Aran Sei

நீட் தேர்வால் தமிழ்வழி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறதா? – சீ. நவநீத கண்ணன்

கற்றது தமிழ்

மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலும் 5 மாணவர்களின் உயிரிழப்புகளுக்கு மத்தியிலும் உச்சத்தைத் தொடும் கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவிலும், நீட் தேர்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13, 2020) நடந்து முடிந்திருக்கிறது. நாடு முழுவதும் விண்ணப்பித்தவர்களில் 85-90% மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1080 பேர் தேர்வு எழுதவிருந்த ஒரு தேர்வு மையத்தில் 159 பேர் பங்கேற்காதது அதிர்ச்சியளிக்கூடிய செய்தியாக உள்ளது.

இந்நிலையில் மதுரையில் நீட் தேர்வு மையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த விதிமுறைகள் குறிந்த பதாகையில் தமிழ்மொழி இடம்பெறாது, இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது; இதைப் பார்க்கும்போது, “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலேயே தமிழ்மொழிக்கு தேர்வு மையத்தில் இடமில்லயா” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

சரி, நீட் தேர்வு மையத்தில்தான் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறதென்றால், நீட் மூலமாக தேர்வாகி மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதிலும் தமிழ்வழி கல்வியில் பயின்ற மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைதான் கடந்த ஆண்டுகளின் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், வழக்கறிஞர் திரு.அப்பாவுரத்தினம் அவர்களால் பெறப்பட்ட (RTI File No: 69553) தகவல்கள் பின்வருமாறு:

தமிழக அரசு/தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை

ஆண்டு அரசுக் கல்லூரி தனியார் கல்லூரி
2015 – 16 456 54
2016 – 17 438 99
2017 – 18 40 12
2018 – 19 88

இந்தத் தரவுகளின் அடிப்படையில், நீட்தேர்வுக்கு பின் தமிழ்வழி கல்வியில் பயின்ற மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெறுவது கணிசமாக குறைந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தமிழ்வழி மாணவர்கள் மருத்துவம் சேராததற்கான காரணங்கள்

தமிழ் வழியில் பயின்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்பதாலும்,
தமிழ்வழியில் பயிற்சி வழங்கும் தனியார் கோச்சிங் சென்டர்கள் அதிக அளவில் இல்லாததும் (அவ்வாறு இருந்தாலும் அதில் சேர்த்து படிக்கவைக்கும் அளவிற்கான பொருளாதார பிண்ணனியை அந்த மாணவரின் குடும்பம் பெற்றிருப்பதும் அரிதானதே),
அரசால் நடத்தப்படும் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் பெருமளவில் மாணவர்களுக்கு உதவாததும் (உதாரணமாக, சென்ற 2018-19-ம் கல்வி ஆண்டில் அரசால் நடத்தப்பட்ட தமிழ்வழி நீட் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்ற 19,355 மாணவர்களில் ஒருவருக்குகூட மருத்துவ இடம் கிடைக்கவில்லை, இந்த 2019-20-ம் ஆண்டு அரசின் நீட் பயிற்சி வகுப்புகள் மே மாதம் தான் தொடங்கப்பட்டது, அதுவும் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் இணையவழியில்)

ஆகியவை தமிழ்வழி மாணவர்கள் பெருமளவு சேராததற்கு பிரதான காரணமாக உள்ளன.

மேலும், தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளில் பல மொழிபெயர்ப்பு பிழைகளும் குறைபாடுகளும் இருப்பதும் (அதற்கு எவ்வித சலுகையோ கருணை மதிப்பெண்களோ வழங்குப்படுவதுமில்லை), தேர்வில் கேட்கப்படும் வினாவில் ஏதேனும் தவறு இருக்குமாயின் ஆங்கிலவழி தேர்வுத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடையே செல்லும் என்கின்ற பாரபட்ச விதிமுறைகளும் இக்குறைவான தமிழ்வழி மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு வலுசேர்க்கும் விதமாக அமைகிறது.

மேலும் நீட் அமலானபிறகு, தமிழ்வழிக் கல்வியில் பயிற்றுவித்து வந்த தனியார் பள்ளிகள் குறைவதும், அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பயிற்றுவிப்பது அதிகமாவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு 12% பேர் குறைவாக விண்ணப்பித்துள்ளனர்; இந்த அளவு குறைவதற்கு “தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் பெருமளவு விண்ணப்பிக்காததே காரணம்” எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், “மருத்துவம் படிக்க விரும்புவோர் கட்டாயம் 11-ம் வகுப்பில் எடுத்துப் படிக்கவேண்டிய அறிவியல் பாடப்பிரிவிலும் (உயிரியலில், இயற்பியல், வேதியியல், கணிதம் சார்ந்த பிரிவு) கடந்த 2,3 ஆண்டுகளாகவே கணிசமான அளவில் அரசு பள்ளி மாணவர்கள் குறைவாகவே தேர்ந்தெடுப்பதாக” நாமக்கல்லை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பிற்கு இயற்பியல் பாடமெடுக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

பெரும்பாலும் தமிழ்வழிக் கல்வியில் யார் படிப்பார்கள்?

ஏழை, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின சமூக மாணவர்களும்தான் அதிக அளவில் படிப்பார்கள்.

ஆகவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, மேற்சொன்ன பிரிவுகளின் மாணவர்கள் நீட் தேர்வு அறிமுகத்துக்குக் பின் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

“தங்களிடம் என்ன இருக்கிறதோ அதனைக்கொண்டும், எதன்வழியே தாங்கள் ஆரம்பக் கல்வி முதல் கற்கிறோமோ அதன் மூலமும்தான், தங்களையும் தங்கள் குடும்பத்தையும், ஏன் காலங்காலமாக வஞ்சிக்கப்பட்டும் கல்வி உரிமை மறுக்கப்பட்டும் வந்த தங்கள் தலைமுறையையும்கூட அவர்கள் மீட்க முனைகிறார்கள்” ;

தற்போதும் அதே அநீதி தொடர்ந்து நிகழும்போதுதான் அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் இறுதி முடிவிற்கு தள்ளப்படுகிறார்கள்; ஆம், தமிழகத்தில் நடந்த 15 நீட் மரணங்களில் 8 மரணங்கள் தமிழ்வழி கல்வியில் பயின்ற மாணவர்களினுடையது.

ஒருபக்கம் “5-ம் வகுப்புவரை கட்டாயம் தாய்மொழிவழி கல்வியும், முடிந்தவரை 12-ம் வரை தாய்மொழி கல்வியே மாணவர்கள் கற்க ஊக்கப்படுத்துவோம்” என்று புதிய கல்விக் கொள்கை-2020-ல் அறிவிக்கும் ஒன்றிய அரசு, மறுபக்கம் “தாய்மொழி கல்வியில் படிக்கிறவர்களின் மருத்துவக் கனவுகளை, நீட் என்ற அறமற்ற ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் தேர்வுமுறையைக் கட்டாயமாக்குவதன் மூலம், எளிய சாமான்ய குடும்பத்து மாணவர்களின் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்துக்கொண்டும்” இருக்கிறார்கள்.

– சீ. நவநீத கண்ணன்
(கட்டுரையாளர் மருத்துவ இளநிலை மாணவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்