Aran Sei

கொலைக்கும் இனப்படுகொலைக்கும் அறைகூவல் விடுத்த நரசிங்கானந்த் – ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை?

image credit : thewire.in

தீவிரவாத இந்துத்துவா அரசியல்வாதியான நரசிங்கானந்தை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தும் காணொளியை பதிவிட்டதற்காக ஒரு முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முகம்மது நபியை அவமானப்படுத்தியதற்காக நரசிங்கானந்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது உத்தர பிரதேசத்தின், பிலிபித் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

பொதுவாக பார்க்கும் போது, இந்த இரண்டு நிகழ்வுகளிலும் காவல்துறை செய்தது சரியானது என்றே கருதப்படும்.

  • யாராவது ஒருவர் மற்றொருவரை கொல்லப் போவதாக வெளிப்படையாக அச்சுறுத்தினால் அவர் சொல்வதை தீவிரமாக எடுத்துக் கொண்டு அவர் அதை நிறைவேற்ற முடியாதபடி தடுக்க வேண்டும். எனவே இது போன்ற சூழ்நிலையில் கைது செய்வது முன்னெச்சரிக்கை அல்லது தடுப்பு நடவடிக்கை ஆகும். இந்தச் செயல் அந்த அச்சுறுத்தலை ஏற்றுக் கொண்டு அதே அச்சுறுத்தலை தாங்களும் வெளியிடுவது அல்லது அதை செயல்படுத்துவது ஆகியவற்றில் மற்றவர்கள் ஈடுபடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாகவும் இது இருக்கும்.
  • கொரோனா நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்கான அரசின் விதிமுறைகளை மீறி கூடும் நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறை கைது செய்ததையும் தவறாகக் கருத முடியாதுதான்.

ஆனால் நரசிங்கானந்த் போன்றவர்கள் தொடர்ந்து வன்முறைக்கான மிரட்டலை வெளியிடும் போது, சட்ட ஒழுங்கு அமைப்பு முற்றிலும் செயலற்றதாக இருக்கும் நிலையில், மேற்கூறிய தண்டனை நடவடிக்கைகளுக்கு நாம் எப்படி எதிர்வினை ஆற்றுவது? நரசிங்கானந்தின் அச்சுறுத்தல் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மொத்தத்திற்கும் எதிராக விடப்பட்டதாகும்.

டெல்லிக்கு வந்த நரசிங்கானந்த் செய்தியாளர்களிடையே பேசியபோது முகம்மது நபிகள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் வசை மொழிகளை பயன்படுத்தினார். அவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை “ஜிகாதி” என்றார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லீம்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்றப்படவில்லை அல்லது அழித்து ஒழிக்கப்படவில்லை என்று புலம்பினார்.

அவர் உண்மையில் முஸ்லீம்களை கொலை செய்ய பலமுறை அழைப்பு விடுத்திருக்கிறார். அவரை பின்பற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களும் கூட முஸ்லீம்களுக்கு அச்சுறுத்தல்களை விடுத்ததுடன், முஸ்லீம்களை வெளியேற்றி இந்தியாவைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று இந்துக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.

அவர்களை பின்பற்றுபவர்களாலும், ஊடகங்களின் ஒரு பிரிவாலும் உண்மையான மதத் தலைவர்களாக காட்டப்படுபவர்களின் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருபவர் நரசிங்கானந்த். ஆனால் இவர்கள் முஸ்லீம்கள் மீதும் பிற சிறுபான்மையினர் மீதும் வெறுப்பையும், வன்முறையையும் போதிப்பவர்கள் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.

வெறுப்பைப் பரப்பும் வகையில் அவர்கள் எவ்வாறு சுதந்திரமாக விடப்பட்டுள்ளனர்? ஒரு ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீது வெளிப்படையாக தொடர்ந்து வன்முறையைத் தூண்டிவிடும் அவர்களது செயல்களை போலீஸ் கண்டு கொள்ளாமல் இருப்பதை எப்படி புரிந்து கொள்வது? போலீஸ் அவர்களை ஏன் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை? அல்லது இந்தியாவில் முஸ்லீம்கள் மனிதர்களாக கருதப்படுவதில்லை என்பதுதான் நிலைமையா? பாரதவர்ஷம் என்ற புனித வெளியை தூய்மையாக வைத்துக்கொள்ள, ஒழிக்கப்பட வேண்டிய கரையான்களாக, புழுக்களாக முஸ்லீம்கள் பார்க்கப்படுகிறார்களா?

