Aran Sei

பண மோசடி மற்றும் மூடநம்பிக்கை குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 அமர்வு நீதிபதிகள் – கைது செய்யப்படவுள்ளனர்

Image credit : thewire.in

த்தாண்டுகளுக்கு முன் மூன்று மாவட்ட நீதிபதிகள், அவர்கள் ஒரு கோவில் அறக்கட்டளையின் உறுப்பினர்களாகவும் இருந்த போது, மூடநம்பிக்கை, நிதி கையாடல் ஆகியவை அடங்கிய மிக விசித்திரமான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. பத்தாண்டுகள் போராட்டமும் பாம்பே உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையின் சாதகமான உத்தரவும் இப்போது இது தொடர்பாக வழக்குப் பதிவுக்கு வழி வகுத்துள்ளது. மகாராஷ்டிராவின் பல்வேறு நீதிமன்றங்களில் இன்னும் தொடர்ந்து பணியாற்றி வரும் இந்த நீதிபதிகள் எந்த நேரமும் கைது செய்யப்படலாம்.

இந்த மூன்று அமர்வு நீதிபதிகளில் ஒருவரான நிதின் திரிபுவன், காவல்துறை நடவடிக்கையை எதிர்பார்த்து அவசரமாக முன் பிணைக்கு வேறொரு அமர்வு நீதிமன்றத்தில் மனு போட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், அந்த நீதிமன்றம் “அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிக தீவிரமான தன்மையுடையவை” என்று கூறி அவரது மனுவை நிராகரித்து விட்டது. தற்போது நான்தேட் மாவட்டத்தின் காந்தார் எனும் ஊரில் கூடுதல் அமர்வு நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரிபுவனை காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையான அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளை பத்தார்டி காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.

திரிபுவன் 2010-ம் ஆண்டிலிருந்து மேற்கு மகாராஷ்டிராவின் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மொஹ்தா தேவி கோவிலின் நிர்வாகி அல்லாத அறங்காவலர்களில் ஒருவராக இருந்தார். அவருடன், அப்போது அகமத்நகரின் முதன்மை நீதிபதியாக இருந்த நாகேஷ் நாவ்கர் என்பவரும், மற்றொரு நீதிபதியும் அக்கோவிலின் அறங்காவலர்களாக இருந்தனர். இவர்கள் மற்ற அறக்கட்டளை உறுப்பினர்களுடன் சேர்ந்து கோயிலின் பெண் கடவுளின் சக்தியை “பெருக்க” சிலைக்கு அடியில் புதைக்க, இரண்டு கிலோ தங்கத்தை அறக்கட்டளையின் பணத்திலிருந்து வாங்க சட்டவிரோதமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

உள்ளூர் சாமியார் பிரதீப் ஜாதவ் என்பவர், ஸ்ரீ ஜகதம்பா தேவி சர்வஜனிக் அறக்கட்டளை என பொதுவாக அறியப்படும் மொஹ்தா தேவி அறக்கட்டளையிடம், 2 கிலோ தங்கத்தில் ஒரு ஆயுதத்தை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த விசித்திரமான சடங்கை செய்ய மேலும் 25 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது.

இந்த ஒட்டு மொத்தச் சடங்கும் முறையான ஒப்பந்த புள்ளிகளை கோராமலும், அனுமதி பெறாமலும் நடைபெற்றது என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை விட முக்கியமாக, இந்தச் செயல் அறக்கட்டளையின் செயல்முறை நடவடிக்கைகளில் இல்லை.

இந்த வழக்கில் நாவ்கர் (நவல்கர் என முதல் தகவல் அறிக்கையில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தேசிய நீதித்துறை தரவு சட்டக இணைய தளத்தின் படி தற்போது நாவ்கர் மும்பை தொழில் நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மொஹ்தா தேவி கோவில் நீண்டகாலமாக சர்ச்சைகளுக்கு உள்ளாகி வந்தது. இந்தப் பிரச்சினை வெளிச்சத்திற்கு வரும் முன்பே முறைகேடுகளும், நிதியை தவறாக கையாள்வதும் நடைபெறுவதாக இருமுறை மாநில சட்டப்பேரவையில் பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றில் விசாரணைக்குக் கூட உத்தரவிடப்பட்டது.

