Aran Sei

ஆல் ரவுண்டர் தந்தை பெரியார் பிறந்தநாள்

மனித சமூகத்தை பீடித்திருந்த பிற்போக்கு நோய்கள் அனைத்தையும் விரட்டி அடித்த தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளில் அவரைப் பற்றி ஒரு அறிமுகம் இது.

1. தமிழ் தேசியம்
சுயமரியாதையை இழந்து இன்னொரு இனத்திற்கு அடிமையாக வாழும் மக்கள், விடுதலை பெற வேண்டுமானால் அவர்களிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். அதற்கு அவர்களுக்கென்று ஒரு சுதந்திர நாட்டினை உருவாக்குவது அவசியம் என்றார்.
அவ்வாறு வட இந்தியர்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் தமிழன், தன் சுயமரியாதையை மீட்டெடுத்து, அதிகாரத்தை வெல்ல தமிழ் தேசியம் தான் தீர்வு என முழங்கினார்.

2. சாதி ஒழிப்பு
பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தலை கடுமையாக விமர்சித்தார். தமிழர்களிடையே நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை அகற்றாமல், எல்லாருக்குமான தமிழ் தேசியம் சாத்தியம் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
பிறப்பை மட்டும் காரணம் காட்டி ஒருவனை மலம் அள்ள வைப்பதும், ஒருவனை கோவில் கருவறையில் மணி அடிக்க வைப்பதும் மனித குலத்திற்கே எதிரானது. சாதிய தீண்டாமைகளோடு உருவாக்கப்படும் தேசியம் என்பது எலிகளுக்காக பூனைகளால் நடத்தப்படும் வேட்டை முகாம் தான் என்பதில் உறுதியாக இருந்தார்.

3. ஒழுக்கம்
ஒழுக்கம் என்ற சொல்லாடலையே உடைத்தெறிந்தார் பெரியார். சமூகத்தில் நிலவும் ஒழுக்கநெறிகளெல்லாம், ஏதாவது ஒரு வர்க்கத்துக்கு சாதகமாக இருப்பது தான் என்பதை எல்லா மேடைகளிலும் பேசினார்.
கணவன் தன் மனைவியிடம் எதிர்பார்க்கும் ஒழுக்கம், காதலன் தன் காதலியிடம் எதிர்பார்க்கும் ஒழுக்கம், முதலாளி தன் வேலையாட்களிடம் எதிர்பார்க்கும் ஒழுக்கம் எல்லாமே ஒருசாராரின் உழைப்பை மற்றொரு சாரார் சுரண்டுவதற்கு தான் என்பதை உணர்ந்திருந்தார்.

நன்றி : India TV news

4. மொழி
”சமத்துவம் பேசாத, பிற்போக்கு கருத்துக்களை கொண்ட மொழி மனித சமூகத்தின் முன்னேற்றத்துக்கு பெரிய ஆபத்து”, “ என் தாய் மொழி என்பதற்காகவோ, அகத்தியர் உருவாக்கிய மொழி என்பதற்காகவோ, தமிழ் பேசுவதை என்னால் பெருமையாக கருத முடியாது” என்று மொழிவெறி எதிர்த்து முழங்கிய பெரியார் தான், ஒருவனுக்கு தொடர்பில்லாத வேறு மொழியை அவன் மீது திணிக்க முற்படும்போது, அதை எதிர்க்க அவனது தாய் மொழியை ஆயுதமாக்க கற்றுக்கொடுத்தார்.

தமிழர்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட்ட போது, அவர்களுக்கு எந்தவொரு பயனையும் தராத, அவனை அடிமையாக்கும் அத்திணிப்பை கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.

4. பெண் விடுதலை
தன் வாழ்நாள் முழுதும் பெண் விடுதலை கருத்துக்களை விடாது பேசியும் எழுதியும் வந்தார். பெண் விடுதலை இல்லாத சமூகம் முற்போக்கு சமூகமாக மாற சாத்தியம் இல்லை என்றும், எல்லா சாதிகள், மதங்களிலும் பெண்கள் அடிமையாகவே உள்ளார்கள் என்றும் பேசினார். தனது எழுத்துக்களின் மூலம் தொடர்ந்து பெண்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டினார்.
பெண் விடுதலை என்பது பெண்களின் கல்வி, பொருளாதார சுதந்திரம், அரசியல் அதிகாரம், சொத்துரிமை என்று பேசி அவர்களை எல்லா வகையான அடிமைச் சங்கிலிகளிலிருந்தும் மீட்டெடுக்க பாடுபட்டார்.

5. கடவுள் மறுப்பு கொள்கை
ஒரு தனி மனிதனுக்கும் சரி, ஒட்டு மொத்த மானுட சமூகத்துக்கும் சரி, துளியும் உதவாத எல்லா விஷயங்களையும் தூக்கி எறிந்து, முன்னகர வேண்டும் என்றார். அவ்வகையில், காலம்காலமாக எதற்கும் உதவாத, வெறும் மூட நம்பிக்கைகளையும், வளர்ச்சிக்கு ஒவ்வாத பிற்போக்குத்தனங்கலையும் பரப்ப உதவும் கடவுள் நம்பிக்கையை மக்களிடமிருந்து அகற்ற வேண்டுமென்று முழங்கினார்.
பசியில் குழந்தைகள் சாகும் நாட்டில், சலவைக்கல்லில் செய்யப்பட்ட சிலைக்கு குடம் குடமாக பால் அபிஷேகம் எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.

6. மதம் எதிர்ப்பு .
பெரியார் இந்து மதத்தை மட்டும் எதிர்த்தார் என்ற வதந்தி சமூகத்தில் பரவலாக பரப்புரை செய்யப்பட்டுள்ளது. உண்மையில் பெரியார் ஒட்டுமொத்த மதங்களின் நிறுவன கட்டமைப்புகளையே எதிர்த்தார்.
மேலும், மதம் என்பது எல்லாவிதமான மூட நம்பிக்கைகளுக்கும், பிற்போக்கு கருத்துக்களுக்கும் கூடாரமாக உள்ளது என்றவர், மதம் என்ற நிறுவன அமைப்பை வைத்துக்கொண்டு, சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு மேட்டுக்குடியினர், மற்ற அனைவரையும் அடிமையாகவும், அவர்களின் ஜனநாயத்தை பறித்துக்கொண்டு வெறும் ஆடு, மாடுகளாகவும் மாற்றி வைத்திருக்கின்றனர்.

இவ்வாறாக தேசியம், இனம், மதம் கடந்து எல்லோருக்குமான மானுட விடுதலையை பேசிய தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளில் அவரின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சென்று, சமூகத்தை முன்னேற்றுவோம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்