Aran Sei

தமிழக மருத்துவத் துறையை சீர்குலைக்கும் நீட் தேர்வு – சி.நவநீத கண்ணன்

Credit: Deccan Herald

நீட் தேர்வுமுறை நாடுமுழுவதும் அமலாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன, எனினும் நீட் தொடர்பான விவாதங்களும் சர்ச்சைகளும் இன்னும் முடிந்தபாடில்லை. எப்போதும் ஒரு திட்டமோ சட்டமோ எதுவாக இருப்பினும், அது கொண்டு வந்தவுடனே அதன் சாதக-பாதகமோ, பாதிப்போ-பிரதிபலனோ உடனே தெரியவராது. அப்படி தெரிய வருவதற்கு போதிய கால ஓட்டம் தேவைப்படும்.

ஆனால் நீட்டைப் பொருத்தமட்டில் அதை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது முதலே, “இது ஏழை எளிய, சாமான்ய ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் திட்டம்” எனவும், “ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கற்றல் நோக்கத்தை சிதைத்து தனியார் பயிற்சி வகுப்புகளுக்கே வழிவகுக்கும்” எனவும் பல அறிஞர்களும் கல்வியாளர்களும் எச்சரித்தனர். அதைப் பொருட்படுத்தாமல் ஆட்சியாளர்கள் நீட்டைத் திணித்தனர். ஆனால். அதன் ஆக்டோபஸ் கரங்களின் வீரியம் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு கொடுமையானது என்பதற்கான உதாரணம்தான் சமீபத்தில் வெளியான நீட் தொடர்பான அதிர்ச்சியளிக்கக் கூடிய பல தரவுகள்.

1. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தொடர்பான வழக்கு விசாரணையில் ஒரு பதில் மனுவை தமிழக அரசு, நீதிபதிகள் கிருபாகரன்- வேல்முருகன் அமர்வு முன்னிலையில் சமர்ப்பித்தது, அதில் கூறியதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு நீட் தேர்வெழுதி தமிழ்நாட்டில் இருக்கும் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் பயிலும் 3081 மாணவர்களில் வெறும் 48 மாணவர்கள் (அதாவது 1.6%) மட்டுமே தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறாமல் தங்கள் பள்ளிப்படிப்பின் துணை கொண்டும் சொந்த முயற்சியிலும் படித்து, நீட்டில் தேர்வாகி மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள். மீதமிருக்கும் 3033 மாணவர்கள் (98.4%) தங்கள் பள்ளியில் பயில்வது போக கூடுதலாக பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று வந்துள்ளனர்.

அதிலும் ‘கோவை, தர்மபுரி, தூத்துக்குடி உட்பட 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில்’ பயிலும் 100% மாணவர்களும் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயின்றே, தற்போது எம்.பி.பி.எஸ் படிக்கின்றனர்; ஆகவே மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறாமல் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

தனியார் பயிற்சி நிறுவனங்களில் ஒரு வருடம் முழுமையாக பயிற்சி பெற சராசரியாக ரூ.2.5 இலட்சம் முதல் ரூ.5 இலட்சம் வரை பயிற்சிக்காகவும் உண்டி உறைவிடத்திற்கும் சேர்த்து வசூல் செய்கின்றனர். “ஒரு ஏழைக் குடும்பத்து குழந்தையால் எவ்வாறு நீட் பயிற்சி வகுப்புக்கு குறைந்தபட்சம் 2 இலட்சம் ரூபாயேனும் செலவு செய்ய முடியும்” என்பதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டனரா?

இதன்மூலம் நீட் தேர்வால் மருத்துவக் கல்வியென்பது இனிமேல் ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மட்டுமல்லாது, தனியார் பயிற்சி நிறுவனங்களில் செலவு செய்து பயிலாத நடுத்தர நகர்ப்புற மாணவர்களுக்கும் மறுக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறு ஐ.ஐ.டி ஜே.இ.இ (IIT-JEE) போன்ற உயர்கல்வி நிறுவன நுழைவுத்தேர்வுகள் ஏழை, கீழ்நடுத்தர, நடுத்தர குடும்பத்து மாணவர்களை, இரும்பு கதவடைத்து, நுழைவுத்தேர்வு என்கிற பெயரில் அவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுக்கின்றனவோ, அதுபோலதான் நீட் தேர்வால் இனி மருத்துவக் கனவும் இவ்வர்க்கத்தினருக்கு தடுக்கப்படும்; அதைத்தான் நாம் கடந்த 3 ஆண்டுகளாக பார்த்துவருகிறோம்.

