Aran Sei

கொரானாவை கையாளாததால் விசாரணைக்கு உள்ளாகும் பிரேசில் அதிபர் – எப்போது மோடி?

ரு ஆண்டிற்கு முன்பு, கோவிட் தொற்று பிரேசில் முழுவதும் வேகமாக அதிகரித்து வந்த வேளையில், அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ விடம் ஒரு நிருபர் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்துக் கேட்ட போது, ” அதனால் என்ன? மன்னிக்கவும். நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்? நான் தேவதூதன் (மெசையா – தனது இடை பெயரை குறிப்பிட்டு)  ஆனால் நான் அதிசயம் நிகழ்த்த மாட்டேன்.” என்று கூறினார். கடந்த செவ்வாயன்று உயிரிழப்பு 4,00,000 ஐ தொட்டபோது, இதுவரை அதிகரித்து வரும்  உயிரிழப்புகளுக்காக ஒருபோதும் மன்னிப்புக் கேட்காத அதிபரின் அணுகுமுறையில் ஒரு சிறிய மாற்றம் தெரிந்தது. ” நான் தவறு செய்யவில்லை,” என்று கூறினார். ஆனால் அதே சமயத்தில் இந்த தொற்றை ” சாதாரண ஃப்ளூ காய்ச்சல்” என்று கூறியதற்காகவும், மக்களை முகக்கவசம் அணிய வேண்டாம் என்று வலியுறுத்தியதற்காகவும் உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். கோவிட் 19 தொற்றால் இறந்த பிரேசிலிய மக்களுக்காக காங்கிரஸ் அவைகளும், உச்சநீதிமன்றமும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய போதும் போல்சனாரோவின் அமைதி நீடித்தது. ஆனால் “எதிரியைத்” தாக்குவதற்கான எந்த வாய்ப்பையும் விட்டு விடாத அதிபர், அண்மையில் அதிபர் தொற்று  நெருக்கடியை எதிர்கொண்டது குறித்து விசாரிக்க நிறுவப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழுவைக் (CPI) குறி வைத்தார். ஊரடங்கை அறிவித்ததற்கு எதிரான கண்டனங்களுக்கு  முன் இந்த விசாரணையையே கேள்விக்குள்ளாக்கிய அவர்,” நாங்கள் தொடர்ந்து முழு வேகத்தில் வேலை செய்வோம். விசாரணைக்குழு  பற்றி எங்களுக்குக் கவலையில்லை,” என்று கூறினார்.

கன்வார் யாத்திரையை ரத்து – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்த உ.பி. அரசு

2018 ம் ஆண்டு முதல் பொய்களாலும், மிரட்டல்களாலும் பிரேசிலை ஆட்சி செய்து வரும் போல்ஸ்னாரோ, வியாழக்கிழமை (29/4/20) தனது ஆதரவாளர்களுக்கு எதிர்மறை முகத்தைக் காட்ட முயன்றார். அதுவே அதிபர்  தான் சிக்கலில் இருப்பதை சுட்டிக்காட்டுவதாக இருந்தது. 27/4 அன்று உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி, தொற்று நெருக்கடியை கையாண்டதில் அரசின் செயல்பாடுகளில் இருந்த குற்றங்குறைகளை விசாரிக்க பிரேசிலின் செனட் அவை ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. 2022 தேர்தலில் வெற்றிபெற விழையும் அதிபரை இந்த விசாரணை நிச்சயமாக வலுவிழக்கச் செய்யும்.

