Aran Sei

பல் மருத்துவரிலிருந்து செயல்பாட்டாளர் ஆன நவ்கிரண் – திக்ரி எல்லையில் போராடும் ஒரு உறுதியான பெண்

image credit : thewire.in

சண்டிகரில் உள்ள மிகப் பெரிய பணக்கார மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பல் மருத்துவர் ஒருவர், டெல்லி புறநகரில், நெடுஞ்சாலையின் நடுவே ஒரு கூடாரத்தில் வசிக்கும் “ஆந்தோலன் ஜீவியாக (போராட்ட ஜீவியாக)” எப்படி மாற முடியும்?

நவ்கிரண் நட்-ன் கதை கவனத்தை கவரும் ஒரு கதை

உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் அன்று திக்ரி எல்லையில் பெண்களுக்கு நடுவில் நான் அந்த 29 வயதான நவ்கிரணை தற்செயலாகக் பார்த்தேன். அந்த பெரிய கூட்டத்தை புகைப்படம் எடுக்க ஒரு சிறந்த கோணத்தை நான் தேடிக் கொண்டிருந்த போது பார்வையாளர்களில் இருந்த தனி நபர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அவரை நான் கவனித்தேன். “நீங்கள் பத்திரிகையாளரா?” என்று நான் அவரிடம் கேட்டேன். அவரோ, “நான் ஒரு பல் மருத்துவர். ஆனால் நான் திரைப்பட ஆய்வுகளில் ஒரு பட்டமும் பெற்றிருக்கிறேன்,” என்று பதில் கூறினார்.

சிறிது திகைத்துப் போன நான், விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவில் ஒரு பல் மருத்துவர் என்ன செய்கிறார் என அவரிடம் கேட்டேன். அப்போதுதான் திக்ரி எல்லையில் உள்ள கூடாரத்தில் தனது தாயுடன் கடந்த மூன்று மாதங்களாக அவர் வாழ்கிறார் எனத் தெரிந்துக் கொண்டேன். போராடும் விவசாயிகளுக்காக மெட்ரோ தூண் எண் 783-ல் ஒரு நடமாடும் நூலகத்தை நடத்தி வருவதும், தற்போது புகழ் பெற்றுள்ள போராளிகளின் சொந்த இதழான “ட்ராலி டைம்ஸ்” இதழுக்கு ஆசிரியராக பணிபுரிவதும் தற்போது அவரது வேலை.

இங்கு ஒரு வழக்கமான நாள் எப்படி ஓடுகிறது என நான் அவரிடம் கேட்டேன். ” “அவ்வளவு எளிதாக அல்ல,” என்றார் புன்னகையுடன். நான் அவரை சந்தித்த அந்த நாளில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தொட்டுக்கொண்டிருந்தது. அந்த இடம் முழுவதும் ஈக்கள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. இத்தனைக்கும் இது மார்ச் மாத துவக்கம்தான்.

image credit : thewire.in
திக்ரி எல்லையில் வெபினார் ஒன்றை ஒருங்கிணைக்கும் நவ்கிரண் – image credit : thewire.in

“ஒவ்வொரு நாளும் போராட்டத்துடனே துவங்குகிறது. இங்கு மிகவும் குறைவான பொதுக் கழிப்பிடங்களே உள்ளன. அவள்ளையும் எளிதாக பயன்படுத்த முடியாது. பல நாட்கள் காலையில் முதலில் அவற்றை சுத்தம் செய்த பிறகே பயன்படுத்துகிறோம்,” என்று கூறுகிறார் அவர்.

“நான் எழுந்து தயாரானதும், உணவுத் தயாரிக்கும் பணியில் சிறிது உதவுவேன். எனினும் சமையலறையில் வேலை செய்யும் போது எனக்கு ‘பாலின எரிச்சல் பிரச்சினைகள்’ இருந்தன என்பதை நான் சொல்லியாக வேண்டும். அண்மையில் கிராமத்திலிருந்து வந்தவர்கள் நான் எல்லா உணவையும் தயாரிக்க உதவ வேண்டும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் வேறு யாருமே இல்லை என்றால் நிச்சயமாக நான் செய்வேன். ஆனால் ஒரு பெண் என்பதற்காக செய்ய முடியாது,” என்று அவர்களிடம் நான் அவர்களிடம் கூறுகிறேன்.

