Aran Sei

ஜெர்மனியில் மீண்டும் உயிர்த்தெழும் ஹிட்லர்

ஹிட்லர் வீழ்ந்து விட்டான்! நாஜியிசம் ஒழிந்து விட்டது! என்று நினைப்பவர்களுக்கு, ஜெர்மனியைச் சேர்ந்த இந்தப் பெயர் வெளியிட விரும்பாத பல்கலைகழக மாணவரும், பாசிச எதிர்ப்பு இயக்க அமைப்பின் போராளியுமான ஒரு இளைஞனின்  கட்டுரை  ஒரு எச்சரிக்கை.

“நான் நியோநாஜிகளுக்கு மத்தியில் வாழ்கிறேன், அது அச்சமூட்டுவதாக உள்ளது”

மீபத்தில் கிழக்கு ஜெர்மனியின் செம்னிட்ஸ் நகரில் நடந்த இனக் கலவரம் மிதக்கும் பனிக்கட்டியின் முகடு மட்டும்தான். அடியில் மண்டிக்கிடப்பவை ஓராயிரம்.

நான் செம்னிட்ஸ் நகருக்கு மிக அருகில் உள்ள சாக்சனி நகரில் வாழும் ஒரு பல்கலைகழக மாணவன். பாசிச எதிர்ப்பு இயக்க உறுப்பினர். நீண்ட காலமாக நான் ஜெர்மனியின் வலதுசாரி தீவிரவாதத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டேன். நான் இங்கு வருவதற்கு முன் சாக்சனி பற்றி எனக்குத் தெரியாது. இயல்பாக பாசிச எதிர்ப்பு இயக்க உறுப்பினர் ஆனேன். இதுவரை உண்மையில் நேரடியாக ஒரு நாஜியையோ, இனவெறியாளனையோ சந்தித்ததில்லை..

இனவாத பேரணி
தொடர்ந்த ஊடக விவாதங்களும் மற்ற செய்திகளும் இதே மக்கள் ஊர்வலத்தில் சென்றவர்களின் நல்லெண்ணத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் மாற ஆரம்பித்தன

நான் பெர்லின் நகரில் பிறந்து வளர்ந்தவன். நிறத்தைப் பற்றியோ (வெள்ளையாக இருக்க வேண்டும்), பெயரைப் பற்றியோ (ஜெர்மானிய பெயராக இருக்க வேண்டும்) கவலைப்பட்டதில்லை. பிரான்சு நாட்டைச் சேர்ந்த எனது தாத்தா நேச நாடுகளின் விமானப்படையில் பணியாற்றியதால் இங்கு வர நேர்ந்தது. எனது தாய் மேற்கு பெர்லினில் பிறந்தவர். அப்போது அது  ஜெர்மன் ஜனநாயக குடியரசின் மையத்தில் இருந்த மேற்கத்திய தீவாக இருந்ததால் மாற்றுக் கருத்து உடையவர்களுக்கும், அறிவுபூர்வமாக எதிர்க்குரல் எழுப்புபவர்களுக்கும் அச்சப்பட தேவையில்லாத இடமாக  இருந்தது‌.

நான் நீண்ட காலமாக ஜெர்மனியை கிழக்கு மேற்கு என பிரித்து பார்ப்பது பற்றி சிந்தனை செய்ததில்லை. பெர்லின் சுவரை இடித்தததற்கு பிறகு பிறந்த நான் அதிகமாக மேற்கத்திய அரசியல் கண்ணோட்டத்துடனே வளர்ந்தேன். பிறகு நான் எனது . மாறுபட்ட எண்ணங்களையும், ஜெர்மனி ஒருங்கிணைப்பை எவ்வாறு கையாள்கிறது என்பது பற்றியும் விமர்சன பார்வையை வெளியிட துவங்கினேன்.

நான் எந்த இடத்திலும் எந்த காலத்திலும் எவ்வகை பாகுபாடு காட்டுவதையும் எதிர்க்கிறேன். ஆனால் இந்த நகரில் அதற்கு இடமில்லை‌. வெறும் பாடப்புத்தகத்தில் ஜெர்மனியின் வரலாற்றைப்  படித்துவிட்டால் போதும் பாசிசத்தையும், தேசியவாதத்தையும்  ஜெர்மனி  மறுப்பதாக  ஏற்றுக் கொள்ள முடியுமா? உண்மை இங்கே அப்படி இல்லை.