பிப்ரவரி 2020 லிருந்தே வைரஸின் தீவிரத்தன்மையை மறுத்து வரும் போல்ஸ்னாரோ, தனது செயல்களுக்குத் தான்  பொறுப்புக்கூற வேண்டி வரும் என்பதை ஒரு போதும் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. வைரஸ் நாட்டை நாசமாக்கிக் கொண்டிருந்த போது, தனது தீவிர வலதுசாரி அடித்தளத்தைக் கொண்டு அதனை “புரளி” என்று கூறியதுடன், அவரிடமிருந்து ஒரு மேலான செயல்பாட்டை எதிர்நோக்கிய நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், ஆளுநர்கள் மற்றும் ஊடகங்கள் ஆகிய பிற நிறுவனங்கள் மீது பழியை திசை திருப்பினார். தற்போது கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக  இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில்,நோய் தொற்று எண்ணிக்கையில் இந்தியாவிற்கு அடுத்ததாக  உள்ளது. இதனால் போல்ஸ்னாரோவின் வெற்று நாடகத்தைக் கண்டு மக்கள் பொறுமையிழந்து இருக்கிறார்கள். வீதிகளில், சமூக ஊடகங்களில், அதிகாரத்தின் வாசல்களிலிருந்து துக்கம், பிரேசிலை தொற்றின் “அதிவிரைவு பரப்பி” யாக முத்திரைக்குத்தி ஒதுக்கி வைக்க காரணமான  கொள்கைகளை செயல்படுத்திய அதிபருக்கு எதிரான கோபமாக மாறி வருகிறது.  கடந்த செவ்வாயன்று(27/4/20) விசாரணைகள் குழுவின் செய்தியாளரும், மூத்த அரசியல்வாதியும், செனட் அவை உறுப்பினருமான ரெனின் கால்ஹிரோஸ் செனட் அவையில் விசாரணைக் குழுவிற்காக உரையாற்ற எழுந்த போது அதிபருக்கு எதிரான கோபம் தெளிவாகத் தெரிந்தது. அவர் விசாரணையின் விரிவெல்லையைப் பற்றி குறிப்பிடும் போது,

“‌மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஒருபோதும் விலகிப் போவதில்லை. மேலும், அவை இயற்கையாகவே நாடுகடந்தவை,” என்று கூறியதுடன், யூகோஸ்லோவியாவின் ஸ்லோபோடன் மிலோசெவிக் மற்றும் சிலி நாட்டின் எதேச்சதிகாரி அகஸ்டோ பினோசெட்டையும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்‌.

‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறைக்கைதிகளுக்கு பிணை வழங்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

“இந்த ஆணையம் வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கானது. அறிவை உறுதி செய்வது. எல்லாவற்றுக்கும் மேலாக, மரணத்தின் கொடூரமான வழிபாட்டுக்கு எதிராகவும், வெறுப்பிற்கு எதிராகவும், உண்மையின் புனிதத்தன்மைக்குமானது. பிரேசிலியர்களுக்கு அமைதியான வாழ்க்கைக்குத் திரும்ப உரிமை உள்ளது. ” எங்களுடைய சிலுவைப்போர் மரணத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானது. சமூக குழப்பத்தை எதிர்ப்பது, பசி, நிறுவனத் தோல்வி, படுகொலை, பொருளாதார சீர்கேடு மற்றும் மறுப்பியல் ஆகியவை ஒரு கருத்தியல் அல்ல அல்லது தத்துவ முன்னறிவிப்பு அல்ல. அது ஒரு ஜனநாயக, தார்மீக, மற்றும் மனித கடமையாகும்,” என்று உரையாற்றினார்.

செனட்டரின் இத்தகைய செம்மையான கருத்துக்கள் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.  ஆணையம் உயர்மட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு ஆவணங்களில் உள்ள ஓட்டைகள் ஆகியவற்றை அழைத்து நெருக்கடியை அரசு கையாண்ட விதம் குறித்து பரிசீலனை செய்த போது அவை அரசாங்கத்தின் இதயத்திலும் அச்சத்தைத் உருவாக்கின. இது அரசு எல்லாவற்றையும் இழக்கச் செய்வதாக இருந்தது.  புதன்கிழமை, போல்ஸ்னாரோவின் அறிவியல் எதிர்ப்பு முறைகளை பின்பற்றாததற்காக அவரால் நீக்கப்பட்ட லூயிஸ் மாண்டெட்டா மற்றும் நெல்சன் டீச் ஆகிய இரு முன்னாள் சுகாதார அமைச்சர்களையும், யாருடைய பார்வையின் கீழ் பிரேசில் தொற்று நோயின் மையப்புள்ளியாக மாறியதோ அந்த மூன்றாவது அமைச்சரான தளபதி எடுவார்டோ பாசுல்லோவையும், தனது பதவியில் இன்னும் முழுமையாக செயல்படத் துவங்காத, தற்போது நியமிக்கப்பட்டுள்ள நான்காவது அமைச்சரான மார்செலோ குயிரேகாவையும் அழைக்க ஆணையம் முடிவு செய்தது.

