Aran Sei

காஷ்மீர் – ஆபத்தான அமைதிக்கிடையே தொடரும் போராட்டம்

2020, ஜூலை 28 அன்று, சதாகத் ஹுசைன், 23 மற்றும் ஸமீர் அஹமது 26, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தங்தாரின் சிமாரி பஞ்சாயத்தில் ஒரு சமூக பதுங்கு குழி அமைப்பதற்கு உதவிக் கொண்டிருந்த போது, துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகினர்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலும், சர்வதேச எல்லையிலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவு விதிகள் மீறப்படுகின்றன. சிறு ஆயுதங்கள் மற்றும் சிறிய பீரங்கிகள் கொண்டு நடத்தப்படும் இந்த துப்பாக்கிச் சூடுகள் பலரை காயமாக்குகின்றன, பலரை கொல்கின்றன, எல்லையோரம் பதுங்கு குழிகள் அமைப்பதில் சிக்கலை உண்டாக்குகின்றன.

Image credit : businessinsider.in
Image credit : businessinsider.in

பதுங்கு குழி அமைக்க வேலை நடந்து கொண்டிருந்த போது தான் மேலே குறிப்பிட்ட துப்பாக்கிச் சூடு நடந்தது. ராணுவம் ஹுசைனுக்கும், அஹமதிற்கும் உதவி செய்தது என்றாலும், அவர்கள் இருவரும் முழுமையாக குணமடையவில்லை. ஒருவருக்கு காலில் அடிபட்டிருக்கிறது; ஒருவருக்கு வயிற்றில் காயமாகியிருக்கிறது.

2018-ல், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலும், சர்வதேச எல்லையிலும் 1,629 விதிமீறல்கள் நடந்ததாக அதிகாரபூர்வ தரவுகள் சொல்கின்றன. 2019ல் 3,168 ஆகவும், 2020ல் 4,052 ஆகவும் விதிமீறல்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

குறிப்பாக, தீபாவளிக்கு முன் தீவிரமாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதால் குடிமக்களில் இருபது பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; 47 பேர் காயப்பட்டிருக்கிறார்கள்.

விதிமீறல்கள் அதிகம் நடந்தது ஜம்மு பகுதியில் தான். “2012-க்கு பிறகு ஷெல் தாக்குதல் குறைந்திருந்தது, இப்போது கடந்த ஆண்டில் மீண்டும் அதிகரித்திருக்கிறது” என அந்த கிராமத்தை சேர்ந்தவர் அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களிடம் அக்டோபர் மாதம் தெரிவித்தார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்த தித்வல் எல்லை கடக்கும் பகுதி, 2018 நவம்பர் வரை திறக்கப்பட்டிருந்தது, இப்போது மூடியே இருக்கிறது. அங்கு நடக்கும் விதிமீறல்களால், இனி அது பொது மக்களுக்கு திறக்கப்படும் எனும் நம்பிக்கையே இல்லை. 1931-ம் ஆண்டு கட்டப்பட்டு, அழிக்கப்பட்டு, பிறகு மீண்டும் கட்டப்பட்ட அந்த பாலம் இப்போது அவசரங்களுக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. நாய்கள் மட்டும், கண்காணிப்பு கேமராக்களும், பாதுகாப்பு வீரர்களும் இருக்கும் போதிலும் முள்வேலிக்கு நடுவில் நுழைந்து கடந்து செல்கின்றன.

“இவர்களை யார் நிறுத்துவது?” எனக் கேட்டு சிரிக்கிறார் ஒரு இராணுவ வீரர்.

Image credit : businessinsider.in
Image credit : businessinsider.in

பதட்டநிலை உருவாவதற்கான சாத்தியங்கள்!

தித்வாலில் 1,100 பேர் இருக்கின்றனர். சிமாரியின் மக்கள்தொகையோ 750 தான். எல்லாம் நன்றாக இருந்த போது எல்லை தாண்டி சென்று தங்கள் உறவினர்களை சந்தித்துவிட்டு வந்த காலத்தை எல்லாம் கிராம மக்கள் நினைத்துப்பார்ப்பது உண்டு.

