Aran Sei

‘இம்மியளவும் ஆதாரம் இல்லை’ – தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் விடுதலை

ரு சிறிய ஆதாரம் கூட இல்லாததால் வெளிநாட்டைச் சேர்ந்த 20 தப்லிகி ஜமாத் உறுப்பினர்களை விடுவித்து தீர்ப்பளித்திருக்கிறது மும்பை நீதிமன்றம்.

தப்லிகி ஜமாத்தைச் சேர்ந்த 20 வெளிநாட்டினருக்கு ( 10 – இந்தோனேஷியா, 10 –கிர்கிஸ்தான்) எதிராக மும்பை பெருநகர பகுதியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொலை முயற்சி, விசா வீதிகளை மீறுதல், கொரானா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட விதிகளை மீறுதல் போன்ற பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து 20 வெளிநாட்டினர் மீது ஏப்ரல் மாதத்தில் அந்தேரியில் உள்ள டி.என். நகர் காவல் நிலையத்தில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காவல் துறைக்கு தகவல் அளிப்பவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நோய்த்தொற்று காலத்தில் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றதாகவும், பல்வேறு நபர்களை பார்வையிட்டு தொற்றுநோயை பரப்பி மரணங்களை ஏற்படுத்தியதாகவும் கூறி தப்லிகி ஜாமதினர் மீது வழக்குகள் பதியப்பட்டது. கொரானா காலத்தில் அமலில் இருந்த ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகவும் மும்பை காவல் ஆணையரின் உத்தரவுகளை மீறி செயல்பட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கொலை முயற்சி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை மும்பை காவல்துறையினர் ஆகஸ்ட் மாதம் கைவிட்டனர். தப்லிகி ஜமாத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கொரானா நோய்த்தொற்றை பரப்பி மரணங்களை ஏற்படுத்தினர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை மும்பை காவல் துறையினர் ஒப்புக்கொண்டனர்.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி நீதிமன்றம் தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட விதிகளை மீறினார்கள் என்னும் ஒரு குற்றச்சாட்டை தவிர்த்து அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்ற்ச்சாட்டையும் நிராகரித்து.

எஞ்சியிருந்த ஒரு குற்றச்சாட்டு மீதான விசாரணை நடந்து வந்தது. அதன் மீதான தீர்ப்பை திங்கட்கிழமை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், அவர்கள் மும்பையில் தங்கியிருப்பது குறித்து உள்ளுர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும்,  ஊரடங்கு காலத்தில் நடைமுறையில் இருந்த பயணக் கட்டுப்பாட்டால் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாததால் மசூதியில் தங்கி இருந்ததாகவும் கூறினர். இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மசூதியில் தங்க நேர்ந்ததற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள் என்று நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் அமலில் இருந்த நடைமுறை பற்றியும் அரசாங்கத்தின் வழிமுறைகள் பற்றியும் போதுமான ஆதாரங்களை காவல்துறை சமர்ப்பித்தாலும், அவர்கள் அளித்துள்ள சாட்சிகள் வழக்கு விசாரணையை அதன் உண்மைத்தன்மையில் ஆதரிக்கவில்லை. அரசுத் தரப்பில் இரண்டே இரண்டு சாட்சிகள் இருந்தனர்,  பின்னர் அவர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊரடங்கு காலத்தில் அரசாங்கம் விதித்த வழிமுறைகளை மீறவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊரடங்கு காலத்தில் நடைமுறையில் இருந்த விதிகளையும் காவல்துறை ஆணையரின் உத்தரவுகளையும் மீறவில்லை என்பதை தெளிவுபடுத்தியதாகவும், அரசுத் தரப்பு இவர்களுக்கு எதிராக எந்த சுயமான சாட்சியின் அறிக்கையையும் பதிவு செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் சமர்ப்பித்த ஆதாரங்களிலிருந்து பேசிய நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊரடங்கு காலத்தில் எங்கும் செல்லவில்லை என்றும் எங்கும் கூட்டம் கூடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். அரசுத் தரப்பில் இருந்த இரண்டு சாட்சிகளும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊரடங்கு காலத்தில் அரசாங்கம் விதித்த வழிமுறைகளை மீறியதாக தெரியவில்லை என்று கூறியதை நீதிமன்றம் சுட்டிகாட்டியுள்ளது.

இதன்மூலம் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சிறிதளவு ஆதாரம் கூட இல்லாததால் அவர்கள் சந்தேகத்தின் நிழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூறி அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளித்திருக்கிறது மும்பை நீதிமன்றம்.

உலகின் பல்வேறு பகுதியிலிருந்து தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் ஆண்டுதோறும் நடக்கும் மாநாட்டிற்காக மார்ச் மாதம் புது தில்லியில் உள்ள நிஜாமூதினுக்கு வந்தனர். அதே சமயத்தில் தான் இந்தியாவில் கொரானா நோய்த்தொற்று பெருகிக்கொண்டிருந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இந்த நோய்த்தொற்றை பரப்புகிறார்கள் என்னும் விஷம பிரச்சாரத்தின் இலக்குகளாக இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் மாறினர்.

ஏப்ரல் மாதம், மத்திய உள்துறை அமைச்சகம் புது தில்லியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் பல வெளிநாட்டு தப்லீகி ஜமாத் உறுப்பினர்கள் மீது வழக்குகளை பதிவு செய்ய தொடங்கினர். இருப்பினும் இந்த வழக்குகள் நீதித்துறையால் தள்ளுபடி செய்யப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பை உயர்நீதி மன்றம் தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட 9 வெளிநாட்டு உறுப்பினர்கள் மற்றும் 6 இந்தியர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்கை ரத்து செய்திருந்தது.

”அரசாங்கம் தொற்றுநோய் அல்லது பேரழிவு காலத்தில் ஒரு பலிகடாவை கண்டுபிடிக்க முயற்ச்சிக்கிறது. மேலும் இவர்கள் வெளிநாட்டினர் என்பதால் இவர்கள் பலிகடா ஆக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை சூழ்நிலைகள் காட்டுகின்றன ” என்று மும்பை உயர்நீதி மன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் குறிப்பிட்டிருந்ததாக தி வயர் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்