Aran Sei

குடியிருப்புகளின் சாதிப்பெயர்களை நீக்க மஹாராஷ்ட்ரா முடிவு – செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்

1995 ஆம் ஆண்டு, சிவ சேனா கட்சி மஹாராஷ்டிராவில் ஆட்சிக்கு வந்த போது, ஆங்கில ஏகாதிபத்திய அரசளித்த அடையாளத்தை களைய வேண்டும் என்றும் மஹாராஷ்டிரா  பாரம்பரியத்தோடு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும், பம்பாய் என்ற பெயரை மும்பை என மாற்றம் செய்தது.

பாரதிய ஜனதா கட்சியின் ஆதித்தியநாத், உத்திர பிரதேசத்தில் ஆட்சி அமைத்த போது, தன்னுடைய இந்துத்துவா சித்தாந்தத்தை நிலைநாட்ட, அலஹாபாத்தை, ப்ரயாக்ராஜ் எனவும், முகல்சராயை, பண்டிட் தீன் தயால் உபத்யாயா நகர் எனவும் பெயர் மாற்றம் செய்தார்.

இப்போது, மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைத்திருக்கும் மூன்று கட்சிகளின் கூட்டணி, அதன் கவனத்தை சாதியின் பக்கம் திருப்பியுள்ளது. டிசம்பர் இரண்டாம் தேதி, முதலமைச்சர் உத்தவ் தாக்ரேயின் அலுவலகம், மஹாராஷ்டிராவில் சாதியை வைத்து பெயரிடப்பட்ட ஊர்களை பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது.

`குடியிருப்புப் பெயர்களில் சாதி நீக்கம்’ – மகாராஷ்ட்ரா அரசின் முற்போக்கான திட்டம்

”மஹர்வாடா”, “ப்ராமண்வாடா” மற்றும் “மலி கல்லி” என பெயர் சூட்டப்பட்டுள்ள பகுதிகளுக்கு, பீம் நகர், சமதா நகர் மற்றும் கிராந்தி நகர் என முற்போக்கான பெயர்கள் சூட்டப்படும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.

“மக்களின் சாதிய மனநிலையை மாற்றி, அப்படியே சாதி அமைப்பை ஒழிக்க வேண்டும் என்பதுவே இத்திட்டத்தின் நோக்கம்” என்று  மஹாராஷ்டிராவின் சமூக நீதி அமைச்சர் தனஞ்செய் முந்தே கூறியுள்ளார்.

இது செயல்படுமா? மஹர்வாடா எனும் ஊரின் பெயரில் இருந்து ‘மஹரை’ எடுத்துவிட்டால், கிராம மக்கள், தலித் மஹர் சாதியை சேர்ந்தவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது மாறிவிடுமா?

மஹாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் உள்ள சாதி எதிர்ப்பு தலைவர்கள், ஊர்களின் பெயர்களை மாற்றுவதனால் ஒரு மாற்றமும் வரப்போவதில்லை என்று கூறியுள்ளனர்.

மும்பை  நகரில், சாதி பெயர்களை கொண்ட பகுதிகளில் வசிப்பவர்களும்,  பெயர் மாற்றத்தினால் பெரிய தாக்கமோ, மாற்றமோ வரப்போவதில்லை என்றே சொல்கின்றனர்.

குஜராத் : ‘உனக்கு எதற்கு உயர் சாதிப் பெயர்’ – தாக்கப்பட்ட தலித் இளைஞர்

“என்னுடைய ஊரை பல வருடங்களாக, ஒருவேளை நூற்றாண்டுகளாக கூட,  அக்ரிபாடா என்று தான் சொல்கிறார்கள்” என்கிறார் மும்பையின் சாண்டா க்ரூஸ் பகுதியில் உள்ள சேரிக் குடியிருப்பில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான ராம் குமார் வெர்மா. “அவர்கள் பெயரை மாற்றினாலும், நாங்கள் பழைய பெயரை தான் பயன்படுத்துவோம், இப்படி இருக்கும் போது எதற்காக பெயரை மாற்ற வேண்டும்?” என்று கேட்கிறார்.

வட கொங்கண் மண்டல மீனவ சாதியான ‘அக்ரி’யில் இருந்து தான், மும்பை சாண்டா க்ரூஸில் உள்ள ‘அக்ரிபாடா’ வந்தது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த இடம் பெயர்ந்த தொழிலாளியான வெர்மாவை போல, பற்பல சாதிகளையும், இனங்களையும் சேர்ந்தவர்களுக்கு அக்ரிபாடா சேரி வீடாக உள்ளது. பெயர் மாற்றுவது, இடைஞ்சலை மட்டுமே உருவாக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

“அக்ரிபாடாவிற்கு வர நினைப்பவர்களுக்கு பெரிய குழப்பங்கள் உண்டாகும்” என்கிறார் வெர்மா.

இரண்டாவது, அக்ரிபாடா தெற்கு மும்பையில் உள்ளது. பேருந்து நிறுத்தம், பள்ளிக்கூடம் மற்றும் காவல் நிலையம் என அது ஒரு பெரிய ஊராகவே உள்ளது. அப்பகுதியில் பெரும்பான்மையாக வசிப்பது, நடுத்தர வர்க்க இஸ்லாமியர்களே. அவர்களில் பலருக்கும், அக்ரிபாடா என்பது சாதியினால் வந்த பெயர் என்பது தெரியவில்லை.

பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் உயிருடன் எரித்துக் கொலை: உ.பியில் மீண்டும் அநீதி

அக்ரிபாடாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் வேலை செய்பவர் மொஹ்சின் (அவர் தன் முழு பெயரை தெரிவிக்க விரும்பவில்லை). அக்ரிபாடாவின் பெயர் வரலாறு குறித்து அறிந்த போது, “அக்ரிபாடா என்பது சாதியின் பெயரில் இருந்து வந்தது என்று எனக்கு தெரியவில்லை” என்று சொல்கிறார்.

“அக்ரி மக்கள் இங்கு வாழ்ந்தார்கள், அவர்களால்தான் அக்ரிபாடா எனும் பெயர் வந்தது என்றால், அதை ஏன் மாற்ற வேண்டும்?” என கேள்வியெழுப்பி, அவருடைய ஊரின் பெயரை அரசாங்கம் மாற்றுவது அபத்தம் என்று சொல்கிறார்.

கோலி என்ற சாதியை வைத்து பெயரிடப்பட்ட , மும்பை மீனவ கிராமமான கோலிவாடாவை சேர்ந்த மக்களும் இது போன்ற கருத்துக்களையே தெரிவித்தனர்.

“அனைத்து சாதி மக்களும் இங்கே கோலிவாடாவில் வாழ்கிறார்கள். இந்த ஊரின் பெயரில் இருந்து கோலியை தூக்கிவிட்டாலும் அவர்கள் இங்கே தான் வாழ்வார்கள்” என்கிறார் கோலிவாடாவில் மளிகை கடை நடத்திக் கொண்டிருக்கும் ஷீத்தல் சவன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). “நாங்கள் மும்பையில் சாதி குறித்து யோசிப்பதில்லை. ஆனால்,  இங்கு வாழும் கோலி இன மக்களினால் இப்பகுதிக்கு இந்த பெயர் வந்துள்ளது. பெயரை மாற்றினால், அவர்களை புண்படுத்தியது போல ஆகும்” என்று அவர் கூறுகிறார்.

சவன் கூறியது சரியே. ஜுஹூவின் தாரா கோலி சமாஜ் எனும் மீனவ அமைப்பின் அலுவலகத்தின் வெளியே நின்றிருந்த மீனவர்கள் சிலர், மும்பையின் பூர்வகுடிகள் கோலி மக்கள் தான், அரசு அவ்வூரின் பெயரை மாற்றுவது அவமரியாதை செய்வது போலவே ஆகும் என்று கூறுகின்றனர்.

சாதி பெயரைச் சொல்லித் திட்டுகிறார்கள் – ஊராட்சி மன்ற பெண் தலைவர்

“கோலிவாடா எனும் பெயர் எங்களுக்கான அங்கீகாரம், எங்கள் மூதாதையர்களுக்கான அங்கீகாரம். நகரத்தில் உள்ள முக்கியமான பகுதியும் கூட” என்று கோலிவாடாவை சேர்ந்த மீனவ சங்க உறுப்பினர் ஹரேஷ் தோட்டி கூறுகிறார். “மற்ற சமூகங்களை சேர்ந்த மக்கள் இங்கு வந்து வாழ்வதில் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த ஊருக்கு எங்கள் பெயர் தான் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கிறார்.

இந்தியாவின், பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் பட்டியலில் கோலி சாதி இடம்பெற்றுள்ளது. வரலாற்றில், கோலி இன மக்கள் மேல் சாதியினரின் ஒடுக்குமுறைக்கு ஆளானதாக தோட்டி தெரிவிக்கிறார். “பிரமாணவாடா போன்ற உயர் சாதி பெயர்களை எல்லாம் அரசு மாற்ற நினைத்தால் சரி, ஆனால், தாழ்த்தப்பட்ட சாதிகளின் பெயர் உள்ள ஊர்களுக்கெல்லாம் பெயர் மாற்றம் செய்யக்கூடாது” என்கிறார் அவர்.

சாதி பெயர் உள்ள பகுதிகளை எல்லாம் பெயர் மாற்றுவதாக மஹாராஷ்டிர அரசாங்கம் அறிவித்தது பலரின் கவனத்தையும் ஈர்த்து, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பை உண்டாக்கியது என்றாலும், அரசின் இத்திட்டம் நடமுறை செய்யப்பட நீண்ட காலம் ஆகலாம்.

பல மாநில அரசு அதிகாரிகளின் அலுவலகங்களை, ஸ்க்ரோல் இணையதளம் தொடர்பு கொண்ட போது, எந்த மாதிரியான குடியிருப்புகள் பெயர் மாற்றப்படும், அவை எப்படி அடையாளம் காணப்படும், புது பெயர்கள் எப்படி நிர்ணயிக்கப்படும் என கேட்ட கேள்விகள் எதற்கும் அவர்களிடம் பதிலில்லை.

நகர மற்றும் கிராம வளர்ச்சித் துறைகள் இப்படியான ஊர்களை அல்லது குடியிருப்புகளை அடையாளம் காண வேண்டும் என அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், நகர வளர்ச்சித் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு, இத்திட்டத்தில் அவர்களுடைய வேலை என்ன என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. யார் மேற்பார்வை பொறுப்பில் இருப்பார்கள் என்றும் தெரியவில்லை.

கிராம வளர்ச்சித் துறையை சேர்ந்த ஒரு அதிகாரி, மாநில அமைச்சரவையில் இருந்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றும் கூட கூறினார். “பெயர் மாற்றுவதற்காக நாங்கள் ஊர்களின் பெயர்களை கண்டுபிடிக்கப்போவதில்லை. அது வேறு ஏதாவது துறையின் வேலையாக இருக்கும்” என்றார் அவர்.

(www.scroll.in இணைதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்