தீவிரவாத பெகிடா (Pegida)  இயக்கம் திடீரென தோன்றி, 20,000-க்கும் மேற்பட்டோர் ட்ரெஸ்டன் நகர தெருக்களில் இஸ்லாமியர் வெறுப்பு மற்றும் பிற இனவாத முழக்கங்களயும் எழுப்பிச் சென்றனர். அது இம்மக்களுக்கு முதலில் அதிர்ச்சியாகவே இருந்தது.. தொடர்ந்த ஊடக விவாதங்களும் மற்ற செய்திகளும் இதே மக்கள் ஊர்வலத்தில் சென்றவர்களின் நல்லெண்ணத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் மாற ஆரம்பித்தன.  பெகிடா இது போன்ற ஊர்வலங்களை பல்வேறு நகரங்களில் நடத்தியது.  அதன்பின் அயல்நாட்டவருக்கு அடைக்கலம் தருவது பற்றிய பிரச்சினை  உருவெடுத்தது.  அகதிகள் வருகையை அனுமதிப்பதில் தீவிர கட்டுப்பாடுகளை கொண்டுவருவது பற்றிய விவாதங்கள் ஊடங்களில் ஆரம்பித்தன.  இது பெகிடாவிற்கு உற்சாகம் அளித்தது.

பிறகு ‘ஜெர்மனிக்கான மாற்று’ (Alternative for Germany)  என்ற புதிய தேசியவாத இனவாத கட்சி வந்தது. இதனால் பிற அரசியல் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகளை இழந்தன. அகதிகள் பிரச்சினை 2017 தேர்தலில் முக்கிய பிரச்சினையாக  முன்வந்தது. ‘ அடைக்கலச் சட்டம் ‘கடுமையாக்கப்பட்டது. இதன் எதிர் வினையாக ‘கலாச்சாரத்தை வரவேற்போம்’ என்ற இயக்கம் தோன்றி அகதிகளை வரவேற்றது. இன பாகுபாடு காட்டுவோர் மீது நடவடிக்கைகள் கூட எடுக்கப்பட்டன. ஜெர்மானியர்கள் நெருக்கடியான நேரத்தில் சகிப்புத்தன்மையோடும் அன்போடும் இருப்பது போன்ற காட்சிகள் ஊடகத்தில் அதிகமாக வெளியிடப்பட்டன.

ஜெர்மனிக்கான மாற்று
ஜெர்மனிக்கான மாற்று உறுப்பினர்களின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்

ஆனால் இதே நேரத்தில் மறுபுறம் அகதிகள் முகாம்கள் மீதும் வெளிநாட்டவர் மீதும்  காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடந்ததை அனைவரும் மறைத்து விட்டனர். 2015-லிருந்து சுமார் 4,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்தன. பெட்ரோல் குண்டு வீச்சு, பேஸ்பால் மட்டைத் தாக்குதல் மற்றும் நவீன ஆயுதங்களுடன் நவீன பாசிஸ்டுகள் குழந்தைகளின் அறையைக் கூட தாக்கிய நிகழ்வுகள் நடந்தன. 2016-ல் ஒவ்வொரு நாளும் இது போன்ற சம்பவங்கள் குறைந்தது பத்து இடங்களில் நடந்தது என்பதை அரசு அதிகார பூர்வமாக பதிவு செய்தது.

இந்தக் கொடூரத் தாக்குதல் அன்றாட வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தின என்பதை இங்கு வந்து வாழ்ந்து பார்த்தால்தான் புரியும்.

