலான விவகாரங்களில் பெரும்பாலான தேசியக் கட்சிகள் தங்களை இந்துத்துவ நீரோட்டத்தோடு இணைத்துக் கொண்டன. எனினும், தமிழ்நாட்டில் கட்சிகள், இயக்கங்கள் சாராமல், இந்துத்துவ எதிர்ப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது; இந்துத்துவ எதிர்ப்பைப் பொறுக்க முடியாமல், பெரியாரின் சிலைகள் தாக்கப்பட்டுக் கொண்டே இருந்தாலும், பெரியார் கொள்கைகள் வீழ்வதில்லை.

ஏனென்றால் பெரியார், சாவர்க்கரின் இந்துத்துவத்திற்கு எதிரான தமிழ்நாட்டின் பாதுகாப்பு அரண்!

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்