Aran Sei

புதிய நாடாளுமன்றமும், ஆளும் வர்க்கத்தின் அரசியல் கர்வமும் – நீரா சந்தோக்

ந்தியா ஒரு பெருந்தொற்றைச் சமாளித்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் மரணங்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.  வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நரம்பியல் நோய்களோடும், சிறுநீரகம், இதயம் கல்லீரல் தொடர்பான நோய்களோடும் வாழப் போகிறார்கள்.

கோடிக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், முழு அடைப்பினால் வேலைகளை இழந்து கஷ்டப்படுவதைக் குறித்து யாரும் பேசுவது இல்லை.

குறைந்தபட்ச நியாயம் கேட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், வரலாற்றை இடம் சார்ந்து மறு உருவாக்கம் செய்ய கோவில்கள் கட்டவும், பாராளுமன்ற கட்டிடம் கட்டவும் பெரிய தொகைகள் செலவிடப்படவுள்ளது. 

இந்த மறுகட்டமைப்பு பணிகளுக்கு என செலவிடப்படும் தொகை மிகப்பெரியது. கற்பனை செய்து பார்க்க முடியாததாக இருக்கிறது.

எமரால்ட் பச்சை வண்ணம், பசுமையான புல்வெளிகள், தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ஜன்பத் வரை நீளும் மேன்மையான கட்டிடக்கலையின் அடையாளம், எல்லாவற்றிலும் மேலாக நம்முடைய பாராளுமன்றம் அழிக்கப்படும் அல்லது மாற்றப்படும். நம்முடைய கலாச்சாரத்தின் பெரும் பங்கு அழியப் போகிறது அல்லது அதன் இடத்தில் வேறொன்று வரப் போகிறது. 

இந்த புது கட்டமைப்புகளுக்கென எந்த வரலாறும், எந்த கூட்டு நினைவுகளும் இருக்காது. காலனிய அதிகாரம் தோற்ற, இந்திய விடுதலை போராட்டம் வென்ற போர்களை பற்றி அது நம்மிடம் பேசாது. அரசின் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறித்து நம்மிடம் பேசாது.

அரசியல் உண்ணாவிரதங்கள், கொண்டாட்டங்கள், குடும்ப சுற்றுலாக்கள், பாராளுமன்ற புல்வெளியில் நடந்த காதலர் சந்திப்புகள் என பாராளுமன்ற முற்றத்திற்கு இருந்த எந்த நினைவுகளும் இனி இருக்காது. தனிப்புகழுக்கு ஆசைப்படும் ஆளும் வர்க்கம், நம்முடைய (பல குறைகளோடு இருந்த) ஜனநாயக-கடந்த-காலத்தை மறக்கச் செய்வதையே இது காண்பிக்கிறது. 

அதிகாரம் தலைக்கேறியிருக்கும் ஆளும் வர்க்கம், இதுவும் கடந்து போகும் என்பதை மறந்துவிடுகிறார்கள். கவிஞர் ஷெல்லியின் ஓஸிமண்டியாஸ் (Ozymandias) எனும் கவிதை ஒன்று உள்ளது. நம்மில் பலர் இதை பள்ளியில் மனப்பாடம் செய்திருக்கக் கூடும்.

ஒரு முன்னாள் அரசரின் சிலையில் மிஞ்சியவை, பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பதை பற்றிய கவிதை அது. அரசனின் சிலைக்கு கீழே, “என் பெயர் ஓஸிமண்டியாஸ், அரசர்களுக்கெல்லாம் அரசன்” என்று செதுக்கப்பட்டிருக்கும். வருடங்கள் போகப் போக அரசரின் அடையாளமாக, அந்த சிலையின் அடையாளமாக எதுவுமே இருக்காது. அதிகாரத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் யோசிப்பதில்லை. அதிகாரம் அப்படி ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது. 

வரலாற்றில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் அவர்களுடைய ஆசையாக இருக்கிறது. இதற்காக ஒரு  ‘புதிய’ வரலாற்றை, ஒரு  ‘புதிய’ நாட்டில்,  ‘புதிய’ கட்டமைப்புகள் வழியே இயற்ற முயற்சிப்பார்கள். இதற்கு முன் அதிகாரத்தில் இருந்தவர்களின் வேறுபட்ட வரலாற்றை அழிக்க முயற்சிப்பார்கள். 

