Aran Sei

ஆன்லைனில் பருவத்தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

இறுதிபருவத்தேர்வுகளை இணைய வழியில் நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் கூறியதைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகமும் இணைய வழித் தேர்வுகளை நடத்தவுள்ளது. அதன்படி, தேர்வு நடத்தும் முறைகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது

கொரோனா முடக்கத்தால் கல்வி நிலையங்கள் கடந்த ஆறு மாத காலங்களாக முடங்கியுள்ளன. இதனால் உயர் கல்வி பயிலும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியெனத் தமிழக அரசு கூறியிருந்தது.

ஆனால் பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி) அதற்கு மறுப்பு தெரிவித்து, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கான இறுதி பருவத்தேர்வுகளை நடத்த வேண்டும் எனக் கூறியிருந்தது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூ.ஜி.சி) முடிவுக்கு எதிராகப் பல்வேறு பல்கலைக்கழகத்தில் பயிலும் 31 மாணவர்களால் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்வு நடத்துவதற்கு தடையில்லையெனத் தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் பருவத்தேர்வை இணைய வழியில் நடத்த இருப்பதாக அறிவித்தது. அதன்படி ‘ஸ்கைப்’ போன்ற வீடியோ மீட்டிங் செயலிகளின் உதவியோடு வீட்டிலிருந்தபடியே தேர்வு எழுதலாம் என்று கூறியிருந்தது.

அண்ணா பல்கலைக்கழகம் கூறியதைத்தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்திரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உட்பட மேலும் பல பல்கலைக்கழகங்கள் இணைய வழித் தேர்வுகளை நடத்தவுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 29 வரையிலும், சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 25 வரையிலும், காமராஜர் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 25 வரையிலும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 7ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன.

சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தேர்வு தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், “இளங்கலை, முதுகலை மற்றும் எம்.பில் (M.Phil)  மாணவர்களுக்கான இறுதி பருவத்தேர்வும், இதற்கு முன் நடந்த தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கான தேர்வும் நடத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

“தேர்வுக்கான கேள்வித்தாள்கள் இணைய வழியில் அனுப்பி வைக்கப்படும், மாணவர்கள் வீட்டிலிருந்த படியே தேர்வுகளை எழுதலாம்”

“இந்தத் தேர்வுகளுக்கென நியமித்த கண்காணிப்பு அதிகாரி, தேர்வு சம்பந்தமான தகவல்களை வாட்சப் குறுஞ்செய்திகள்மூலம் தெரிவிப்பார்.”

“தேர்வுக்கான நேரமாக ஒன்றரை  மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வானது, காலை 10 மணி முதல் 11:30 வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 3:30 மணி வரையிலும் இரண்டு கட்டமாக நடக்கும்.”

”தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள் வழங்கப்படும். வினாத்தாளை பதிவிறக்கம் செய்ததும், தேர்வு கண்காணிப்பு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.”

“A4 தாளில் 18 பக்கங்களுக்கு மிகாமல் தேர்வை எழுத வேண்டும். ஒவ்வோரு பேப்பரிலும் பதிவு எண், பாடப்பிரிவு, பக்க எண், கையெழுத்து முதலியவை இடம் பெற வேண்டும்.”

“தேர்வு முடிந்த மூன்று மணி நேரத்திற்குள், மாணவர்கள் தங்களது விடைத்தாளை வரிசைப்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்”

“பதிவேற்றுவதில் சிக்கலுள்ள மாணவர்கள் விரைவுத் தபாலில் விடைத்தாளை அனுப்பி வைக்கலாம். தபாலில் அனுப்புவது தொடர்பான தகவலைத் தேர்வு கண்காணிப்பு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.”

“வினாத்தாளை பதிவிறக்கம் செய்யவோ, விடைத்தாளை பதிவேற்றம் செய்திடவோ இணைய வசதி இல்லாத மாணவர்கள், அதுகுறித்து தலைமை கண்காணிப்பு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்குக் கல்லூரியில் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்படும். தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தி முடிக்கப்படும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறையின் தலைவர் மணிவண்ணன் அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, “ஏதேனும் ஒரு வகையில் தேர்வுகள் நடந்தே தீர வேண்டும். தேர்வு நடத்தப்படாமல் சான்றிதழ் வழங்குவது முழுமையான ஒன்றாக இருக்காது. அப்படி சான்றிதழ் வழங்கும் பட்சத்தில், இந்த ஆண்டு மாணவர்கள் தொழில் ரீதியான வாய்ப்புகளில் தனிமைப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.” என்று கூறினார்.

இது தொடர்பாக அரசியல் மற்றும் அறிவியல் துறை மாணவர் ஒருவரிடம் கேட்டபோது, “ஐந்து மாத கால ஊரடங்கால் மாணவர்களுக்கு ஏற்பட்ட மன ரீதியான சிக்கல், பொருளாதார நிலைகுறித்து எந்தவித யோசனையும் இல்லாமல்,  தேர்வு நடத்தியே தீர வேண்டும் என்ற யூஜிசி யின் அழுத்தத்தால் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது” எனக் கூறினார்.

மேலும், “ஒரே சமயத்தில் எல்லா மாணவர்களும் வினாத்தாளை பதிவிறக்கம் செய்யும்பொழுது, தொழில் நுட்பரீதியான சிக்கல் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.” என்றும் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்