Aran Sei

83 வயதான பழங்குடியினர் உரிமைப் போராளி ஸ்டேன் ஸ்வாமி – என்ஐஏவால் கைது

தேசியப் புலனாய்வு முகமை (NIA) 83 வயதான பழங்குடி மக்கள் உரிமைக்கான போராளி ஸ்டான் சுவாமியை ‘எல்கர் பரிசத்’ (உரக்கச் சொல்வோர் அவை) வழக்கில் கைது செய்துள்ளது.

கடந்த 8-ம் தேதி தேசியப் புலனாய்வு முகமை (NIA), 83 வயதான, பழங்குடி மக்கள் உரிமைக்காகப் போராடிவரும் யேசு சபையைச் சேர்ந்த பாதிரியாரான ஸ்டான் சுவாமியைப் பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் கைது செய்துள்ளது. இதுவரை கைது செய்துள்ளவர்களில் மிகவும் வயதானவரைக் கைது செய்து என்ஐஏ சாதனை படைத்துள்ளது.

2018-லிருந்து நடைபெற்று வரும் எல்கர் பரிசத் வழக்கில் 16-வது நபராகக் கைது செய்யப்பட்டுள்ள இவர், பலமுறை விசாரணைக்கு உள்ளாகி இருக்கிறார். ‘2017, டிசம்பர் 31-ம் நாள் மாவோயிஸ்டுகள் தொடர்புடன் புனேவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய வன்முறையைத் தூண்டும் வகையிலான ‌பேச்சுகளே பின்னர் மகாராட்டிரத்தில் நடந்த வன்முறைகளுக்குக் காரணம் எனக் காவல்துறை கதை புனைந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் நாம்கும்மில் உள்ள பகைச்சா எனுமிடத்தில் உள்ள அவரது இருப்பிடத்தில் வைத்து , கைது ஆணையே இல்லாமல், என்ஐஏ, மிக மோசமான முறையில் , கடுமையாக நடந்துகொண்டு இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டது என்கின்றனர் அவரது நண்பர்கள். கைது ஆணையைக் கேட்டும் அதைத் தர மறுத்ததோடு, எந்தக் குற்றத்திற்காகக் கைது செய்யப்படுகிறார் என்று கூட கூற மறுத்து, அவரை என்ஐஏ அலுவலகத்திற்குக் கொண்டு சென்று விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

பல்வேறு நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் சுவாமி, ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்கள் உரிமைக்காகப் போராடி வரும் மூத்த போராளியாவார். கேரளாவைச் சேர்ந்த சுவாமி, ஜார்க்கண்ட் பழங்குடியினருடன் ஐம்பதாண்டுக் காலமாக இருந்து அவர்களது வன வாழ் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். அந்தப் பகுதியில் காவல்துறையின் அத்துமீறலை எதிர்த்துக் குரல் கொடுத்து வருபவரான சுவாமி , மாநிலத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையை அரசு முறையாகச் செயல்படுத்த தவறியதைக் குறித்தும் கேள்வி எழுப்பி வந்தார். அத்துடன் அடிக்கடி சட்டவிரோதமாகப் பழங்குடி இன இளைஞர்களைக் கைது செய்வதைக் கடுமையாக எதிர்த்து வந்தார்.

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சியில் இருந்த போது சுவாமி மற்றும் அவரது நண்பர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அடுத்து வந்த ‌ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

சிறிது காலத்திற்கு முன்பே சுவாமி தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன், நடுவண் அரசின் புலனாய்வு நிறுவனங்கள் தன்னை எவ்வாறு விசாரணை செய்கின்றன என்பது குறித்து ஒரு நீண்ட ஒளிப்பதிவைப் பதிவு செய்துள்ளார். இன்னொரு கடிதத்தை மக்கள் உரிமைக்காகப் போராடுபவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தான் கைது செய்யப்படுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன் அனுப்பி உள்ளார். அதில் அவர், தன்னை என்ஐஏ, ஜூன் 27-லிருந்து ஆகஸ்ட் 6-ம் தேதி வரை ஐந்து நாட்கள், 15 மணி நேரம் விசாரணை செய்ததாகக் கூறியுள்ளார்.