பழைய வரலாற்றின் இடத்தில் ஒரு புதிய வரலாறு வர முடியுமா? வரலாறு என்பது தோலால் செய்யப்பட்ட காலணி அல்ல. ஒன்று பழையதாகிவிட்டது என்றால் புதிதாக வேறொன்றை வாங்க. வரலாறு என்பது எல்லையில்லாத எதிர்காலத்திற்குள் நுழையும் சிந்தனைகளின், நினைவுகளின் போர்க்களம். சில நினைவுகள் முட்டிக்கொள்ளும், சில நினைவுகள் ஒன்றையொன்று விழுங்கும்.

நமக்கு அத்தனையும் நினைவிருக்கும், ஏனென்றால் வரலாறு பன்மையானது. விடுதலைக்குப் பிறகான வரலாற்றை நினைவுகூரும் போது எது நினைவுக்கு வருகிறது? விடுதலை வந்துவிட்டதை குறித்த அந்த நள்ளிரவு வேளையில், இப்போது பாராளுமன்றமாக இருக்கும் அப்போதைய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில்,  ஜவஹர்லால் நேரு தன்னுடைய ‘விதியோடு ஒரு சந்திப்பு’ எனும் உரையை நிகழ்த்தியது.

நேருவின் தனித்தன்மையான, நேர்த்தியான பாணியில்  ஒப்பிடவே முடியாத ஒரு மொழியில் இருந்த உரை, உலகிலேயே பிரபலமான உரைகளில் ஒன்று. பல தலைமுறைகள் ஆசைப்பட்ட, போராடிக் கேட்டவிடுதலையை வரவேற்ற வேளையில், அவர் வார்த்தைகளில் உற்சாகமும், நம்பிக்கையும் இருந்தன. 

ஆனால், அதே சமயம், விடுதலை நமக்கு ரத்தம் உடுத்திதான் வந்தது என்பதையும் அவர் வேதனையோடு அறிந்திருந்தார். விடுதலைக்காக இந்தியா கொடுத்த விலை – பிரிவினை. ஆங்கிலேயர்களின் கொடிக்குப் பதிலாக மூவர்ண கொடி பறப்பதற்கு முன்னரே உண்டான வன்முறைதான் விடுதலையின் பலவீனமாக இருந்தது.

நேரு, பஞ்சாபிலும், டெல்லியிலும் கொலைகள் நடந்த இடங்களில் இருந்து வன்முறையில் ஈடுபட வேண்டாம் என மக்களிடம் பேசினார். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என உறுதியளித்தார். பாகிஸ்தான் சென்ற இஸ்லாமியர்களை திரும்பி வரச் சொன்னார். சுதந்திர இந்தியாவிற்கு இடைக்கால பிரதமராக இருந்த நேருவால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், அவர் அங்கே தன் மக்களுடன் நின்றார். 

லாகூர் அருகே ஷீகாபுரா எனும் இடத்தில், ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு ஒரு கலவரம் வெடித்தது. பத்தாயிரம் இஸ்லாமியர்களும், பத்தாயிரம் சீக்கியர்களும் இந்துக்களும் இருந்த அப்பகுதியில், அச்சமூகங்களுக்கு இடையே ஒரு பெரிய கலவரம் மூண்டது. இருபத்து நான்கு மணி நேரம் கழித்து, ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக சீக்கியர்களும் இந்துக்களும் கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். நகரின் சில பகுதிகள் பற்றி எரிந்தது. இந்த வன்முறையை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. சீக்கியர்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல அஞ்சி, அடிப்படை வசதிகள் இருக்கும் குருத்வாராக்களுக்கு செல்கின்றனர் என ஒரு செய்தியாளர் எழுதினார். 