அந்த பலம்பொருந்திய கதவை உடைக்க மேற்குறிப்பிட்ட வர்க்கத்தினர் தங்கள் தீர்மானகரமான உழைப்பிற்கும் நம்பிக்கைக்குரிய அர்ப்பணிப்பிற்கும் அப்பாற்பட்டு விடாமுயற்சியுடன் கடுமையாக போராட வேண்டுமென்ற ‘செயற்கையான நிர்பந்தம்’ இயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் பயிற்சி நிறுவனங்களில் இலட்ச கணக்கில் செலவு செய்யும், சி.பி.எஸ்.ஈ (CBSE) கல்விமுறையில் பயிலும் பணக்கார, வசதி படைத்த மாணவர்களுக்கு மருத்துவம் இனி எளிதில் அடையக்கூடியதாக அமையும்; அவர்களுக்கு மட்டுமே ‘அந்தக் கதவைத் திறக்கக்கூடிய திறவுகோல் தனிச்சிறப்பாகக் கிடைக்கப்பெறும். அந்தக் கதவைத் திறப்பதற்கான வல்லமையும் நுணுக்கங்களும் அவர்களுக்கு மட்டுமே கற்றுத் தரப்படும்’.

அதற்கு உதாரணம்தான், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள சி.பி.எஸ்.ஈ பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை:

நீட் தேர்வுக்கு முன் :

2014 – 2015 0
2015 – 2016 0
2016 – 2017 14

 

நீட் தேர்வுக்குப் பின் :

2017 – 2018 611

 

இதன்மூலம் எந்தக் கல்வி முறையில் பயிலும் எந்த வர்க்கத்து மாணவர்கள் நீட்டுக்குப்பின் கணிசமான அளவில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்றும், அதன்மூலம் இந்த தேர்வுமுறை யாருக்கு சாதகமாக உள்ளது என்பதும் பட்டவர்த்தனம் ஆகிறது. அதுமட்டுமல்லாமல் சி.பி.எஸ்.ஈ பள்ளியில் படித்திருந்தாலும் இவர்களிலும் பெரும்பாலானோர் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயின்றே மருத்துவம் சேர்ந்திருக்க அதிக வாய்ப்புண்டு என்பதையும் மேலே சொன்ன புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஆக இந்தியாவின் ஆகச்சிறந்த சி.பி.எஸ்.ஈ பள்ளியில் படிக்கும் மாணவரும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேராமல் நீட்டில் தேர்ச்சி பெற முடியாது என்ற அவலநிலையைத்தான் நீட் தேர்வு முறை நமக்கு அளித்திருக்கிறது.

2. மற்றொரு தரவு சொல்வது: தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பயிலும் மாணவர்களில் 66% (அதாவது 2041 மாணவர்கள்) இரண்டு அல்லது மூன்று முறை தேர்வெழுதியவர்கள்; 34% (1040) மாணவர்கள் மட்டுமே +2 முடித்த கையோடு முதல்முறையிலே நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயிலும் புதியவர்கள்; அதாவது அரசுக் கல்லூரிகளில் பயில்கிற 3 -ல் 2 மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டமுறை தேர்வெழுதி எம்.பி.பி.எஸ் சேர்ந்தவர்கள். அதிலும் ‘தர்மபுரி, கரூர், தூத்துக்குடி’ ஆகிய அரசுக் கல்லூரிகளில் 80% மாணவர்கள் பலமுறை நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்கள் என்பது கூடுதல் தகவல்.

முதல்முறை நீட் தேர்வு எழுதுகிறவர்கள் தங்களுடைய +2 பாடப்படிப்புடன் சேர்த்து நீட் தேர்வுக்கும் ஒருசேர தயாராக வேண்டும்; ஆனால் ஏற்கனவே +2 முடித்தவர்கள் ஒன்று அல்லது 2 ஆண்டு காலம் முழுவதையும் நீட் தேர்வுக்கென்று தனிச்சிறப்பாக ஒதுக்கி அதற்காக மட்டும் செலவு செய்யலாம். இதன்மூலம் ‘சமமற்ற மாணவர்களைச் சமமாக பாவித்து நடத்தும் முரண்பாடான தேர்வுமுறைதான் நீட்தேர்வுமுறை” என்பது புலப்படும்; எனவே நீட் தேர்வால் ஒருபோதும் ‘சமதளப் போட்டியை (Level playing field)’ உருவாக்கமுடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இவ்விரு தரவுகளையும் ஒப்பிட்டு சரிபார்த்தால் (Crosscheck செய்தால்), “அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் தற்சமயம் முதலாம் ஆண்டு பயின்றுவரும் 4731 மாணவர்களில் (3081+1650 முறையே) ‘முதல்முறை தேர்வு எழுதி, தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிலாத மாணவர்’ ஒருவர்கூட இடம் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்பது மிகவும் அதிர்ச்சித்தரக்கூடிய தகவலாகும்.