பசுஞ்சாணமும் கொரோனாவும்; மோடி அரசின் அறிவியல் ஆலோசனைகள் – சத்யசாகர்

குற்றவாளியின் மனு

அடுத்த வாரம் முதல் இந்த மனிதர்கள் தரும் சாட்சியங்கள், இந்த நாட்டை அழித்த அரசின் செயல்பாடுகளை வெளிக் கொண்டு வரும். அரசுக்கு என்ன வரப்போகிறது என்று தெரியும். எனவே, விசாரணையைத் தொடங்குமாறு செனட் தலைவரிடம் உச்சநீதிமன்றம் கேட்ட அன்றே அதிபர் மாளிகை அதைப் புதைக்க முயன்றது. ஆணையம் அமைப்பதை சீர்குலைக்கவும் முயன்றது. எதுவும் செயல்படாத போது, செனட் அரசை விமர்சிப்பவர்களைக் கொண்டு ஆணையத்தை அமைத்தபோது, அதிபரின் குழு பீதியடைந்தது. அந்த ஆணையம், ” தொற்று நோய்க்கு எதிரான போராட்டம், அமேசானில் சுகாதார நிலை சீர்குலைவு மற்றும் நாட்டின் வளம் ஆகியவற்றின் அமைப்பு மற்றும் நடவடிக்கை”  ஆகியவற்றை  உள்ளடக்கிய  ஆறு விடயங்களுக்கான   புலனாய்வை  தொடரும் என்று கூறினாலும், அவர்கள் எல்லாவற்றிற்கும் வருவார்கள் என்பது அதிபருக்குத் தெரியும். மோசமான நிலைக்கு அஞ்சி, அரசு 23 முறை நடந்திருக்கக்கூடிய வாய்ப்புள்ள தனக்கெதிரான குற்றச்சாட்டுகளின் பட்டியலைக் கொண்ட ஏறத்தாழ ஒரு குற்றவாளி மனுவில் கையெழுத்திட்டது. அத்துடன் அரசு பல்வேறு அமைச்சகங்களையும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான  தகவல்களையும் சேகரிக்கச் கேட்டுக் கொண்டது.

நியமிக்கப்படாத பட்டியல், பழங்குடி ஆணையத்தின் பொறுப்புகள் – வன்கொடுமை வழக்குகளை நீர்த்துப் போக செய்கிறதா ஒன்றிய அரசு?

ஊடகங்களுக்குக் கசிந்தாகக் கருதப்படும் அந்தப் பட்டியலில் உள்ள குற்றச்சாட்டுகள் தனது மக்களை வேண்டுமென்றே வைரஸ் தொற்றுக்கு ஆளாக்கிய ஒரு அரசின் மீதான குற்ற ஆவணமாக இருந்தது. ஆணையத்தின் விசாரணையில் எதிர்வாதம் வைப்பது அரசுக்கு மிகவும் கடினமாகவே இருக்கும்.

அரசின் சொந்த கற்பனையில் உருவான, அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கொரோனாவாக் தடுப்பூசியை கொள்முதல் நடைமுறையில் அலட்சியமாக இருந்தது” என்பதாகும். சீன நிறுவனமான சினோவாக்குடன் இணைந்து சாவ்பாவ்லோ வில் உள்ள பூட்டன்டன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி, அதிபர் மற்றும் ஆளுநர் ஜாவோ டோரியா ஆகியோருக்கிடையில் ஒரு எலும்புத் துண்டிற்காக அடித்துக் கொள்ளும்  இரு நாய்கள் கதை போல் ஆனது. டோரியா அந்தத் தடுப்பூசியை பிரேசிலில் அறிமுகப்படுத்த முயன்றார். அதிபர் வெளிப்படையாகவே அதன் செயல்திறனை ஐயமுற்றார். ஆனால் இன்று கொரோனாவாக்தான் நடைமுறையில் பிரேசிலுக்கு உள்ள ஒரே தடுப்பூசி ஆகும். இந்த சீன மருந்தைப் போட்டுக் கொண்டவர்களில் 84% பேர் ஒரு எதிர்ப்பு சக்தியை (jab) பெறுகின்றனர். ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஜெனிகாவின் மற்றொரு தடுப்பூசியை வெளியிடுவது மித மெதுவாக நடக்கிறது. 2020 ல் போல்ஸ்னாரோ அரசு 7 கோடி ஃபைசர் தடுப்பூசி வாங்குவதற்கான ஒப்பந்தத்தை நிராகரித்து விட்டது. கொரோனாவாக் இல்லாமலிருந்திருந்தால் பிரேசிலின் தடுப்பூசித் திட்டமே துவங்கியிருக்காது. தடுப்பூசி விடயத்தில் அரசு வழுக்கும் பாறையில் உள்ளது.