எனினும், காவல்துறை நடவடிக்கை எடுப்பது இதுவே முதன்முறையாகும். ஜாதவ், இன்னொரு அறங்காவலர் சந்தீப் பால்வே ஆகிய இருவரும் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்தார்டி தாலுக்காவின் மொஹோடே கிராமத்தில் உள்ள இந்த அறக்கட்டளையின் நிர்வாகி அல்லாத அறங்காவலராக திரிபுவன் இருந்த 2010 லிருந்து இந்த வழக்கின் பின்னணி துவங்குகிறது. அவர் தனது முன் பிணை மனுவில், தான் நிர்வாகி அல்லாத உறுப்பினர்தான் என்பதாலும், முக்கியமான முடிவுகளை இயக்குனர்தான் (இது நடக்கும் போது இயக்குனராக இருந்தவர் நாவ்கர்) எடுப்பார் என்பதாலும் கைது செய்யப்படுவதிலிருந்து நீதிமன்ற பாதுகாப்பு வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதனைக் கடுமையாக எதிர்த்த காவல்துறை, குற்றம் சாட்டப்பட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள ஜாதவ் மற்றும் பால்வே ஆகிய இருவரும், திரிபுவன் மற்றும் கைது செய்யப்பட வேண்டிய வேறு சிலருக்கு எதிராக “முக்கியமான தகவல்களை” வெளியிட்டுள்ளதாக வாதிட்டது.

காவல்துறை பிரதிநிதியாக இந்த வழக்கில் வாதாடிய அரசுத் தரப்பின் தலைமை இயக்குநர், எஸ். கே. பாட்டீல், “திரிபுவன் உள்ளிட்ட எல்லா அறங்காவலர்களும்” சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன், சட்டவிரோத தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளனர். 2010, செப்டம்பர் 12 மற்றும் 2010, டிசம்பர் 12 ஆகிய இரு தேதிகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திரிபுவனின் கையெழுத்து உள்ளது,” என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

2010-ம் ஆண்டிலேயே இந்த பிரச்சனை துவங்கியது என்றாலும், இது பற்றிய செய்திகள் மராட்டி நாளிதழான லோக்மத்தில் 2017-ம் ஆண்டு வெளியான போது கொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் தோற்றுவித்த அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (AniS) இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அறக்கட்டளை ஆணையர் அலுவலகத்தை அணுகிய போது இந்தப் பிரச்சினை முதல்முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. பல ஆதாரங்களைக் கொடுத்த பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் சிவசேனா கட்சியின் தலைவர் நீலம் கார்ஹே (அப்போது சிவசேனா பாஜக வுடன் கூட்டணியில் இருந்தது) சட்டப்பேரவையில் இந்த பிரச்சனையை எழுப்பிய போதுதான் இந்த வழக்கு சிறிது உத்வேகம் பெற்றது.

அதனை அடுத்து, 2019-ல் பத்தார்டியைச் சேர்ந்த நாம் தேவ் கராட், அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவுரங்காபாத் அமர்வு நீதிமன்றத்தை அணுகினார். அவர் தனது குற்றவியல் தடையாணை மனுவில் பல்வேறு பொருத்தமான கேள்விகளை எழுப்பி இருந்தார். அதில் மூட நம்பிக்கையை முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகக் கூறியிருந்தார். நீதிமன்றம் இதனுடன் ஏற்கனவே அறக்கட்டளை ஆணையரிடம் தபோல்கர் இயக்கம் கொடுத்திருந்த புகார்களையும் இணைத்து இந்த ஆண்டு துவக்கத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றம் கராட் விண்ணப்பத்தை ஏற்று இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் மகாராஷ்டிரா மனித உயிர்பலிகள் மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய, அகோரிகள் நடைமுறை, சூனியங்கள் தடுப்புச் சட்டத்தின் (2013) அடிப்படையில், ஏமாற்றுதல், குற்றவியல் நம்பிக்கை மீறல், குற்றவியல் சதி திட்டம், ‘தீய நடைமுறைகளை’ ஊக்குவித்தல் மற்றும் பரப்புதல் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

திரிபுவன் தனது முன் பிணை விண்ணப்பத்தில் சூனிய சட்டம் (Black Magic Act) குற்றம் நடந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகே கொண்டு வரப்பட்டதால் இந்த வழக்கில் அதனை பயன்படுத்துவதை எதிர்த்திருந்தார். இருப்பினும், கூடுதல் அமர்வு நீதிபதி என். எல்‌‌. காலே உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள்காட்டி திரிபுவனின் மனுவை நிராகரித்துவிட்டார்.

