Aran Sei

நீட் மரணங்கள் – கூட்டு மனசாட்சியின் தோல்வி – சீ.நவநீத கண்ணன்

மதுரையை அடுத்த தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த நீட் தேர்விற்கு தயாராகி கொண்டிருந்த ஜோதி ஸ்ரீ துர்கா என்ற 19 வயது மாணவி, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதே மாதிரியான செய்திகள், பெயர் மற்றும் ஊர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு வெளிவருவது, இந்த வாரத்தில் இது இரண்டாவது முறை; இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது முறை; காரணம் ஒன்றுதான்- நீட் தேர்வு.

உலகமே எதிர்கொண்டு திணறிவரும் இந்த கடினமான பெருநோய்த் தொற்று பேரிடர் காலத்திலும், இந்தியாவில் சராசரியாக நாளொன்றிற்கு 1 லட்சத்திற்கு மேல் தொற்று பாதிப்புகளும் 1000-க்கு மேற்பட்ட தொற்று மரணங்களும் நடைபெறுவதற்கு மத்தியிலும், NEET – JEE நுழைவுத்தேர்வுகளை நடத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தேர்வைத் திணித்ததன் வாயிலாக, மாணவர்களிடையே மன அழுத்தத்தை உருவாக்கி இன்னொரு மாணவரை நீட் என்ற கொடிய வைரசிற்கு இறையாக்கி இருக்கிறோம்‌.

“எல்லாருமே என்கிட்ட ரொம்ப எதிர்ப்பார்த்தீங்க; ஆனா எனக்குதான் பயமா இருக்கு; இது என்னோட முடிவு; யாரும் இதுக்கு காரணமில்ல. I AM SORRY, I AM TIRED”

இவை வெறும் வார்த்தைகள் அல்ல; அந்த மனநிலையை உணர்ந்தவர்களுக்கும் அடைந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும், இதற்குள் ஒளிந்திருக்கும் வலி மிகுந்த அந்த வேதனையை.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த ஆய்வில், 2019-ம் ஆண்டு நடந்த தற்கொலைகளில் 7.4 சதவிகிதம் பேர் மாணவர்கள்; அதில் காதல் விவகாரங்களுக்கு அடுத்த பிரதான காரணமாக இருப்பது தேர்வு தோல்விகளே. ஒரு பள்ளி, கல்லூரி தேர்விலோ தேர்ச்சி அடையாததால், மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதுபோக, ஒரு தேர்வை எழுதும் முன்பே அது தொடர்பாக அவர்கள் எதிர்கொள்ளும் அச்சத்தினாலும் மன உளைச்சலினாலும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் இறுதிகட்ட முடிவிற்கு அவர்கள் நகர்கிறார்கள் என்றால், அது நீட் தேர்வில் மட்டும்தான்.

இந்தியாவில் தொழிற்முறை இளநிலை படிப்புகளுக்கான பிரதான நுழைவுத்தேர்வுகள்:

பொறியியல் படிப்புகள் – 8
கட்டிடக்கலை படிப்புகள் – 2
கலை அறிவியல் படிப்புகள் – 5
சட்டப் படிப்புகள் – 3
வர்த்தகம் சம்மந்தப்பட்ட படிப்புகள் – 4
விவசாயப் படிப்புகள் – 5
மருத்துவக் கல்வி – 1 (கட்டாயம்)

இதில் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் மட்டுமே மரணங்கள் நடக்கின்றன என்றால் இத்தேர்வுமுறையில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது என்று தானே அர்த்தம்.

ஒவ்வொரு நீட் மரணங்கள் நிகழும்போது சில குரல்கள் ஒலிக்கும் “மருத்துவம் மட்டுமே படிப்பு இல்லை; அதைவிடவும் சிறந்த பல படிப்புகள் உண்டு என்பார்கள்”. ஆமாம் உண்மைதான். ஒருவேளை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கும் நீட் போன்ற ஒரு நுழைவுத்தேர்வை கட்டாயமாக்கிவிட்டால்? அப்போது என்ன சொல்லுவார்கள் இவர்கள், “படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை; படிப்பைத் தாண்டியும் சுயதொழில்கள் நிறைய உண்டு” என்பார்களா?

மற்றொரு சாரார் “தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல; அது கோழைத்தனம். மாணவர்கள் வாழ்க்கையில் போராடக் கற்றுக்கொள்ளவேண்டும்; முயற்சியைக் கைவிடக்கூடாது” என்று அறிவுரை சொல்வார்கள். அது உண்மையும்தான். ஆனால் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தற்கொலை என்பது வெறும் தனிநபர் ஆற்றாமை சார்ந்த பிரச்சனை மட்டும் அல்ல; அது சமூகம் சார்ந்ததும் கூட. அதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்பதை நாம் உணரவேண்டும். அதிலும் நீட் மரணங்களுக்கான காரணங்கள் சமூகம் சார்ந்து மட்டும் நின்றுவிடாமல், அதில் நீட் தொடர்பான அரசியல் காரணிகளும் அடக்கம்.

நீட் மரணங்கள் அனைத்தும் வெறும் தற்கொலைகள் அல்ல; நாம் வாழும் சமூகத்தால், அதன் அங்கமாக இருக்கும் அனைத்து அமைப்புகளால் நிகழ்த்தப்படுகிற படுகொலைகள். நாம் கற்கும் கல்வி நம்மை உயர்த்துவதற்கும் நாம் சார்ந்த சமுதாயத்தை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமாக இருக்கவேண்டுமே தவிர, மாணவர்களை இப்படி அச்சமூட்டுவதற்கும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாகவும் இருக்கக்கூடாது. நீட்டிற்கு எதிரான சமூக இயக்கத்தை அரசியல் இயக்கங்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு முன்னெடுக்கவேண்டிய இன்றியமையாத சூழலில் நாம் இருக்கிறோம்.

அனிதா தொடங்கி ஜோதி துர்கா வரை நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான்- “தேசிய அளவில் ஒரே ஒரு தேர்வையும் அதில் கேட்கப்படும் MCQ வகையிலான 180 கேள்விகளையும் மட்டுமே வைத்துக்கொண்டு, எங்களின் 12 ஆண்டுகால பள்ளிப்படிப்பை, அறிவை, திறனை, ஆற்றலை ஆராய்ந்து எடைபோட்டு, எனக்கு மருத்துவராகும் தகுதி இருக்கிறதா என்று தேர்வு செய்வது எப்பேற்பட்ட முட்டாள்தனமான அணுகுமுறை” என்று நம் செவிட்டில் அறைந்தார்போல் கேட்கிறார்கள்; நாமோ சொரணை அற்று, இதையும் பத்தோடு பதினொன்றாக ‘நீட் தற்கொலை’ என்கிற பெயரில் கடந்து செல்கிறோம்.

“தகுதியும் திறமையும் பெறத்தான் ஒருவன் கல்லூரிக்கோ வருகிறான்; ஆனால் பள்ளிக்கோ கல்லூரிக்கோ வரவே தகுதி, திறமை தேவை என்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம்” என்பது தந்தை பெரியாரின் கூற்று. நீட் தேர்வு எவ்வளவு அயோக்கியத்தனமான என்பதை பெரியாரின் இந்த கருத்து எளிதாக விளக்குகிறது.

(கட்டுரையாளர் சீ.நவநீத கண்ணன் மருத்துவம் படித்து வரும் ஒரு மாணவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்