Aran Sei

மோடியின் இந்தியாவில் முசோலினியின் இத்தாலியை வாசிப்பது : ராமச்சந்திர குஹா

1920-ன் இத்தாலிக்கும் 2020-ன் இந்தியாவுக்குமான நம்ப முடியாத ஒற்றுமைகள் – ராமச்சந்திர குஹா

நான் நிறைய வாழ்க்கை வரலாற்று நூல்களை வாசிப்பேன். எனது சொந்த நாட்டினரை விடவும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் வரலாறுகளை வாசிப்பது வழக்கம். சமீபத்தில் அப்படி படித்த புத்தகம் ‘பெனிடெட்டோ க்ரோசெவும் இத்தாலிய பாசிசமும்’ (Benedetto Croce and Italian Fascism). ஒரு தலைசிறந்த தத்துவஞானியின் வாழ்க்கையின் ஊடாக அவர் வாழ்ந்த காலத்தின் கதையை இப்புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் கனடா நாட்டு அறிஞர் பேபியோ பெர்னான்டோ ரிட்சி.

ரிட்சியின் புத்தகத்தை படிக்கும் போது, மோடியின் 2020 இந்தியா, முசோலினியின் 1920 இத்தாலியுடன் நம்ப முடியாத அளவு பொருந்துவதை உணர முடிகிறது. இன்று மோடி எனும் போலி பிம்பத்தை உருவாக்கியது போலவே, அன்றைய ‘சர்வாதிகாரியின் மதிநுட்பத்தை தொழுது துதி பாடத் தயாராயிருந்த’ எழுத்தாளர்களும், பிரச்சாரர்களும் செதுக்கி உருவாக்கிய போலி பிம்பம்தான் பெனிட்டோ முசோலினி. பாசிசத்தின் தலைமகனான முசோலினியை, ‘அவதார புருஷன்’, ‘பெருநம்பிக்கைகளின் பிதாமகன்’, ‘வராதுவந்த மாமனிதன்’ என அவர்கள் அழைக்கத் தொடங்கினர். ‘சர்வாதிகாரி பற்றிய கட்டுக் கதைகள், தலைவரின் வாக்கு எப்போதும் தப்பாது, எவரும் துணியாதததை தானே செய்து முடிப்பவர்தான் தலைவர்’ போன்றவை உருவாக்கப்பட்டன.

முசோலினி
1942-ல் ஜெர்மன் படைவீரர்களை பார்வையிடும் முசோலினி

இத்தாலிய அரசு டிசம்பர் 1925-ல் புதிய சட்டமொன்றை இயற்றியது. பத்திரிகை சுதந்திரத்தை மிகக் கடுமையாக ஒடுக்கிய இச்சட்டத்தின் உடனடி விளைவாக ‘சில மாதங்களிலேயே, முக்கியப் பத்திரிகைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டிற்கு சென்றன. பொருளாதார அல்லது அரசியல் அழுத்தங்கள் காரணமாக சிலர் விற்றுவிட நிர்பந்திக்கப்பட்டனர். முற்போக்கான ஊடகவியலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர், அவர்களின் இடத்தில் வளைந்து கொடுக்கும் நபர்கள் நிரப்பப்பட்டனர்’.

சட்டத்தின் ஆட்சியை தொழுவதாக காட்டிக் கொள்ளுதல்

அதே ஆண்டில், முசோலினி மற்றும் இத்தாலிய ஆளும் கட்சியின் சித்தாந்தம் குறித்து பெனிடெட்டோ க்ரோசெ பின்வருமாறு விவரித்தார்,

‘இது ஒரு விசித்திரமான கூட்டுக்கலவை, அதிகாரத்தை மதிப்பதற்கான அறைகூவலோடு கூடவே வெகுமக்களை திருப்திப்படுத்தும் வாய்வீச்சு, சட்டத்தை மதித்து தொழுவதாகக் காட்டிக் கொள்ளும் போதே அதை மிதித்து எறிதல், நவீன சிந்தனைகளுக்கு அக்கம்பக்கமாக பழங்கால புராண குப்பைக் கழிவுகளை நிறுத்துதல், வழக்கிலிருக்கும் கலாச்சாரத்தை வெறுக்கும் அதே நேரத்தில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் மலட்டுத்தனமான வேலைகள்….’.

