புரட்சி என்பது புதுமைக்கூத்து!
புரட்சி என்பது புத்துயிர் வெள்ளம்!
புரட்சி என்பது புதிரைத் தீர்த்தல்!
புரட்சி என்பது போரிற் பெரிது!
புரட்சி என்பது புதுமைக் கீதம்!
புரட்சி என்பது புத்துயிர் முரசு!
புரட்சி என்பது பொறுமைக் குறுதி!
புரட்சி என்பது போம்பணிக் கறுதி!
புரட்சி என்பது பூகம்ப வேகம்!
புரட்சி என்பது பூரண மாற்றம்!
புரட்சி என்பது புரட்டின் வைரி!
புரட்சி என்பது புவித்தாய் நகைப்பு!
என ஆவேசக் குரலெடுத்து பாடியவர் ஜீவா.
தன்னைப்பற்றியே சிந்திக்கும் மனிதர்களுக்கிடையில்,இந்த மண்ணைப் பற்றியே சிந்தித்த மகத்தான ஜீவன்.
காந்தியவாதியாய் – காங்கிரஸ்காரராய்-சுயமரியாதை இயக்கத்தவராய்- தனித்தமிழ் இயக்க ஆர்வலராய்-சுயமரியாதை சமதர்ம இயக்கத்தவராய்-காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவராய்-இறுதியில் இம்மண்ணின் மக்கள் அரசியல்-சமூக-பொருளாதார விடுதலையடைய மார்க்சியத்தை தவிர வேறு மாற்று இல்லை என்ற முடிவிற்கு வந்து கம்யூனிஸ்ட்டாக பரிணமித்தார். பூதப்பாண்டி துவங்கி காசிமேட்டில் தன் கடைசிப்பயணம் வரை ஒரு வர்க்கப் போராளியாய் வலம் வந்த வைரி தோழர் ஜீவானந்தம் .
குமரியின் பூதப்பாண்டியில் பிறந்தவர்.பெற்றோரால் சொரிமுத்து என்று பெயரிடப்பட்டு,முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில்,கடவுளை வேண்டி மூக்குகுத்தி மூக்காண்டி என அழைத்தனர்.நான்காவது குழந்தை நாலுமறிந்து,நாடறிந்த நல்லவரானது.சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்திற்கான தேடலை தேடிப்படித்தவர்-தேடிப்பிடித்தவர்.
வைக்கம் போராட்டம் தான் அவரின் முதல் போராட்ட பங்கேற்பு. மனநோயாளிகளின் பூமி என்று சுவாமி விவேகானந்தரால் கூறுமளவிற்கு சாதியத்தின் கொடிய வாசனை வீசிய அன்றைய கேரளத்தின் திருவிதாங்கூர் பகுதியில் தீண்டாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
ஒரு மனிதனின் வளர்ச்சியில் சுற்றம், சூழலும் சமூக அமைப்பும் அங்கம் வகிக்கின்றன. பள்ளியில் படிக்கும்போதே சாதிகள் இல்லையடி பாப்பா! குல தாழ்ச்சி இகழ்ச்சி சொலல் பாவம்” எனப் பாரதியைப் படித்தார். ஒடுக்கப்பட்ட சகோதரர்களின் கரம் பற்றி நடந்தார்.
“வாயற்ற நாயும், கழுதையும் மலந்தின்னும் பன்றியும் செல்லலாமாம். மனிதர் நாம் சென்றால் புனிதம் கெட்டு தீட்டு வந்து உலகம் முழுகிப்போய்விடுமாம்” என ஆவேசமாய் பேசியது மட்டுமல்ல செயலிலும் இறங்கியவர்.
பள்ளியில் படிக்கும்போதே வைக்கத்தில் பெரியாரின் போராட்டத்தில் முதலில் கால்வைத்தார்.படிப்பு நின்று போனது.சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்குள் ஜோசப் பூதலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவரை அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் செய்தார்.
உயர்சாதி வெறியர்களால் அடித்து உதைக்கப்பட்டார். காந்தியத்தின் தீண்டாமைக்கு எதிரான தத்துவத்தின் பால் சற்றும் மனம் தளரவில்லை. தீண்டாமைக்கு எதிரான அவரின் தொடர் நடவடிக்கை தொடர்ந்தது. வீட்டைவிட்டு வெளியேறும் நிலையும் வந்தது.
காந்தியத்தின் மீதுள்ள பற்று நெல்லைமாவட்டம் சேரன்மகாதேவி குருகுலத்தில் வ.வே.சு ஐயரிடம் வந்து சேர்த்தது. ஆசிரமத்தில் ஆசிரியப் பணியைச் சிறிதுகாலம் செய்தார். எந்தத் தீண்டாமைக்கு எதிராகப் போராடினாரோ அந்தத் தீண்டாமை குருகுலத்திலும் குடியிருந்தது.