“தித்வாலில் 2018-ம் ஆண்டில் ஷெல் தாக்குதல் தொடங்கியது” என்கிறார் சினார் இளைஞர்கள் அமைப்பின் தலைவரும், ஆசிரியருமான இஸாஸ் அஹமது. அஹமதின் தந்தை வழி சொந்தங்கள் சிலர் எல்லைக்கு மறுபுறம் இருக்கின்றனர், அஹமது சில முறை எல்லையை கடந்ததும், பாகிஸ்தானுக்கு சென்றதும் உண்டாம்.

அப்படி பயணிக்க விரும்புபவர்கள் ஸ்ரீநகரில் இருந்து அனுமதி பெற்றுவிட்டு பயணிப்பார்கள் என்கிறார். “அந்த அனுமதியை பெறுவதற்கு இரண்டு மாதங்கள் ஆகும். 15 நாட்கள் வரை பயணிக்க அனுமதி கொடுப்பார்கள். பிறகு, ஒவ்வொருவரின் காரணங்கள் பொறுத்து இரண்டு மாதங்கள் வரை அதை நீட்டிப்பார்கள்” என விளக்குகிறார்.

Image credit : businessinsider.in
Image credit : businessinsider.in

எல்லையை கடக்க முடியாதது மட்டுமல்ல, தங்கள் கிராமத்தை தாண்டி 50-ல் இருந்து 100 மீட்டரிலேயே மொபைல் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் கிராம மக்கள் புகார் அளிக்கின்றனர்.

பிப்ரவரியில் நடந்த பாலக்கோட் வான்வழி தாக்குதல்களுக்கு பிறகே இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்திருக்கின்றன.

இதன் விளைவாக நடக்கும் விதிமீறல்களை குறித்து பேசும் போது, “தங்தார் கடந்த வருடம் இயங்கிக் கொண்டு தான் இருந்தது” என்கிறார் ஒரு அதிகாரி. தங்தார் பிரதேசத்தில், 60 பதுங்குகுழிகள் பயன்படுத்தப்படாமலேயே இருந்தன. இப்போது அவற்றை 120 சமூக பதுங்குகுழிகளாக மாற்றும் வேலை நடப்பதாக அரசு தரப்பு சொல்கிறது. 70,000 மக்களுக்கு மேல் இருக்கும் 42 வருவாய் கிராமங்களின் 32 பஞ்சாயத்துகளுக்கு கீழே இந்த பதுங்கு குழிகள் வருகின்றன. 75 பதுங்குகுழிகள் முழுமையாகவே கட்டமைக்கப்பட்டுவிட்டன; மற்றவை விரைவில் முழுமையடையும். ஒவ்வொரு பதுங்குகுழியும் இருபது லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பதுங்குகுழியில் 50-60 பேர் வரை இருக்க முடியும்.

முன்பு தீவிரவாதம் அதீதமாக இருந்த குப்வாரா மாவட்டத்தின் லோலாப் பள்ளத்தாக்கு, இப்போது அமைதியாக இருக்கிறது. “இங்கே திடீரென பதட்டச் சூழல் உருவாவதற்கு வாய்ப்பிருக்கிறது, அதனால் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறோம்” என்கிறார் அதிகாரி.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லோலாப் பள்ளத்தாக்கின், சந்திகாம் பகுதியில் இருக்கும், இராணுவ குட்வில் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்திருக்கிறதாம்.

Image credit : businessinsider.in
Image credit : businessinsider.in

“அவர்களில் நிறைய பேர் பின்தங்கிய பின்புலத்தில் இருந்து வருபவர்கள் தான். குழந்தைகளுக்கு கல்வியளிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது” என்கிறார் பள்ளித் தலைவர் ஸஹிதா மக்பூல் ஷா. பள்ளியை மூட வேண்டும் என சில அச்சுறுத்தல்கள் வந்தன. ஆனாலும், நிலவரம் சமாதானமாகவே இருக்கிறது. பள்ளிக் கட்டணம் இராணுவத்தால் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பலரால் அந்த கட்டணத்தை அளிக்க முடியாததால், கட்டணம் வாங்கப்படுவதில்லை.