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்

அரசின் சொந்தக்  பட்டியலில் உள்ள இரண்டாவது குற்றச்சாட்டு, ” தொற்று நோயின் கடுமையையும், தடுப்பு நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிட்டது” என்பதாகும். இதில், போல்ஸ்னாரோ தற்காத்துக் கொள்ள எதுவும் இல்லை. ஏனெனில் அவரே பலமுறை கோவிட் 19 ” ஒரு சாதாரண ஃப்ளூ” காய்ச்சல் தான் எனக் கூறியிருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. ” கோழைகளின் நாடாக பிரேசில் இருப்பதையும்” சிணுங்குவதையும்” நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தொற்று நோயை அரசு கையாளும் விதத்தை எதிர்த்தப் போராட்டங்களை  குறிப்பிட்டுப் பேசித் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார்.  இணையத்தில் உள்ள  இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்க அரசுக்கு சிறிது துணிச்சல் வேண்டும்.

ஆனால் ஹைட்ராக்ஸிகுளோராகுயினை (HCQ) ஒரு “தடுப்பு சிகிச்சை ” என்று எந்தவித அறிவியல் ஆதாரமுமின்றி போல்ஸ்னாரோ அறிவித்த குற்றத்தை அவரால் மறுக்கவே இயலாது. செனட் விசாரணையில் இது மிகவும் பரபரப்பான பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது உறுதி. பிரச்சனைக்குரிய ஒரு மருந்தை பலமுறை விளம்பரப்படுத்தியதை எவ்வாறு மறுப்பார் என்பதை பார்ப்பது ஆர்வமூட்டுவதாக இருக்கும். HCQ வை ஆதரித்த  மண்டேட்டா மற்றும் டீச் ஆகிய இரண்டு அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக வைக்கப்பட்டுள்ள  குற்றச்சாடடு போல்ஸ்னாரோவை மேலும் சிக்கலில் இறக்கும். போல்ஸ்னாரோவால் பாதிக்கப்பட்ட இவர்கள் இருவரும் விசாரணையில் சாட்சியமளிப்பதால், அந்த மருந்து தொடர்பான மேலும் பல அழுக்குகள் வெளிவரும்.

மாநிலங்களுக்குப் பயனளிக்காத ஜிஎஸ்டி; பரிசீலனை செய்ய இதுவே நேரம் – தாமஸ் ஐசக்

அரசாங்கத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு கடுமையான குற்றச்சாட்டு, “வெறுப்பு அலுவலகம்” என்று சொல்லப்படுகிற ஒன்றின் மூலம் தொற்று நோய் பற்றிய  “போலிச் செய்திகளைப்” பரப்பியது. அதிபரின் மகன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் பிடியில் இருந்த இதன் செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம் இவர்கள் ஊதிப் பெருக்கினார்கள். இந்த “வெறுப்பு அலுவலகம்” தனியான வேறொரு செனட் விசாரணையில் இருப்பதாலும், போல்ஸ்னாரோவே பதிவிட்ட பல பதிவுகள் சமூக வலைபின்னல்களிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாலும் அரசு இந்த விடயத்தில் சிறிது தப்பிக்கலாம்.

இந்தியா இப்போது தொற்றுநோயின் புதிய மையமாகவும், அனைத்து ஊடகங்களின் கவனத்தைப் பெற்றாலும் பிரேசில் வைரஸூடன் மோசமாகப் போராடி வருகின்றது. அதனுடைய தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் அத்தியாவசியமான தடுப்பு மருந்துகள், தனிமைப்படுத்தப்படும்போது பயன்படுத்த வேண்டிய மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு நாட்டை மண்டியிடச் செய்வது எவ்வாறு என்பதற்கு பிரேசில் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

2020 மார்ச்சிலிருந்து மிக அதிக அளவாக இந்த ஏப்ரலில் இறப்பு எண்ணிக்கை 82,000 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் சுகாதார அமைப்பு கொடூர வைரஸின் தாக்குதலுக்கும், உள்ளூரில் அதன் உருமாற்றங்களின் தாக்குதலுக்கும் இரையாகியுள்ளது. பலரும் அதிபரின் குறுகிய ஆதரவாளர்களின் அடித்தளத்தின் மீது பார்வையைச் செலுத்தி, குழப்பத்திற்கு அதுவே காரணம் என்று கூறி, அதிபரின் நடத்தையை குற்றம் கூறுகிறார்கள்.

