Aran Sei

“மனுநீதியே ஆட்சி செய்கிறது” – ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி.சாவந்த்

ஜோதிராவ் பூலே - Image Credit : thewire.in

னுநீதி, பழங்கால சட்டப்புத்தகம் அல்லது இந்துமதத்தின் ‘தர்ம சாத்திரங்கள்’. அது ஆரியர் கால சமூக அமைப்பை விளக்குகிறது. இந்த நாடு கி.மு. 3500 ஆண்டுகளுக்கு முன்பே, ஏன் கி.மு. 6000 அல்லது கி.மு 8000 முதலே , அனைத்து வகையிலும், ஒரு முன்னேறிய நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் பெற்றிருந்தது என சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அதன் மக்கள் அமைதியை விரும்புபவர்களாகவும், முக்கியமாக வேளாண்மையிலும், வணிகத்திலும் ஈடுபட்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் கொள்ளைக்கார ஆரியர்களுக்கு எளிதில் இரையானார்கள்.

இந்தக் காலத்தின் சமூக அமைப்பு, மதம், மொழி ஆகியன பற்றி நிறைய தகவல்கள் இல்லை எனினும், குறைந்தது ஆரியர் வருகைக்கு 2000 ஆண்டுகட்கு முன்பே முன்னேறிய, நகரமயமாக்கப்பட்ட என்றுகூட சொல்லக் கூடிய, அமைதியான, ஒப்பீட்டளவில் வளமான மக்கள் இங்கே வாழ்ந்தார்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. என்றாலும், ஏறத்தாழ எல்லா வரலாற்றாளர்களும் ஆரியருக்கு முன்னால் இந்த நிலத்தில் ஒரு நாகரீகம் இருக்கவில்லை என்பதாகவேஇந்த நாட்டின் வரலாற்றை எழுதி உள்ளனர்.

சாதியும் பொல்லாங்கும்

வேண்டுமென்றோ அல்லது வேறு வகையாகவோ இந்த புறக்கணிப்பின் விளைவாக, இந்தியர்களின் கண்களுக்கு, இந்த நிலத்தின் வரலாறு ஆரியர் வருகைக்குப் பின்னரே துவங்குவதாகத் தெரிகிறது. இந்த ‘அசலான தவறு’, பல திரிபுகளுக்கும், கட்டுக்கதைகளுக்கும், உண்மை அல்லாதவற்றுக்கும், அரைகுறை உண்மைகளுக்கும் கொண்டு செல்கிறது.

ஆரியர்களின் கடவுள்களும் கதாநாயகன்களும் இந்த மக்கள் மீது திணிக்கப்பட்டு, ஆரியர்களின் பகைவர்கள், அவர்கள் இம்மக்களின் கடவுள்களாகவும், கதாநாயகர்களாகவும் இருந்தாலும் கூட, இந்த மக்களின் பகைவர்களாக ஆகினர். ‘தர்மம்’ அல்லது மதம் என்பது ஒரு சமுதாயத்தின் நெறிகளையும் நடைமுறைகளையும் தவிர வேறெதுவும் இல்லை என்பதால் இதனை வரலாற்றில் முதன் முதலாக, வலுக்கட்டாயமாக நடந்த ஒட்டு மொத்தமான “மதமாற்றம்” எனக் கூறலாம்.

ஆரியர்கள் தாங்கள் எப்போதும் உயரத்தில் இருக்கவும், எல்லா செல்வங்களை சொந்தமாக்கிக் கொள்ளவும், அனைத்து அதிகாரங்களையும் செலுத்தவும் இந்த சமூகத்தைப் பிரித்து வடிவமைத்தார்கள். அவர்கள் பூர்வீக குடிகளுக்கு அந்நியமான சமஸ்கிருதத்தை அன்றாட வாழ்க்கையின், வணிகத்தின் மொழியாக ஆக்கினார்கள். அந்த மொழியில் அவர்களுக்கு இருந்த புலமை அவர்களை, சமூகத்தின் தலைவர்களாகவும், நடுவர்களாகவும், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுக்கும் விளக்கம் சொல்பவர்களாகவும் ஆக்கியது.

