Aran Sei

நாட்டுப்பற்றுக்கு மதம் இல்லை – மோகன் பக்வத்திற்கு ஆதாரம் தருகிறோம் – ஃபைசான் முஸ்தஃபா

Image Credits: India TV

வீந்திரநாத் தாகூர் 1908 ஆம் ஆண்டு,  ஏ.எம். போஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நாட்டுப்பற்று நமது இறுதி ஆன்மீகத் தங்குமிடமாக இருக்க முடியாது. வைரங்களை விற்று நான் கண்ணாடியை வாங்க மாட்டேன். நான் வாழும் வரை தேசபக்தி, மனிதகுலத்தின் மீது வெற்றி பெற அனுமதிக்க மாட்டேன்,” என்று எழுதினார். 1911 ல் இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா மாநாட்டில் தாகூர் எழுதிய இந்திய தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்டது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வெளிப்படையாகப் பேசத் கூடிய நபர். பல்வேறு செய்திகளைப் பற்றி கருத்துக்களைக் கூறுவதால் எப்போதும் செய்திகளில் இருப்பார். அண்மையில், ‘இந்து தேசப்பற்றாளர்களை  உருவாக்குதல்’ என்ற ஜே.கே.பஜாஜ் மற்றும் எம்.டி‌.சீனிவாசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர், காந்தியின் இந்து சுயராஜ்ஜியத்தின் பின்னணி குறித்து சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன்’ – பேரறிஞர் அண்ணா

அதில்,”இந்துவாகப் பிறந்த ஒருவர்  இந்தியாவுக்கு எதிரானவராக இருக்க முடியாது. ஏனெனில் தேசப்பற்றுடன் இருப்பது அவர்களுடைய உள்ளார்ந்த உணர்வு,” என்று கூறியிருக்கிறார். மேலும் அவர், தேசத்தின் மீதான அன்பு, தர்மத்திலிருந்து வெளிவருகிறது என்பதுடன் “யாராவது ஒருவர் இந்துவாக இருந்தால், அவர் தேசப்பற்றுடையவராகத்தான் இருக்க வேண்டும். அதுவே அவன் அல்லது அவளின் அடிப்படையான இயல்பான பண்பாக இருக்க வேண்டும்,” என்றும், காந்தியை மேற்கோள்காட்டி அவரது தேசப்பற்று அவரது தர்மத்திலிருந்து உருவானதாக கூறியுள்ளார். சில சமயங்களில், ஆர்எஸ்எஸ் தலைவரின் அறிவிப்புகளின் உண்மையான நோக்கம் முழுமையாக பாராட்டப் படுவதற்குப் பதிலாக, தேவையில்லாமல் விமர்சிக்கப்படுகிறது.

இட ஒதுக்கீடு குறித்து இணக்கமான சூழ்நிலையில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற அவரது அறிக்கை விரிவாக கண்டனத்திற்குள்ளாகியதுடன், பாஜக நேரத்தை வீணாக்காமல் உடனடியாக அந்த அறிக்கையிலிருந்து தன்னைத், தூரத்தில் நிறுத்திக் கொண்டது. உண்மையில் அவர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்றாலும், அது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பரிந்துரைத்தார். சில மாதங்களுக்கு முன் ஒரு இந்தி நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்த “உலகிலேயே இந்தியா முஸ்லீம்கள்தான் மிகவும் மகிழ்ச்சியான முஸ்லீம்கள்” என்ற கருத்திற்காக மீண்டும் அவர் வெளிச்சத்திற்கு வந்தார். பிற மத மற்றும் சமூகங்களின் நாட்டுப்பற்று குறித்து அவர் எதுவும் கூறவில்லை என்றாலும், அவரது அண்மை அறிவிப்பை நாம் கூர்மையாக பரிசீலனைச் செய்வோம்.