மக்களின் கைகள் கால்கள் வெட்டப்பட்டிருந்தன, சிலரின் முன்னங்கைகள் கருக்கப்பட்டு, அவற்றை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. குழந்தைகள், சிறு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்தனர். சில நாட்கள் கழித்து இந்த இடத்திற்கு வந்த நேருவால், ரத்தத்தின், எரிந்த தோலின் நெடியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

அதீத மன அழுத்தத்தில், “பஞ்சாபில் நடந்து கொண்டிருப்பவைக்கு நான் நேரடி காரணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், என் மக்களுக்காக நான் ஏற்றிருக்கும் பொறுப்பை ஒரு போதும் கைவிட மாட்டேன். என்னால் முறையாகப் பொறுப்போடு நடந்துகொள்ள முடியவில்லை என்றால், நான் இருக்கும் இடத்தில் இருக்க, எனக்கு தகுதி இருக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது” என மவுண்ட் பேட்டனுக்கு கடிதம் எழுதியிருந்தார். 

மக்களின் தேவைகள் கேட்டுத் தெரிந்து கொண்டு, மக்களுடைய கொண்டாட்டத்தில் மட்டுமல்ல துக்கத்திலும் பங்கேற்றார், நேரு எனும் மனிதர். புதிதாக விடுதலையடைந்திருந்த குடியரசை அழித்துக் கொண்டிருந்த விதியை கட்டுப்படுத்த முடியாத தலைவராக இருந்ததற்காகவும் அவர் வேதனைப்பட்டார். தன்னுடைய குறைகளை கண்டுகொள்ள தவறாத இந்த மனிதனை நாம் எப்படி மறக்க முடியும்? தன்னுடைய சாதனைகளை தம்பட்டம் போட்டுக்கொள்ள நினைக்காத ஒருவர் அல்லவா அவர். நேரு மட்டும் தான் அரசியல் கேலிச்சித்திரம் வரையும் ஒருவரிடம், “சங்கர், என்னையும் விட்டு வைக்காதே” என்று சொல்ல முடியும். 

இன்று,  அரசியல் கார்டூனிஸ்டுகள் கேலியாக விமர்சனத்தை சொன்னாலே,  சிறையில் அடைக்கப்படுவார்கள். வரலாற்றிலும், இடம்-சார்ந்தும், சில தலைவர்களை ஒதுக்க முடியாது என்று வரலாறு நமக்கு சொல்கிறது. அவர்களை அப்ராப்ரியேட் செய்யவும் முடியாது. நேரு அவர்களில் ஒருவர். 

பழமையானவற்றின் மீது இருக்கும் ஈர்ப்பு! 

நாம் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளவில்லை என்றால், நம் முன்னோர் விழுந்த அதே வலைகளில் நாமும் வீழ்வோம். இப்போது இருக்கும் அரசு, முன்னோர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் கொள்வோம். புது அதிகார அமைப்புகள், பழங்கால இந்தியாவையும், நவீன இந்தியாவையும் இணைக்கும் பாலமாக இருக்கும் என திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. பழங்கால இந்தியாவின் பெருமை பேசும் கதைகள் இந்து வலது சாரியின் ஆதரவாளர்களை அடிமை நிலையில் வைத்திருக்கிறது. ஒரு காலனியாதிக்க அரசு உருவாக்கிய இந்தியாவின் பிம்பத்தை தான் அவர்கள் ஏற்றுக் கொண்டு கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. 

இந்தியர்கள் முன்னெப்போதும் பார்த்திராத ஆட்சி வகையாகவே ஆங்கிலேயர்களின் அரசு இருந்தது. நவீனத்திற்கு – முந்தைய ஆட்சியாளர்கள் நாத்திகவாதிகளுக்கு வரிகள் விதித்தார்கள். அதிகாரத்தில் இருக்கும் குழுவினரின் மதத்திற்கு தனி நபரை மாற்றினார்கள். ஆனால், நவீன அரசுகள் செய்ய நினைப்பது போல மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கட்டுப்படுத்த அவர்கள் முயற்சித்தது இல்லை. 

நவீனத்தின் தொடக்கமாக இருந்த ஆங்கிலேய அரசு, இந்தியர்களின் அரசியல் மற்றும் பொருளாதார விதியை கட்டுப்படுத்த நினைத்தது மட்டுமல்லாமல், இந்தியர்கள் தங்களை (இந்தியர்களை) குறித்து என்ன நினைக்கிறார்கள், தங்கள் வரலாற்றையும் நிகழ்காலத்தையும் எப்படி புரிந்து கொள்கிறார்கள், எதிர்காலம் எப்படி இருக்கும் என நினைக்கிறார்கள் என அத்தனையையும் கட்டுப்படுத்த நினைத்தார்கள். இதற்கு உதவ பல அறிவுஜீவிகளை கையில் வைத்திருந்தார்கள். 