உண்மையில், இந்துக்கள் வன்முறை பற்றி‌ பேசும்போது அவர்கள் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை என்று போலீசும், நீதிமன்றங்களும் கூட கருதுவது போலத் தெரிகிறது. இந்துக்கள் வன்முறை செய்யும் அளவுக்கு திறமை படைத்தவர்கள் இல்லை என்றும், வன்முறை குறித்த அவர்களது எந்த ஒரு அச்சுறுத்தலும் உண்மையான உணர்ச்சியின் ஒரு வெளிப்பாடே என்று அவை கருதுகின்றன. வன்முறையை தங்கள் மனதிலிருந்து வெளியில் கொட்டியதும் அவர்கள் நிம்மதி அடைந்து விடுகிறார்கள், அவர்கள் அதை ஒரு போதும் அதன் உண்மையான பொருளில் சொல்லவில்லை என்று கருதுகின்றன.

முஸ்லீம்களை எளிதில் தீவிரமயமாக்க முடியும் என்றும், இந்துக்களுக்கும் தீவிரவாதத்துக்கும் ஒத்து வராது என்று போலீஸ் அனுமானிக்கிறது.

‘இந்துக்களால் பேச மட்டுமே முடியும். ஒருபோதும் கொலை செய்ய முடியாது. இத்தகைய கருத்துக்களை வெளியில் சொல்வதன் மூலம் அவர்கள் உண்மையில் உலகத்தின் முன் முஸ்லீம்களின் உண்மை முகத்தை கொண்டு வருகிறார்கள்.’

‘நரசிங்கானந்தை கொல்ல வேண்டும் என்ற அழைப்புகள், முஸ்லீம்கள் உள்ளார்ந்த வன்முறையாளர்கள் என்ற அவரது கருத்தை சரி என்று நிரூபிக்கிறது. இல்லை என்றால், முஸ்லீம்களை கொல்ல வேண்டும், இனப்படுகொலை நடத்த வேண்டும் என்ற அவரது வெறும் பேச்சுகளுக்கு எதிர்வினையாக அவரைக் கொலை செய்ய அழைப்பு விடுப்பது ஏன்?’

‘அவருக்கு கருத்துரிமையும், பேச்சுரிமையும் இல்லையா? அவர் சொல்வது சரி என்றால் முஸ்லீம்களை ஏன் கொல்லக் கூடாது?’

தர்க்கம் என்ற பெயரில் இதுதான் இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

நரசிங்கானந்த் முஸ்லீம்களை பழித்தார், அவர்களது இறைத்தூதர் மீது வசை பொழிந்தார், குரானை கிழிக்கவும், குரானை பின்பற்றுபவர்களை பிய்த்தெறியவும் வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். பின்னர் முஸ்லீம்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். அவர்களில் பலர் அதிர்ச்சியையும், திகைப்பையும் வெளிப்படுத்துகின்றனர். வன்முறையாக எதிர்வினையாற்றும் ஒரு சிலரும் உண்டு. அதன் மூலம், “நான் சொன்னது சரியா போச்சா” என்று நரசிங்கானந்த் சொல்ல முடிகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் இது இந்துத்துவா அமைப்புகளின் உத்தியாக இருக்கிறது. கெடுவாய்ப்பாக, இந்திய அரசின் இயல்பான சிந்தனையும் இதுவாக ஆகிவிட்டது. போலீசும் நிர்வாகமும் முஸ்லீம்களை சந்தேகத்துக்குரியவர்களாக பார்க்கின்றனர், இந்துக்களை மென்மையாக நடத்துகின்றனர்.

எனவே முஸ்லீம்களின் கோபமான கருத்துக்கள் தொடர்பாக அவர்கள் மீது தண்டனை நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்கிறது. ‘அந்த கோபம் வன்முறையை ஊக்குவிக்கும் உண்மையான வலிமையைக் கொண்டுள்ளது, ஏனெனில் முஸ்லீம்கள் எளிதில் வன்முறையில் இறங்கக் கூடியவர்கள்’ என வாதிடப்படுகிறது.