3. இவ்விரு தரவுகளையும்விட வருத்தத்துக்குரிய மற்றொருமொரு தகவல் என்னவென்றால்: சென்ற 2019-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 17,630 மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர், அதில் 2,557 மாணவர்கள் மட்டுமே நீட்டில் அடிப்படை தகுதி பெற்று தேர்ச்சியடைந்தனர்- ஆனால் அதில் ஒரு மாணவர்கூட அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேரவில்லை; கீர்த்தனா என்ற அரசு உதவிபெறும் பள்ளி மாணவி மட்டும் 453 மதிப்பெண்கள் பெற்று, தனலட்சுமி சீனிவாசன் தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடத்தில் எம்.பி.பி.எஸ் படித்துவருகிறார்.

ஆனால் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் “நாங்கள் 2019-ம் ஆண்டில் மருத்துவத்தில் சேர 500 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை அனுப்ப இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்” என்று கூறினார். துரதிஷ்டவசமாக தமிழக அரசு அளித்த, 2019-ம் ஆண்டுக்கான நீட் இலவச பயிற்சி வகுப்பில் (2,579 மாணவர்கள்) தேர்ச்சி பெற்றவர்களே வெறும் 642 மாணவர்கள் மட்டுமே! – அதிலும் 400 மதிப்பெண்களுக்கு மேல்பெற்றவர்கள் வெறும் இருவர் மட்டுமே!

கொரோனா பேரிடருக்கு முன் ஜனவரியில் அளித்த பேட்டியில், “இந்த ஆண்டும் குறைந்தபட்சம் 500 மாணவர்களை அனுப்ப திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார்; ‘முதலில் 5 நபர்களை அனுப்ப வழிவகைச் செய்யுங்கள்….’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில் 2018-ம் ஆண்டு, அரசுப் பள்ளியில் படித்த 3 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 4 பேர் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். ஆனால் நீட் கொண்டு வருவதற்கு முன்பு 2007-2016 வரையிலான பத்தாண்டுகளில் சராசரியாக 30 அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

இவர்களும் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவம் பயின்ற கடந்த ஆண்டுகளைச் சேர்ந்த அனைத்து மருத்துவர்களும்தான் இன்று சமூகத்தில் ‘சிறந்த மருத்துவர்களாக’ இருக்கிறார்கள். அதனால்தான் மருத்துவத் துறையிலும் பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையிலும் இந்தியாவிலேயே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக தனித்து திகழ்கிறது.

அதற்கு சில உதாரணங்கள்:

இந்த கொரோனா பேரிடரில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், (அதற்கு பரிசோதனைகள் பெருமளவில் செய்யப்படுவதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது), குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது; தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், மற்ற சார்பு நோய்கள் ஏதுமின்றி முழுக்க முழுக்க கொரோனா ஏற்படுத்தும் நிமோனியா மற்றும் மூச்சுத்திணறலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவாக இருக்கிறது; இதைச் சாதித்து காட்டியது, நீட் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அடைந்த, பல ஏழை-நடுத்தர முதல்தலைமுறை பட்டதாரி மருத்துவர்களின் அளப்பரிய அர்ப்பணிப்புதான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர்கள் தான் தற்போது தமிழகத்தின் மருத்துவக்கல்லூரிகளில் முதுகலை பட்ட மேற்படிப்பு மாணவர்களாகவும், துணை-இணை பேராசிரியர்களாகவும் கொரோனா முன்கள வீரர்களாக நின்று கொரோனாவுக்கு எதிரான யுத்தம் புரிகின்றனர். அந்த போரின் களப்பலியாக உயிரையும் கொடுத்துள்ளனர்; நாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தது தமிழகத்தில்தான் என்கிறது அகில இந்திய மருத்துவ கழகம்.