அரசாங்கத்தின் தொடர்பு  இருப்பதாகக் கருதப்படும் குற்றச்சாட்டு பட்டியலில் இரண்டு குற்றச்சாட்டுகள் விடப்பட்டுள்ளன. முதலாவது, போல்ஸ்னாரோ இந்த தொற்றுக்காலம் முழுவதும் தனது ஆதரவாளர்களின் பெருங்கூட்டத்தை ஊக்குவித்தார். இது உலகறிந்த ரகசியம். அதிபர் வாரந்தோறும் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசியது பதிவாகி உள்ளது‌.  தொற்று நோய் ஏறத்தாழ முடிவுக்கு வந்து விட்டது என அறிவித்த அதிபர், எல்லாம் “இயல்பாக” இருக்கிறது என்ற கதையை பரப்ப இந்தக் கூட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டார். இந்த கதை அவரது தீவிர வலதுசாரி ஆதரவாளர்களுக்கு பயனுடையதாக இருந்தது.

இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்

பட்டியலில் இல்லாத மற்றொரு குற்றச்சாட்டு  இதற்கிணையான ஆபத்தானது. தனக்கு 2018 ம் ஆண்டு தேர்தலில் வாக்களித்த தனது இவாஞ்சலிகல் கிறித்துவர்கள் தளத்தை அணிதிரட்ட தொற்றுநோய் நெருக்கடிக்கு நடுவிலும் தேவாலயங்கள் திறந்திருப்பதற்கு ஆதரவு தெரிவித்தார். அவர் மத நடவடிக்கைகளை ” அத்தியாவசியப் பணிகள்” என்றே அறிவிக்கும் இடையிலும் கூட கையெழுதாதிட்டார். ஏப்ரல் 10 ம் நாள் உச்சநீதிமன்றம் கத்தோலிக்க தேவாலயங்களிலும், இவாஞ்சலிகன் கோவில்களிலும் நேருக்கு நேர் மக்கள் சந்திப்பதை தடை செய்ய ஆளுநர்களுக்கும், மேயர்களுக்கும் அதிகாரமளித்தை போல்ஸ்னாரோ கண்டித்தார். “மதச் சேவைகளுக்கான அறைகளையும், தேவாலயங்களையும் கூட மூட ஆளுநர்களுக்கும், மேயர் களுக்கும் உச்சநீதிமன்றம் அதிகபட்ச அதிகாரம் அளித்துள்ளதற்காக நான் வருந்துகிறேன்” என்றும், மதக் கூட்டங்களில் வைரஸ் பரவுவதற்கான கடுமையான அச்சுறுத்தல் இருந்த போதிலும், “இது அபத்தங்களில் அபத்தம்,” என்று கூறினார்.

‘சாதியும் வர்க்கமும் கொரோனா பேரழிவும்’ – சத்யசாகர்

தொற்று நோய்க்கிடையில் அரசியல் கூட்டங்களையும் , மதச்சபைகளையும் ஊக்குவிப்பது குறித்து செனட் குறிப்பாக விசாரணை நடத்தக் கூடும். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் அவரது தீவிர வலதுசாரி அரசியலின் அடிப்படையாக இருப்பதால் அவரால் அவற்றை மறுக்க இயலாது, மறுக்க மாட்டார் அல்லது மன்னிப்புக் கேட்க மாட்டார். ஆனால் அவை அவருடைய பொறுப்பற்ற நடத்தைக்கு கண்முன் தெரியும் சான்றுகளாக இருப்பதால் செனட் விசாரணையில் மையப் பொருளாக இருக்கும். 29/4/21 அன்று சில அரசு நிறுவனங்கள் நாடாளுமன்ற விசாரணையில் குறி வைக்கப்பட்டுள்ளமை குறித்து கவலை தெரிவித்த போது, செனட்டர் கால்ஹிரோஸ் ஆணையம் எதை மற்றும் யாரை தேடுகிறது என்பதைத் தெளிவு படுத்தினார். ” வைரஸின் கூட்டாளிகள்தான் கவலைப்பட வேண்டும். யாரெல்லாம் வைரஸின் கூட்டாளிகள் இல்லையோ அவர்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அந்த நாட்டின் அரசியலை உலுக்கப் போகும்  விசாரணையை நடத்தும் ஆணைய செய்தியாளர். துக்கம், கோபம் மற்றும் விரக்தி முழுவதுமாக நிறைந்துள்ள ஒரு நாட்டில், வைரஸின் முக்கிய கூட்டாளி யார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

 

www.thewre.in இணையதளத்தில்  பத்திரிகையாளர்கள் ஷோபன் சக்சேனா மற்றும் ஃப்ளோரன்சியா கோஸ்டா ஆகியோர் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்