Aran Sei

ஓடிடி (OTT) தளங்கள் மீது தார்மீக கண்காணிப்பு : இந்திய தணிக்கை சகாப்தத்தின் சமீபத்திய நிகழ்வு

நெட்ஃபிளிகள் தொலைக்காட்சியில் - Image Credit : thewire.in

நாம் மகிழ்ச்சியாக இருப்பதையும், சொந்த விருப்பங்கள் கொண்டவர்களாக இருப்பதையும் இந்திய அரசு விரும்பவில்லையோ எனத் தோன்றுகிறது. மாட்டுக்கறி உண்பதிலிருந்து, பொது வெளியில் அன்பை வெளிப்படுத்துவதை வெறுப்பது வரை எழுதப்பட்ட, எழுதப்படாத தார்மீக கண்காணிப்பு விதிமுறைகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன.

இந்த வினோதமான தடைகள் “பொது நலன்” என்ற போர்வையில் வருகின்றன. ஆனால் எது பொது நலன் என்பதை யார் முடிவு செய்வது?

ஓடிடி சேவை (இணையத்தின் மூலம் திரைப்படம் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்கும் வசதி) மீது அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வரப் பார்க்கிறது. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் ஆகியவற்றின் அதிகரித்து வரும் பிரபலம் அரசின் பார்வையிலிருந்து தப்பவில்லை.

ஜூலை மாதம் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஓடிடி தளங்களில் தமது நிகழ்ச்சிகளை தாமே ஒழுங்குபடுத்திக் கொள்ளுமாறு கேளிக்கை துறையை கேட்டுக் கொண்டார். பல நிகழ்ச்சிகள் இந்தியாவையும் இந்திய சமூகத்தையும் மோசமாக சித்தரிப்பதாக அவர் கூறினார். அமைச்சருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இந்திய சமூகம் ஒரு மத்திய கால பிற்போக்கு உலகில் வாழ்வதாக காட்டும் வகையிலான நூற்றுக் கணக்கான பிற நிகழ்வுகள் நாடு முழுவதும் நடந்தவண்ணம் உள்ளன.

ஆனால், அதற்குப் பிறகு பிரச்சனை வேகமாக சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றமானது ஒன்றிய அரசுக்கும், “இந்திய இணையம் மற்றும் கைப்பேசி சங்க”த்திற்கும் தாக்கீது அனுப்பி உள்ளது.

அரசு, கடந்த வாரம் ஒரு அரசிதழ் வெளியீட்டின் மூலம் அனைத்துத் தளங்களையும் தகவல் ஒலிபரப்புத் துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இது புதிய தணிக்கை ஆட்சி பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சேபத்துக்குரிய உள்ளடக்கங்களை கையாள்வதற்கு இப்போது உள்ள சட்டங்கள், குறிப்பாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67ம், இந்திய குற்றவியல் சட்டமும், போதுமானவையாக இல்லை என்று அமைச்சர் நியாயம் கற்பிக்கலாம்.

தணிக்கைச் சட்டங்களும் நீதிமன்ற விளக்கங்களும்

இந்தியாவில் திரைப்பட சான்றளிப்பு வாரியம் (சென்சார் போர்டு) 1952-ம் ஆண்டு திரைப்ப்படவியல் சட்டப்படி அமைக்கப்பட்டது. அத்துடன் 1983-ம் ஆண்டு விதிகள், 1991-ம் ஆண்டு வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் திரையிடப்படுவதற்குத் தகுந்ததாக திரைப்படங்களுக்கு சான்றளிப்பதற்கு தணிக்கை வாரியம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

பிரகாஷ் ஜாவ்டேகர் - Image Credit : thewire.in
ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் – Image Credit : thewire.in

“ஒரு திரைப்படமோ அல்லது அதன் ஒரு பகுதியோ வரையறுக்கப்பட்டுள்ள, கண்ணியத்திற்கு எதிரானதாக இருப்பதாக, சான்றளிக்க வல்ல அமைப்பு கருதினால் அந்தத் திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது. மேலும், சான்றளிப்பு கலைத்துவமான வெளிப்பாட்டையும், படைப்பு சுதந்திரத்தையும் தேவையின்றி கட்டுப்படுத்தவில்லை என்பதையும், “சான்றளிப்பு சமூக மாற்றத்திற்கு ஏற்ப மாறுவதாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” என அச்சட்டம் கூறுகிறது.

இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட மொழிகளில் செய்தித்தாள்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசைகள் (TV channels), நிகழ்நிலை ஊடகங்கள், வானொலி நிலையங்கள், இன்னும் பலவாறான தளங்களைக் கொண்ட உயிரோட்டமான ஊடகத்துறை இயங்கி வருகிறது. இவை அரசியல் அமைப்பு சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட பாதுகாப்புடன் பல்வேறு விதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றன. காலப்போக்கில் பத்திரிகைத் துறை, கலை, நூல்கள், திரைப்படங்கள், சமூக வலைத்தளங்கள், விளம்பரங்கள் ஆகிய பலவற்றுடன் தொடர்புடைய வழக்குகள் மூலம் ஊடகத் துறை மீதான நீதித்துறை கண்காணிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தத் தீர்ப்புகளில் கருத்துரிமைக்கும், சமூக நலனுக்கும் இடையே ஒரு சமநிலையை நீதிமன்றம் வகுத்துள்ளது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம், 19(1)(a) பிரிவு அனைத்து குடிமக்களுக்கும் கருத்துரிமையையும், பேச்சுரிமையையும் வழங்குகிறது. எனினும் பிரிவு 19(2) இந்த உரிமைகளுக்கு சில குறிப்பிட்ட நிலைகளில் “உரிய காரணங்களுடன்”, அரசு தடை விதிக்கலாம் என்கிறது.

குறிப்பாக பொது ஒழுங்கு, கண்ணியம் அல்லது அறநெறி அடிப்படையில் தடையை பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. இந்தத் தடையை பிரயோகிப்பதற்காக ஒரு திரைப்படத்தை மதிப்பிடும் போது அது “ஒரு சாதாரண மனிதனின் பகுத்தறிவு, விவேகம் ஆகியவற்றினால் பார்க்க வேண்டுமே தவிர அசாதாரண, மிகைஉணர்திறன் கொண்டவரின் நிலையிலிருந்து பார்க்கக் கூடாது.”

இந்தத் தணிக்கைச் சட்டத்தின் அரசியலமைப்புத்தன்மை குறித்து முதன் முதலாக 1970-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. (கே.ஏ. அப்பாஸ் எதிர் ஒன்றிய அரசு). அப்போது நீதிமன்றம் இச்சட்டத்தின் அரசியலமைப்புத் தன்மையை உறுதி செய்ததுடன், மற்ற கலை வடிவங்களை விட திரைப்படம் அதிகமாக உணர்வை தூண்டக் கூடியது எனவே அதனை பிற கலைகளிலிருந்து பிரித்துத் தான் பார்க்க வேண்டும். அதே சமயம் தணிக்கை “சமூக நலன்” என்ற அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என எச்சரித்தது.

தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொடுமைப்படுத்தியவர்களை பழிவாங்கும் ஒரு பெண்ணின் உண்மைக் கதையை கொண்ட ‘பேன்டிட் குயின் (Bandit Queen)’ திரைப் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கித் தரப்பட்ட உத்தரவில், வெறும் ஆபாச காட்சிகளையும் துலக்கமான (graphics) காட்சிகளையும் மட்டும் வைத்து இதனைத் தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.

‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்ற வகைப்படுத்தலை அந்தத் திரைப்படத்துக்கு தயாரிப்பாளர்கள் மீண்டும் தர வேண்டும் என வாதிடப்பட்ட போது, படத்தில் வரும் நிர்வாண காட்சிகளும், கோபத்தில், ஆத்திரத்தில் கூறும் ஆபாச வார்த்தைகளும் முக்கிய கதையைக் கூறுவதற்குத்தான் பயன்பட்டிருக்கின்றன. வெறும் காட்சிகளின் உள்ளடக்கத்தை மட்டும் கொண்டு தயாரிப்பாளர்களின் கருத்துரிமையை தடுக்க முடியாது” என்று நீதிமன்றம் கூறியது.

பேண்டிட் குயின் - Image Credit : thewire.in
பேண்டிட் குயின் – Image Credit : thewire.in

இந்தத் தீர்ப்பைக் கூறிய நீதிபதிகள், அப்பாஸ் வழக்கில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முகம்மது இதயத்துல்லா கூறிய கருத்துக்களை மேற்கோள் காட்டினர். நாம் தணிக்கைத் துறைக்குக் கொடுக்கும் தர அளவீடு, கலைப்படைப்புகள் சமூகத்தையும், வாழ்க்கையையும் காட்டும்போது, எது நல்லது என காட்டும்போதே அதன் சில குறைபாடுகளையும் சேர்த்தே காட்டும் வகையில் படைப்பூக்கத்துக்கு மிகப் பெரிய வெளியை வழங்குவதற்கான சுதந்திரத்தை தருவதாக இருக்கும்படி உறுதி செய்ய வேண்டும்.” என்று அவர் கூறி இருந்தார்.