இதையே இந்துக்களுக்கு பொருத்த முடியாது. எனவே, நரசிங்கானந்த் போன்றவர்கள் கொலைக்கும், வன்முறைக்கும் ஏன் இனப்படுகொலைக்கும் கூட விடுக்கும் அழைப்புகளை, இந்துக்கள் இந்த முறையற்ற சீற்றங்களை அறிவுடன் புறக்கணித்து விடுவார்கள் என்று எளிதாக ஒதுக்கப்பட்டு விடுகின்றன.

ஒரு ஆண்டிற்கு முன், 2020-ல் இளைய மற்றும் மூத்த பாஜக தலைவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்த்து போராடும் முஸ்லீம்களை பொருத்தமான வகையில் கையாளுமாறு தங்கள் ஆதரவாளர்களை தூண்டி விட்டதை நாம் பார்த்தோம்.

பிரதமர், தனது ஆதரவாளர்களிடம் போராளிகளை அவர்களுடைய உடையை வைத்து அடையாளம் காணுமாறு கூறியதைக் கேட்டோம். சரி, அவர்களை அடையாளம் கண்டு என்ன செய்ய வேண்டும்? அதை பிரதமர் சொல்லாமலே விட்டு விட்டார்.

அமித்ஷா, வாக்கு எந்திரத்திலிருந்து வெளியாகும் மின்சாரம் ஷாகீன்பாக்கை அடைந்து போராளிகளை தாக்கி, அவர்களை வலுக்கட்டாயமாக போராட்டத்தை முடிக்க வேண்டிய அளவு வலுவுடன் வாக்குப் பொத்தானை அழுத்தும் படி தனது வாக்காளர்களிடம் கூறினார். ‘இது உண்மையில் ஒரு இந்தி மொழியை கவித்துவமாக, உருவமாக பயன்படுத்துவது. இதை எப்படி நீங்கள் வன்முறைக்கான அழைப்பாகக் கருத முடியும்?’

ஒரு மத்திய அமைச்சர், குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராளிகள் தேசத்துரோகிகள் என்பதால் அவர்களைச் சுட்டுத்தள்ளுமாறு கூறினார். “கோலி மாரோ” என்ற முழக்கம் பாஜக அரசியல் கூட்டங்களின் முத்திரை இசையாக மாறிவிட்டது. ஆனால் இது வெறும் வார்த்தை விளையாட்டு என விளக்கப்பட்டது.

ஒரு தலைவர் இது மீண்டும் மீண்டும் செய்யும் இசைப் பயிற்சி (rhyming exercise) எனக் கூறினார். ‘நாங்கள் வார்த்தைகளை விளையாட்டாக பயன்படுத்துகிறோம், அதற்காக நீங்கள் எங்களைப் பாராட்ட வேண்டும்.’

ஆனால் சுடுபவர்கள் போராட்டக் களத்திற்கு வந்தார்கள். துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டன. அதன்பிறகு கொள்ளை அடிப்பது, தீ வைப்பது, கொலை செய்வது ஆகியவை தொடங்கின. 53 பேர் கொல்லப்பட்டனர். பெரும்பாலானோர் துப்பாக்கிகள் குண்டு காயத்தால் உயிரிழந்தனர். பன்னிரண்டிற்கும் மேற்பட்ட மசூதிகள் மோசமாக சிதைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகளும், வணிக நிறுவனங்களும் நாசமாக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கானோர் தமது வசிப்பிடங்களில் இருந்து பிய்த்தெறியப்பட்டனர்.

பல்வேறு மட்டங்களில், பல்வேறு விதமான வடிவங்களில் வெளிப்பட்ட வன்முறைக்கான இந்தத் தூண்டல்களுக்கும், உண்மையில் நடந்த வன்முறை நிகழ்வுகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? இந்த வன்முறைகளை திட்டமிட்டு நடத்தியவர்கள் தங்களுக்கு மேலிடப் பாதுகாப்பு ‌உறுதியாகக் கிடைக்கும் என்று கருதினார்களா?

டெல்லி காவல்துறை இந்தத் தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று சிந்திக்கக் கூட இல்லை.

2020 டெல்லி கலவரத்திற்கு முன்பிருந்தே நரசிங்கானந்த் முஸ்லீம்களைக் கொல்ல வேண்டும் என்று கூறிவந்தார். இன்றுவரை அதையே கூறி வருகிறார்.