  • ஒரு அடு மனையில் ஒரு பெண், வெளிநாட்டவர் பற்றி தவறாக பேசுகிறார். அதை அந்த அடுமனை பெண்மணி ஆமோதிக்கிறாள்.
  • ஒரு நடத்துனர் ட்ராமில் கறுப்பினத்தவரின் டிக்கெட்டுகளை மட்டும் பரிசோதிக்கிறான்.
  • இடதுசாரி கலாச்சார அமைப்புகள் மீது  கொடிய தாக்குதல், கல் வீச்சுக்கள் நடை பெறுகின்றன.
  • பொது மக்களோ தங்கள் பங்கிற்கு கறுப்பின மக்கள் தாக்கப்படும் போது மவுனம் சாதிக்கின்றனர். இனவாதமும் தேசியவாதமும் இங்கே கைகோர்த்துக் கொள்கின்றன.

இளைஞர் அமைப்புகளும், சமூக செயற்பாட்டாளர்களும் இங்கு மிகக் குறைவே‌. தீவிரவாத வலதுசாரிகளுக்கெதிராக மாற்றுச் சிந்தனையாளர்கள் வாழ்வது மிகவும் அச்சம் தருவதாக உள்ளது. கிராமப்புறங்களிலோ நீங்கள் தீவிரவாதத்திற்கெதிராக பேசுவதற்கு ஒரு கூட்டத்தைக் கூட்டக்கூட மக்கள் ஆதரவு தருவதில்லை. அந்த நாஜி கிராமங்களில் யாரும் வாழ விரும்புவதில்லை. யாரோ ஒரு சிலர் விரும்பாதததாலேயே நீங்கள் யாராக இருந்தாலும் எங்கிருந்து வந்திருந்தாலும் உங்கள் வாகனங்களின் டயர்களை பஞ்சராக்கும், வீடுகளை கல்வீசித்தாக்கும் இத்தகைய இடங்களை விட ஜெர்மானிய கடவுச் சீட்டுடன் நகரின் பிற பகுதிகளில் வாழவே விரும்புகின்றனர். எல்லோரும் இங்கே நிம்மதியாக வாழ முடியாது. வேலை உத்தரவு உள்ளவர்களுக்கும், சலுகை பெற்ற அகதிகளுக்கும் மட்டுமே இங்கே தங்க வீடு கிடைக்கும்.

தற்போது நாஜிக்களால் தாக்கப்படும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் செம்னிட்ஸ், ட்ரெஸ்டனுடன் நின்று விடவில்லை. அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.  தேசியவாத,  இனவாத முழக்கங்கள் அரசியல் லாபத்திற்கும், ஊடகங்களின் வருமானத்திற்கும் உதவி செய்வதால் அவை பெரும் அளவில் அனுமதிக்கப்படுவதும், அதன் குற்றச் செயல்கள் விசாரணைக்குக் கூட உட்படாமல் போவதும் நடக்கிறது. இதுவே நவீன பாசிசம் பல்கி பெருக காரணமாக உள்ளது. ஹிட்லருக்கு முந்தைய காலத்தை நாங்கள் வெறும் வரலாற்று புத்தகங்களிலேயே படித்திருக்கிறோம்.

நான் பெயரையும், முகத்தையும் நான் வேலை செய்யும் இயக்கத்தைப் பற்றியும் வெளியிட முடியும்.  ஆனால் அதனால் அந்தப் பகுதி மக்கள் முழுவதும் பாதிக்கப்படுவார்கள்.  ஒரு சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு இனக்கலவரம் நடக்க இருப்பதாக நாங்கள் அறிந்தோம். அங்கு சென்ற எங்களை ஒரு நாஜிக்கும்பல் அடையாளம் கண்டு எங்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கோஷம் எழுப்பினர். ஆனால் எங்கள் நாய்களைப் பார்த்ததும் ஓடி விட்டனர். இது சாதாரண சிறிய விஷயம்தான்‌ ஆனால் நீங்கள் ஒரு மிகப் பெரிய அரக்கனுடன் நேரில்  போரிடும் போது இது கூட பேரச்சம் தரக்கூடியதாகும்.

கட்டுரையை எழுதியவர் ஜெர்மனியின் சாக்சனியில் வாழும் ஒரு மாணவர், பாசிச எதிர்ப்பு செயல்பாட்டாளர்

கட்டுரை, படங்கள் – நன்றி : https://www.theguardian.com/
மொழியாக்கம் : நாராயணன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்