இந்த வகையில் 1920-ன் இன்றைய மோடி அரசு இத்தாலிய அரசுடன் பத்துப் பொருத்தமும் பொருந்தி நிற்கிறது. மோடி அரசு நடைமுறையில் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி புனிதமாக பேசிக் கொண்டே அதன் உணர்வையும் சாரத்தையும் வெட்கமின்றி மீறுகிறது. பண்டைய ஞானமென வியந்தோதும் அதேநேரத்தில் நவீன விஞ்ஞானத்தை வெறுத்து தூற்றுகிறது, பழங்கலாச்சாரத்தை உயர்ந்ததென சொல்லிக் கொண்டு, நடைமுறையில் அப்பட்டமான அற்பத்தனங்களை வெளிப்படுத்துகிறது.

அன்றைய இத்தாலியின் சுயேச்சையான எண்ணவோட்டம் கொண்ட அறிவுஜீவிகளில் பெரும்பாலோனோர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டிருந்த நிலையில், பெனிடெட்டோ க்ரோசெ அங்கேயே தங்கியிருந்து பாசிசத்திற்கெதிரான தனது அறிவார்ந்த, தார்மீக எதிர்ப்பை வழங்கினார். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுவது போல, ‘அரசு அதிகாரமானது மக்கள் ஊடகங்களையும், கல்வியமைப்பையும் களத்திலிறக்கி முசோலினி மோகத்தையும், அதிகாரத்திற்கு அடிபணியும் பண்பையும் பரப்பியது. தலைவரோடு மந்திரத்தில் கட்டுண்டு மந்தை போல, கேள்விகேட்காது ‘நம்பிக்கை வை, அடிபணி, சண்டையிடு’ என புதிய தலைமுறையினரிடம் கோரியது. அதற்கு எதிர்மாறாக, க்ரோசெவோ தாராளவாத முற்போக்கு மதிப்பீடுகளை பேசினார், சுதந்தரத்தை பிரச்சாரம் செய்தார், தனிநபரின் மனிதமாண்பை உயர்த்திப் பிடித்தார், தனிநபர் முடிவெடுத்தலையும், தனிமனிதரின் பொறுப்புணர்வையும் முன் முன் வைத்தார்.’

ரிட்சியின் புத்தகத்தை தொடர்ந்து படித்த பொழுது பின்வரும் ஒரு பத்தியை கவனித்தேன்,

‘1926-ன் இறுதியில் முற்போக்கு இத்தாலியின் கதை முடிந்திருந்தது. முசோலினி அதிகாரத்தை ஒன்று குவித்திருந்தார், தனது சர்வாதிகார ஆட்சி தொடர்வதற்கான சட்டமுறைமைகளை இறுதி செய்திருந்தார். அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன, பத்திரிகை சுதந்திரம் நொறுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளின் பற்கள் பிடுங்கப்பட்டிருந்தன நாடாளுமன்றமோ ஆளுமையற்றிருந்தது. 1927-ல் கிட்டத்தட்ட எந்தவொரு அரசியல் நடவடிக்கையுமே சாத்தியமில்லாத நிலை உருவானதுடன் விமர்சனபூர்வமான கருத்துக்களை தனிமடல்களிலோ, பொது இடங்களிலோ வெளிப்படுத்துவது கூட ஆபத்தானதாக ஆனது. அரசின் கொள்கை முடிவுகளுக்கு முரணான பார்வைகளை வெளிப்படுத்தும் அரசாங்க ஊழியர்கள் பணியிழப்பை சந்திக்க வேண்டியிருந்தது.‘

‘உள்துறை அமைச்சகத்தின் கீழ், தலைமை காவல் அதிகாரியின் பொறுப்பிலிருந்த மறுசீரமைப்பு செய்யப்பட்ட, வலுவான காவல்துறை போக, கூடுதலாக புதிய, செயல்திறன் கொண்ட ரகசிய காவல் அமைப்பு ஒன்று OVRA என்ற விந்தையான, பீதியூட்டும் பெயரில் உருவாக்கப்பட்டது. பாசிச எதிர்ப்பின் சிறு துளியையும் கூட ஒடுக்கியழிப்பதையும், எதிர் கருத்துக்களை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டது இந்த அமைப்பு. ஒரு லட்சத்துக்கும் மேலானோர் தொடர்பான தகவல்களை சேகரித்து கோப்புகளை தயாரித்நாதது. அதில் பாசிச தலைவர்களும் அடங்குவர். அதனடிப்படையில் சிறப்பு புலனாய்வாளர்கள், உளவாளிகள், காட்டிக் கொடுப்பவர்களைக் கொண்ட விரிவான, நுட்பமான வலைப்பின்னலை உருவாக்கியிருந்தனர். இது இத்தாலி முழுவதும் மட்டுமின்றி அதன் எல்லை கடந்தும் பரந்து விரிந்திருந்தது.’