வடகிழக்கு டெல்லி கலவரத்தில் தனது பங்களிப்பு குறித்து பெருமையாகப் பேசும் ராகினி திவாரி புது அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டே, சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொள்பவர்களை சுதந்திரமாக வெளியில் இருக்க விட்டிருப்பது, தேவைப்பட்டால் மீண்டும் அத்தகைய தாக்குதலை நடத்துவோம் என்று ‘தேசத் துரோகிகளுக்கும்’, ‘தேச விரோதிகளுக்கும்’ கூறுவதாகவே உள்ளது.

இவர்கள் யாரையும் போலீஸ் நம்ப மறுக்கிறது. அவர்கள் வெறும் டம்பமடிப்பவர்கள் என்று நமக்கு சொல்லப்படுகிறது. தாங்கள் செய்ததாகக் கூறிக் கொள்வதை செய்யத் திறமை இல்லாதவர்கள் அவர்கள் என்கின்றனர்.

இது எப்படி இயங்குகிறது என்று நமக்குத் தெரியும். பாஜக, சங் பரிவார் அடங்கிய ஆளும் தரப்பின் சித்தாந்தத்துக்கும் அரசு எந்திரத்தின் சித்தாந்தத்துக்கும் ஒரு ஒருங்கிணைவு இருக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனால், முஸ்லீம்கள் மீதும் கிறித்துவர்கள் மீதும் வேண்டுமென்றே பரப்பப்படும் வெறுப்பு குறித்து, அரசியலுக்கு அப்பால் உள்ள வாழ்வில் மூழ்கியிருக்கும் சாதாரண இந்துக்கள், ஆழமாக சிந்திக்க வேண்டும். இந்த வெறுப்பு இயக்கம் மத்தியத்துவப்படுத்தப்படாமல், தன்னிச்சையாக நடக்கிறது. ஆனால் சட்ட நடைமுறைகள் தங்களுக்கு எதிராக வராது என்ற உத்தரவாதத்தை அளிக்கும் இன்னும் பரந்து விரிந்த சூழலில் அது நடத்தப்படுகிறது.

இந்தப் பரப்புரை இந்துக்களின் ஒரு பிரிவினர் மத்தியில் கூட வெறுப்பையும் வன்முறையையும் ஏற்படுத்தாது என்று கருதி போலீஸ் வேண்டுமென்றே அலட்சியம் காட்டி வருகின்றது.

இணைய பிரச்சாரம் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கான அழைப்புகளை குறிப்பிடத்தக்க அளவுக்கு வலுப்படுத்தியுள்ளது. வெறுப்பை கக்கி வன்முறையை தூண்டி விடும் ஆயிரக்கணக்கான காணொளிகள் சுற்றுக்கு விடப்படுகின்றன, அவை ஒவ்வொன்றையும் பல லட்சக்கணக்கானவர்கள் அதை பார்த்துள்ளனர்.

இணைய வெறுப்பு பிரச்சாரங்கள் வெறுப்புப் படைகளுக்கான நபர்களை ஈர்க்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐஎஸ்ஐஎஸ் ஐரோப்பா வரையிலிருந்து கூட இளைஞர்களை கவர்ந்திழுத்துள்ளது. வெள்ளை மேலாதிக்கவாதிகள் வன்முறை தொடர்பாக போதிக்கப்பட்ட பிறகு உண்மையில் வன்முறை நடத்திய நிகழ்வுகளும் உள்ளன.

சிலர் வன்முறை செயல்களில் பங்கேற்பவர்களாக சேர்கிறார்கள். ஆனால் இணைய பிரச்சாரம் தான் பரப்பும் வெறுப்பு, வன்முறை தொடர்பாக ஒரு ஒத்த கருத்தை உருவாக்குகிறது. எனவே ஒரு வன்முறையை நியாயப்படுத்தும், கொலைகள் நடக்கும் போது அது குறித்து சிறிதும் வருத்தப்படாத ஒரு கலாச்சாரம் இந்தப் பரப்புரை மூலம் வடிவமைக்கப்படுகிறது.