இராணுவத்தின் சத்பவன திட்டத்தின் கீழ் தான் இந்த பள்ளி அமைக்கப்பட்டது. இதில் 697 மாணவர்கள் இருக்கின்றனர் : 472 சிறுவர்கள், 225 சிறுமிகள். பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 2015-16 கல்வியாண்டில் இப்பள்ளி ஜம்மு காஷ்மீர் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

ராணுவம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைத்திருக்கும் ராணுவ குட்வில் பள்ளிகளில் இதுவும் ஒன்று. இந்தப் பள்ளியை பற்றி பேசும் போது, லெப்டினண்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜூ , 15 கார்ப்ஸ் தளபதி, “உலகில் இருக்கும் மற்ற எல்லோரையும் போல இங்கிருக்கும் மக்களும் ஒரு நல்ல வாழ்க்கை வேண்டுமென்றே நினைக்கிறார்கள். இந்த பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு சாதாரண மனிதரின் ஆசை அதுவாகவே இருக்கிறது” என்கிறார்.

ஊடுருவல் முயற்சிகளை தடுப்பது :

லெப்டினண்ட் ஜெனரல் ராஜூ, ஊடுருவலை தடுக்கும் வேலியின் முதல் அடுக்கு வலுவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார். “வேலியின் முதல் அடுக்கு வலுவாக இருந்தால், அது ஊடுருவலை தடுப்பதில் உதவும். மேலும், ஊடுருவல் நடந்தால் உடனடியாக அதை கண்டுபிடிக்கவும் நமக்கு உதவும். ஊடுருவல் கணிசமாக குறைந்திருக்கிறது. களத்தில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு கூடுதல் கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப கருவிகள் கொடுத்திருக்கிறோம். போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறல்கள் அதிகரித்து, பிறகு குறைந்தது. அது பெரிய அளவில் வெடிக்காமல் கட்டுப்பாட்டிற்குள் வைத்தோம்” என்று சொல்கிறார்.

ஊடுருவல்கள் குறைக்கப்பட்டிருப்பதாக தரவுகளும் சொல்கின்றன. 2018-ல 129 தீவிரவாதிகள் ஊடுருவி வந்தனர். 2019-ல் 130 பேர் என்று எண்ணிக்கை இருக்கிறது. 2020 அக்டோபர் வரை இருபத்தேழு தீவிரவாதிகளே நுழைந்திருக்கின்றனர்.

Image credit : businessinsider.in
Image credit : businessinsider.in

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில், ஏறத்தாழ 22 பயங்கரவாத ஏவுதளங்கள் இருப்பதாகவும், 300 பயங்கரவாதிகள் ஊடுருவி வர இருப்பதாகவும் யூகிக்கப்படுகிறது. ஊடுருவல் குறைவாக இருந்தாலும் கூட, ஆயுதங்களை கடத்தி கொண்டு வர விநோதமான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

ஜம்முவில் சில சமயம் பறக்கும் கருவிகள் (ட்ரோன்கள்) கூட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்து வரும் எம்4 ரக துப்பாக்கிகளும், சீன துப்பாக்கிகளும் அதிகளவில் மீட்கப்படுகின்றன.இ ந்த வருடம் ஏகே தொகுப்பில் 143 துப்பாக்கிகளும், எம்4 ரகத்தில் ஐந்து துப்பாக்கிகளும், இரண்டு எம்16 துப்பாக்கிகளும், பிற ஆயுதங்களோடு சேர்த்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

Image credit : businessinsider.in
Image credit : businessinsider.in

இராணுவம், எல்லை வேலியை மேம்படுத்தும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறது. இப்போது இருக்கும் வேலி , ஊடுருவல் தடுப்பு அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இது எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 700 மீ தொலைவில் இருக்கிறது. இரண்டு வரிசை வேலியான இது கன்சர்டினா வயரால் 2003-2005 ஆண்டில் அமைக்கப்பட்டது.