ரிட்சியின் மேற்படி வார்த்தைகளை எனது எழுத்தில் பெயர்த்துக் கொண்டிருந்த போதுதான், இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் தனது சொந்த குடிமக்களை நேரடியாக உளவு பார்க்கும் வசதியை ஏற்படுத்தி கொள்வதற்காக ரூபாய் 50,000 கோடியை நிதியமைச்சகத்திடம் கேட்ட செய்தி வந்தது. மாநில அரசுகளுக்கு முறைப்படி தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரமறுத்து வரும் சூழலில், நடப்பிலிருக்கும் முறைகளைக் கொண்டே உள்துறை அமைச்சகம் தனது அதிகாரத்தை படு கேடாக பயன்படுத்தி சுயேச்சையான சிந்தனையாளர்கள் மீதும், செயல்பாட்டாளர்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் பொய் வழக்குகளை சுமத்தி வரும் சூழலில் இந்த கோரிக்கை வருகிறது.

இத்தாலி பாராளுமன்றத்தை 1929-ல் ரிட்சி இவ்வாறு விவரிக்கிறார், ‘அரசாங்கத்தின் முடிவுகளுக்கு தலையாட்டும் பொம்மையானது பாராளுமன்றம். மிச்சமிருந்த சொற்ப எதிர்க்கட்சியினரின் பேச்சுக்கள் ஒன்று புறக்கணிக்கப்பட்டன அல்லது அவையில் எழுப்பப்பட்ட பெருங்கூச்சலாலும், பார்வையாளர் அரங்கத்திலிருந்து எநாழுந்த ஆரவாரத்தாலும் தட்டி அமுக்கப்பட்டன.’

தந்தையர் நாட்டுக்கு புகழ்

பேபியோ பெர்னான்டோ ரிட்சியின் புத்தகம் ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் குறித்தது. ஆகவே வேறு நாட்டுனான, குறிப்பாக ஜெர்மனியுடனான ஒப்பீட்டை அப்புத்தகம் தவிர்த்திருந்தது.

ஆயினும், ஓரிடத்தில் எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘இத்தாலிய பாசிசம் தொடர்ந்து ஊடுருவி வளர்ந்து வந்த ஒரு தன்னதிகார அரசை உருவாக்கியிருந்தது. ஆனால், சமூக முழுமைக்குமான ஒரு முற்றதிகார மாறுவதற்கான நேரமோ, பலமோ கூட இத்தாலிய பாசிசத்திற்கு இருக்கவில்லை.’ இதன் பொருள் ஒன்றுதான், முசோலினியின் இத்தாலி எவ்வளவு கேடானதாக இருந்த போதும் அது ஹிட்லரின் ஜெர்மனிக்கு ஈடான சீரழிவை அடையவில்லை.

ரிட்சியின் புத்தகத்திற்நாகு பிறகு, டேவிட் கில்மோர் எழுதியதொரு அருமையான புத்தகத்தை வாசித்தேன். ‘The pursuit of Italy’ என்ற அப்புத்தகம்இத்தாலியின் ஆரம்பகாலம் தொட்டு , வாசிப்பார்வத்தை சுண்டியிழுக்கும், விரிவான வரலாற்றை முன் வைக்கிறது. இப்புத்தகத்தின் 400 பக்கங்களில் 30 பக்கங்கள் முசோலினி அதிகாரத்திலிருந்த காலத்தை குறித்து எழுதப்பட்டிருந்தது. ரிட்சியின் புத்தகத்தை போலவே, கில்மோரின் புத்தகமும் அன்றைய இத்தாலி பற்றி விவரித்தவை இதயத்தை உறையச் செய்யும் வகையில் இன்றைய எனது சொந்த நாட்டுடன் ஒப்பிடக் கூடியவையாக இருந்தன.

