Aran Sei

மனித உரிமையா? மோடியா? என்றால், இரண்டாவதே அமெரிக்காவின் விருப்பம் – ஷாகிர் மிர்

ஜோ பைடனின் வெற்றி, தங்கள் பகுதியின் மனித உரிமைக்கு என்ன  தரப் போகிறது என்பதே காஷ்மீரின் மிகப் பெரிய கேள்வி.

‘இஸ்லாமிய தீவிரவாத நோய்’ பிடித்த ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டுப் விரட்டப்பட்டது குறித்து வியப்பும் மகிழ்ச்சியும் அடையும் காஷ்மீரிகள், அமெரிக்கா, மோடியின் இந்திய அரசு ஏற்படுத்தியுள்ள பிளவுகளுக்கு எதிராக அழுத்தம் தரும் என நம்புகின்றனர்.

ஞாயிறு காலை காஷ்மீரின் மூத்த பத்திரிக்கையாளர் யூசுஃப் ஜமீல் ஸ்ரீ நகரில் உள்ள தனது வீட்டு வாசலில் ஒரு பழைய பொருட்களை வாங்குபவர் ” இப்போது, ட்ரம்ப் மூழ்கடிக்கப்பட்டார்” என வழக்கத்திற்கு மாறான குரலில் கத்திக் கொண்டிப்பதை கேட்டார். இந்த முழக்கம், மோடியின் தேர்தல் பரப்புரையின் போது அவருக்கு எதிராக எழுப்பப்பட்ட முழக்கத்தோடு ஒத்திருப்பதை கற்பனை செய்து கொண்டே, தற்போது ட்ரம்பின் தோல்வியை கேலி செய்வதற்கு பயன்பட்டுள்ளதை கவனித்தார்.

“முரண்பாடுகள் காஷ்மீரிகளை முன்னோக்கிய உணர்வுடையவர்களாகவும், உலகம் முழுவதும் நடக்கும் அரசியலை அறிந்து கொண்டுள்ளவர்களாகவும், அது எந்த அளவு தமக்கு முக்கியத்துவம் உடையது என்பதை அறிந்தவர்களாகவும் ஆக்கி உள்ளது. அவர்களின் ஆக்கபூர்வமான நகைச்சுவையை எண்ணி வியந்து போனேன்.” என்கிறார் ஜமீல்.

அமெரிக்க அதிபர் தேர்தல் உலகின் பிற பகுதிகளில் எந்த அளவு பரபரப்பைத் தூண்டியதோ அதே அளவு காஷ்மீரிலும் தூண்டியது. ஏனெனில் ஒரு வகையில் ட்ரம்பின் அரசியல் பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அவரை நேரடியாக முஸ்லீம்களுக்கு எதிரானவராக காட்டியது. அவரது சர்ச்சைக்குரிய ‘முஸ்லீம்கள் மீதான தடை’, ஜெருசலேமில் தூதரகத்தை அமைக்கும் முடிவு, குடியேறிய முஸ்லீம்கள் குறித்த ஏளனமான கருத்து ஆகியவை ஏற்கனவே அவரை முஸ்லீம்களுக்கிடையே மதிப்பிழக்கச் செய்து விட்டது.

எனினும், காஷ்மீர் பள்ளத்தாக்கின் இந்த பெருமகிழ்ச்சி, பல மூத்த அமெரிக்க ஜனநாயக கட்சியினர் ஜம்மு காஷ்மீரில் மோடி அரசு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை வெளிப்படையாகவே உணர்ந்திருப்பதையும் வெளிக்காட்டியது‌. தொலை தொடர்பும், இணையமும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் முன்னணி முற்போக்காளர்களும், மேலவை உறுப்பினர்களுமான இவான் ஓமர், ரசீதா த்லாயிப், அலெக்சாண்டிரியா ஒகாசியோ – கோர்டஸ் முதலானவர்கள் காஷ்மீரில் மோடி அரசின் அடக்குமுறையை கண்டித்துள்ளனர்.