இந்தியா ஒரு ஆன்மீக நாடு,  நவீன பொருள்முதல்வாத நாடுகளுடன் ஒப்பிடும் போது குழந்தை போன்றது எனும் பிம்பத்தை பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மானிய ரொமாண்டிக்குகள் (German romantics) உருவாக்கினார்கள். 19 ஆம் நூற்றாண்டின் தத்துவ அறிஞர் ஜியார்ஜ் வில்ஹெம் ஃப்ரெட்ரிக் ஹெகல் ஜெர்மானிய ரொமாண்டிக்குகளிடம் இருந்து கிழக்குலக நாடுகள் மீதான ஈர்ப்பை பெற்றார். ஆனால், ரொமாண்டிக்குகளின்  ஊகங்களை எல்லாம் அழிக்க முயற்சித்தார். தத்துவம், மதம் மற்றும் கலை, முறையே, கிழக்குலகில், அதாவது பெர்சியா, சீனா, எகிப்து, இந்தியாவில் தான் தோன்றியது என்ற ஹெகெல், இந்தியா எப்போதுமே நிலையாக இருந்தது என்று தான் சொன்னார். தேங்கியிருந்தது எனும் வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை, ஆனால்,அவர் வாதத்தின் மையமாக இருந்தது அது தான். 

ஆய்வாளர்கள், மத பிரச்சாரகர்கள், வணிகர்கள், வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவை கைப்பற்றியதும், இந்தியா எனும் கவர்ச்சியான பிம்பம் குறித்து எல்லாம் அறியப்பட்டதும், இந்தியா உலகிற்கு அளிக்க ஒன்றுமே இல்லை என்பது தெளிவானது என்று அவர் சொன்னார். இந்தியாவின் பாரம்பரியம் கடந்த காலத்தை குறித்தது; அது தத்துவம், அறிவியல் எனும் நிலைகளை எட்டவே இல்லை. தத்துவமும், அறிவியலும் உண்மையிலேயே ஐரோப்பாவின் சாதனை தான்; பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜெர்மனியில் அது உச்சக்கட்டத்தை அடைந்தது; அதன் சிறப்பு பிரதிநிதியாக ஹெகெல் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது.  

ஹெகெலின் இந்தியா குறித்த அபிமானம் இரண்டு காரணங்களால் வடிவமைக்கப்பட்டது . 1) அவர் படித்த இந்தியவியல் அறிஞர்களுக்கு ஹெகெல் அளித்த எதிர்வினை. 2) வேதங்கள் உட்படும் நான்கு புனித நூல்களின் தொகுப்புகளோடு இருந்த விவாதங்கள் குறித்த அவருடைய அறியாமை.

சர்வாகா, சம்க்யா, பௌத்தம் மற்றும் சமணம் ஆகிய தத்துவங்கள் வேதங்களின் தார்மீக அதிகாரத்தை நிராகரித்தன. பக்தி இயக்கம், பிராமண அதிகாரத்திற்கு சவால்விட்டது. கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த நாகர்ஜூனா போன்ற பௌத்த தத்துவ அறிஞர்கள் உலகிற்கு பகுத்தறிவு சார்ந்த சௌகரியமான ஒரு தத்துவத்தை கொடுத்தார்கள். 

ஆனால், ஐரோப்பிய இந்தியவியலாளர்கள் / ஓரியண்டலிஸ்டுகள் மக்களின் வாழ்க்கை பழக்கங்களில் இருந்தும், சாதி தீண்டாமையினால் இருந்த போராட்டங்களில் இருந்தும் ஒரு சுருக்கமான ஆன்மீகமான மேல் சாதி இந்து மதத்தை மட்டுமே பிரித்து எடுத்துக் கொண்டார்கள். பழங்கால இந்தியாவின் இலக்கியங்களை மட்டுமே வைத்து, தத்துவம் இந்தியாவில் பிறந்திருந்தாலும், தத்துவம் அங்கிருந்து இடம் பெயர்ந்து கிரேக்கத்திற்கு சென்ற பிறகு இந்தியா மந்தமாகவே இருந்தது என்கிறார் ஹெகல். 