மேலும் பிரசவத்தின் போது ஏற்படும் தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR), சிசுக்களின் இறப்பு விகிதம் (IMR), மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (U5MR/CMR) போன்ற சுகாதார-சமூகநல குறியீடுகள் அனைத்தும் தமிழகத்தில் கணிசமாக குறைந்துள்ளது. இந்தியா 2030-ல் எட்டுவதாக நிர்ணயித்துள்ள இலக்குகளை தமிழகம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1. பிரசவத்தின் போது ஏற்படும் தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR)

இந்தியா இப்போது 1,00,000 உயிர் பிறப்புகளுக்கு 170 இறப்புகள்
இந்தியாவுக்கான 2030 இலக்கு 1,00,000 உயிர் பிறப்புகளுக்கு 130 இறப்புகள்
தமிழ்நாடு இப்போது 1,00,000 உயிர் பிறப்புகளுக்கு 66 இறப்புகள்

 

2. சிசுக்களின் இறப்பு விகிதம் (U5MR)

இந்தியா இப்போது 1000 உயிர் பிறப்புகளுக்கு 37 இறப்புகள்
இந்தியாவுக்கான 2030 இலக்கு 1000 உயிர் பிறப்புகளுக்கு 25 இறப்புகள்
தமிழ்நாடு இப்போது 1000 உயிர் பிறப்புகளுக்கு 15 இறப்புகள்

 

3. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (IMR)

இந்தியா இப்போது 100 உயிர் பிறப்புகளுக்கு 30 இறப்புகள்
IMR தமிழ்நாடு இப்போது 100 உயிர் இறப்புகளுக்கு 16 இறப்புகள்
தமிழ்நாடு இப்போது 1,00,000 உயிர் பிறப்புகளுக்கு 66 இறப்புகள்

 

இந்த போற்றத்தக்க சாதனைகளை தமிழகம் செய்ததற்கான காரணம், கடந்த சில பத்தாண்டுகளாக ‘தரத்தில் குறைவான கல்விமுறை’ என்று தூற்றப்படும் மாநில பாடத்திட்டத்தில் பயின்று, நீட் போன்ற எந்த நுழைவுத்தேர்வுகளும் எழுதாமல் மருத்துவம் பயின்ற சாதாரண குடும்பத்து பின்புலத்தை சேர்ந்த அதிக அளவிலான மாணவர்கள்தான்.

மேலும் இந்த அளப்பரிய சாதனையை செய்ததில் கணிசமான அளவிற்கு, எம்.பி.பி.எஸ் முடித்து, அரசு மருத்துவர்களாக குக்கிராமங்களிலும் மலைப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் (PHC) இரண்டாம் நிலை மருத்துவ மையங்களிலும் (Secondary Healthcare Centers) வேலை செய்து கொண்டு, 50% சேவை உயர்படிப்பு ஒதுக்கீட்டில் (Service PG Quota), முதுநிலை மருத்துவம் சேர்ந்து படித்து முடித்துவிட்டு, மீண்டும் அரசு மருத்துவர்களாகவே வேலையை மேற்கொள்ளும் “சேவை ஒதுக்கீடு” மருத்துவர்களின் பங்கு அலப்பரியது.

1989-ல் திமுக அரசால் கொண்டுவரப்பட்டது இந்த தொலைநோக்குத் திட்டம். முதுநிலை படிப்பிலும் நீட் தேர்வு அமலானபிறகு இந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்துசெய்தது. சமீபத்தில் தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் சங்கம் (TNMOA) சார்பில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் அரசு மருத்துவர்களுக்கான முதுநிலை படிப்பு இடஒதுக்கீட்டை மீண்டும் உறுதிசெய்திருக்கிறது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) 1,000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் (1:1000) என நிர்ணயித்துள்ளது; இந்திய மக்கள் தொகையைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 1,456 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் (1:1456) என்றளவில் உள்ளது. இந்த விகிதம் உ.பி.போன்ற வடமாநிலங்களில் தான் மிகவும் மோசமான அளவில் (1:3767) உள்ளதே தவிர, தமிழ்நாட்டில் இந்த விகிதம் 1: 625 (அதாவது 1000 நோயாளிகளுக்கு 1.6 மருத்துவர்கள்) என்று போற்றத்தக்க அளவில் உள்ளது; இந்த அளவு மருத்துவர் நோயாளி விகிதம் சிறப்பாக இருப்பதென்பது ஸ்கேண்டினேவிய நாடுகளான நார்வே, சுவீடன் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு ஒப்பானதாக பார்க்கப்படுகிறது; அடுத்த பத்தாண்டுகளில் இந்த விகிதம் 1:500 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர “தெற்காசியாவின் மருத்துவச் சுற்றுலா தலைமையிடமாக (Medical Tourism Capital)” சென்னை விளங்குவதும் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து “சிறந்த சுகாதார மாநிலம்” என்ற விருதை தமிழகம் இந்திய அரசிடமிருந்து பெற்று வருவதும் இந்த மருத்துவர்களால்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நம் மாநிலத்தில் இருப்பது போன்று 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்பதும் புதிதாக மேலும் 11அரசு மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டுமுதல் நடைமுறைக்கு வந்து, மருத்துவ மாணவர் சேர்க்கை நடைப்பெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணங்களுள் மிக முக்கியமானவை தகுதி, திறமை; அதாவது நுழைவுத்தேர்வு வைப்பதன்மூலம் தகுதியான திறமையான தரமான மாணவர்கள் மட்டுமே மருத்துவம் பயிலமுடியும் என்ற ஒரு போலி பிம்பத்தை கட்டமைத்தனர்; ஆனால் உண்மையில் நீட்தேர்வுதான் ஒரு அப்பட்டமான தகுதி-திறமை-தரத்திற்கு எதிரான (anti-merit) அமைப்புமுறை; உதாரணமாக, ஒரு ஏழை குடும்பத்து மாணவர் நீட்டில் தேர்ச்சி அடைந்திருந்தாலும், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிடில், குடும்பச் சூழல் காரணமாக தனியார் கல்லூரியில் சேர்த்து படிக்கவைக்க அந்த குடும்பத்திற்கு வசதியிருக்காது; ஆனால் அவரைவிட குறைவாக மதிப்பெண் பெற்ற மேல்தட்டு குடும்பத்து மாணவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர நீட் வழிசெய்யும்; இந்த ஒற்றைக் காரணம் போதும் நீட் தேர்வால் தகுதி உயரம் திறமை கூடும் என்பதெல்லாம் வெறும் வெற்று கண்துடைப்பே.

