கடந்த ஜனவரியில் தெற்கு மும்பையின் பல்வேறு இடங்களில் பொதுப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் தலைவர்கள் மற்றும் இளம் தொழில் முறை பணியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மும்பை காவல்துறை நான்கு மாதங்களுக்கு முன் ஆரம்பித்தது. தற்போது எம்ஆர்ஏ மார்க் காவல் நிலையம் அந்த வழக்குகளை மெல்ல திரும்பப் பெற்று வருகிறது.
கடந்த வாரம் காவல்துறை துணை ஆணையர் மாணவர்கள் மற்றும் சாதி எதிர்ப்பு செயற்பாட்டாளர் சுவர்னா சால்வே அடங்கிய எட்டு பேர் மீதான வழக்குகள் மீதான வெளியேற்ற நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்றார்.
இதே போல, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களைக் கண்டித்து “நுழைவாயிலை ஆக்கிரமியுங்கள்” (Occupy Gateway) போராட்டம் நடத்திய பல்வேறு செயற்பாட்டாளர்கள் மீது கொலாபா காவல் நிலையமும், எம்ஆர்ஏ மார்க் காவல் நிலையமும் பதிவு செய்திருந்த வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. துணை ஆணையர் மட்டத்திலான அதிகாரி எடுக்கும் இந்த நடவடிக்கையின் படி ஒருவர் தண்டிக்கப்பட்டால் அவரை குறிப்பிட்ட காலத்திற்கு மாவட்ட எல்லையைத் தாண்டி இருக்கச் செய்யும்படி வெளியேற்றலாம்.
மும்பை காவல்துறை பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முறை பணியாளர்கள் அடங்கிய சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தாக்கீது அனுப்பி உள்ளது. அதன்படி அவர்கள் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலான உத்தரவாதம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தது. இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நன்னடத்தையை உறுதி செய்ய வேண்டும்.
மும்பை காவல்துறை அவர்களை ” வழக்கமாக குற்றம் இழைப்பவர்கள்” என வகைப்படுத்தி, ஒரு நிர்வாக நடவடிக்கை மூலம் அவர்களுக்கு ‘வெளியேற்ற’ உத்தரவிடப் போவதாக அறிவித்துள்ளது.
காவல்துறை துணை ஆணையர் மிலிந்த் கெட்லே, ‘தி வயரிடம்’ இதுவரை எட்டு பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற்றிருப்பதாகவும், மற்றவர்கள் மீதான வழக்குகளையும் மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பெரும்பாலும் மும்பை பல்கலைக்கழகம் மற்றும் டாடா சமூக அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நடவடிக்கைகளை எதிர் கொண்டுள்ளார்கள்.
கெட்லே இந்த திரும்பப் பெறும் நடவடிக்கைகளுக்கான அடிப்படையை உறுதி செய்ய மறுத்தாலும், மும்பை காவல்துறை தகவல்கள் இவை மாநில உள்துறை அமைச்சகத்திலிருந்து, உரிமைப் போராளிகளை குற்றவாளிகளாக்கும் நடைமுறையை நிறுத்த அறிவுறுத்தி வந்த உத்தரவுப்படியே, நடைபெறுவதாகத் தெரிவிக்கின்றன.
“சமதா கலா மஞ்ச்” எனும் கலாச்சார அமைப்பைச் சேர்ந்த 24 வயது முன்னாள் மாணவி சால்வேதான் முதலில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த தாக்கீதைப் பெற்றவர். இத்தகைய நடவடிக்கைகளுக்கான (Chapter proceedings) நான்கு தாக்கீதுகளை பெற்றுள்ள சிலரில் இவரும் ஒருவர். அவரிடம் காவல்துறை 50 லட்சம் ரூபாய்க்கான உறுதிமொழி பத்திரம் கோரியுள்ளது. இதையடுத்து இவர் மீது இதே போன்ற நடவடிக்கைகளை கொலாபா, குர்லா காவல் நிலையங்களும் எடுத்துள்ளன.