அவர்களது தலைமை நிறுவப்பட்டதும், மக்களை சாதி என்றழைக்கப்பட்ட நான்கு படிநிலை பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொருவருக்கும் வேலைகளையும் கடமைகளையும் ஒதுக்கினார்கள். பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என இறங்கு வரிசையில் அவரவர் தகுதி மற்றும் உரிமைகள் வகுக்கப்பட்டன. இவை மிக இறுக்கமான மாற்றமுடியாத வாழ்நாள் முழுவதற்குமான, பிறப்பு, கடமைகள், வேலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வகுக்கப்பட்டன. அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதும், ஒன்றாக உணவருந்துவதும் கூட அனுமதிக்கப்படவில்லை.

பார்ப்பனர்கள் அனைவருக்கும் மேலானவர்களாக தனிச்சிறப்பு உரிமைகளைப் பெற்றவர்களாக இருந்தனர். பிற சாதியினருக்கு அவர்களை பாதுகாக்கவும், காப்பாற்றுவதற்கும் தேவையான வேலைகள் ஒதுக்கப்பட்டன. சத்திரியர்கள் நிலங்களை பாதுகாப்பது, வைசியர்கள் நிலத்தை உழுவது, விலங்குகளை வளர்ப்பது மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது, சூத்திரர்கள் இவர்களுக்கு அடிமையாக சேவை செய்வது என விதித்தனர்.

சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் அவர்கள் செய்த வேலைகள் அவர்களுக்குப் பயனுடையதாக இருந்தது. சூத்திரர்கள் மற்ற மூன்று பிரிவினருக்கும் சேவை செய்தனர். ஆனால் அது வேலையாக பார்க்கப்படாமல் தற்செயலானதாகவே பார்க்கப்பட்டது. பார்ப்பனர்களுக்கு எந்தவித உடலுழைப்பும் ஒதுக்கப் படவில்லை. சிந்திப்பதும், பேசுவதும் மட்டுமே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. இந்த’ கடின’ பொறுப்பிலிருந்து மற்றவர்கள் விடுவிக்கப் பட்டிருந்தனர்.

மனுநீதி, சத்திரியர்களும் வைசியர்களும் கல்வி கற்க உரிமை இருப்பதாக அறிவித்தாலும் அவர்களுக்கு கற்பிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. பார்ப்பனர்களால் இவர்கள் இருவருக்கும் கல்வி தரப்பட்டாலும், பார்ப்பனர்கள் மிக வித்தியாசமான கல்வியை தங்கள் ஒழுக்கத்தின் உயர்வுத் தன்மையால் பெறுவதாகக் கருதப்பட்டது.

ஆனால் அதுவும் கூட சில காலத்திற்குப் பிறகு நிறுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்தான் கல்வி- அனைவரும் அடைவதாக ஆனது. பார்ப்பனர் உட்பட அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தனர்

மனுநீதி அயல்நாட்டு பயணத்தையும் தடை செய்திருந்தது. அதனை மத விரோத செயலாக அறிவித்தது. இது மக்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்க உதவியது. அதன்மூலம் வெளியிலிருக்கும் பிற சமூக அமைப்புகளின் எண்ணங்கள் நடைமுறைகள் பற்றி அறியாமலிருப்பதை உறுதி செய்தது. மனுநீதி கூறிய சமூக அமைப்பு, சாதிகளுக்கிடையே, ஆண்களுக்கிடையே, ஆண் – பெண்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு என்ற கோட்பாட்டின்படி கண்காணிக்கப்பட்டது.

பார்ப்பனர்கள் குற்றமற்றவர்கள் என்றும் தவறே செய்ய மாட்டார்கள் என்றும் கருதப்பட்டது. யாராவது தவறு செய்தாலும் அவர்கள் சிறிய தண்டனையுடன் தப்பித்துக் கொள்ளலாம். ஒழுக்கங்கெட்ட பார்ப்பனன் கூட மரியாதையோடு நடத்தப்பட தகுதி உடையவனாகக் கருதப்பட்டான். ‘பூதேவ்’ அல்லது பூமியில் உள்ள கடவுளாக இருந்த பார்ப்பனர்களை அரசனும் கீழ்படிந்து நடந்தான்.