இந்தியாவிற்கு என ஒரு தத்துவமும் இருக்கவில்லை. அத்தனை சமூகங்களின் ஆன்மாகவும் இருப்பது தத்துவம் தான் என்று ஹெகெலுக்கு தெரிந்திருந்தது; ஒரு நாட்டிற்கு தத்துவம் மறுக்கப்பட்டால், அந்நாட்டிற்கு வரலாறு மறுக்கப்படுகிறது என்று பொருள். அவரை பொறுத்தவரையில், இந்தியாவின் வரலாறு என்பது ஐரோப்பாவின் முன் – வரலாறு தான். ஆசிய ராஜ்ஜியங்களின் விதி ஐரோப்பியர்களுக்கு உட்பட்டு போவது மட்டுமே. 

தன் வாழ்க்கையின் முடிவு வரை, இந்திய சமூகத்தை பார்த்து ஹெகெல் ஆச்சரியப்பட்டுக் கொண்டே தான் இருந்தார் என்றாலும், அவருடைய நாட்களில் இந்தியாவை வெறுப்போடு நிராகரிக்கவே செய்தார். பழங்கால இந்தியாவின் வீழ்ச்சி குறித்த அவருடைய சித்தாந்தம், காலனியாதிக்கத்தை நியாயப்படுத்தியது. இந்தியா அழிவை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் அதை காப்பாற்ற வேண்டிய சூழல் இருந்தது என்றார். இந்திய அறிவுஜீவிகள் மற்றும் தேசியவாதிகள் இந்தியாவின் கடந்த காலத்தை போன்றதொரு பெருமை நிலையை அடைய வேண்டும் என முயற்சித்ததை ஊக்குவிப்பதாக இது இருந்தது. பழங்கால இந்தியாவின் கலாச்சாரத்தை அளவுகோலாக வைத்து தான், தேசியவாதிகள் தங்கள் நாட்டை மதிப்பீடு மற்றும் அளவீடு செய்து கொண்டார்கள். ஜெர்மானிய ரொமாண்டிக்குகள் மற்றும் ஹெகெல் இந்து மதத்தின் பொற்காலம் , அதைத் தொடர்ந்த வீழ்ச்சி என்றொரு கதையை முன் வைத்ததன் தாக்கம் இன்றும் நீடிக்கிறது. 

வேத பாரம்பரியம் என்றொரு செழிப்பான கருத்தை ஓரியண்டலிஸ்டுகள் (orientalists) சொன்னதை இந்திய அறிவுஜீவிகள் அப்படியே ஏற்றுக் கொண்டது ஆச்சரியமாகவே இருக்கிறது.பார்ப்பன ஆதிக்கத்தின் ஒருங்கிணைப்பால் சமூகத்தில் என்னென்ன விளைவுகள் இருக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. தத்துவங்களில் இருக்கும் பெரிய விவாதங்களையும், அதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களையும் கூட அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. விடுதலை போராட்டத்தில் இருந்து கூட்டு சுயம் மீள்வதற்கு, எழுத்தில் இருந்த மரபு ஒரு நங்கூரத்தை அளித்தது. ஆனால், சுயம் ஆழமாக காயப்பட்டிருந்தது. 

தத்துவ அறிஞர் ஜே.என்.மோஹண்டி, கி.மு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்டான வேதங்கள், பலவற்றை உட்கொண்டது என்றாலும் அனைத்திற்கும் மேலாக, அனுபவ ரீதியிலான நிகழ்வுகளின் வேற்றுமைகளுக்கு அடிப்படையாக இருக்கும் “ஓருயிர்” அல்லது “அனைத்தும் ஒன்றே” எனும் சித்தாந்தம் குறித்த தேடலுக்கு பிரதிநிதியாகவும் இருக்கிறது என்றார். இந்த கருத்திற்கு தத்துவ ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேதாந்தம் எனும் சிந்தனைப் பள்ளியில், சுயத்தின் இயல்பு குறித்து பல விவாதங்கள் நிகழ்ந்தன. அதற்கு வெளியே, முக்கியமான பாரம்பரியங்கள் வேதாந்தத்தின் ஆதிக்கத்தை எதிர்த்தன. 

