Aran Sei

மூக்குத்தி அம்மன் : புனைவின் அரசியல் – பா.பிரேம்

சினிமா மற்ற எல்லா ஊடகங்களையும் விட வெகுமக்களை மிக எளிதாகச் சென்றடையக் கூடிய ஒன்று. அதன் வழியே செய்யப்படுகிற பிரச்சாரம், கருத்துருவாக்கம், திரிபுவாதம் எல்லாமே பல மேடைகளைப் போட்டுப் பேசினாலும் கொண்டு சேர்க்க முடியாத அளவிற்கு வீரியமாகப் போய்ச்சேரக்கூடியது. அதனால்தான் சினிமாவைக் கூரிய கண்களோடு தமிழ்ச்சமூகம் அணுகவேண்டும் என்று நாம் கூறுகிறோம்.

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமானதுதான், அதை ஏன் பிரச்சனைக்குரியதாகப் பார்க்கவேண்டும் என்கிற பார்வையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளாமல் நாம் தெளிவு பெற முடியாது.

அதிலும் குறிப்பாகச் சமூகத்தில் நடக்கிற பிரச்சனைகளைப் பேசுகிறேன் என்று எடுக்கப்படுகிற திரைப்படங்களை நாம் கவனமாக அணுக வேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனில் பல கருத்துடையவர்களும் இங்கு சினிமா செய்கிற போது, மக்களின் பக்கத்தில் நின்று அரசியல் பேசுகிற சினிமா எதுவென்று நாம் சரியாகக் கணிக்க வேண்டியிருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் கமென்டரியில் ஆர்ஜே பாலாஜியின் வக்கிரம் – பா.பிரேம்

 

அந்த வகையில் அண்மையில் வெளியான `மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் மக்களின் பக்கத்தில் நின்று நேர்மையாகப் பேசியிருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். பிரச்சனையைப் பேசுவதற்காக எடுத்துக்கொண்ட கடவுளில் இருந்தே கள்ளத்தனம் ஆரம்பித்து விடுகிறது. எங்கே பார்ப்பன இந்து மதக் கடவுள்களை வைத்து இதைப் பேசினால் பார்ப்பனர்களைப் பற்றியும், அவர்களது இந்துத்துவ ஆகம விதி குறித்தும் பேசாமல் கடந்து போக முடியாது என்று தெரிந்தே தமிழர் நாட்டார் வழிபாட்டு மரபில், பௌத்த வழிபாட்டு மரபில் இருந்து வந்த அம்மனைக் கையிலெடுத்துக் கொள்கிறார்கள்.

சூரரைப் போற்று – நிழல், நிஜம் மற்றும் மேக்கிங் – இரா.முருகவேள்

 

அதனால்தான் அவர்களால் மூக்குத்தி அம்மன் கோயில் போலியான முறையில் பிரபலம் அடைந்த பிறகு, அங்கு நடக்கிற வழிபாட்டுச் சடங்குமுறைகளைக் கேலிக்கு உட்படுத்த முடிகிறது. பொய்யானதென்று சித்திரிக்க முடிகிறது. அதே இடத்தில் ஒரு விஷ்ணுவையோ, கிருஷ்ணனையோ, பெருமாளையோ வைத்து அந்த வழிபாட்டைப் பகடிக்கு உட்படுத்தியிருக்க முடியுமா?

இப்படி படத்தின் அடிப்படையே சிக்கலாக இருக்க, கிறித்தவப் பள்ளிகள் மீதும், பெரியாரிய இயக்கங்கள் மீதும் போகிற போக்கில் இந்துத்துவப் பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டுப் போகிறார்கள்.

“நான் புனித அப்பத்தைப் புசிப்பேன். நோன்பு கஞ்சி குடிப்பேன். ஆனால், கூழ் குடிக்க மாட்டேன்” என்று ஒரு கறுப்புச் சட்டைக்காரர் பேசுகிறார். அதற்கு அந்த அம்மன், “ஒரு கடவுளை ஒசத்தி, இன்னொரு கடவுளைத் தாழ்த்திப் பேசுறவனை நம்பாத” என்று வசனம் பேசுகிறது. முதலில் இந்தக் காட்சியானது படத்திற்கு முன்னும் பின்னும் தொடர்பே இல்லாமல் வலிந்து வைக்கப்பட்டது என்பதைப் பார்க்கும் யாருமே புரிந்துகொள்வர்.

அம்மன் கோயில்களில் கூழ் மட்டும் காய்ச்சுவதில்லை, கோழியடிப்பது, கிடா வெட்டுவது போன்றவையும் நடக்கின்றன. இதிலெல்லாம் பார்ப்பனர்கள் கலந்துகொள்வதில்லை. அம்மனுக்கு வெட்டப்பட்ட கோழியைச் சாப்பிடுவதுமில்லை கூழைக்கூட குடிப்பதும் இல்லை. எஸ்.வீ.சேகர் சொல்வது போல் இந்து மதத்தின் தலைமை பீடமான பார்ப்பனர்கள்  இதையெல்லாம் ஏன் செய்வதில்லை என்கிற கேள்வி எழுவது தவிர்க்க இயலாதது. அம்மனுக்குப் படைத்தவற்றைச் சாப்பிட மறுக்கும் பார்ப்பனர்களையும் கேள்விக்குட்படுத்தி இருக்க வேண்டும்.