புதிதாகத் துணை அதிபராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், “சூழ்நிலை உருவானால்”  காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவோம் என்றும், “உலகில் காஷ்மீரிகள் தனித்து விடப்படவில்லை” என்றும் உறுதி அளித்துள்ளார். “அமெரிக்க ஒத்துழைப்புடன் கூடிய ஒரு அமைதியான தீர்வு” தேவை என பிடேனிடம் தோல்வி அடைந்த செல்வாக்குள்ள மேலவை உறுப்பினர் பெர்ரி சான்டர்ஸ்  கூறியுள்ளார். அமெரிக்க மக்களவை (காங்கிரஸ்) உறுப்பினரான ப்ரமிளா ஜெயபால் இன்னும் ஒருபடி மேலே சென்று, மனித உரிமைகளுக்கு குரல் எழுப்பி, அமெரிக்க காங்கிரசில், ஜம்மு காஷ்மீரில் உடனடியாக இணைய தடையை நீக்க வேண்டும் என்றும், காஷ்மீரில் அமைதிவழியில் போராடுபவர்களுக்கு எதிராக அதிகப்படியான அதிகாரத்தை பயன்படுத்துவதை மோடி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தையே கொண்டு வந்தார்.

காஷ்மீரிகளுக்கான அமெரிக்க ஆதரவு இத்துடன் முடிவுறவில்லை. சென்ற அக்டோபரில் அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு குழு தெற்காசியாவில் மனித உரிமைகள் குறித்து ஒரு விசாரணை மேற்கொண்டது. அதில் மோடியை ஆதரித்து பேசியவர்களுக்கு எதிராக காஷ்மீரில் அவரது அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு சூடான விவாதமாக மாறியது. அந்த குழு ஆகஸ்ட் மாதம் தங்கள் ஐயத்தை வெளிப்படுத்தி கடிதம் ஒன்றை இந்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. டாம் லான்டோஸ் மனித உரிமைகள் குழுவும் இதே போன்ற ஒரு விசாரணையை நடத்தி, “காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பிற்காக என்ற பெயரில், தேவைக்கு அதிமான இராணுவத்தை குவித்துள்ளது குறித்து விவாதித்தது.

அந்த அமைப்பு “தொடர்ந்து தொலை பேசி மற்றும் இணையத் தடை நீடித்து வருவது உள்ளிட்ட, நடுவண் அரசின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார விளைவுகள்” குறித்து கவலைக் தெரிவித்துள்ளது.

அமெரிக்க முற்போக்காளர்களின் இத்தகைய கருத்துக்களே பிடேனின் கொள்கை அறிக்கையில் ” ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை மீட்பது” குறித்த உறுதிமொழிகளை அளிக்க வைத்துள்ளது.

தவறான நம்பிக்கையா?

புல்வாமா நகரைச் சேர்ந்த மாணவர் முடாசிர் லோன், ” பிடேனினின் வெற்றியை,மிக அதிகமான காஷ்மீரிகள் நல்லதாகவே நினைக்கின்றனர். கடந்த காலத்தில் அமெரிக்க ஜனநாயக கட்சியினர் வெளியிட்டுள்ள வாசகங்களை பார்க்கும் போது, நாம் சில நல்ல மாற்றங்களை, குறிப்பாக, மனித உரிமைகள் மற்றும் குடிமக்கள் சுதந்திரம் போன்ற தளங்களில் எதிர்பார்க்கலாம்.” என்கிறார்.

ஆனால் வல்லுநர்கள் இந்த நன்னம்பிக்கை தவறான இடத்தில் வைக்கப்பட்டதாக இருக்கலாம் என நினைக்கிறார்கள். “அமெரிக்க கதிரலைக் கும்பாவில் (rador) காஷ்மீர் தெரிவதற்கு முன்பே அங்கே உள்நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் தேவையான அளவு உள்ளன.” என்கிறார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் காஷ்மீர் பற்றிய சிறப்பு ஆய்வு செய்து வரும் வரலாற்றாசிரியருமான சித்திக் வாஹித்.

“இது போன்றவற்றில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை நிலையற்றது. ஜனநாயக கட்சியினர் எப்போதும் மதிப்பு அடிப்படையிலான வெளியுறவு கொள்கையையே பின்பற்ற வேண்டும் என கோருவர். ஆனால் உண்மை நிலை இதற்கு மாறுபட்டது. நாம் ஒரு சில அறிவுரீதியான முன் யோசனைகளை வேண்டுமானால் செய்யலாம். தேர்தல் உற்சாகத்தில் ஒரு சில கருத்துக்களை வெளியிடுவது ஒருபுறம் இருக்க, அதே நபர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவர்களுக்கு அமெரிக்க உளவு நிறுவனம் (CIA) ஓதுவதைக் கொண்டு, எனது கருத்துப்படி, அவர்கள் மிக எச்சரிக்கையுடன் தான் செயல்படுவார்கள்.” என்கிறார் அவர்.