பனிப்பொழிவு உண்டாக்கும் சேதம் காரணமாக, பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு ஹைப்ரிட் அமைப்பை வாங்க முடிவு செய்திருக்கிறது இராணுவம். இந்த வருடம் அறுபது கிமீ வரை வேலி அமைக்கப்படும் என்கிறார் ஒரு அதிகாரி. உலோகத்தை உடைய வைக்கும் அளவு பல இடங்களில் பனிப்பொழிவு இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும், வேலி சீரமைக்கபட வேண்டும். அதில் அமைக்கப்பட்டிருக்கும் சென்சார்களில் பொருத்தி இயக்கும் (plug and play) வசதி இருக்க வேண்டும், அது சேதத்தை தடுக்கும் என கார்ப்ஸ் தளபதி அறிவுறுத்தியாக ஒரு அதிகாரி சொல்கிறார். உள்ளூர் முகாம்களில் சார்ஜ் செய்வதற்கும், பராமரிப்பதற்குமான வசதிகள் இருக்கின்றன.

மார்ச் மாதம் லெப்டினண்ட் ஜெனரலாக பதவியேற்ற பிறகு, பள்ளத்தாக்கில் ஆயுதங்கள் கைப்பற்றப்படுவதற்கு அதிகாரிகளுக்கு வெற்றிப்புள்ளிகள் கொடுக்கும் வழக்கத்தை ரத்து செய்திருக்கிறார் அதிகாரி ராஜு. அந்த வழக்கத்தின்படி ஆயுதங்களை மீட்கும் பிரிவுகளுக்கு வெற்றிப்புள்ளிகளும், பரிசுகளும் கொடுக்கப்படும். இப்படி ஒரு அமைப்பு இருப்பது பல சிக்கல்களுக்கு காரணமாக இருந்ததாகவும், மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக தெரிந்ததாகவும் லெப்டினண்ட் ஜெனரல் சொல்கிறார்.

இணைப்பிற்கான வேண்டுதல்

இராணுவம் எல்லையில் பரபரப்பாக இருக்கும் வேளையில், கிராம மக்கள் அவர்களுடைய பிரச்சினைகளோடு வாழ்கிறார்கள். பனிக்காலத்தில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு போவது சிரமமாக இருப்பதால், சுரங்கப்பாதை வேண்டுமென கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சுரங்கப்பாதை அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டாலும் அந்த திட்டத்திற்கு இன்னும் அனுமதியளிக்கப்படவில்லை என்கிறார்கள்.

“ஒரு சுரங்கம் இருந்தால், வருடம் முழுக்க பயணிக்க முடியும், ஊரில் வளர்ச்சி இருக்கும். பிப்ரவரி மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் இது குறித்து பேசப்பட்டது” என்கிறார் சுரங்க ஒருங்கிணைப்பு ஆணையத்தின் தலைவர் வாலி அஹமது. “பனிக்காலத்தில் தேவையான பொருட்களை வாங்கி சேமித்து வைப்பது கடினமான காரியமாக இருக்கிறது. பொருட்களின் விலையும் கூடிப் போகிறது” என்கிறார் உள்ளூர் பள்ளியின் தலைவர் மன்சூர் அஹமது.

கடந்த பிப்ரவரி மாதமே இது தொடர்பாக ஒரு செயலாக்க ஆய்வு நடத்தப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தாமதமாகியிருக்கிறது என்கிறார் உள்ளூர் அதிகாரி ஒருவர். இந்த ஆய்வு இனி எப்போது நடத்தப்படும் என்று தெரியவில்லை. குப்வாரா-தங்தார் நெடுஞ்சாலையில் இருக்கும் சத்னா பாஸ், முன்னர் நஸ்டாசுன் பாஸ் எனப்பட்டது, அடைபட்டிருக்கும் கால அளவுகள் குறைக்கப்பட்டிருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் சொல்கிறார்.