‘கைது ஆணைக்காக காத்திருக்கிறோம்’

மார்ச் 5-ம் தேதி திரிபுவனுக்கு எதிராக சாதகமான உத்தரவைப் பெற்ற பித்தார்டி காவல்துறை, உயர்நீதிமன்ற உத்தரவிற்காகவும், மற்ற உயர் அதிகாரிகள் இந்த பதவியிலிருக்கும் மூன்று நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க துவங்குவதற்காகவும் காத்திருப்பதாகக் கூறினர்.

காவல்துறை நீதிபதிகளை விசாரணை செய்ய குற்றவியல் நடைமுறை விதிகள் பிரிவு 197 ன் கீழ் அனுமதி பெற வேண்டும்.

பாம்பே உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஷிவ்குமார் டிகே அவர்களை தொடர்பு கொள்ள தி வயர் முயற்சித்தது. ஒவ்வொரு முறையும் அவரது அலுவலகம் ஷிவ்குமார் டிகே வேலையாக இருப்பதாகவும், அழைப்புகளை ஏற்க இயலாது நிலையில் இருப்பதாகவும் பதில் கூறினர். திரிபுவனை தொடர்பு கொள்ள செய்த முயற்சிகளும் தோல்வி அடைந்தன.

பிப்ரவரி 2-ம் நாள் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியைச் சேர்ந்த மூவரை புகார்தாரர்களாக காவல்துறை சேர்த்துள்ளது. அதில் ஒருவரான அகமதுநகரின் சங்கம்னர் என்ற நகரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சனா காவண்டே, இந்த நிகழ்வு வெறும் அறக்கட்டளையின் நிதி மோசடி தொடர்பானது மட்டுமல்ல, முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய பல்வேறு “தொந்தரவு செய்யும் நடைமுறைகளையும்” கொண்டது என்கிறார்.

“உயர்நீதிமன்றமும், காவல்துறையும் தீவிரமாக எடுத்துக் கொண்ட எங்களுடைய புலனாய்வின்படி, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாதவ் ‘கோரோஜனை’ எனப்படும் பசுவின் பித்தப்பையை ஒரு சடங்கிற்காக கேட்டதையும் கண்டறிந்தது. இதன் விலை கிராமுக்கு 2,000 ரூபாய். ஜாதவும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களும் 500 கிராம் தேவை எனக் கேட்டுள்ளனர்.”

“இந்த அளவு கோரோஜனையை அவர்கள் எங்கிருந்து பெறுவார்கள், எத்தனை பசுக்கள் கொல்லப்பட்டிருக்கும் என்பதை கண்டறிய வேண்டும்.” என்கிறார் ரஞ்சனா காவண்டே.

“இந்த வழக்கு மத நிறுவனங்களுக்கும் நீதித்துறைக்கும் இடையே பரிசோதிக்கப்படாமலே விட்டுவிடப்படுகிற ஆழமான உறவை அம்பலப்படுத்துகிறது. இது வெறும் ஒரு மாவட்டத்தில் உள்ள ஒரு அறக்கட்டளையில் மட்டுமல்ல ஏராளமான பிற அறக்கட்டளைகள் நீதித்துறை அதிகாரிகளுடன் இணைந்து அல்லது அவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான மக்கள் பணத்தை மோசடி செய்கின்றனர். இந்த வழக்கிற்குப் பிறகாவது அரசும், நீதித்துறையும் வெளிப்படையாகவும், பொறுப்புடனும் நடப்பார்கள் என நம்புவோம்,” என்கிறார் ரஞ்சனா காவண்டே.

www.thewire.in இணைய தளத்தில் சுகன்யா சாந்தா எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்