இருப்பினும் இந்தப் போராட்டம் மிகப்பெரிய சமூக- கலாச்சார மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. வீடுகளில் அவ்வளவாக வேலை செய்யாத ஆண்கள் திக்ரியில் சமைக்கிறார்கள், சுத்தம் செய்கிறார்கள். பொது மக்கள் கண்களிலேயே படாமல் இருந்த பெண்களோ, மேடையேறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு 21 வயது இளைஞர், முதலில் அவர் திக்ரிக்கு வந்த போது தனக்கு சப்பாத்தி எப்படி செய்வது என்று தெரியாது என தன்னிடம் கூறியதை நினைவு கூறும் நவ்கிரண் “இப்போது குறைந்தபட்சம் ரொட்டிகள் போதுமான அளவு உப்பி வருகின்றன, வட்டமாகத்தான் வருவதில்லை,” என்று அவர் கூறியதாகவும், அதற்கு, “கவலைப் படாதீர்கள் மோடி இந்தச் சட்டங்களை ரத்து செய்யும் போது வடிவமும் சரியாக வந்து விடும்,” என்று தான் பதிலளித்ததாகவும் கூறுகிறார்.

மற்றொருவர், போராடுவதற்காக இங்கு வருவதற்கு முன் வீட்டில் பகலிலோ இரவிலோ எந்த நேரமாக இருந்தாலும் ஒரு ஐந்து பேருக்கு சமைப்பதற்காக என் மனைவியை எழுப்புவதை பெரிய விஷயம் இல்லை என கருதி இருந்தேன். ஆனால் அது எவ்வளவு பெரிய வேலை என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்,” என்று அவரிடம் கூறியுள்ளார்.

நவ்கிரண், “இங்குள்ள பெண்கள் தாங்கள்தான் முதன்மையான எதிர்ப்பாளர்கள் என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறார்கள்,” என்று திருப்தியுடன் குறிப்பிடுகிறார். “இங்கு அவர்கள் தங்கள் வீட்டு ஆண்களுக்கு வெறும் மனைவியாகவும், சகோதரிகளாகவுமல்ல தங்கள் சொந்த உரிமைகளுக்கான போராளிகளாக இருக்கிறார்கள். இது அவர்களுடைய சொந்த சண்டையும் கூட,” என்கிறார் அவர்.

image credit : thewire.in
ஜஸ்பீர் கவுர் – image credit : thewire.in

நவ்கிரணின் தாய் ஜஸ்பீர் கவுர் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவரும், திக்ரியில் உள்ள சம்யுக்த கிசான் மோர்ச்சா வின் தலைவர்கள் குழு உறுப்பினரும் ஆவார். நாள்தோறும் காலை 4 மணிக்கு எழுந்து முந்தைய இரவு போடப்பட்டுள்ள பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு, 9 மணிக்கு மேடைப் பகுதிக்குச் சென்று, நாள் முழுவதும் பேச இருக்கும் பேச்சாளர்களின் வரிசையை ஒழுங்கு படுத்துகிறார். சோர்ந்து போய் மாலை ஐந்து மணிக்கு கூடாரத்துக்குத் திரும்புவார்.

“இப்படியே தொடர்ந்து செய்கிறார். எப்படி அவரால் முடிகிறது எனக்குத் தெரியவில்லை,” என்கிறார் நவ்கிரண். உண்மையில், நவ்கிரணின் பெற்றோர்கள் இருவரும் பஞ்சாப்பில் மான்சா மாவட்டத்தில் உள்ள தலித்துகளின் உரிமைக்காகப் போராடி சிறை சென்றவர்கள். அத்துடன் பிற விவசாயிகள் போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளனர்.

image credit : thewire.in
குடும்பத்துடன் நவ்கிரண் – image credit : thewire.in

2009-ல் நவ்கிரண் பன்னிரண்டாம் வகுப்பை முடிக்கும் போது அவரது பெற்றோர்கள் சிறையில் இருந்தார்கள். அவர்கள் இல்லாமல் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு மாறுவது அவருக்கு சிரமமாக இருந்தது. அவர் நல்ல மாணவராக இருந்ததாலும், நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்தாலும் அவரது பிற உறவினர்கள் அவரை பல் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்ய ஒருவாறு சம்மதிக்க வைத்தனர். அதன்மூலம் அவர் பல்மருத்துவராக தனியார் துறையிலோ அல்லது வெளி நாட்டிலோ நல்ல வேலையில் சேர முடியும் என அவர்கள் நம்பினர். ஆனால் தனியார் மருத்துவமனையில் பணிபுரிவது ஆழ்ந்த ஏமாற்றம் அளிக்கும் அனுபவமாக அவருக்கு மாறியது.