சூரரைப் போற்று : படத்தில் நேர்மை இல்லை – ராஜ சங்கீதன் விமர்சனம்

 

அடுத்து, கிறித்தவப் பள்ளிகள் இந்துக் குழந்தைகளை மதம் மாற்றி விடுகிறது என்கிற காட்சி வருகிறது. இந்தக் காட்சிக்குப் பின்புலத்தில் இருக்கும் அரசியல் முக்கியமானது. கிறித்துவ மிஷனரிகளில் பயிலும் சிறுவர்களை மதம் மாற்றி விடுவதாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் வைக்கும் குற்றச்சாட்டு, இந்துத்துவ அடிப்படைவாதிகளின் சிந்தனையின் பிரதிபலிப்பாக இருக்கிறது. மரபான (குருகுலம்) கல்விமுறையில் இருந்து எல்லோருக்குமான கல்விக்குப் பிரிட்டிஷ் அரசு நகர்ந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு வேலை செய்ய ஆள் வேண்டியதால் நிகழ்ந்த மாற்றம் அது. கல்வி கொடுத்து மக்களைச் சுரண்டும் வர்க்க நலன் இருந்ததை நாம் அறிவோம்.

பிரிட்டிஷாரின் கல்விக்கூடத்தில் எல்லா சாதியாட்களும் படிப்பதால் ‘இந்துக்கள்’ படிக்க பச்சையப்பன் கல்லூரியைத் தொடங்கியதே வரலாறு. ‘இந்துக்கள்’ படிக்க பல சேஷாத்ரி, ராமகிருஷ்ண, விவேகானந்த கல்விக் கூடங்களை நாம் அறிவோம். சென்னை ஐஐடி போன்ற இந்தியாவின் உயர் கல்விநிறுவனங்களில் யாருடைய ஆக்கிரமிப்பு இருக்கிறதென்பது நாம் அறிந்ததே. மதம் மாற்றுவதைக் கேள்விக்குட்படுத்த முனைபவர்கள், சொந்த மதத்தில் ஏன் இப்படியான பாகுபாடுகள் இருக்கிறதென்றும் பேசி இருக்கவேண்டும்.

படத்தின் முக்கியமான பிரச்சனையான பகவதி பாபாவின் பஞ்சவனம் திட்டத்திற்கு வருவோம். இதைத் தொட்டதால்தான் பல இடதுசாரித் தோழர்களுக்குப் படம் பிடித்துப் போய்விட்டது. கார்ப்பரேட் சாமியார்களைத் தோலுரித்து விட்டதாகப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், தோழர்களுக்கே விபூதி அடித்திருக்கிறார் இயக்குநர்.

11,000 ஏக்கர் விவசாய நிலத்தை ஒரு சாமியார் அபகரிக்கப் பார்க்கிறான் என்றால், அந்தந்தப் பகுதியில் இருக்கிற இடதுசாரித் தோழர்களும் விவசாயிகளும் சும்மா இருப்பார்களா? உதாரணத்திற்குக் கோவை வெள்ளையங்கிரி மலையடிவாரத்தை மொட்டையடித்த சத்குரு ஜக்கிவாசுதேவை எடுத்துக்கொள்வோமே, அங்கு அந்த அநியாயத்திற்கு எதிராக முழுமூச்சாகக் களத்தில் நின்றவர்கள் இடதுசாரித் தோழர்களே. இப்போதும் கூட அங்கு அவர்களே போராடிக்கொண்டிருக்கிறார்கள். உண்மை இப்படி இருக்கும் போது தெரியாமல் கூட அங்கு அவர்கள் போராடுவது மாதிரி வைக்காதது உள்நோக்கமன்றி வேறென்ன?

நாயகன் உள்ளூர்த் தொலைக்காட்சியில் நிருபராக வருகிறார். இதில் அபத்தம் என்னவெனில், 11000 ஏக்கர் நிலம் பறிபோவதைப் பற்றி யாரோ ஒரு முதியவரை மலை உச்சியில் வைத்து, நாயகனே சொல்லிக்கொடுத்துப் பேச வைத்து வீடியோ பதிவு செய்கிறார். இதைவிட விவசாயிகளை, எளிய மக்களை முட்டாள்களாகச் சித்திரிக்க முடியாது.

கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையில் புரோக்கர் எதற்கு? என்று கடிந்து கொள்கிறவர்கள், நூற்றாண்டுக் கணக்காகக் கடவுளுக்கு நாங்கள்தான் புரோக்கர்கள், எங்கள் பாஷையே கடவுளின் பாஷை என்றெல்லாம் விடாப்பிடியாக மல்லுக்கட்டி அடித்து ஆகம விதிப்படி என்று ஆண்டாண்டுக் காலமாக ஊழலில் திளைக்கிற பார்ப்பனர்களை எந்த இடத்திலும் கேள்விக்குட்படுத்தவே இல்லை.

இப்படி படம் பேசுகிற முக்கியமான பிரச்சனைகளில் எல்லாம் புரிதலற்ற அல்லது நேர்மையற்ற உருவாக்கமே துருத்திக்கொண்டு தெரிவதால், மூக்குத்தி அம்மன் நம் கைகொண்டு நம் கண்ணையே குத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இங்கு ஜக்கியைத் தொடலாம்.. அம்மனைத் தொடலாம்.. ஆனால் அதேபோல கடவுளை வைத்து நிறுவனமாக இருக்கிற சங்கராச்சாரியாரையோ, பெருமாளையோ தொட முடியாது என்பதில் இருக்கிறது பார்ப்பனீயம்.

– பா.பிரேம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்