Aran Sei

OMR-ல் சுங்கக் கட்டண அதிகரிப்பு நியாயமற்றது : ஷியாம் சுந்தர்

Credit : Wikimedia Commons

ழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள டோல் பிளாசாவில் அக்டோபர் 1 முதல் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான வாகனங்களுக்கும் சுங்கச்சாவடி கட்டணம் ஏறக்குறைய 10 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

உதாரணமாக காருக்கு ஒருமுறை செல்ல முன்பு 27 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது அது 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கான சுங்கச்சாவடி கட்டணம் 71 ரூபாயில் இருந்து எழுபத்தி எட்டு ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு அனைத்து வகையான வாகனங்களுக்கும் பொருந்தும்.

இந்தக் கட்டண உயர்வு பெரும்பாலான வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சாலை தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் பணிபரியும் ஊழியர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பம் என்றால் அதிகம் சம்பாதிப்பார்கள். அவர்களிடம் எவ்வளவு வேண்டுமானாலும் வசூலித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது.

ஆனால், சென்னை வளர்ந்து இப்பொழுது பெருநகரமாக ஆகிவிட்டது. இந்த நிலையில் பெரிய வசதிகள் இல்லாத நகரத்தின் மத்தியில் உள்ள சாதாரண சாலைக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றனர்.

இந்தச் சாலையில் அதிகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடிய சூழ்நிலையை தினமும் பார்க்கிறோம். பல இடங்களில் சாலை செப்பனிடப்படாமல் பழுதாக இருக்கும் காட்சியையும் பார்க்க முடிகிறது. மழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது. பெரிய வசதி இல்லாத சாலைக்கு அநியாயமாக சுங்கக்கட்டணம் வசூலிக்கின்றனர்.

பெங்களூரூ போன்ற நகரங்களில் எலக்ட்ரானிக் சிட்டி என்ற தகவல் தொழில்நுட்ப பூங்காவை நகரத்தோடு இணைக்கும் சாலை சுங்கச் சாலையாக உள்ளது. என்றாலும் சுங்கச்சாவடி செலுத்த முடியாதவர்கள் மாற்றுப் பாதையில் எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகத்தை அடைய முடியும். ஆனால் மத்திய கைலாசத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பெரும்பாலான அலுவலகங்களை அடைவதற்கு மாற்றுப் பாதை கிடையாது. அதனால் அனைவரும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்தச் சாலையை தினமும் தோராயமாக ஒன்றரை லட்சம் வாகனங்கள் பயன்படுத்துகின்றனர். இந்தச் சாலை 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்தது. 20 கிலோமீட்டர் தொலைவே கொண்ட இந்தச் சாலை அமைப்பதற்கான செலவினை விட பல மடங்கு கட்டணமாக வசூலிக்கப்பட்டு விட்டது. என்றாலும் இந்த சுங்கக் கட்டண அவஸ்தையில் இருந்து மீள்வதற்கான எந்த வழியும் கண்ணில் தென்படவில்லை.

மேலும் சோழிங்கநல்லூரில் எல்காட் சார்பாக மிகப் பெரிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எச்சிஎல், டெக் மஹிந்திரா, சிடிஎஸ், விப்ரோ என்று பல பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பல ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் காரப்பாக்கத்தில் இருந்து தமது அலுவலகத்தை எளிதாக அடைய முடியும். என்றாலும் அந்தப் பாதை பெரும்பாலான நேரங்களில் அடைக்கப்பட்டு ஊழியர்கள் சோழிங்கநல்லூர் வழியாக அதிக தூரம் பிரயாணம் செய்து வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் தினம்தோறும் தம்மை பல கிலோ மீட்டர் தூரம் சுற்ற வைக்கிறார்கள் என்று தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

புதிதாக வண்டி வாங்கும் பொழுது சாலை பயன்படுத்துவதற்காக தேவையான வரியை நாம் செலுத்தி விடுகிறோம். இந்த நிலையில் ஊருக்கு நடுவே பெரிய வசதிகள் இல்லாமல் சாலை அமைத்து சுங்கக் கட்டணம் என்ற பெயரில் பணத்தை பறிக்கின்றனர். இது நியாயமற்றது. அதனால் இந்த சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

– சியாம் சுந்தர்
(கட்டுரையாளர் ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்