20-ம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில், நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு எளிய ஆன்மீக தீர்வைக் தருவதாக கூறி பல பாபாக்களும், குருக்களும் வந்தார்கள். அதன்பிறகு வெறுப்பையும் வன்முறையையும் போதனை செய்யும் துறவிகளும், சாமியார்களும் வந்தனர். அதில் ஒரு சிலர் பாரம்பரியமாக மதிக்கப்படும் பெரிய கோயில்களை கட்டுப்படுத்துகின்றனர். அவர்களில் சிறியவர்கள் நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் உள்ள கோவில்களைக் கைப்பற்றிக் கொண்டனர். காவி உடை அணிந்து அது கொடுத்த பாதுகாப்பில் முஸ்லீம் வெறுப்பை போதிக்கின்றனர். அவர்களிடம் மதமோ, ஆன்மீகமோ சுத்தமாக இல்லை.

அவர்கள் வலுவானவர்களாக்குவது என்னவென்றால், மதசார்பற்ற கட்சிகள் கூட அவர்களின் அவதூறான பேச்சுக்களை சகித்துக் கொள்வதுதான். அவர்கள் அவர்களை விமர்சனம் செய்வதே இல்லை. ஆனால் அது போன்ற ஒரே ஒரு கருத்து ஒரு முஸ்லீமிடமிருந்து வந்து விட்டால், வன்முறை எதிர்ப்பு விழுமியங்கள் பற்றியும், மதச்சார்பின்மை பற்றியும் பாடம் எடுக்கத் துவங்குகின்றனர், வன்முறையைத் தூண்டுவதாக அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.

மதச்சார்பற்ற தலைவர்களும் கட்சிகளும் நரசிங்கானந்த் போன்றவர்களின் வெறுப்பு பரப்புரையை விமர்சிக்கத் தயங்குகிறார்கள். விமர்சிப்பது அவர்களுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தை அளித்து அவர்களை பிரபலமாக்கி விடும் என்பது அவர்களின் வாதம். ஆனால் அவர்களது வாதம் தவறானது. வெறுப்பை எதிர்க்கவில்லை எனில், அது மேலும் அதிக நியாயத்தன்மைப் பெற்று விடும். சமூகத்தின் மீதான அதன் பிடி மேலும் இறுகிவிடும்.

தங்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தொடர்பாக அரசியல்வாதிகளின் அமைதி, அரசு நிறுவனங்களின் செயலின்மை, ஊடகங்களின் ஊக்கம் இவற்றிற்கிடையில் முஸ்லீம்கள் இந்த அவமானத்திற்கும் வன்முறைக்கும் தாமே எதிர்வினை ஆற்ற வேண்டி உள்ளது. ‘இந்த அவமானம் அவர்களுக்கானது மட்டுமே நாமெல்லாம் அதனால் தொடப்படாமல் இருக்கிறோம்’ என்ற நிலைமை உள்ளது.

சரி, முஸ்லீம் எதிர்வினையாற்றுகிறார்கள். அது இயற்கையானது. ஆனால் வெறுப்பு நிறைந்த வன்முறையான பெரும்பான்மைவாத கலாச்சாரத்திற்கும், அரசியலுக்கும் எதிராக கடுமையாக எதிர்வினை ஆற்றுவது, அதை மேலும் வலுவடையச் செய்யும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வெறுக்கத்தக்க திட்டத்திற்கு எதிராக ஒரு மாற்று மனிதாபிமான அரசியல் மொழி முன்வைக்கப்பட்டு பின்பற்றப்பட வேண்டும். இந்த நரசிங்கானந்துகள் நம்மை எல்லாம் தம்மைப் போலவே வடிவமைக்கப் பார்க்கிறார்கள். அவரைப்போல மாறுவது மிக எளிதான ஒன்று என்பதுடன் மிகவும் சோம்பேறித் தனமானதும் கூட.

கடந்த வெள்ளி அன்று ஜூம்மா மசூதி நமாசிற்குப் பிறகு நரசிங்கானந்த் மற்றும் அவருடைய கும்பல் உறுப்பினர்களின் அவதூறான கருத்துக்களுக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடாக மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. “எங்கள் மீதான அவமானங்களையும், வன்முறைகளையும் கூட பொறுத்துக் கொள்வோம் ஆனால் கடவுள் மீதான அவதூறுகளை அனுமதிக்க மாட்டோம்” என பல முஸ்லீம்கள் கூறினர்.