பிடேனின் வெற்றி குறித்து இந்தியாவில் நடைபெறும் விவாதங்கள், டெல்லி அமெரிக்க வெளியுறவு கொள்கையை கணக்கிடும் தளமாக மாறிவிட்டதோ

என்ற சந்தேகத்தை எழுப்பிவிட்டது. இந்தியா அச்சப்பட காரணம் உள்ளது. “குடியுரிமை திருத்தச் சட்டம், 2019, ஒரு தவறான திசையில் அடி எடுத்து வைத்துள்ள அபாயகரமான பாதை. இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தடை செய்ய வேண்டும். இந்தியாவும் குறிப்பான கவனத்தில் கொள்ள வேண்டிய நாடே.” என்று அமெரிக்காவின் மத சுதந்திரத்திற்கான பன்னாட்டுக் குழு ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ‘தி இன்டெர்செப்ட்’ மற்றும் ‘ தி பொலிடிகோ’ செய்தி நிறுவனங்கள் “இந்தியாவில் உள்ள, கருத்து ரீதியாக இணக்கமுள்ள இந்து தீவிரவாத குழுக்கள்” எந்தெந்த வழிகளில் அமெரிக்க தேர்தல் வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர் என்பது பற்றி நிறைய செய்திகளை வெளியிட்டன. மோடி அரசைப் பற்றிய, ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல் அடக்குமுறைகள் உள்ளிட்ட விவாதங்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தில் வந்தால், அவற்றை இந்திய- அமெரிக்க இன உறுப்பினர்கள் முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற நிதிஉதவிகள் செய்யப்படுகின்றன.

ஆனால் பிடேனின் கொள்கை அறிக்கையில், இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக காயை நகர்த்துவதற்கான அறிகுறி உள்ளதா? அமெரிக்க நடுவண் அரசு, மாநில அரசுகள் அல்லது உள்நாட்டுத் தேர்தல்கள் ஆகியவற்றில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த முயலும் அயல்நாட்டு நபர்கள் அல்லது அரசாங்கங்களை தடை செய்யும் சட்டங்களை வலுப்படுத்துவது மற்றும்

கடுமையான, ஒருங்கிணைந்த அமலாக்கத்தை உறுதி செய்யும், புதிய சுதந்திரமான ஒரு நிறுவனமான நடுவண் அரசு நெறிமுறைகள் குழு போன்ற ஒன்றை உருவாக்குவது ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளை எடுப்பாரா?

மோடி அரசு காஷ்மீரிகளை நடத்தும் விதம் குறித்த தனது கண்டனங்களை,  துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ‘ தி அசோசியேட்டட் பிரஸ்’ கூட கடந்த திங்கட்கிழமை (9/11/20) அன்று பிடேன், மோடியின்  சிறுபான்மையினரை அடக்குவதாக உள்ள இந்து தேசியவாத அரசியல் பற்றி மேலும் கடுமையான விமர்சனக் கருத்துடையவராக இருக்க வேண்டும்.” என செய்தி வெளியிட்டுள்ளது.