டிசம்பர் 2015-ல் மனுஸ்மிருதியின் பிரதிகள் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் மாணவர்கள் சங்கத்தினரால் எரிக்கப்பட்டன - Image Credit : thewire.in
டிசம்பர் 2015-ல் மனுஸ்மிருதியின் பிரதிகள் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் மாணவர்கள் சங்கத்தினரால் எரிக்கப்பட்டன – Image Credit : thewire.in

 

பிரித்தாளும் சூழ்ச்சி

இரண்டு நோக்கங்களுக்காக பார்ப்பனர்கள் இந்த சாதி அமைப்பை உருவாக்கினார்கள். தங்கள் கையில் அதிகாரம் அனைத்தும் பாதுகாப்பாக குவிக்கப்பட்டதும், பிற மக்களை, முரண்பட்ட நலன் கொண்ட, ஒருவருக்கொருவர் விரோதம் கொள்ளும் வகையில் பல்வேறு சமூக குழுக்களாகப் பிரித்தனர்.

இது இல்லாவிட்டால், குறைவான எண்ணிக்கையிலிருந்த ஆரியர்கள் வலிமைப் பெற்றிருக்க முடியாது. உணவுச் சங்கிலியில் பார்ப்பனர்கள் தங்களை உயர்ந்த இடத்தில் அமர்த்திக் கொண்டார்கள். இதனை உறுதிப் படுத்திக் கொள்ள கடவுள் பிரம்மாவால் இது விதிக்கப்பட்டது என்ற ஒரு தெய்வீக அனுமதியை போர்த்திக் கொண்டார்கள்.

இந்த பிரித்தாளும் கொள்கை நாளடைவில் 6000க்கும் மேற்பட்ட கிளை சாதிகளாக, அனைத்தும் பிறப்பின் அடிப்படையில், ஒருவருக்கு ஒருவர் விரோதத்துடன் சமூக ரீதியாக பிரிந்து நிற்க வழி கோலியது. ஒரு படிநிலை அமைப்பில் இயற்கையாகவே கடைசி நிலையில் இருப்பவர்கள் எப்போதும் மற்றவர்களுக்குகீழ்படிந்திருப்பவர்களாகவும், சுரண்டப்படுபவர்களாகவும் இருந்தனர்.

இந்த சகிப்புத்தன்மை இன்மைக்கும், நம்பிக்கை இன்மைக்கும், ஒற்றுமையின்மைக்குமான உரமூட்டப்பட்ட நிலத்தில் பல காலத்திற்கு முன் விதைக்கப்பட்ட விதைகளின் பயனைத்தான் இன்றைக்கும் அரசியல் கட்சிகள் அறுவடை செய்து கொண்டிருக்கின்றன.

புத்த, சமண மத எழுச்சி

கிமு ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த இரண்டு மதங்களும்தான் முதன் முதலாக மனுநீதி அமைப்புக்கு சவாலாக விளங்கி, அதனை பின்னுக்குத் தள்ளின. புத்தமதம் ஆயிரம் ஆண்டுகள் இந்த நிலத்தில் ஆட்சி செய்தது. பேரரசன் அசோகரின் தலைமையில் அண்டை நாடுகளுக்கெல்லாம் பரவி, இன்றும் வாழ்ந்து வருகிறது. ஒரு குறிப்பிடத்தக்க அளவு மக்களால் பின்பற்றப்பட்ட சமண மதம் கூட மனுநீதிக்கு அச்சுறுத்தலைக் கொடுத்தது.

பின்னர் சந்திர குப்தர் காலத்தில், இந்து மதத்தை மீட்டெடுக்க ஒரு வெறித்தனமான இயக்கம் துவங்கியது. ஆயிரக்கணக்கான புத்த, சமண மதத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களது வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன.