இந்த வகையில், பாலுணர்வையும், ஆபாசத்தையும் மோதவிடுவது தவறாகவே இருக்கும் என்று கூறும் தலைமை நீதிபதி, “பாலுணர்வை நிச்சயமாக ஆபாசம் அல்லது அது அநாகரீகமாகமானதாக இருந்தாலும் கூட அல்லது ஒழுக்கமீறல் என்று வகைப்படுத்துவது தவறாகும்.” என்று கூறி உள்ளார். மேலும் அவர் தணிக்கை செய்யப்பட வேண்டியது “பாலியல் வன்புணர்வு, பெரு நோய்கள், தவறான பாலுணர்வு போன்ற காரணிகளை” அல்ல. மாறாக “அந்தக் கரு எவ்வாறு தயாரிப்பாளரால் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்பதுதான் தடை செய்யப்படுவதற்கான அடிப்படையைத் தீர்மானிக்கிறது‌ என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் வந்த உச்ச நீதிமன்றத்தின் முடிவுகள், இழிவாக எழுதுவது ஆபாசமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தனித்தனி பத்திகளாக, காட்சிகளாகப் பார்ப்பதற்கு மாறாக படைப்பை முழுமையாக பார்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

இதன்படி, பேண்டிட் குயின் திரைப்படத்தை “ஒரு வலுவான மனித கதையாகக்” கருத வேண்டும். “பாலியல் வன்புணர்வும், பாலுணர்வும் அங்கே பெருமைப்படுத்தப்பட வில்லை” அவை பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையும், உணர்ச்சிக் கொந்தளிப்பும் அவள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்பதற்காகவும், குற்றம் செய்தவர்கள் வெறுக்கப்பட வேண்டும் என்பதற்காகவுமே” கவனம் குவித்து பயன்படுத்தப்பட்டுள்ளன.

தடைகளின் வரலாறு – முன்-தணிக்கை பற்றிய விவாதம்

எதிர்ப்புக் குரல் எழுப்பியதால் எத்தனைத் திரைப்படங்கள் சர்ச்சையில் சிக்காமல் இருந்தன என்பதை பின்னோக்கிப் பார்ப்போம்.

வாட்டர், உட்தா பஞ்சாப் (Udta Punjab), லிப்ஸ்டிக் அன்டர் மை பர்தா, தேஷ்துரோகி ஆகிய படங்கள் தணிக்கைத் துறையால், பொது நலன் என்ற பெயரில், சுழலில் மாட்டிய திரைப்படங்களுள் மிகச் சில. தணிக்கைத்துறையின் ஒப்புதலுக்குப் பிறகும் அரசியல் தணிக்கைக்கு எதிரான தனது போராட்டத்தை ‘தேஷ்துரோகி’ தொடர்ந்து நடத்தியது.

இந்தியாவில் கருத்துரிமை குறித்து முடிவானது வெறும் ஆதரவு – எதிர்ப்பு அடிப்படையில் எடுக்கப்படுவதாக இல்லாமல், ஒரு நுணுக்கமான அணுகுமுறை பின்பற்றப்படுவதாக இருக்க வேண்டும். நாட்டின் அடக்குமுறை மற்றும் மதப்பிளவின் வரலாற்றை நோக்கும் போது அரசு அரசியல் ரீதியான உணர்வுகளையும், ஆத்திரமூட்டும் சூழ்நிலைகளையும் கையாள வேண்டியுள்ளது என்பது உண்மைதான்.

எனினும், கலையையும், மேதமையையும் பாதித்து விடாமல் பொது ஒழுங்கையும், ஒருவர் விடாமல் அனைவருக்குமான மரியாதையையும் எப்படி பாதுகாக்க முடியும்?