இந்தக் குறிப்புகளை பாருங்களேன், ‘1930களில் ஆட்சியாளுகை நடவடிக்கைகள் மேலும் மேலும் ஆடம்பரக் கூத்தாக மாறின. நிறைய பேரணிகள், நிறைய ஆடை அணிகள், நிறைய கருத்து தணிக்கைகள், நிறைய அதிகாரக் கொக்கரிப்புகள், தலைவரிடமிருந்து நிறைய உரைகள், கூடியிருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி உப்பரிகையிலிருந்து நிறைய ஆணவக் கூச்சல்களும், கையசைப்புகளும், முகபாவனைகளும். ஒவ்வொரு முறையும் ‘தந்தையர் நாட்டின் புகழ் ஓங்குக’ என முசோலினி சொல்லும் போதெல்நாலாம் அம்மக்கள் கூட்டமோ ‘தலைவர், தலைவர்’ என உச்சாடனமிட்டது.’

கிட்டத்தட்ட இதேதான் மோடியின் ஆட்சியிலும் நடப்பதை பார்க்கலாம், குறிப்பாக 2019-ல் இரண்டாவது முறை வென்ற போது, மோடியின் ஒவ்வொரு வார்த்தையும் ‘மோ..டி! மோ..டி!
மோ..டி!’ என வாழ்த்தைப் பெற்றது.

மோடி முசோலினி
மோடி

இத்தாலிய வாய்ச்சொல் வீர்ர்களின் பேச்சுக்கு இத்தாலிய மக்கள் மயங்கியதன் மர்மம் என்ன? இதற்கு கில்மோரின் பதில் இதுதான்; ‘முசோலினியின் நீண்ட கால வெற்றிக்கு காரணம், அவர் இத்தாலிய கூட்டு மனநிலையின் குறிப்பான அடையாளங்களை பிரதிபலித்தார்; தாராளவாத அரசியல்வாதிகளும், குற்றுயிரும், குலையுயிருமான ஒரு அமைதியை இத்தாலியின் மீது திணித்திருந்த இத்தாலியின் போர்க்கால கூட்டாளிகளும் இத்தாலிக்கு நியாயமாக கிடைத்திருக்க வேண்டியவற்றை நீண்டகாலமாக தடுத்து ஏமாற்றினர் என நம்பிய தலைமுறைகளின் நம்பிக்கையையும், அவநம்பிக்கையையும் அவர் உருவகப்படுத்தினார்.’

இதே வழிமுறைகளின் படி, புராண காலத்தில் இருந்ததாக சொல்லப்படும் பொற்கால இந்தியாவில் இந்துக்கள் இங்கும், வெளிநாடுகளிலும் மேன்மை பெற்று விளங்கினர், பிறகு இசுலாமிய மற்றும் பிரிட்டிஷ் ‘ஆக்கிரமிப்பாளர்’களால்தான் இந்துக்கள் சீர்குலைந்து போயினர் என்ற கதையில் வெற்றிகரமாக தன்னை பொருத்திக் கொண்ட மோடி, ஊழலும் கிரிமினல்மயமுமான காங்கிரஸ் அரசியல்வாதிகளால் இந்துக்களும், இந்தியாவும் மீண்டும் படுகுழியில் விழும் என தன்னை அவர்களுக்கு எதிரானவராக நிறுத்திக் கொண்டார்.

1920-ன் இத்தாலி பற்றிய இப்புத்தகத்தை 2020-ன் இந்தியாவில் படிக்கும் போது, இரண்டு நாடுகளுக்குமான பொருத்தங்களை பார்த்து நான் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன்.

ஆனால், சில வேறுபாடுகளை பார்க்கும் போது ஆறுதலடைந்தேன்.