பிடேன் எழுதியுள்ள ‘அயலுறவுத் துறை’ என்னும் நூல், அவர் பின்பற்றப் போகும் நோக்கங்களைப் பற்றி மிக அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது. அதில் அவர், கடந்த சில ஆண்டுகளாக பல நாடுகளிலும், மக்கள் தலைவராக காட்டிக் கொள்பவர்களையும், வாய்வீச்சுக்காரர்களையும் கடைந்தெடுத்து, அவர்கள் அதிக வலதுசாரி சிந்தனையை நோக்கி நகர்ந்திருப்பது குறித்து கடுமையாக எச்சரிக்கிறார். மோடியை, இந்தியாவில் அத்தகைய அதீத வலது சாரி அலையின் உருவகமாக பார்க்கிறார். ” அமெரிக்கா கட்டமைத்த பன்னாட்டு அமைப்புமுறை அதன் விளிம்பு நிலைக்கு வந்துவிட்டது. ட்ரம்பும், உலகம் முழுவதும் உள்ள பிற வாய்வீச்சுக்காரர்களும், தங்கள் சுயலாபத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் இந்த சக்திகள் மீது ஊர்ந்து கொண்டிருக்கின்றனர். நான் உலகெங்கிலும் உள்ள எனது மக்களாட்சிவாத நண்பர்களை உலக நிகழ்வில் மீண்டும் மக்களாட்சியை வலிமைப்படுத்த வருமாறு அழைக்கிறேன். உலக ஜனநாயக நாடுகள், அமெரிக்கா தனது நாட்டை எவ்வாறு ஒன்றுபடுத்தியதோ அதைக் காணும் போது ட்ரம்ப் எதிரணியில் இருக்கிறார். அவர் எதேச்சதிகாரிகளின் வார்த்தைகளேயே எடுத்துக் கொண்டு, மக்களாட்சிவாதிகளை அலட்சியப் படுத்துகிறார். நவீன அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக ஊழல் மிக்க நிர்வாகத்தின் தலைமையிலிருந்து கொண்டு, எல்லா இடத்திலும் சொந்த நாட்டு வளத்தை சூறையாடுவர்களுக்கு  அனுமதி அளித்துள்ளார” என்று எழுதி உள்ளார்.

இதில், பிடேன், சீனாவுடனான “மோசமாக அறிவுறுத்தப்பட்ட வணிகப் போரை” ஆதரிக்காமல் உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக நாடுகளின் கூட்டை உருவாக்க வேண்டும். இதில் தனது ஒருங்கிணைந்த பொருளாதாரத்தால்-  மிகப் பெரும் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரமாக- வளர்ந்துள்ள சீனாவை ஒதுக்கிவிட முடியாது.” என்று கூறியுள்ளார்.

சீனக் காரணி

இந்த ஒருவரையொருவர் சார்ந்துள்ள பொருளாதாரத்தை துல்லியமான நெம்புகோலாக வைத்து சீனாவை அதன் மனித உரிமை மீறல் செயல்களயும், அவதூறைப் பரப்பும் நடத்தையையும் தடுத்து நிறுத்தும் அதே சமயத்தில் ஒன்று குவியும் அடிப்படையில் நட்புணர்வை கோர்த்து எடுக்க வேண்டும்.

ப்ரவீண் சாஹ்னி என்ற பாதுகாப்புத்துறை வல்லுநர்,” சீனாவுடனான அமெரிக்க உறவு அமைதியாகி விட்டதாக பார்க்கிறேன். இந்தியாவைப் பொறுத்த வரை அது நமது நட்பு நாடு அல்ல. ஆனால் போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த பங்காளி. நேரடியான இராணுவ கூட்டு இல்லை. சீன- அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டால் சீனர்கள் இந்தியாவை கவனிக்க அதிக நேரம் அவர்களுக்கு கிடைக்கும். சீன- இந்திய உறவு மேம்படும் என எனக்குத் தோன்றவில்லை. சீனப் படைகள் லடாக்கில் இருப்பதால் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. இது மட்டுமே சீன- அமெரிக்க உறவுகளில் முரண்பாடு வராமல் தடுக்கிறது. இந்தியாவுடன் சீனா இராணுவ ரீதியாக மோதிக் கொண்டிருப்பதால், அதைக் கொண்டே சீனாவை அமெரிக்காவை நெருங்கிச் செய்து, முன்கூட்டியே அதன் மனித உரிமை மீறல் விவகாரங்களையும், ஜனநாயக குறைபாட்டையும் சரி செய்து கொள்ள முடியும்” என்ற கூறியுள்ளார்.

அமெரிக்க தேர்தல்கள் தற்போது முடிந்திருந்தாலும் மேலவையில் யார் பெரும்பான்மை பெறுவார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. மக்களவை மீதான கட்டுப்பாட்டை ஜனநாயக கட்சியினர் மீட்டுக் கொண்டு விட்டனர். ஜியார்ஜியா தேர்தல்கள் ஜனவரியில் முடிந்த பின்பே மேலவையை கட்டுபடுத்தப் போகிறவர்கள் யார் என்பது தெரியும்.