தீண்டாமைக்கு எதிராக பெரியார், வரதராஜநாயுடு ஆகியோரோடு இணைந்து போராடினார். முடிவில் அங்கிருந்து வெளியேறி காரைக்குடி சிறாவயல் ஆசிரமத்திற்கு சிறகுகள் பறந்தன. காசிவிஸ்வநாத செட்டியாரின் காந்தி ஆசிரமத்தில் சொரிமுத்து என்ற மூக்காண்டி ஜீவானந்தமாக மாறுகிறார்.
மகாத்மாதான் இந்தத் தேசத்தை உய்விக்கவந்தவர்.அவரே கடவுள் எனக் கருதுகிறார். அரிசன் இதழில் காந்தி எழுதிய கட்டுரை அவரை அதிர்ச்சி அடையச்செய்கிறது. சுதந்திர இந்தியா வர்ணாசிரம தர்மத்தின் படியே எதிர்காலத்தில் வழிநடக்கும் என்பதே அந்தக் கட்டுரை.
வர்ணாசிரமம் குறித்த காந்தியின் கருத்துகள் ஜீவாவை சிரமப்பட வைக்கிறது. வர்ணாசிரமத்தின் வக்கிரம் குறித்து காந்திக்கு கடிதம் எழுதுகிறார் ஜீவா. உங்கள் கடிதம் படித்தேன். வர்ணாசிரமம் குறித்த உங்கள் கருத்தை ஏற்கிறேன் என்று காந்தி பதில் கடிதம் எழுதுகிறார்.
1927 இலங்கை செல்லும் வழியில் தமிழகம் வந்தார் காந்தி. காரைக்குடி ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் வீட்டில் தங்குகிறார். நான் ஜீவாவை சந்திக்க வேண்டும் என்கிறார் காந்தி. அவரை அழைத்து வரவா என்று கேட்கிறார்கள். இல்லை, நான் அவரைப் போய் நேரில் சந்திக்க வேண்டும் என்கிறார் காந்தி. காரைக்குடி சிறாவயல் ஆசிரமத்திற்கு காந்தி செல்கிறார். காந்தியே நேரடியாக வந்து ஜீவாவை சிறாவயலில் சந்திக்கிறார். அப்போது ஜீவாவிற்கு வயது 20 தான்.
ஜீவாவிற்கும்-காந்திக்கும் விவாதம் நடக்கிறது. ஒரு மனிதனின் பிறப்பின் சிறப்பு வாழ்க்கை ஒழுக்கத்தில் தானே அன்றி, தர்மங்களுக்கும் குணங்களுக்கும் ஏற்ப மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்திருக்கிறேன் என கீதையில் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?என்று காந்தியிடம் கேள்வி எழுப்பினார் ஜீவா.
கீதையை வேதமாகக் கருதும் காந்தி, பிறப்பு குறித்த கீதையின் கருத்தை நான் ஏற்கிறேன் என்கிறார். மகாத்மாவின் கருத்தை ஜீவாவால் ஜீரணிக்க முடியவில்லை. காந்தியத்தின் மீதான நம்பிக்கை தளர்கிறது. காந்தியத்திலிருந்து விடுபட்டு,பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறார் ஜீவா.
இந்தப் பயணத்தின்போதுதான் தமிழக விவசாயிகள் சட்டை இல்லாமல் நிலத்தில் நின்றதைப்பார்த்த காந்தி, விவசாயிகள் என்று சட்டை அணிகிறார்களோ அன்றுதான் நானும் சட்டை அணிவேன் என்று தன் சட்டையைக் கழட்டிவீசினார்.
காந்தியத்திலிருந்து விலகி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறார் ஜீவா. நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற மாவீரன் பகத்சிங் எழுதிய நூலை பெரியார் மூலம் தமிழில் மொழி பெயர்த்தார் ஜீவா. அந்த நூல் பெரியாரின் தம்பி கிருஷ்ணசாமி நாயக்கர் பெயரில் வெளியிடப்பட்டது.
தமிழில் மொழிபெயர்த்த ஒரே காரணத்திற்காக பொள்ளாச்சி வீதிகளில் ஒரு விலங்கைவிடக் கேவலமாக சங்கிலியால் கட்டி அடித்து இழுத்து வந்தனர் வெள்ளைக்கார போலீஸ்.
ஜாதிய வேறுபாடுகளுக்கு எதிரான பெரியாரின் வீரஉரைகள் ஜீவாவை சுயமரியாதைக்காரனாய் கிளர்ந்தெழச்செய்தது. கருத்துப் போராட்டங்களும் தொடர்ந்தது.
மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பிராமணிய எதிர்ப்பு, பூணூல் அறுப்பு என வெறும் வர்ணபேதங்களை மட்டுமே முன்னிறுத்தி பேசுவது மட்டும் போதாது. வர்க்க பேதத்திற்கு எதிராக சமதர்மக் கொள்கைகளையும் இணைக்கவேண்டும் என்று பெரியாரிடம் வாதிட்டார் ஜீவா.