முசோலினியின் இத்தாலி போல இல்லாமல், மோடியின் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியானது பிறகட்சிகளின் அரசியல் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது; அந்த எதிர்க் கட்சிகளின் அதிகாரம் மத்தியில் வெட்டி குறுக்கப்பட்டு இருந்த போதிலும், இந்திய ஒன்றியத்தின் முக்கியமான ஆறேழு மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த செல்வாக்குடன் அவை உள்ளன. பத்திரிகைத் துறை காயடிக்கப்பட்டுள்ள போதிலும் அது முற்றிலும் முடங்கிப் போய்விடவில்லை. முசோலினியின் இத்தாலியில் எதிர்ப்பின் குரலாக பெனிடெட்டோ க்ரோசெ மட்டுமே இருந்த நிலைக்கு மாறாக இந்தியாவிலோ குடியரசின் ஆதாரக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் குரலாக குடியரசின் பல மொழிகளிலும் ஒலிக்கும் பல எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் இன்னும் உள்ளனர்.

‘In tha Pursuit of Italy’ புத்தகத்தில், முசோலினி அதிகாரத்தை ஒன்று குவித்த விதம் பற்றி விளக்கிய பிறகு கில்மோர் பின்வருமாறு சொல்கிறார், ‘பாசிசத்தின் கவர்ச்சி மங்கிப் போனது, ஏனெனில் அது நாட்டை வளப்படுத்துவதில் தோல்வியுறுகிறது. தாங்கள் மிகச் சிறந்த அரசு நிர்வாகத்தில் இருப்பதாக இத்தாலியர்களை நம்ப வைக்க முடியும், ஆனால் மேம்பட்ட வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்ப வைப்பது முடியாது.’

முசோலினி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதிலும் தோல்வியடைந்தார். மோடியோ இன்னும் மோசம், நாட்டின் பொருளாதாரத்தை படு வீழ்ச்சியடையச் செய்துள்ளார், முன்யோசனையில்லாத, பரமார்த்த குரு பாணி கோமாளித்தனமான நடவடிக்கைகளால், இந்தியா கடந்த முப்பதாண்டுகளில் தாராளவாத பொருளாதாரத்தால் அடைந்திருந்த வளர்ச்சிகளை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டார்.

லட்சக்கணக்கான இளைஞர்கள் இன்று மோடியின் தீவிர பக்தர்களாய் அவரை பின் தொடர்கிறார்கள். அவர்களின், நம்முடையதும் கூட, தலைவிதி என்னவென்பதை இத்தாலியின் முசோலினியை முரட்டு பக்தர்களாக தொடர்ந்த இளைஞர்களின் தலைவிதி எது என்பதாக பெனிடெட்டோ க்ரோசெ கணித்து சொன்னதிலிருந்து நாம் பார்க்கலாம்.

இத்தாலிய சர்வாதிகாரியின் சாவுக்கு பிறகு, ஒரு வழியாக அந்த ஆட்சியமைப்பு சரிந்த பிறகு, க்ரோசே துயரத்துடன் பேசியது இதைத்தான், ‘தார்மீக பலம் எனும் தங்கச் சுரங்கத்தை இந்த கொடுங்கொன்மை அரசு தவறாக வழிநடத்தி, சூறையாடி, கடைசியில் ஏமாற்றி கைகழுவிவிட்டது’.

பெனிட்டோ முசோலினியும், பாசிஸ்டுகளும் இத்தாலி இனி எப்போதுமே தமது ஆளுகையின் கீழ்தான் என நினைத்திருந்தனர். நரேந்திர மோடியும், பா.ஜ.க.வினரும் கூட அதையேதான் நினைக்கின்றனர். முடிவேயில்லாத ஆட்சியதிகாரம் பற்றிய இந்த இனிய கற்பனைகள் என்றுமே எட்டாக் கனிதான்.

ஆனால் இந்த ஆட்சியானது அதிகாரத்தில் இருக்கும் வரை அது அரசியல், சமூக, தார்மீக மற்றும் பொருளாதார விழுமியங்களில் படுபயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். முசோலினியும் அவர் கட்சியினரும் சூறையாடி விட்டுச் சென்ற இடிபாடுகளிலிருந்து மீள்வதற்கு இத்தாலிக்கு பல பத்தாண்டுகள் தேவைப்பட்டது. இந்தியாவுக்கோ மோடி மற்றும் அவர் கட்சியினர் விட்டுச் செல்ல இருக்கும் அழிவுகளிலிருந்து மீள்வதற்கு இன்னும் அதிக காலம் தேவைப்படும்.

– ராமசந்திர குஹா
கட்டுரை, படங்கள் – நன்றி : https://scroll.in/
மொழியாக்கம் செய்யப்பட்டது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்