Aran Sei

`ஒரே நாடு ஒரே தேர்தல்’ – பன்முகத்தன்மை சிதைவுக்கான வினையூக்கி

credit : thequint.com

பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த ஒரே தேர்தல் முறை 2022-ல் நடக்க இருப்பதாகப் பரவலான எதிபார்ப்பு நிலவி வருகிறது. நாம் இந்த வியத்தகு மாற்றத்திற்குத் தயாராகிவிட்டோமா?

நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறை கொண்டுவருவதில் பல குறைபாடுகள் இருக்கின்றன. ஒரே தேர்தல் முறைக்கு வரும் எதிர் கருத்தில் முக்கியமானது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத குடியரசு தலைவர் ஆட்சியைக் கொண்டுவரும் என்பதுதான்.

ஒரே தேர்தல் முறை, அதிகார மையப்படுத்துதலின் மூலம் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைத்துவிடும். மாநில அரசுகளின் தலைமைத்துவத்தைச் சிதைப்பதால் நாட்டின் பன்முகத்தன்மை சிதைவுக்கு வழிவகுக்கும்.

இந்தியா என்பது கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் பல்வேறு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. “ஒற்றைத்தலைமை” இல்லாமல் “ஒரே தேர்தல்” எப்படி இருக்க முடியும்? “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தலைவர்” எனும் அமைப்பு ஜனநாயகத்திற்கோ அல்லது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கோ நல்லதல்ல என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தத் தேர்தல் முறை நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடக்க மக்களுக்கு உறுதியளிக்காது.

ஒரே தேர்தல் முறை மாநில மக்களால் தேர்வு செய்யப்படும் மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்யும் விதமாக இருக்கக் கூடாது. டெல்லியில் ஆளும் மத்திய அரசு பெரும்பான்மையை இழந்து இடைத்தேர்தலைச் சந்திக்க நேரிடும் போது மாநிலத்தில் பெரும்பான்மை வகிக்கும் அரசாங்கத்தின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்வதாகவும் இருக்கக் கூடாது. ஐந்து வருட ஆட்சிக் காலம் இருக்கும் போதும், ஆட்சியைக் கலைத்து விட்டு மறுதேர்தலைச் சந்திக்கும் நிர்பந்தத்தை “ஒரே தேர்தல் முறை” ஏற்படுத்தக் கூடும்.

அந்தத் தருணங்களில் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சியைப் புதிதாக ஏற்படுத்தும். “ஒரே தேர்தல் முறை” மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சியை ஏற்படுத்தும் வாய்ப்பை ஒன்றிய அரசுக்கு வழங்கிவிடக் கூடாது.

“ஒரே தேர்தல் முறை”யில் சொல்லப்படும் அடிப்படைக் கருத்து தற்போது நடக்கும் தேர்தல்களுக்குக் கணிசமான பணம் செலவிடப்படுகிறது என்பதும், தேர்தல் ஆணையத்தின் விதிகளால் தேர்தல் நேரங்களில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது தடைபடுகிறது என்பதும்தான்.

சமீபத்தில் ஒரே தேர்தல் முறை வேண்டி தெரிவிக்கப்பட்ட கருத்து, அடிக்கடி நடக்கும் தேர்தல்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகவும் வளர்ச்சியைத் தாமதப்படுத்தவும் செய்கிறது என்பதுதான். தேர்தல் நடந்தால் செலவாகும் என்பது உண்மை தான். ஆனால், நாம் எடுத்துக்கொண்ட ஜனநாயக அமைப்போடு அந்தச் செலவுகளை எடை போடவேண்டும்.

தேர்தல் ஆணையம் மிகக் குறைந்த செலவில் தேர்தலை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு அறிவிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை விளம்பரப்படுத்தச் செய்யும் செலவுகளைக் காட்டிலும் தேர்தல் நடத்த ஆகும் செலவுகள் மிகக்குறைவு என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசும் போது, தேர்தல் நேரத்தில் ஆளும் அரசாங்கத்திற்குச் சில கட்டுப்பாடுகள் இருப்பது உண்மைதான். அதற்குக் காரணம் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதால் நிர்வாகத்தின் செயல்திறன் பாழாகிறது.