இந்த அணுகுமுறையை மறுசிந்தனை செய்ய வேண்டும். உண்மை வாழ்க்கைக்கு, வாழும் மக்களுக்கு எதிரான வன்முறையையும் அவர்கள் மீதான அவமானத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது, அல்லது அது ஒரு ‘குறைந்த’ தீமை என அதை இயல்பானதாக்கி விடக் கூடாது.

இறைத்தூதரை அவமதிப்பது என்பது, முஸ்லீம்களின் மத நம்பிக்கைக்கு இந்தியாவில் மரியாதை இல்லை என்று அவர்களுக்குச் சொல்வதாகும். இதை‌க் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் இதனை வெறும் மதப் பிரச்சினையாக மட்டும் பார்த்து, இந்த இழிவுபடுத்தல்களை இயக்கும் அரசியல் திட்டத்தைப் புறக்கணிப்பது முற்றிலும் முட்டாள்தனமாகும்.

இந்த அவதூறுக்கு எதிராக இந்த அளவு வெளியில் வந்து முஸ்லீம்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், உத்தர பிரதேசத்தில் 20 முஸ்லீம்களை கொலை செய்ததற்காகவும், டெல்லியில் நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்தும் அவர்கள் போராட வேண்டும். அவர்கள் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்புப் போராளிகள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் போராடி இருக்க வேண்டும். அது இன்னும் நடக்கவில்லை.

மதச்சார்பின்மையை ஒரு சுமையாகப் பார்க்கக் கூடாது. மதச்சார்பின்மை என்பது மற்றவர்களை வெறுப்பற்ற முறையில் அணுகுவதும் புதியவர்களை வரவேற்று இடம் கொடுக்கும் அணுமுறையும் ஆகும். சமத்துவத்தையும் நீதியையும் வலியுற்றுவது ஆகும். தனது சொந்த சார்புகளை எதிர்த்து போராடுவதற்கும் தனது சொந்த எல்லைகளை விரிவுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.

இந்துக்கள் இந்த உணர்வை இழக்கச் செய்ய இந்துத்துவா குழுக்கள் கடுமையாக முயற்சிக்கின்றனர். முஸ்லீம்கள் அவர்களது இந்த பாதையை பின்பற்றக் கூடாது.

நரசிங்கானந்த் மகிழும் விதமாக பொது விவாதம் இறை நிந்தனை பக்கம் திரும்பி விட்டது. நரசிங்கானந்தும் அவரைச் சுற்றி மிகப் பெரிய சூழலும் செய்திருப்பது இன்னும் பல மடங்கு ஆபத்தானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இஸ்லாமுக்கும் இறைத்தூதருக்கும் எதிரான நர்சிங்கானந்தின் வெறுப்பு தாக்குதல்களுக்கு மட்டும் எதிர்வினையாற்றுவதன் மூலம் அவர் செய்த பல மடங்கு கொடிய நியாயப்படுத்த முடியாத குற்றங்களை நாம் புறக்கணிக்கிறோம்.

“இறைத்தூதரை அவமானப்படுத்துவதுடன் மட்டும் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் முஸ்லீம்களுக்கு எதிராக, இனப்படுகொலை வன்முறைக்கு குறிப்பாக அழைப்பு விடுக்கிறார். அவர் கொலை செய்வதற்கும், குறி வைத்த கொலைகளுக்கு அழைப்பு விடுத்தார். குழந்தைகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தினார். இன அழித்தொழிப்பை கோருகிறார். இவை அனைத்திற்கும் இகழ்ச்சியும் அலட்சியமும் தாண்டிய மிகவும் வலுவான பதில் தேவைப்படுகிறது. இவை நரசிங்கானந்தை உடனடியாக கைது செய்ய போதுமான காரணங்கள் ஆகும். பிரச்சினை உண்மையான அல்லது கற்பனையான இறைநிந்தனை தொடர்பானது மட்டும் இல்லை. எந்தவித சந்தேகமும், தயக்கமுமின்றி இது உடனடியாக சொல்லப்பட வேண்டிய ஒன்று. நரசிங்கானந்தையும் அவரது கும்பலின் முன்னணி உறுப்பினர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோராதவர்கள் சுதந்திரமான, வெளிப்படையான சமூகத்திற்கு எதிரிகளே,” என்று சுத்தப்ரதா சென் மிகச் சரியாகக் கூறி உள்ளார்.

www.thewire.in இணையதளத்தில் அலிஷான் ஜெஃப்ரி, அபூர்வானந்த் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்