அன்று ஆரியர்கள் உள்ளூர் மக்களை கொள்ளையடித்து சூறையாடியது போலவே அவர்களுக்குப் பின் வந்தவர்களும் செய்தனர் என்பதைத்தான் மனுநீதி வரலாற்றாளர்கள் திட்டமிட்டு, வேண்டுமென்றே மூடி மறைக்க நினைத்தார்கள். இதனைத்தான், தங்களை ஆரியர்களின் வாரிசுகள் என்றும், ஓயாமல் முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்கள் சூறையாடியதைப் பற்றியே பேசும் இன்றைய இந்துத்துவா வாதிகள் வசதியாக மறந்து விட்டனர்.

2020 அக்டோபரில் புத்த மதத்துக்கு மாறிய வால்மீகி சமுதாயத்தினர் - Image Credit : thewire.in
2020 அக்டோபரில் புத்த மதத்துக்கு மாறிய வால்மீகி சமுதாயத்தினர் – Image Credit : thewire.in

 

இஸ்லாமும் கிருத்துவமும்

முதலில் 8-ம் நூற்றாண்டில் இஸ்லாம் மேற்கு கடற்கரைப் பகுதியில் வணிகத்திற்காக வந்த போதும், அதன் பிறகு முகலாயர்கள் 16-ம் நூற்றாண்டில் படை எடுத்து வந்த போதும் அது ஒடுக்கப்பட்ட மக்களின் தப்பிக்கும் வழியாகப் பார்க்கப்பட்டது‌. அப்போது மதம் மாறியவர்களில் பெரும்பாலானவர்கள் சூத்திரர்களே. பார்ப்பனர் உட்பட பிற சாதியிலிருந்தும் சிலர் இருந்தனர். இது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நடந்தது. அதற்கான காரணம் பொருள் (சொத்து) என்பதுதான்.

இன்று பரப்புரை செய்வது போல அன்றி வெறும் 5%க்கும் குறைவானவர்களே வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் எல்லோரும் ஆரியர்கள் இந்த நிலத்திற்கு வருவதற்கு முன் இங்கே வாழ்ந்தவர்கள். அதன் பிறகு மற்றவர்களைப் போல் மனுநீதி சமூக அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தவர்கள். அவர்கள் மற்றவர்களை “இந்துக்கள்” அல்லது சிந்து நதிக்கரையில் வாழ்ந்தவர்கள் (ஆங்கில S என்ற எழுத்தின் உச்சரிப்பை அவர்கள் H என்ற எழுத்தின் உச்சரிப்பாக ஒலித்தனர்) என அழைத்தனர். ஆகவே ” இந்து” என்ற சொல் அந்நிய நாட்டிலிருந்து வந்தது.

முகலாயர் காலத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறுவது 250 வருடங்களுக்கு நீடித்தது. அதன் தொடர்ச்சியாக 150 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியில் கிறித்துவ மதமாற்றம் நடைபெற்றது. இதில், சாதி அமைப்பில் கீழ்த் தட்டைச் சேர்ந்தவர்கள், தங்கள் பொருளாதார காரணங்களுக்காக மதம் மாறியதே மிக அதிகம். சிலர் பதவிக்காகவும், உயர்நிலைக்காகவும் மாறினர். இந்த மதமாற்றங்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே பெரும்பாலும் நடந்தன. ஒருசிலர் கட்டாயமாகவும் மதம் மாறினர்.

இஸ்லாமுக்கு மிக அதிகமானவர்கள் மாறினர். இவ்வாறு மாறியவர்கள் சமூக உயர்நிலையும், அதிகாரத்தையும் பெற்றனர். சிலர் பெரும் நிலப் பண்ணையார்களாகவும் கூட மாறினர். அவர்கள் நாட்டின் மேற்கு, கிழக்கு, வடக்கு பகுதிகளில் மிக நெருக்கமாக வாழ்ந்தனர். இதன் விளைவாக, இந்தப் பகுதிகளில் அடிக்கடி மத மோதல்கள் ஏற்படுவதும், அதன் தொடர்ச்சியாக 1947ல் இந்திய பிரிவினையும் நிகழ்ந்தது.

இவ்வாறு இன்று முறையாக இந்து மதம் என்றழைக்கப்படும் மனுநீதியின் சாதிய சமூக அமைப்பு இந்த நாட்டின் பூர்வீக குடிகளிடையே சரி செய்ய முடியாத பிளவை உருவாக்கியது மட்டுமின்றி மேற்கில் பாகிஸ்தான் என்றும் கிழக்கில் இன்றைய வங்கதேசம் என்றும் உருவாக்கி மத ரீதியாக நாட்டை துண்டாடியது.