“எனது முழு விவரங்களோடு, சில உண்மைத் தகவல்களையும், மாவோயிஸ்டுகளுடன் எனக்கு தொடர்பு இருப்பதாகக் காட்டுவதற்காக எனது கணினியில் இருந்து சட்டவிரோதமாக தகவல்களை எடுத்து என்முன் வைத்தனர். நான் அவர்களிடம் அவை அனைத்தும் புனையப்பட்டவை, வேண்டுமென்றே எனது கணினியில் புகுத்தப்பட்டவை. அவற்றிற்கும் எனக்கும் தொடர்பில்லை எனக் கூறி விட்டேன்.” என்று எழுதி உள்ளார்.

மேலும் அவர், ”தற்போது என்ஐஏ என்மீது நடத்தும் விசாரணைக்கும் சந்தேகத்தின் பேரில் என்னைச் சேர்த்து, இருமுறை விசாரணையும் மேற்கொண்ட, ‘பீமா கோரேகான்’ வழக்கிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால் இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு

(1) நான் தனிப்பட்ட முறையில் தீவிரவாத இடதுசாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும்,
(2) என் மூலமாக மாவோயிஸ்டுகளுடன் பகிச்சாவைத் தொடர்பு படுத்தவும் முயல்கிறார்கள்.

ஆனால் இவை இரண்டையும் நான் உறுதியாக மறுத்து விட்டேன். “ என்று கூறி உள்ளார்.

தன்னை இந்த வழக்கு நடக்கும், என்ஐஏவின் மும்பை அலுவலகத்திற்கு அழைத்திருந்தனர் என்றும், எனினும் தனது உடல் நலத்தை முன்னிட்டும், கொரோனா தொற்று அபாயத்தின் காரணமாகவும் அங்கு வர மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“நான் அவர்களிடம்
(1) ஏற்கனவே பதினைந்து மணிநேரம் விசாரணை நடத்திய பிறகும் மீண்டும் என்னை விசாரிப்பதற்கான தேவையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும்
(2) தனக்கு 83 வயதாகி விட்டதாலும், நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதாலும் அவ்வளவு தூரம் தன்னால் பயணம் செய்ய இயலாது என்றும் தெரிவித்து விட்டேன். அது மட்டுமன்றி ஜார்க்கண்ட் அரசு ஊரடங்கு காலத்தில் 65 வயதிற்கு மேல் உள்ளவர்கள் வெளியில் வரக் கூடாது என உத்தரவிட்டிருப்பதாலும்,
(3) தேவை எனில் காணொளி மூலம் விசாரணை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளேன்” என்கிறார் சுவாமி.

தனது கடிதத்தில் அவர், ”மனித உணர்வுகள் மதிக்கப்படும் என நம்புகிறேன்” ஒரு வேளை இல்லை எனில், தான் எந்தவித விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்டோபர் 8-ம் நாள் அவரை என்ஐஏ கைது செய்து தங்கள் வசம் வைத்துள்ளது.

முதலில் எல்கர் பரிசத் வழக்கை பதிவு செய்து விசாரித்து வந்தது புனே காவல்துறைதான். அப்போது மகாராட்டிரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சி இருந்தது. அந்த ஆட்சி வீழ்ச்சியடைந்து காங்கிரஸ் – தேசிய வாத காங்கிரஸ் – சிவசேனா ஆட்சி வந்தது. பிறகு அந்த வழக்கை திடீரென என்ஏக்கு மாற்றியது நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம். ஜனவரி மாதத்திலிருந்தே இதுவரை சுவாமி ஆறு பேரை அது கைது செய்துள்ளது.