முடிவில் சுயமரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறி, சுயமரியாதை சமதர்ம இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
அப்போது இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வெள்ளையர்களால் தடை செய்யப்பட்ட காலம். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் கம்யூனிஸ்ட்கள் இணைந்து வேலை செய்தனர்.1932 ல் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்ற பொழுதுதான் அவருக்கு கம்யூனிஸ்ட் தோழர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது.
அப்போது சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் சென்னை மாகாண மாநாட்டில் ஜீவா செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார். ஒரு கட்சியின் மாகாணப் பொறுப்பை அவர் ஏற்கும்போது வயது 25 தான். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இதழாக முதலில் வெளியிடப்பட்டதே ஜனசக்தி நாளிதழ்.
அதன்பிறகு 1936 ல் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்படுகிறது. அந்தக்கிளையில் அவரும் ஒரு உறுப்பினர். தமிழ் மொழியின் மீதான பற்று, தனித்தமிழ் இயக்கம் கண்ட வேதாசலம் என்ற மறைமலையடிகளோடு தொடர்பு ஏற்படுகிறது.
ஜீவா என்பது வடமொழிச்சொல். எனவே தன் பெயரை உயிர்இன்பன் என்று மாற்றி உலா வந்தார். எம்மொழிச் சொல்லும் கலக்காமல் தனித்தமிழில் பலமணிநேரம் பேசும் ஆற்றல் கொண்டவர். அவரின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் தமிழகத்திலேயே அவர் நடமாடக்கூடாது என்று வாய்ப்பூட்டுச்சட்டம் போடப்பட்டு பூதப்பாண்டிக்கு நாடு கடத்தப்பட்டார். 1939 முதல் 1945வரை இது தொடர்ந்தது.
இந்திய விடுதலைக்குப் பிறகு 1948 முதல் 1951 வரை நேரு அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்தது.கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் 1951 ல் வெளியே வந்தார்.
1949 ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவால் துவக்கப்பட்ட தி.மு.க திராவிட இயக்கத்தவருக்கு எதிராக இந்திய அரசமைப்புச் சட்டம் இருப்பதாகக்கூறி 1952 முதல் சட்டமன்ற தேர்தலைப் புறக்கணித்தது.
1952 சட்டமன்ற தேர்தலில் இன்றைய இராயபுரம் தொகுதியான அன்றைய வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க.சட்டமன்றத்திற்குள் நுழையும் முன்பே தமிழ்நாடு எனப் பெயர் வைக்கவேண்டுமென சட்டமன்றத்தில் பேசினார்.
நான் தமிழன், என்னுடைய மொழியே இந்த ராஜ்ஜியத்தில் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும். கல்விக்கூடங்களிலும், நியாயமன்றத்திலும், நிர்வாகத்துறையிலும் தமிழ் மொழியே இயங்க வேண்டும் என்று 1952 செப்டம்பர்-29 ல் சட்டசபையில் முழங்கினார் ஜீவா. ஜீவாவின் சட்டமன்ற உரைகள் இன்றும் ஜீவனுள்ள வரிகள்.
தன் வாழ்நாள் முழுமையும் உழைப்பாளிகளின் நலனுக்காய் வாழ்ந்தவர். கண்ணம்மா என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவரையும், அவர் இறப்பிற்குப்பிறகு பத்மாவதி என்ற தெலுங்கு இனத்தவரையும் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர். மேற்குத் தாம்பரத்தின் கஸ்தூரிபாய் நகரில் ஒரு சிறிய குடிசைவீட்டில் கடைசிவரை வாழ்ந்தவர்.
பேச்சாளராய்-எழுத்தாளராய்-கவிஞராய்-பாடலாசிரியராய்-பத்திரிக்கையாளராய்-நாடக நடிகராய் பன்முகத்தன்மையுடன் பவனி வந்தவர்.
பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்தியவர்.
பிறர் நலனில் தன் நலனை அடக்கியவர்.
முற்றிலும் சுயநலம் துறந்தவர்.
மானுடனுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்.
அவர் இறந்தபோது காசிமேட்டின் சுடுகாட்டில் கண்ணீர் ஒழுக கதறிப் பாடினார் பாவலர் வரதராஜன்(இளையராஜாவின் அண்ணன்).
சிங்கமென முரசறைந்த குரலும் எங்கே?
செந்தமிழை ஆய்ந்து சொன்ன உருவம் எங்கே?
செங்கொடி ஈன்றெடுத்த ஜீவா எங்கே?
இனி எங்கள் குறை ஈடு செய்ய யார்தான் இங்கே?என்று பாடினார்.
ஆம்..அந்த ஜீவா எங்கே?
இன்று தோழர்.ஜீவா பிறந்த நாள்.
கட்டுரையாளர்: சூர்யா சேவியர்
அரசியல் செயற்பாட்டாளர்
கட்டுரையின் தலைப்பு எழுத்தாளர் ரவிக்குமாரின் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.