Aran Sei

தர்மயுத்தம் 2.0 – களை கட்டும் அதிமுக

ற்போது தமிழக மக்களின் பொழுது போக்கிற்குப் பஞ்சமே இல்லை. ஐபிஎல் 13.0, பிக்பாஸ் 4.0 என வரிசை கட்டி நிற்கிறது. இதில் இந்த வாரம் புதுவரவாக வந்திருக்கிறது தர்மயுத்தம் 2.0.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழக அரசியலிலும், அதிமுக தலைமையிலும் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன. எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இபிஎஸ் ஆர்மியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓபிஎஸ் ஆர்மியும் களம் எட்டில் மோதிக்கொண்டன.

பொதுக்குழுக் கூட்டங்களிலும், ஈசிஆர் ரோடு மன்னார்குடிகாரர்களின் பீச் ஹவுஸுகளிலும் இவை ‘நாகபதனியா? நாகப்பதனியா?’ என்று யுத்தம் புரிந்தது. என்னதான் ஓபிஎஸ் அணி முதலில் பேட்டிங்கில் இறங்கி மெரினா ஸ்பெஷல் மிட் நைட் யோகா, தியான வகுப்புகள் நடத்தினாலும் பவுலிங்கில் சொதப்ப, ‘பேட்டைக்காரன் பார்டியின்’ கருப்புச் சேவலே வெற்றிபெற்றது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் நாள், எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வரா ‘ஒருவர்’ மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரன்னர் அப்பாக வந்த ஓபிஎஸ் அணிக்கு, துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

நன்றி : New Indian Express

என்னதான் உள்ளுக்குள் அடிபிடிகள் இருந்தாலும், ‘இனமெனப் பிரிந்தது போதும், மதமெனப் பிரிந்தது போதும். மனிதம் ஒன்றே தீர்வாகும்’ என்று இருவரும் கட்சிக்காகவும் தமிழக மக்களுக்காகவும் உழைக்கிறார்கள் என்று அதிமுக கட்சியினர் பெருமைப்பட்டுக்கொள்ளாத நாட்கள் இல்லை. “தேவா பொழச்சுப்பான்.” “டாக்டர் சொன்னாரா?” “இல்ல தேவாவே சொன்னார்” என்ற தளபதி படத்தின் காட்சி மக்களுக்கு நினைவுக்கு வருவது போல, ”இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு?” ”நம்புனாதான் சோறுனு சொன்னாங்க” என்ற கலகலப்பு படத்தின் காட்சியும் கட்சியினருக்கு நினைவில் வராமல் இல்லை.

இதில் உச்சபட்சமாக, அக்கட்சியினர் ‘தமிழகத்தில் சேவும் ஃபிடலும்’ என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை மார்பிங் செய்து போஸ்டர் அடித்தனர். இதன் தாக்கம் தமிழகத்திலிருந்து பறந்து போய் கியூபாவின் சக்கரை ஆலைகள் வரை எதிரொலித்தது.

இப்படி ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா… லோலலோ…’ என்று விக்ரமன் படமாக ஓடிக்கொண்டிருந்த கட்சியில் இப்போது புதிதாக ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

கடந்த செப் 28-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு வந்த கட்சியினர் இரு பிரிவுகளாக வந்தனர். நாகபத.. ஈபிஎஸ் அணியினர் ஈபிஎஸ் முகமூடியுடனும், ஓபிஎஸ் அணியினர் ஓபிஎஸ் முகமூடியுடனும் வந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ‘அப்ப அதான ஜெஸ்ஸி?’ என்று மற்ற கட்சியினர் வெளிப்படையாகவே, அதிமுகவினரிடம் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

நண்டு ஆம்லேட்டில் மேக்கொண்டு நாலு கரண்டி பெப்பரைத் தூவி விட்டது போல காரசாரமாக இருந்திருக்கிறது முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே நடந்த அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கடும் விவாதம்.

நன்றி : புதிய தலைமுறை

அக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “எனக்கு பதவி மீது ஆசையில்லை. நான் யாரிடமும் சென்று முதலமைச்சர் பதவியைக் கேட்கவில்லை. அம்மாவின் ஆட்சியைக் காப்பாற்றவே என்னை முதலமைச்சராகத் தேர்வு செய்தார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியைத் திறம்படவே நடத்தினேன். இந்தக் கொரோனா காலத்திலும் சிறப்பாகப் பணியாற்றியதாக பிரதமரே பாராட்டியுள்ளார்” என்று பேசியுள்ளார்.

அதைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “முதலமைச்சர் வேட்பாளர் குறித்த சர்ச்சையைத் தொடங்கியதே உங்கள் தரப்புதான். முதலில் ராஜேந்திர பாலாஜியை வைத்துப் பேச வைத்தீர்கள். பின்னர் அவரைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கச் சொன்னீர்கள். பின்னர் மீண்டும் சேர்க்கச் சொன்னீர்கள். நீங்கள் சொன்னதை எல்லாம் நான் செய்து வருகிறேன். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நான் திருப்தியாக இல்லை” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

“கட்சி அணிகள் மீண்டும் இணையும் போது, இந்த நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே எடப்பாடி முதலமைச்சராகவும் அடுத்து வரும் தேர்தலில் என்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவேன் என்றும் சொன்னீர்கள். அதன் அடிப்படையில்தான் கட்சியில் இணைந்தேன். பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து துணை முதலமைச்சர் மற்றும் அதன் இலாக்காக்களைப் பெற்றுக்கொண்டேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னது ஓபிஎஸ் ஆர்மியைக் கண்கலங்க வைத்துவிட்டது.

இத்தொடர் விவாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் தன்னை மூன்று முறை முதலமைச்சராக்கியது ஜெயலலிதாதான் எனக் கூறியுள்ளார். அதனை மறுத்துப் பேசிய எடப்பாடி “நம் இருவரையும் முதலமைச்சராக்கியது சசிகலாதான்” என்று பதிலளித்துள்ளார்.

மேலும் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர், இக்கூட்டத்திலேயே கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் எனப் பேசியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, “வரும் அக்டோபர் 7-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும்” என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

யுத்தத்திற்கான பந்தகால் நடப்பட்டிருக்கும் சூழலில், இன்று காலை ஓ.பன்னீர் செல்வம் செய்திருக்கும் ட்வீட், மேற்கொண்டு பந்தலில் சீரியல் செட் மாட்டிவிட்டு, யுத்த ஏற்பாடுகளைக் களைகட்ட வைத்திருக்கிறது.

ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

`தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!’

நாளை மறுநாள் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நாள் என்பதால், இரு ஆர்மிகளும் தங்கள் ரத கஜ துரக பதாதிகளைக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளன. ஓபிஎஸ் ஆர்மி ‘கலையலங்காரம் மறுபடியும் வீட்ட ஆஸ்பிட்டலா மாத்துங்கடா’ மோடுக்கு வந்து விட்டதால், பொதுமக்கள் அன்று மாலைக்கு மேல், மெரினா கடற்கரை பக்கம் செல்வதைத் தவிர்க்கவும். முக்கியமாகத் தியானப்பிரியர்கள் தவிர்க்கவும்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே !

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்