தர்மம் என்பது மதம் மட்டுமல்ல என்று பகவத் மிகச் சரியாகவே கூறி உள்ளார். உண்மையில், இது வெறும் சட்டம் மட்டும் கூட அல்ல. ஆனால் குறிக்கோளுடைய கடமையாகும். அது அறநெறி, சட்டம் மற்றும் மதம் ஆகியவற்றின் கலவையாகும். இது ஒரு சிறந்த, சுய கட்டுப்பாட்டு ஒழுங்கை விட மேலானது. தர்மம் உலகை பராமரிக்கும் நிலையான சட்டத்தைக் குறிக்கிறது. தர்மத்தின் மைய எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒவ்வொரு இந்துவும் சரியான நேரத்தில் சரியானதை செய்ய முயல வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் 51அ  பிரிவு நமது அடிப்படை கடமைகளை பட்டியலிட்டுள்ளது‌. சுதந்திர போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த உன்னதமான கொள்கைகளை நிலைநிறுத்துவதும், அரசியலமைப்பின் குறிக்கோள்களை கடைபிடிப்பதும், அனைத்து மக்களிடமும், மத,மொழி , நிலப்பகுதி அல்லது பிரிவு வேறுபாடுகளை மீறி நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தின் ஆன்மாவையும் ஊக்குவிப்பதும், நமது பன்முகத்தன்மை கொண்ட வளமான கலாச்சாரத்தை மதித்து, பாதுகாப்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை அல்லது தர்மம் எனத் தெளிவாகக் கூறுகிறது. இந்த மதிப்புகளையும் கொடுக்கப்பட்டுள்ள பன்முகத்தன்மையையும் மறுக்க முயற்சிக்கும் எவரும் இந்து தர்மத்தையும், அதே போல் அரசியலமைப்புத் தர்மத்தையும்  மீறுவதாகும்.

முகம்மது நபியும் கூட, ஒருவர் தனது நாட்டை நேசிப்பதும் கூட மத நம்பிக்கையின் ஒரு பகுதிதான் என்று கூறியிருப்பதாக நம்பப்படுகிறது. அவர் நாட்டை நேசிப்பது மதத்தை நம்புவதின் அரைப்பகுதியாகும் என்று கூறியதாகவும் கூட சொல்லப்படுகிறது. எல்லா மதங்களிலும் அந்தந்த மதங்களை பின்பற்றுவோர் பெரும்பாலும் நல்லவர்களாக இருந்தாலும், அவரவர் மதங்களின் அடிப்படை கோட்பாடுகளிலிருந்து விலகிச் செல்பவர்களும் இருக்கிறார்கள். இத்தகையவர்களுக்காக அவர்களின் மதத்தை- அது இந்து மதமாகவோ, இஸ்லாம் மதமாகவோ அல்லது வேறு எந்த மதமாகவோ இருந்தாலும் – குற்றம் கூறக் கூடாது.  இந்திய மதங்களைப் பின்பற்றுவோரில் சிலர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தேசப்பற்று இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். பண்டைய இந்தியாவில், தட்சசீல மன்னன் அம்பி, பௌரவா மற்றும் அபிசாரன் ஆகிய அரசர்களைத் தோற்கடிப்பதற்காக மகா அலெக்சாண்டரை வரவேற்றிருக்கிறார். கன்னோஜின் மன்னன் ஜெயசந்திர ரத்தோடை யாரால் மறக்க முடியும்? அஜ்மீர் மன்னன் பிரித்விராஜ் சௌகான், ஜெயசந்திரனின் மகளை காதலித்ததால், 1192 ல் நடந்த முகம்மது கோரிக்கு எதிரான இரண்டாம் பானிபட் போரில் பிருத்விராஜின் தோல்வியை உறுதி செய்தார். அதுவே 1206ல் தில்லி சுல்தான்களின் ஆட்சியை நிறுவ வழிவகுத்தது.