வழக்கு நடைமுறைகளை திரும்பப் பெறும் முடிவை வரவேற்றுள்ள சால்வே இனிமேல் காவலர்கள் நகரில் உள்ள செயற்பாட்டாளர்களின் விவரங்களை சேகரிப்பது மற்றும் அவர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்தி விடுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
“அது எங்களுக்கு எதிராக தன்னிச்சையாக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். இப்பொழுது ஒரு சரக காவல்துறை வழக்குகளை திரும்பப் பெற்றுள்ளது. இனி மற்றவர்களும் இதைத் தொடர்வார்கள் என நம்புகிறேன்.” என்றார்.
இதுபோலவே, 26 வயதான டாடா சமூக அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவி மேகா கிர்சாகருக்கும் ரூபாய் 5 லட்சம் உத்தரவாதம் கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டிருந்தது . இவரும் ‘சமதா கலா மஞ்ச்’ அமைப்பைச் சேர்ந்தவர். அவர், வேறு சிலருடன் சென்ற வாரம் துணை ஆணையர் அலுவலகம் சென்ற போது அவர்களுக்கு எதிரான எந்த சாட்சியும் இல்லாததால் வழக்குகள் மூடப்படுவதாகக் கூறியதாகத் தெரிவித்தார். ஆனால் அவருக்கு இன்னும் துறையிலிருந்து உத்தரவு கடிதம் வரவில்லை.
தி வயர் மும்பை காவல்துறை போராட்டங்களில் பங்கேற்கும் மாணவர்களை குற்றவாளிகளாக்கும் நடவடிக்கைப் பற்றி முதன் முதலில் செய்தி வெளியிட்டது. இதில் பங்கேற்ற பலரும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக போராடியவர்கள்.
ஜனவரியில் நடைபெற்ற அந்த போராட்டம், டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கம் (ABVP) நடத்திய வன்முறைத் தாக்குதலை எதிர்த்து தன்னெழுச்சியாக நடந்த போராட்டம் ஆகும். ஏராளமான உரிமை போராளிகளும், நடிகர்களும் இந்திய நுழைவாயில் (Gateway of India) முன் கூடினர். அவர்களது பேரணி இந்திய நுழைவாயிலில் உள்ளிருப்புப் போராட்டமாக (sit-in strike) விரைவில் மாறியது. அவர்களுக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்களும் கூடிக் கொண்டே இருந்தனர். மாநில அமைச்சர் ஜிதேந்திர அவஹத் பேச்சு வார்த்தைக்கு வந்தார்.
போராட்டக் காரர்களிடம் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் பிறகு தங்கள் மீது ஒன்றல்ல பல வழக்குகள் பதியப் பட்டிருப்பதை அறிந்தனர். எடுத்துக்காட்டாக ஒரு ஆசிரியர் மீது இரண்டு வழக்குகளை பதிவு செய்தது மட்டுமின்றி அவர் மீது சேப்டர் நடவடிக்கைகளையும் காவல் துறை எடுத்திருந்தது.
எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்களை குறிவைத்து தாக்குவதாக மும்பை காவல்துறை மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பல ஆராய்ச்சியாளர்கள் இது பாகுபாடு காட்டுவதுடன், தலித்துகள் மற்றும் குறிப்பிட்ட பழங்குடி மக்கள் போன்ற ஒதுக்கப்பட்ட அடையாளம் கொண்டவர்கள் மீது அளவுக்கு அதிகமாக சமமற்ற முறையில் எடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டினர்.
பெரும்பாலான வழக்குகளில், நிர்வாக அதிகாரிகள் விசாரித்து தண்டனையை அறிவித்து விடுவர். பிறகு பாதிக்கப்பட்டவர் உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்கிலிருந்து விடுபட வேண்டும். இது பொறுமையும், பணமும் மிக அதிகமாக தேவைப்படும் ஒரு கடினமான நீண்ட நடைமுறை ஆகும். மும்பை நகரில் கூட குறி வைக்கப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களே – என்ற ஆய்வாளர்கள் ஒரு வாடிக்கையை சுட்டிக் காட்டுகின்றனர்.
– சுகன்யா சாந்தா
thewire.in தளத்தில் வெளியான கட்டுரையி்ன மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.