இருந்தாலும், பனிச்சரிவுகள் மற்றும் பிற ஆபத்துக்களுக்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. இந்த வருடம், கொரோனா தொடர்பான வேலையை முடித்துவிட்டு திரும்பி வரும் போது ஒரு பெரிய பனிச்சரிவில் இருந்து சிறு இழையில் துணை-பிரதேச மாஜிஸ்திரேட்டும் அவருடைய இரண்டு அதிகாரிகளும் தப்பித்திருக்கிறார்கள். இராணுவம் சரியான நேரத்தில் சென்றதால் அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். சுரங்கம் ஒரு நல்ல தேர்வு தான் என்றாலும், பொருளாதாரம் காரணமாக கயிற்றுப் பாலம் (ropeway) போன்றவற்றையும் முயற்சித்து பார்க்க வேண்டும் என்கிறார் அதிகாரி.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தடை செய்யப்பட்ட பிறகு, இன்னமும் திரும்பி வராத 4ஜி இணைப்பு குறித்தும் மக்கள் புகார்கள் எழுப்பியிருக்கின்றனர். கொரோனா காரணமாக வேலைக்கு செல்பவர்களும், மாணவர்களும் வீட்டில் இருந்தே வேலையை செய்ய வேண்டியிருப்பதால் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி ஒரு வருடம் ஆகியிருக்கும் நிலையில், எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடுகள் அதிகரித்திருக்கின்றன. ஊடுருவல்கள் மற்றும் கல்லெறிவது குறைந்திருக்கிறது.

பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி, பள்ளத்தாக்கில் பயமுறுத்துவதான ஒரு அமைதி நிலவுவதாக சொல்கிறார். “கட்டுப்பாடுகள் இருந்தாலுமே, ஏதாவது தகராறுகள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து குறியீடுகளும் எல்லாமும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதையே காட்டுகிறது. அசௌகரியமான ஒரு அமைதி நிலவுகிறது” என்கிறார்.

ஸ்ரீநகர் தொடங்கி தங்தார் வரை இருக்கும் மக்கள் 4ஜி இணைப்பு, சாலை வசதியின்மை தான் மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் என்று சொல்கின்றனர். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு, பார்த்ததும் தெரிகிற மாதிரியான மாற்றங்கள் நடக்க வேண்டும் என மக்கள் நினைப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஊடுருவலை தடுக்க என்ன தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட, உள்ளூரில் இருந்து ஆட்கள் சேர்க்கப்படுவார்களோ எனும் அச்சம் இன்னும் இருக்கிறது. அந்தச் செயல்பாடு வட காஷ்மீரில் இருந்து தெற்கு காஷ்மீருக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

2018-ல் 219 பயங்கரவாதிகள் உள்ளூரில் இருந்து சேர்க்கப்பட்டார்கள் எனவும், 2019-ல் 119 பேர் சேர்க்கப்பட்டார்கள் எனவும், இந்த வருடம் அக்டோபர் வரை 135 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இராணுவ தரவுகள் சொல்கின்றன.

பள்ளத்தாக்கில் இப்போது 207 பயங்கரவாதிகள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், அவற்றில் 90 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் யூகிக்கப்படுகிறது. மக்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக சேர்ப்பது, 2011-ல் 24 பேராக இருந்தது, 2012-ல் 19 பேராக இருந்தது, மேலும் உயர்ந்திருப்பதாக தரவுகள் சொல்கின்றன.

2017-ல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி, புர்ஹான் வாணி கொல்லப்பட்ட, ஒரு ஆண்டுக்கு பிறகு – முன்னர் 88 ஆக இருந்த எண்ணிக்கை, 128 ஆனது.