தேர்தல் விதிகள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்காது. அப்படி இருந்தாலும் அரசியல் கட்சிகள் புரிந்துணர்வுக்கு வருவதன் மூலம் நடப்பில் இருக்கும் அத்தியாவசியத் திட்டங்கள் பாதிக்கப்படாத வகையில் சரிகட்டப்படும். ஆட்சியில் இருப்பவர் வாக்கு வாங்க வேண்டிய நிர்பந்தத்தைக் கருத்தில் கொள்ளாமல் பொறுப்பாக நடந்து கொள்வதன் மூலம் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

இதுவரை இந்தியா 108 சந்தர்ப்பங்களில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தைக் கலைத்துள்ளது. அதில் சில தடவை மட்டுமே மாநில சட்டமன்றம் முதலமைச்சரை தேர்வு செய்யமுடியாத காரணத்தால் கலைக்கப்பட்டது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்றிய அரசின் அதிகாரத்தால் அல்லது ஒன்றிய அரசின் காரியகர்த்தாவான ஆளுநரால்தான் கலைக்கப்பட்டுள்ளது. இதில் வெளிப்படைத்தன்மை இருந்ததில்லை. இந்த அணுகுமுறைகளால் “ஒரே தேர்தல் முறை” ஜனநாயத்தின் ஆணிவேரை வலுவிலக்கச்செய்வதோடு, அரசியலில் பன்முகத்தன்மையையும் சிதைத்துவிடும்.

தற்போது தேவைப்படுவதெல்லாம் தேர்தலைச் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த மாற்று வழியைக் கண்டுபிடிப்பது மற்றும் தேர்தல் நேரக் கட்டுப்பாடுகளை மாறு ஆய்வு செய்வதுதான்.

இரண்டாவதாக, அரசாங்க இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆளும் கட்சி தேர்தல் நேரங்களில் செல்வாக்கு செலுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநிலங்களின் விருப்பு வெறுப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு “ஒரே தலைவர்” மற்றும் “ஒரே ஆட்சித் திட்டம்” என்று நடக்கும் தேர்தல் நமக்கு தேவையா என்ற விவாதத்தைத் தொடங்க வேண்டும்.

மாநில மற்றும் மத்திய அரசாங்கத் தேர்வுக்கு வெவ்வேறு நிலைகளில் நடத்தப்படும் வேறுபட்ட தேர்தல்கள் நீக்கப்பட்டு “ஒரே தேர்தல்” மூலம் “ஒரேயொரு முறை” வாக்கு செலுத்தப்படும் போது மாநிலப் பிரச்சனைகளுக்கு, உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் தலைவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.

இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ள வேட்பாளர்களுக்குத்தான் இந்தத் தேர்தல் சாதகமாக அமையும். அரசியலமைப்புச் சட்டத்தில் இடமுள்ளதா மற்றும் ஜனநாயகத்திற்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் ஏற்புடையதா போன்ற பல கோணங்களில் இதில் இருக்கும் பிரச்சனைகள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கும் தேர்தல் முறையில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

முதலாவதாக, பிரதிநிதித்துவம் எல்லாப் பரிமாணங்களிலும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை வாய்ந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

மூன்றாவது, பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற சபாநாயகர்கள் தேர்வு செய்யப்படுவதைப் போன்று தேர்வு செய்யப்பட வேண்டும்.

நான்காவது, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களால் செய்யப்படும் தேர்தல் செலவுகளுக்கு அந்தந்த நிலைகளுக்கேற்ப உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். இது போன்ற சீர்த்திருத்தங்களைச் செய்யாமல் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பது நல்ல ஆட்சிமுறைக்கு எதிரானதாகவே அமையும்.

“ஒரே தேர்தல்” மூலம் ஒரேயொரு முறை வாக்கு செலுத்தப்படும் போது மாநில பிரச்சனைகளுக்கு, உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் தலைவர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். இந்தியா முழுவதும் யார் பிரபலமான வேட்பாளராக, கட்சியாக இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்தத் தேர்தல் சாதகமாக அமையும்.

இந்தப் பிரபலத்துவம் ஏற்கனவே கூட்டாட்சித் தத்துவத்தின் ஆன்மாவைச் சிதைக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒருமித்த கருத்தை உருவாக்க தற்போது இருக்கும் இந்தப் பிரபலத்துவத்தின் அடிப்படையிலான தூண்டுதல்கள் 1952–67 காலகட்டத்தில் நாம் ஒரே தேர்தலைத் தொடங்கியபோது இருந்ததில்லை.

இதற்கு பதில் அரசியல் சீர்த்திருத்தங்களில் முதலில் கவனம் செலுத்தினால் இந்தியா சிறந்த நாடாக விளங்கும்.

“ஒரே தேர்தல் முறை” எளிதில் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கலாம். ஆனால் அது சில சந்தேகத்திற்குரிய நடைமுறைப் பிரச்சனைகளைக் கொண்டுள்ளது. மாறாக, அடிப்படை தேர்தல் சீர்த்திருத்த முறைகளை மேற்கொள்வது நடைமுறைப்படுத்த கடினமானதாக இருக்கலாம். ஆனால் நாடாளுமன்ற ஜனநாயக மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நமக்கு அது நிலைத்த நேர்முகத் தாக்கங்களை ஏற்படுத்தும்.

-தி வயர் ல் வெளியான கட்டுரை.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்