14 ஆண்டுகள் சி.பி.எஸ்.ஈ கல்வித்திட்டத்தில் படித்துவிட்டு, 1 அல்லது 2 வருடங்கள் தனியார் பயிற்சி நிலையத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து பயிற்சி எடுத்துவிட்டு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர், கிராமப்புறத்தில் மருத்துவ சேவை செய்வார் எதிர்பார்ப்பது எத்தகைய அபத்தமானது.

சாமானிய விளிம்புநிலை ஏழை மாணவர் தகுதி, திறமைகள் இருந்தும் வாய்ப்புகளும் உரிமைகளும் மறுக்கப்பட்டு, மருத்துவக் கனவுகள் சிதைக்கப்பட்டு, கதவுகள் அடைக்கப்படுவது என்பது எப்பேற்பட்ட அக்கிரமம்; இதை அநீதியின் உச்சம் என்று சொன்னால் அது மிகையாகுமா….??

ஆகவே இத்தகைய முரண்பாடுகளையும் சமத்துவமின்மையையும் மட்டுமே தேசம் முழுவதும் கற்பிக்கும், தூக்கிப்பிடிக்கும் இந்த தேர்வுமுறையை ஒழித்துக் கட்ட வேண்டும். தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்காது, நாட்டின் அனைத்து மாநிலங்களும் எதிர்த்து முற்றுமுழுதாக ஒழித்துக்கட்ட வேண்டிய தார்மீக பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது.

மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் எத்தகைய தேர்வு நடத்துவது, எவ்வாறு மாணவர் சேர்க்கை நடைமுறைப்படுத்துவது என்பது அந்தந்த மாநிலங்களின் அதிகாரத்திற்கும் உரிமைக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும்.  மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி 1970களின் அவசர நிலை (எமர்ஜென்சி) காலத்தில் இந்திரா காந்தி அரசால் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. “கல்வி” என்பது முந்தைய காலகட்டதில் இருந்தவாறு, மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யாதவரை, “தேசிய புதிய கல்விக் கொள்கை என்ற பட்டுத்துணி போர்த்திய பட்டாக்கத்தி” மூலம்- அனைத்து கல்லூரி/பல்கலைக்கழக பாடப்பிரிவுகளுக்கும் நீட் போன்ற தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வுகள், மும்மொழி கொள்கை என்கிற பெயரில் அரங்கேறவிருக்கும் இந்தி/சமஸ்கிருத திணிப்புகள், தொழிற்கல்வி என்கிற பெயரில் இந்திய சாதிய கட்டுமானத்தில் நடைப்பெறப்போகும் வர்ணாசிரம குருகுலகல்விமுறை, 3-ம் 5-ம் 8-ம் வகுப்புகளில் பள்ளியளவில் நடைபெறும் என்று சொல்லப்படும் பொதுத்தேர்வுகள் என்று எண்ணற்ற எளிய கிராமப்புற ஒடுக்கப்பட்ட, கீழ் நடுத்தர மற்றும் நடுத்தர மாணவர்களை வடிகட்டும் நுணுக்கமான பல தடுப்பு அரண்களை கொண்டதாகவே இவ்வனைத்து தேர்வுமுறைகளும் அமல்படுத்தும் கொள்கைகளும் அமைகின்றன.

(கட்டுரையாளர் சி.நவநீத கண்ணன் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்