சட்டப்படி, பேரணிகள், முழக்கக் கூட்டங்கள், அல்லது வன்முறைக்கான அச்சுறுத்தல்களைக் காட்டி கருத்துரிமையை ஒடுக்க முடியாது என வலியுறுத்தி அரசுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. “கருத்துரிமை என்பது அரசுக்கு எதிராக உறுதி செய்யப்பட்ட சுதந்திரம் . எனவே கருத்துரிமையை பாதுகாப்பது அரசின் கடமை ஆகும். பார்வையாளர்களின் எதிர்ப்பைக் கையாள இயலாததைக் அரசு ஒரு காரணமாக முன் வைக்க முடியாது.” (ஆரக்ஷன் திரைப்படத் தடைக்கு எதிரான வழக்கு)

பத்மாவத் படத்துக்கு எதிராக ராஜ்புட்டுகள் போராட்டம் - Image Credit : thewire.in
பத்மாவத் படத்துக்கு எதிராக ராஜ்புட்டுகள் போராட்டம் – Image Credit : thewire.in

“வெறும்” அதிர்ச்சி தரும், இடையூறு செய்யும், புண்படுத்தும் பேச்சுக்கள் குறித்த வழக்குகளை சிவில் சட்ட நீதிமன்றங்களிலேயே விசாரிக்க வேண்டும். பொறுப்பற்ற தொழில்முறைசாரா பத்திரிகையாளராலோ அல்லது ஓடிடி நிகழ்ச்சித் தயாரிப்பாளராலோ செய்யப்படும் தனியுரிமை மீறல், கௌரவத்தின் மீதான தாக்குதல், நன்மதிப்பின் மீதான அவதூறு ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

நிகழ்வுக்குப் பிந்தைய தீர்வுகளும் முன்-தணிக்கையும்.

முன்-தணிக்கைக்கான அல்லது நிகழ்வுக்கு முந்தைய ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கான விருப்பம் என்பது நாம் மக்களாட்சி அமைப்பை எந்த அளவு மதிக்கிறோம் என்பதை பொறுத்தது.

தணிக்கை முறையை வழிநடத்துவதன் அல்லது குறைந்த பட்சம் சமநிலைப் படுத்துவதன் தேவைக்கு ஆக்கபூர்வமான பொது விவாதம் உதவாதா? முந்தைய தவறான எண்ண விலங்குகளை உடைத்தெறிந்து ஆரோக்கியமான, மாற்றத்திற்கான விவாதங்களை நோக்கி முன்னேற முடியாதா?

புண்படுத்தும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் கருத்துக்கள் தொடர்பாக, கையாள்வதற்கு, தனியுரிமை மீறும், மரியாதை குறைவாக அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சுக்கள் குறித்த வழக்குகளை விசாரிக்கும் சிவில் நீதிமன்றங்களில் நிகழ்வுக்கு பிந்தைய தீர்வுகளை பெறலாம்.

இன்று, தனிப்பட்ட முறையில் பார்ப்பது பொதுப் பார்வையாக கருதப்படாத ஓடிடி தளத்தில், (அண்மையில் பத்மநாப் சங்கர் வழக்கில் கர்நாடக மாநில உயர்நீதி மன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவு), முன்- தணிக்கையை தன்னிச்சையானதாகவோ, கருத்து வெளிப்பாட்டை முடக்குவதாகவோ மட்டுமே பார்க்க முடியும்.

இந்திய பார்வையாளர்கள் உள்ளூர் நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுப்பவர்கள் அல்ல. அது போலவே உலக பார்வையாளர்களும் ஓடிடி அல்லது இணையத்தில் இந்தியத் திரைப்படங்ளையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கிறார்கள். பாலியல் கல்வி போன்ற சவூதி அரேபியா உட்பட உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு “பொது நலன்” என்ற பெயரில் அரசு இந்தியர்களின் கண்களை மூடிக் கொள்ளச் சொல்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

எது சரியான அளவீடு?

இந்திய அரசின் நிலைப்பாடு நாம் ஜனநாயகம் என பெருமைப்பட்டுக் கொள்வதை உண்மையில் பிரதிபலிக்கும். ஜனநாயக உரிமைகளைக் கொடுத்துவிட்டு, மக்கள் அதை அனுபவிக்க துணிந்தால் அவர்களை தடுக்கும் வகையில் மிகவும் கொடுமைப்படுத்துவதில் என்ன பொருள் இருக்கிறது! பொதுவில் கருத்து வெளியிடுவதில் அளவுக்கதிகமான தடுப்பு நடவடிக்கைகளுடன் கொண்ட உரிமைகள் அதிகாரிகள் அந்த தடுப்பு நடவடிக்கைகளை அரசியல் எதிர்ப்பு விமர்சனங்களை அடக்குவதற்காக பயன்படுத்தினால், அவ்வுரிமைகள் மதிப்பிழந்துவிடும்.

ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப் போல் அன்றி எதைப் பார்க்க வேண்டும் எங்கே பார்க்க வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும் என்ற முழுக் கட்டுப்பாட்டையும் ஓடிடி பார்வையாளர்கள், கொண்டிருக்கும் நிலையில் ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகளின் கலைவடிவ சுதந்திரத்தின் மீது கடுமையான தரக் கட்டுப்பாடுகளை திணிக்கப் போகிறதா அரசு!