எனவே, இந்துக்கள் அனைவரும் தேசபக்தர்கள் என்ற பகவத்தின் கூற்று அனுபவபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. “நாட்டின் மீதான அன்பு வெறும் நிலத்தைப் பற்றியது மட்டுமல்ல. அது அதன் மக்கள், ஆறுகள், கலாச்சாரம், மரபுகள் மற்றும் எல்லாவற்றையும் குறிக்கின்றது” என்ற ஆர்எஸ்எஸ் தலைவரின் கூறுவது முற்றிலும் சரியானது. இதன்படி யார் தனது சக குடிமகனை நேசிக்கவில்லையோ அல்லது மாறாக வெறுக்கிறார்களோ, அவர்கள் நாட்டுப்பற்று உடையவர்களாக அழைக்கப்பட மாட்டார்கள். நாட்டில் புனிதத் தன்மையை மீட்கவும், தற்போதுள்ள வெறுப்பு, ஐயப்பாடு மற்றும் விலக்குதல் கொண்ட சூழலுக்கு முடிவு கட்டவும்,  பகவத்திடம் செல்வாக்கும், அதிகாரமும் உள்ளது. ஆறுகளை மாசு படுத்துபவர்களும், மதம், சாதி அல்லது சித்தாந்தம் ஆகியவற்றின் பெயரால் மக்களின் தலையை சீவி படுகொலை செய்பவர்களும், நிச்சயமாக நாட்டுப்பற்று உடையவர்களாக இருக்க மாட்டார்கள்.

இந்து மதத்தைப் பின்பற்றிய காந்தி, தாய் நாட்டிற்காக தனது ஒட்டு மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். கெடுவாய்ப்பாக, இந்துத்துவா ஆதரவாளர்கள் தேசத்தந்தையின் நாட்டுப்பற்றைச் சந்தேகிக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான கதாநாயகன் காந்தி அல்ல. மாறாக அவரைக் கொன்ற நாதுராம் கோட்சே தான் அவர்களுக்கு கதாநாயகன். 2019, ஜனவரி 30 ஆம் நாள், காந்தியின் உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு, இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் பூஜா சகுன் பான்டே, காந்தியின் படுகொலையை கொண்டாடினார். இந்து மகாசபையின் குவாலியர் அலுவலகத்தில் கோட்சேவுக்கு ஒரு கோயில் கூட திறக்கப்பட்டது. இதே குவாலியரில்தான் காந்தியை கொல்வதற்கான சதி திட்டத்தை தீட்டி, அதற்காக துப்பாக்கியையும் கோட்சே  வாங்கினான்.

காங்கிரசின் எதிர்ப்பால் அந்த கோவில் பிறகு நீக்கப்பட்டது. கடந்த வாரம் கோட்சேவின் பெயரில் ஒரு நூலகம் இந்து மகாசபையின் குவாலியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. காந்தி நாட்டுப்பற்று உடையவர் அல்ல எனில், இந்த நாட்டில் ஒரு நாட்டுப்பற்று உடையவரையும் காண முடியாது‌.

இந்துத்துவம்தான் நம் நாட்டின் சுயராஜ்ஜியம் – மோகன் பாகவத்

தீவிரமான தேசியவாதத்தை குறிப்பிட்ட சில பிரிவு குடிமக்களின் மீதான வெறுப்புடன் கலந்து  அதீதமாக ஊட்டியதால், வலது சாரி கும்பல் பொய்பரப்புரையாலும், தீவிரமயமாக்கலினாலும் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தைத் தாக்கியது நமக்கு அதிர்ச்சியை தருகிறது என்றால், இந்து மதத்தின் அதே போன்ற அனைத்து விழுமியங்களையும் நாம் எதிர்க்க வேண்டும். ஆர்எஸ்எஸ் தலைவரின் இந்த பார்வையை கவனத்தில் கொண்டு காவல்துறை இந்தியாவின் நலன்கள், அதன் மக்கள், அதன் கலாச்சாரம், அதன் மரபுகள் ஆகியவற்றை எதிர்க்கும் அனைவரையும் பதிவு செய்யட்டும்.

(www.thewire.in இணையதளத்தில் ஃபைசான் முஸ்தஃபா எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்