 

இது காரணமாக, தொடர்புடைய குடும்பங்களை சரணடையச் சொல்வது தான் இராணுவத்தின் முக்கிய கவனமாக இருப்பதாக சொல்கின்றனர் லெப்டினண்ட் ஜெனரல் ராஜூ மற்றும் மேஜர் ஜெனரல் ரஷிம் பலி, தெற்கு காஷ்மீரின் விக்டர் படையின் ஜெனரல் தளபதி. “உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதங்களை தவிர்க்க குறைந்த அளவில் தான் தாக்குதல் நடத்த வேண்டும் என அறிவுறுத்துகிறோம்” என்கின்றனர்.

சரணடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக சொல்கின்றனர். “ஆட்களை சரணடைய செய்வதில் தான் நாங்கள் அதிகம் ஈடுபடுவோம். ஏனென்றால், ஒரு நபரை நடுநிலைப்படுத்துதலைவிட, ஒரு நபரை திரும்பப் பெறுவது தான் எங்களுக்கு முக்கியம். அந்த வேலை மிக நீண்டதொரு பயணம்” என்கிறார் லெப்டினண்ட் ஜெனரல்.

மக்கள் ஆயுதங்களை எடுக்க தேவையில்லாததொரு நிலையை உருவாக்கும்படி தான் இராணுவம் நடந்து கொள்ளும். உள்ளூர் ஆட்களை பயங்கரவாதிகள் குழுக்களில் சேர்ப்பதை தடுக்க வேண்டியது முக்கியம். மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே இருக்கும் தடையை உடைக்க வேண்டியது அவசியம் என்கிறார் லெப்டினண்ட் ஜெனரல் ராஜு. “ ஏனென்றால், இது எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இன்னமும் நிறைய செய்ய வேண்டும். எங்களுடைய இளைஞர்களை சென்றடையும் திட்டங்களை எல்லாம் தீவிரப்படுத்தியிருக்கிறோம்” என்கிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், குழுக்கள் அமைப்பதையும், பயங்கரவாதிகள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் தவிர்க்க என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு பொது இறுதி சடங்கு நிகழ்வுகள் நடத்தப்படக் கூடாது என பாதுகாப்பு படைகள் முடிவு செய்தன.

“மேலும் சேதத்தை தவிர்க்கவும், பிற அழுத்தத்தையும் தவிர்க்க வேண்டுமென்றால் இதை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் என்று சொன்னோம்” என்கிறார் மேஜர் ஜெனரல் பாலி. குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்கு நடத்தும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்; அது அந்நபரின் சொந்த கிராமத்தில் நடப்பது இல்லை.

ஆகஸ்ட் 2, 2019-ல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பள்ளத்தாக்கு இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா முழு அடைப்பு காரணமாக மீண்டும் முடங்கிப் போனது பள்ளத்தாக்கு.

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் முழு அடைப்பு காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் வணிகர் தெரிவித்தார். கோடை மாதங்களில் அதிக வருவாய் ஈட்டும் சுற்றுலாத் துறையும், ஆப்பிள் சாகுபடியும் மிக மோசமாக அடி வாங்கி இருக்கிறது. சுற்றுலா வருபவர்களை ஈர்க்கும் ஸ்ரீநகரின் தால் ஏரி, கூட்டம் இல்லாமல் இருந்தது. ஏரி ஓரம் நடந்து கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் தள்ளுபடி விலையில் படகு சவாரி அழைத்துச் செல்வதாக படகோட்டிகள் கேட்பதை பார்க்க முடிந்தது. இருநூறு ரூபாய்க்கு சவாரி வாருங்கள் என இறைஞ்சினார்கள். “இந்த சீசன் கஷ்டமாகத் தான் இருந்தது” என்றார் ஒரு படகோட்டி.