அவர் சண்டிகாரில் உள்ள மிகப் பெரிய பணக்கார தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராகச் சேர்ந்த சில நாட்களில் தன்னிடம் ஒரு மூத்த மருத்துவர், “ஒரு உரை” நிகழ்த்தியதாகவும் அதில், “நோயாளியிடம் பெரிய அளவு பிரச்சினை இல்லை என்றாலும், அவர்கள் விலை அதிகமான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளும்படி ஏற்க வைக்க வேண்டும்” என்று கூறியதாகவும் சொல்கிறார். ஒருமுறை ஒரு ஏழை நோயாளியிடம், இங்கு மருத்துவம் பார்ப்பதை விட அருகிலிருந்த நல்ல அரசு மருத்துவமனைக்குக் சென்று இலவச மருத்துவம் பார்த்துக் கொள்ளுமாறு கூறி அனுப்பியதை நினைவு கூர்ந்தார்.

ஒருநாள் தான் மருத்துவமனையிலிருந்து மதிய உணவு இடை வேளையில் வீட்டிற்குச் செல்லும் போது ஒரு சாலை விபத்தில் கை உடைந்து போன சமயத்தில் எந்தவித எச்சரிக்கையும் கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகம் தன்னை பணிநீக்கம் செய்து விட்டதாக நவ்கிரண் கூறுகிறார்.

தனியார் துறை மீது முற்றிலும் அதிருப்தி அடைந்த நவ்கிரண் இறுதியாக, புதுடெல்லி அம்பேத்கர் பல்கலைகழகத்தில் திரைப்படப் பாடப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பில் சேர முடிவெடுத்தார். அதேசமயம் விவசாயிகள் போராட்டம் துவங்கி விட்டதால் அவர் போராடும் விவசாயிகளோடு சேர்ந்தவர் என்பதில் அவருக்கு எள்ளளவும் ஐயம் இருக்கவில்லை.

இலக்கியமும், தனது பெற்றோர்களுமே தனது இந்த ஈடுபாட்டிற்குக் காரணம் எனக் கூறினாலும், ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் போது நடந்த ஒரு நிகழ்வுதான் தன்னை போராட்டப் பாதையில் செல்ல வைத்ததாக நவ்கிரண் கூறுகிறார். 2006-ல் ஒரு ஜமீன்தாரின் மகன் ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து விட்டான். அந்தப் பெண்ணின் தந்தை, பந்த் சிங் ஜபார் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானமாக செல்வதற்கு ஒப்புக் கொள்ளாமல் குற்றம் செய்தவனை கைது செய்ய வைத்தார்.

ஜமீன்தாரின் ஆட்கள் இதற்கு பதிலடி தரும் விதத்தில் ஜபாரை அடி பம்பின் கைப்பிடியால் அடித்து துவைத்தனர். அவரது கைகளிலும் பாதங்களிலும் காயங்கள் அழுகிப் போய் அவற்றை வெட்டி எடுக்க வேண்டியதாயிற்று. இந்த நிகழ்வால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான நவ்கிரண் அவரது பள்ளியில் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று அவருடைய மருந்துவ செலவிற்கு நிதி திரட்டினார். அதைத்தான் உண்மையில் தான் போராட்ட உலகில் இறங்கிய நாளாக நவ்கிரண் கருதுகிறார். கடினமான நாட்களில் அவருக்கு உற்சாகமூட்டியது எது என்றால் அவர், “நான் மனதளவில் மிகவும் சோர்வடையும் போது போராடி வெற்றி கண்டவர்களின் வாழ்க்கை வரலாறை படிப்பேன். அது எனக்கு புத்துயிர் அளித்தது. அல்லது எனது அறையில் மூலையில் அமைதியாக உட்கார்ந்து எனது கைபேசியில் உள்ள காணொளிகளில் ஏதாவது ஒரு சிலவற்றைப் பார்ப்பேன் எனக்கு ரஷ்ய புதினங்களைப் படிப்பதும் பிடிக்கும். எங்கள் குடும்பத்தின் அறிவுஜீவியாக இருக்கும் எனது தந்தை சுக்தர்ஷன் சிங், கத்தார் இயக்க வரலாற்றினை படிக்குமாறு என்னை ஊக்கப்படுத்தினார். கத்தார் இயக்கத்தினரின் பின்னடைவு, கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் தள்ளினாலும் அவர்கள் எவ்வாறு எழுந்து மீண்டும் ஒன்றிணைகிறார்கள் என்பது என்னைக் கவர்ந்தது,” என்று கூறும் அவர் சிறிது இடைவெளிக்குப் பின் சிரித்துக் கொண்டே, “ஃபில்டர் காபி! ஃபில்டர் காபி என்னைத் தொடர்ந்து செல்ல வைக்கிறது. ஆனால் நிச்சயமாக அது இங்கே கிடைப்பதில்லை,” என்கிறார்.