எனவே தணிக்கைத் நியமங்களுடன் கூடவே, பல்வேறு தளங்களின் மீதுள்ள ஒழுங்குமுறை விதிகளை ஒருமுனைப் படுத்துவதே இன்றைய தேவை ஆகும். ஊடகங்களின் சுய ஒழுங்கு விதிகள் ஊடகத் துறை, நுகர்வோர் அல்லது தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட எல்லா தொடர்புடையவர்களுக்கும் எப்படி நல்லதாக இருக்க முடியும்?

உலகநாடுகளில் பின்பற்றப்படும் சில சிறந்த வழிமுறைகள் இதோ.

ஊடக சுய ஒழுங்கு என்பது அரசியல் சக்திகளின் தலையீடில்லாத சுதந்திரமான தணிக்கை நியமத்தை உருவாக்கும் முயற்சியாகும். இது அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனங்களை சமூகத்துக்கு சொந்தமான, சமூகத்தால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்களாக மாற்றிச் செல்லும் போக்கும் ஆகும்.

  1. குறிப்பாக ஒரு சுதந்திரமான ஊடகத்துறை இனிமேல்தான் உருவாக வேண்டிய நிலையில் இன்னும் உள்ள நம் நாட்டில், பொது மக்கள் மத்தியில் ஊடகங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கக்கூடிய நியமங்களை வளர்ப்பதற்கு இது உதவும்‌.
  2. அது, சுயேச்சையாக இயங்குவதற்கான பத்திரிகையாளர்களின்/ தயாரிப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் போதே, சுதந்திர ஊடகம் பொறுப்பற்றதாக இருக்காது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்ய உதவும்
  3. அது, அதிகாரத்தில் உள்ளவர்களால் அல்லாமல் சக ஊழியர்களால்‌ தவறுகள் மதிப்பிடப்படும் ஒரு தொழில்முறை பண்பாட்டை உருவாக்கும்.
  4. ஊடகங்களின் தனியுரிமை மீறல்கள் சுய ஒழுங்கு அமைப்புகளால் திருப்திகரமாக சரி செய்யப்படுவதால் இது நீதித்துறை மீதான அழுத்தத்தைக் குறைக்கும்.

சுய ஒழுங்கு அமைப்புகள் துறை வாரியாகவும் நிறுவனத்துக்குள்ளும் அமைக்கப் படலாம். அதே அளவுக்கு முக்கியமாக இந்த அமைப்புகளில் குடிமை சமூக பிரதிநிதிகளான வணிக உரிமையாளர்கள், கலைஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், தொழில்முறை பணியாளர்கள், பிற எந்த ஆர்வமுள்ள குழுக்கள் ஆகியவர்களுடன் பொதுமக்களில் இருந்து தனிநபர்களும் பங்கேற்கலாம்.

“கூரான விமர்சனங்கள் முற்றிலும் மறைந்துவிட்டால், மிதமான விமர்சனங்கள் கடுமையாகிவிடும். மிதமான விமர்சனங்கள் அனுமதிக்கப் படவில்லை எனில் மௌனம் தவறான நோக்கம் கொண்டதாகக் கருதப்படும். மௌனம் இனிமேலும் அனுமதிக்கப்படவில்லை எனில் போதுமான அளவு புகழ் பாடாதது குற்றமாகக் கருதப்படும். ஒரே ஒரு குரல் மட்டுமே அனுமதிக்கப்பட்டால் அந்த ஒற்றை குரல் பொய்யாகவே இருக்கும்.” .

இந்த மேற்கோள் 2015-ல், சாங் சுயேசொங் என்ற வெளிப்படையாக பேசும் ஒரு சீன சட்ட வல்லுநர் சீனாவில் அரசியல் அடக்குமுறை பற்றியும் சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலையையும் குறித்து எழுதிய கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. இந்தக் கட்டுரை அந்த நேரத்தில் மிகவும் தாக்கம் செலுத்துவதாக இருந்தது. பலராலும் மேற்கோள் காட்டப்பட்டது.

“ஒரு விரும்பத்தகாத கருத்தை அழிப்பதற்கான ஆகச் சிறந்த வழி அதனை திரை போட்டு மறைத்து விடுவது இல்லை, அதை பொது வெளியில் வெளியிடுவதே.” என்கிறார் பிரபல இங்கிலாந்து பத்திரிகையாளர் போலி டாயின்பீ.

– அனுபம் சாங்கி

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்