புதிய குற்றப் பத்திரிகையையும் அது இன்னும் ஒரு சில நாட்களில் தாக்கல் செய்ய உள்ளது. (ஏற்கனவே புனே காவல்துறை இரண்டு குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது) அந்தக் குற்றப்பத்திரிகையில் கல்வியாளரும் சிவில் உரிமைப் போராளியுமான ஆனந்த் டெல்டும்டேவையும், பத்திரிகையாளர் கௌதம் நவலகாவையும் சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய குற்றப்பத்திரிகைகள்

5,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப்பத்திரிகை புனே காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள், “பீமா கோரேகான் வெற்றி விழா” என்ற பதாகையின் கீழ், தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மாவோயிஸ்டு) யுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்றும், 2017, டிசம்பர் 31-ல் “எல்கர் பரிசத்“ நிகழ்ச்சியை நடத்த உதவினர் என்றும் புனே காவல்துறை குற்றம் சுமத்தியது. (1818, ஜனவரி 1-ம் நாள் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை, பீமா நதிக்கரையில் உள்ள கர்கோயன் எனுமிடத்தில் அன்றைய மகாராட்டிரத்தின் பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ், மகர் படைகளின் ஆதரவுடன் வெற்றிகொண்டார். அந்த நாளை நினைவுகூரும் வகையில் கோரேகானில் ஆண்டு தோறும் கலாச்சார விழா நடப்பது வழக்கம்)

புனேவில் பார்ப்பனர்கள் அதிகம் வசிக்கும் ஷானிவர்வாடா (Shaniwarwada) பகுதியைச் சேர்ந்தவர்கள், தலித் இளைஞர்களை, பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகத் தூண்டி விட்டதால், மாநிலம் முழுவதும் இருதரப்புக்குமிடையே மோதல்கள் நடந்து வருகின்றன.. உரக்கச் சொல்வோம் அவையின் (எல்கர் பரிசத்) கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுகள் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் இருந்தன. அதுவே நாட்டின் ஜனநாயக இழையை! பாதிப்பதாகக் காவல் துறை வழக்கு சொல்கிறது. எல்கர் பரிசத்திற்கு, தலைமறைவாக உள்ள மாவோயிஸ்டு தலைவர் கணபதிதான் மூளையாகச் செயல்படுபவர் என ஒரு துணைக் குற்றப்பத்திரிகையையும் காவல்துறை பதிந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த தலித் மக்கள் உரிமைப் போராளியும் எழுத்தாளருமான சுதிர் தவாலே, காட்சிரோலியில் தலித் மக்களை இடம்பெயர்வு செய்வதற்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் இளம் போராளி மகேஷ் ரவுத், நாக்பூர் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியத் துறை தலைவர் சோமா சென், வழக்கறிஞர்கள் அருண் ஃபெரெய்ரா மற்றும் சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வர வர ராவ், சமூகப் போராளி வெர்னான் கன்சால்வஸ், மக்கள் உரிமைப் போராளி ரோனா வில்சன், நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் உபா (UAPA) சட்ட நிபுணருமான சுரேந்திர காட்லிங், டெல்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜானி பாபு, கபிர் கலா மஞ்சின் கலைஞர்களான சாகர் கோர்க்கே, ரமேஷ் கைச்சார், ஜோதி ஜக்தப் ஆகியோரையும் காவல் துறை இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்துள்ளது.

கண்டனக் குரல்கள்

மக்கள் சிவில் உரிமைக் கழகம் ( PUCL) சுவாமியின் கைதைக் கண்டித்து, “சுவாமி கைது செய்யப்பட்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என அறிக்கை வெளியிட்டுள்ளது.

“விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்து வந்த சுவாமியைக் கைது செய்திருப்பது என்ஐஏ வின் நேர்மையற்ற, மனிதாபிமானமற்ற செயல் ஆகும். வயது மூப்பு இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட பல நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த போதும் விசாரணையில் (15 மணி நேரத்திற்கு மேல்) கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாக தகுந்த பதிலளித்துள்ளார். ஆகஸ்ட் 28-ம் நாள் அவரது இருப்பிடத்தை சோதனை செய்த புனே காவல்துறை அவரது மடிக்கணினி, புகைப்படக் கருவி, டேப்லட் கணினி (tablet) ஆகியவற்றை அத்து மீறி கைப்பற்றியது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் “சுவாமி தொடர்ந்து தனக்கும் தீவிர இடதுசாரிகளுக்கும் அல்லது மாவோயிஸ்டுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று பலமுறை கூறி வரும் போதும், அவரை என்ஐஏ கைது செய்திருப்பது ”தீய நோக்கம் கொண்டது. வெறுக்கத்தக்கது” எனக் கூறும் அந்த அறிக்கை “ அவர் என்ஐஏ விடம் தனது கணினியில் இருந்து எடுக்கப்பட்டதாக தன்னிடம் காட்டப்பட்டவை யாவும் போலியானவை, வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை, அவை தன்னுடையதல்ல என மிகத் தெளிவாகக் கூறி இருக்கிறார். என்ஐஏ வின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தும் இன்னொரு சான்று, காவல் துறை 2018 அக்டோபரில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ‘ஸ்டான் சுவாமி வெறும் ஒரு சந்தேகத்துக்குரிய நபர்தானே தவிர குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல’ என உறுதியாகக் கூறியுள்ளது.

“ஸ்டான் சுவாமி ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆண்ட முந்தைய பாஜக அரசு தேசத்துரோக மற்றும் தீவிரவாத எதிர்ப்பு சட்டங்களை எவ்வாறு வரம்பு மீறி முறைகேடாக பயன்படுத்தியது என்பதையும், பாதாள்காடி இயக்கத்தின் போது தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிய ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணையே இன்றி சிறை வைக்கப்பட்டுள்ளதையும், பழங்குடி இன இளைஞர்கள் அனுபவித்து வரும் சொல்லொணா துயரங்களையும், குற்றமேதும் செய்யாத அப்பாவி பழங்குடிகள் நூற்றுக்கணக்கானவர்களை சிறையில் வைத்திருப்பதையும், தக்க ஆவணங்களுடன், அச்சமின்றி வெளிப்படுத்தி வருவதுதான், தற்போது என்ஐஏ அவரையும், பிற மனித உரிமைப் போராளிகளையும் தேடி வேட்டையாடி கைது செய்துள்ளதன் உண்மையான நோக்கம் ஆகும் என்பதை மக்கள் சிவில் உரிமை கழகம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் காவல்துறையால் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டிருப்பதற்கான ஆதார பூர்வ தரவுகள் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் உறுதி மொழி பத்திரமாக தாக்கல் செய்திருப்பது பாஜக அரசை நிலைகுலையச் செய்துள்ளது.

சுவாமி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது அதிக மதிப்பு வைத்திருப்பவராகவும், அரசு நிர்வாகமோ, காவல்துறையோ தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போது அதற்கு அமைதியான வழியிலேயே எதிர்ப்பைக் காட்ட விரும்பியவராகவும் இருந்தார்

“ஸ்டான் சுவாமியின் கைது மூலம் பிற மனித உரிமைப் போராளிகளுக்கு என்ஐஏ விடுக்கும் செய்தி யாதெனில், எதிர்ப்புகளை அடக்கவும் , தலைவணங்கச் செய்து அமைதியாக்கவும் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வோம் எனக் காட்டுவதாகும்..” என்கிறது மக்கள் சிவில் உரிமைக் கழகம்.

–  சுகன்யா சாந்தா
கட்டுரை & படங்கள் : நன்றி thewire.in

மொழியாக்கம் செய்யப்பட்டது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்