உபநிடத காலத்தின் முடிவில் (கிமு 560), பௌத்தத்தை தோற்றுவித்த கௌதமா பிறந்தார். பார்ப்பன வர்க்கம், சடங்குகள் மற்றும் அந்நாட்டின் மக்களையே சமூகங்களில் விளிம்பிற்கு தள்ளிய சாதி அமைப்பிற்கு பெரும் சவாலாக இருந்ததனால் பௌத்தம் அரசியல் ரீதியில் மிக முக்கியமானதாக இருந்தது. சிகாகோவில் மதங்களுக்கான பாராளுமன்றத்தில், விவேகானந்தர் ஆற்றிய மிகப் பிரபலமான உரையில், வேதாந்தத்தின் பெரிய ஆன்மீக பணியை பௌத்தம் செய்து முடித்தது என்றார். ஒரு குறுகிய காலத்திலேயே, இந்து மதத்தின் எட்டாவது அவதாரமாக புத்தர் பார்க்கப்பட்டார். பெருவாரியாக பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியத்திற்கு சவால்விட்ட பௌத்தத்தின் விமர்சக முனை, மழுங்கடிக்கப்பட்டது. அது எச்சரிக்கைக்குரியதாகவே இருந்தது. 

இந்தியவியலாளர்களும், தேசியவாதிகளும் விமர்சக தொனியில் இருக்கும் பகுத்தறிவு தத்துவப்பள்ளிகளை ஒதுக்கி வைக்கிறார்கள் என்பது குறித்து யோசிக்க வேண்டும். ஒருவேளை, பகுத்தறிவான, பொருள்முதல்வாத, அனுபவம் சார்ந்த , நாத்திகமான தத்துவப்பள்ளியான சர்வக போன்றவற்றுக்கு இந்திய பாரம்பரியத்தை வடிவமைப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தால், ஆன்மீகம் மற்றும் பொருள்முதல்வாதம் எனும் இரு வேறு பிரிவுகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இந்தியா தப்பித்திருக்கும். 

இந்திய சமூகம் கவர்ச்சிகரமானது, (பழங்கால இந்தியா மீதான ஈர்ப்பின் காரணமாக) இந்தியா ஆன்மீகமானது என்றொரு பிம்பத்தை உருவாக்குவது ஒரு சமமான எதிர்காலத்தை இந்தியாவிற்கு உருவாக்க உதவாது. இனவாதம், ஆணாதிக்கம், சாதியம் என பல பாகுபாடுகள் இருக்கும் இந்தியா ஆன்மீகம் எனும் அநியாய உறைக்குள் திணிக்கப்பட்டிருக்கிறது. 

ஆன்மீகத்தால் கவரப்பட்டிருக்கும் இந்தியா அதன் பிற பாகுபாடுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஆன்மீகத்தை பொது தத்துவமாக உயரிடத்தில் வைப்பது சமூகத்தின் அதிகாரங்களில் இருந்தும் ஒடுக்குமுறைகளில் இருந்தும் நம்மை திசை திருப்புகிறது. அதிகார படிநிலைகளை சுட்டிக் காட்டவும் பாகுபாடுகளை சரி செய்யவும் அது உதவுவதில்லை. இந்தியாவின் இன்றைய அரசியலில் விளைந்த முக்கியத்துவங்களிடம் தான் நம்மை இட்டுச் செல்கிறது.

இல்லாமையில் இருந்து விடுதலையும், கருத்துச் சுதந்திரத்தையும் மக்களுக்கு அளிக்க ஆளும் வர்க்கம் விரும்புவதில்லை. அதிகாரத்தை குறிக்கும் கட்டமைப்புகளை உருவாக்குவதில் தான்  கவனம் செலுத்துகிறது. இது தான் அவர்களுக்கு கர்வத்தை கொடுக்கிறது. இதுவும் மறைந்து போகும். ஓஸிமண்டியாஸின் கதையை டெல்லி ஆட்சியாளர்கள் படிக்க வேண்டிய நேரம் இது.

(www.thewire.in இணையதளத்தில் நீரா சந்தோக்கி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்