சில நாட்களில், தனியுரிமை (Privacy) இல்லாமல் இருப்பதும் போதுமான ஓய்வு நேரம் இல்லாமல் இருப்பதும் அவரை பாதிக்கிறது. எனினும், நவ்கிரண் பலரும் தங்களுடைய வலிமையாகவும், உந்து சக்தியாகவும் தன்னைப் பார்ப்பதையும் அவர்கள் முன்னால் உற்சாகிமின்றியும், மகிழ்ச்சி இன்றியும் இருக்க முடியாது என்கிற உண்மையை நன்றாக உணர்ந்திருக்கிறார். அவர் முற்றிலும் உடைந்து போன நாட்களும் இருக்கின்றன. “கடந்த சில நாட்களாக இங்கு திக்ரியில் தற்கொலைகள் அதிகமாகி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு நாள், அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பு எழுதி வைத்து விட்டு ஒரு 47 வயதான விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த சட்டங்கள் ஏற்படுத்தும் மன அழுத்தம், கவலை போன்ற விளைவுகள் மிகவும் உண்மையானவை. எங்களுக்கு மன நல ஆலோசகர்கள் தேவை.

“அதிக அளவில் திரைப்படங்களை திரையிடும் இடங்களை அமைத்து விவசாயிகளின் உள்ளுணர்வை பாதுகாக்க காந்தி போன்ற திரைப்படங்களை திரையிட வேண்டும். அவர்களுக்கு இது போன்ற போராட்டங்கள் நிறைய நாட்கள் பிடிக்கும். உடனடியான முடிவுகளை எதிர்பார்க்கக் கூடாது என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்,” என்கிறார் நவ்கிரண்.

image credit : thewire.in
தன் அம்மா ஜஸ்பீர் கவுர் உடன் நவ்கிரண் – image credit : thewire.in

போராடுபவர்களின் உள்ளுணர்வை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை அங்கீகரிக்கும் நவ்கிரண் இந்தப் போராட்டத்தில் அவர்கள் தனியாக இல்லை என்பதை அவர்களோடு கலந்துரையாடி மறு உறுதி செய்ய வேண்டும் என்கிறார்.

ஏறத்தாழ எல்லா செய்தியாளர்களும், “இன்னும் எத்தனை நாட்கள் இந்தப் போராட்டம் நீடிக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்பதைக்கண்டு அவர் குறிப்பாக எரிச்சலடைகிறார். “எனக்கு எப்படித் தெரியும்? போய் மோடியிடம் கேளுங்கள். இல்லையா?” என்று அவர் கூறிய போது எனது அடுத்த கேள்வி அதுவாகவே இருந்ததால் நான் இரகசியமாக அதிலிருந்து தப்பி விட்டேன்.

திக்ரி எல்லையில் இருந்து திரும்பியதும், நவ்கிரணின் நேர்மை, இரக்கம் மற்றும் ஆழ்ந்த பொறுப்புணர்விற்கு முற்றிலும் முரணாக உள்ள அரசின் ஆணவம், இரட்டைப் பேச்சு, சிறிதும் அக்கறையின்மை ஆகியவற்றை ஒப்பிடாமல் என்னால் இருக்க முடியவில்லை.

நான் எனது குறிப்பேட்டை எடுத்து அடுத்த முறை நான் அங்கு செல்லும் போதே எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியலைப் பார்த்தேன்: ஓடோமாஸ் (இருட்டான தும் கொசுக்கள் மிகவும் மூர்க்கமடைந்து விடுகின்ற), ஒருசில புத்தகங்கள் (ஷாஹீத் பகத்சிங் நூலகத்திற்காக): நான் அதனுடன் இன்னொரு பொருளையும் சேர்த்தேன்- ஃபில்டர் காபி.

www.thewire.in இணையதளத்தில் ரோகித் குமார் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்