ஜம்மு காஷ்மீர் உழைப்பாளர்கள் கட்சித் தலைவரும், குப்வாரா மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவருமாக இருக்கும் மிர் ஜுனைத், காஷ்மீர் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கான பாதையில் இருப்பதாக சொன்னார். கடந்த வருடத்தின் அரசியல் குழப்பங்கள் எல்லாம் அழிக்கப்பட்டிருப்பதனால், இப்போது அவர்கள் சாதாரணமாக சந்தோஷமாக வாழ நினைக்கிறார்கள். ஆனால் , இணைய வேகம் அவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது.

“அரசின் வேலை பதட்டத்தை குறைத்து, பயங்கரவாத பிரச்சினைக்கு ஒரு முடிவை கொண்டு வருவது. அதை செய்து விட்டால் காஷ்மீரின் மறுமலர்ச்சி நடந்துவிட்டது என்று நாம் முடிவு செய்துவிடலாம்” என்றார். காஷ்மீரி பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டதற்கு பின்னர் உண்டான சமூக விலகலுக்கும் ஒரு தீர்வு கண்டால், காஷ்மீரின் கலாச்சாரத்திற்கு மீண்டும் வண்ணம் பூசி விடலாம் என்றார்.

Image credit : businessinsider.in
Image credit : businessinsider.in

தரத்திற்கும் சுவைக்கும் பெயர் போன காஷ்மீரி ஆப்பிள்கள் தொடர்ந்து அடி வாங்கியது. நோய்த்தொற்று மற்றும் முழுஅடைப்பு காரணமாக குறைவான மகசூலே இருந்தது ஒன்று என்றால், தரக் கட்டுப்பாடு சரியாக இல்லாததால் போலி பூச்சி மருந்துகள் சந்தையில் நிறைந்து, பயிரை நாசமாக்கின. இதன் விளைவாக, தயாரிப்பின் பெரும் பகுதி ‘தரம் குறைந்தவை’ என குறிக்கப்பட்டு, குறைவான விலையில் விற்கப்படுகிறது.

தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் இருக்கும் பழ மண்டியின் தலைவரான அஷ்ரஃப் வானி, வழக்கமாக உற்பத்தியில் 80% கிரேட் A என்றே பிரிக்கப்படும் என்கிறார். “போன ஆண்டு, கலவரங்கள் காரணமாக, பாதி பழங்கள் நாசம் ஆயின. இந்த வருடம் லாக்டவுன் காரணமாக சந்தையில் போலி பூச்சிமருந்துகள் வந்து ஆப்பிள்களை நாசமாக்கியது. வெண்டூரியா இனேக்விலிஸ் காரணமாக பூஞ்சை தொற்றும் ஏற்பட்டிருந்தது” என்கிறார் வானி.

“உற்பத்தியில் 60-70% தரம் குறைந்தவை எனக் குறிக்கப்பட்டன” என்கிறார்.

பள்ளத்தாக்கு முழுதும் இந்த பிரச்சினை இருக்கிறது. தோட்டக்கலை மற்றும் அமலாக்கத் துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் பூச்சி மருந்தை சோதிக்க ஒரே ஒரு ஆய்வகம் தான் இருக்கிறது. அதுவும் ஸ்ரீநகரில் இருக்கிறது. ஆய்வகத்தில் சோதனை செய்ய ஆறு மாதங்கள் ஆகும். இங்கே இன்னும் இரண்டு ஆய்வகங்களுக்கான தேவை இருக்கிறது.

மண்டி அருகில் இருக்கும் ஒரு பழத்தோட்டத்தில் நின்ற போது, சேதமான ஆப்பிள்கள் பழத்தோட்டத்தை சுற்றியும் தொங்கிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. ஆப்பிள்கள் சேதமாகியிருக்கின்றன; சுற்றுலாப பயணிகள் யாரும் காஷ்மீருக்கு வருவதில்லை; ஒரு நீண்ட குளிர்காலத்தை கடக்க பள்ளத்தாக்கின் மக்கள் பதுங்கியிருக்கிறார்கள். குறைந்தபட்சம் சமாதானம் மட்டுமாவது இருக்கும் எனும் நம்பிக்கை இருக்கிறது.

(தி இந்து நாளிதழில் தினகர் பெரி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்