பைடன் அதிபராகப் தேர்ந்தேடுக்கப்பட்டு விட்டாலும், ட்ரம்ப், தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக பல வழக்குகளை போட்டிருக்கிறார். தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளை புறந்தள்ளிவிட்ட ட்ரம்ப், 2008 ல் பராக் ஒபாமா பெற்றதை விட அதிக வாக்குகளை தான் பெற்றிருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். பைடனிடம் படுதோல்வி அடைந்திருந்தாலும் ட்ரம்ப் ஒரு நட்சத்திரமாகவே செயலாற்றினார். மிக மெல்லிய வித்தியாசத்திலேயே பின்தங்கி இருந்தார். பல இடங்களில் 1%குறைவான வித்தியாசமே இருந்தது. இதனால் ட்ரம்பின் மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கை சட்டப்படி நியாயமானதே.

ட்ரம்புக்கும் பைடனுக்கும் இடையிலான போட்டி ஒட்டு மொத்த வாக்கு எண்ணிக்கையின் போதும் இழுபறியாகவே இருந்தது. ட்ரம்பின் செல்வாக்கு வீழ்ந்து விட்டதாக கூறிவந்த சமயத்தில் இது வியப்பாகவே உள்ளது. 1900 களுக்குப் பிறகு, மிக அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவான நிலையில், எதிர்பார்த்தபடி ஒரு நீல அலை வீசவில்லை. இது ட்ரம்ப்வாதிகளே பெரும்பாலும் நிர்வகிக்க, பைடன் சிறகொடிந்த பறவையாகவே இருந்து விடுவாரோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. குடியரசு கட்சியினரின் கையில் மக்களவை சென்றுவிட்டால் பைடனின் உள்நாட்டுக் கொள்கைகள் யாவும் சுவற்றில் எறிந்த பந்து போல் திரும்பிவிடும். வெளியுறவு கொள்கைகளில் மட்டுமே, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் சுதந்திரமாக செயல்பட முடியும் என்கிறது ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை.

ஆனால் இதனால் இந்தியாவை எதிர்வினை ஆற்றத்தூண்டும் அளவிலான வெளியுறவு கொள்கையை அமெரிக்கா காஷ்மீர் விவகாரத்தில் கொண்டிருக்கும் என உத்திரவாதம் உள்ளதா? “காஷ்மீருக்கு என எந்த ஒரு குறிப்பான அமெரிக்கக் கொள்கையும் இல்லை” என்கிறார் ‘அப்சர்வர் ஆராய்ச்சி நிறுவனத்தின் காலித் ஷா. “அமெரிக்கா தவிர்க்க முடியாமல் இந்திய பாகிஸ்தான் பற்றிய விரிவான கொள்கையிலிருந்தே காஷ்மீரைப் பார்க்கும். போர்தந்திர அடிப்படையிலான பங்குதாரராகவே, சீனாவுக்கு எதிர் எடைகல்லாகவே டெல்லி இருக்கும். மனித உரிமைக்கு வக்காலத்து வாங்கி தனது முக்கிய போர்தந்திர நண்பனை விவாகரத்து செய்யாது. இது கடந்த காலத்தில் நடக்கவில்லை. எதிர்காலத்திலும் எப்போதும் நடக்காது. அதே வேளையில், அமெரிக்கா, ஆப்கன் அமைதி நடைமுறைக்கான கட்டாயத்தால் வழிநடத்தப்படுவதால் அதற்கு பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவு அவசியமாகும். ஏற்கனவே அமெரிக்க ஜனநாயக கட்சியினரால் மோடியின் மனித உரிமை மீறல் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை குறித்த விமர்சனங்களைப் பார்த்தோம். இதுவரை இருகட்சியினரிடமிருந்தும் இந்தியா பெற்று வந்த ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும், நிர்வாகத் தரப்பிலிருந்தும் புது டெல்லியைப் பற்றி வரும் விமர்சனங்கள், மீண்டும் ஒரு ஆகஸ்ட் 5 ஐ (காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டது) இந்தியா மேற்கொள்ள இயலாது என்பதை விளக்குகிறது.

“அமெரிக்கா இந்தியாவுடனான போர்தந்திர உடன்பாட்டை மீறி காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் விவகாரத்திற்கு முன்னுரிமை தராது. சீனாவே மிகப்பெரிய பங்காற்றப் போகிறது. அமெரிக்கர்கள் இதில் தலையிட மாட்டார்கள். மனித உரிமையா? மோடி அரசாங்கமா? என வந்தால் அமெரிக்கா இரண்டாவதையே தேர்ந்தெடுக்கும்.” என்கிறார் சாஹ்னி.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான ‘ஷாகிர் மிர்’ எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்