மனுநீதியால் உருவாக்கப்பட்ட இந்த ஒற்றுமையின்மை இந்த நாட்டை, முகலாயர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், மற்றும் ஆங்கிலேயர்கள் ஆகியோர்களுக்கு எளிதில் இரையாக்கியது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நாடு அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஒன்றுபடுத்தப்படத்தான் செய்தது.

இங்கே, இத்தனை அந்நிய ஆட்சிகளுக்கிடையிலும், இங்கு முன்கூட்டியே உருவாக்கப்பட்டிருந்த சமூக அமைப்பு கட்டுக்குலையாமல் இருந்ததையும், உயர்சாதியினர் பயன்களை அறுவடை செய்து கொண்டிருந்ததையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். உண்மையில், அவர்கள் எல்லா அரசு துறைகளிலும், அனைத்து மட்ட அரசு அலுவலகங்ககளிலும் இடம்பிடித்து, ஆட்சியாளர்களுக்கு பற்றுடையவர்களாக, அடிபணிந்து நடப்பவர்களாக, ஒத்துழைப்பவர்களாக, எல்லா அந்நிய ஆட்சியாளர்களையும் ஆதரிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

அறிவுக்கு ஒரே சொந்தக்காரர்கள்

மனுநீதி அனைத்து சாதிப் பெண்களுக்கும் அறிவு பெறும் உரிமையை மறுத்தது. அறிவு சார்ந்த எந்த வேலையையும் அவர்கள் செய்யக் கூடாது, மாறாக குழந்தைகளை பராமரிப்பது, வீட்டு வேலைகளை செய்வது மட்டுமே அவர்களுக்கு மனுநீதியால் விதிக்கப்பட்டது. இது கடந்த நூற்றாண்டின் முதல் கால் பகுதிவரை நீடித்திருந்தது. பெண்கள் ஆரம்பக் கல்வி கற்பதைக் கூட சில வெறிபிடித்த அரசியல் தலைவர்கள் எவ்வாறு கடுமையாக எதிர்த்தனர் என்பதிலிருந்தே இதை விளங்கிக் கொள்ள முடியும். மனுநீதி முதல் மூன்று சாதியினருக்கும் கல்வி கற்கும் உரிமையை கொடுத்திருந்தாலும் சூத்திரர்களுக்கு மட்டும் கற்கும் உரிமையை மட்டுமின்றி அறிவூட்டும் சொற்களைக் கேட்கவும் கூட தடை விதித்திருந்தது. அவ்வாறு கேட்பது செவித்திறனை பறிப்பது உள்ளிட்ட கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது.

வேதங்களும், புனித இலக்கியங்களும் கடவுளிடமிருந்து வந்ததாக பரப்புரை செய்யப்பட்டு, அதனால் அவை கேள்வியின்றி பின்பற்றப்பட வேண்டும் என கூறப்பட்டது. இத்துடன் வேறு எந்த வகை அறிவையும் பெறுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. அதன்மூலம் அறியாமையில் இருப்பவர்கள் தொடர்ந்து அப்படியே வைக்கப்பட்டு ஆதிக்கச் சாதியினரால் அடிமைப் படுத்தப்பட்டு கிடந்தனர். இருக்கும் நிலையை உயர்த்திப்பிடித்துக் கொண்டு, மற்ற நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் தொழில்மய உலகில் நுழைந்து கொண்டிருந்த போது, நமது நாடு தொடர்ந்து பழமையில் ஊறிக் கிடந்தது. இன்றும் கூட நாம் இந்தியா கிராமப்புறங்களிலேயே வாழ்கிறது என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

மொழியே பிளக்கும் கத்தி

ஆரியர்கள் தங்களுடன் தங்கள் மொழியான சமஸ்கிருதத்தை தூக்கிக் கொண்டு வந்தனர். இங்கு வாழ்ந்த மக்களின் வட்டார, உள்ளூர் மொழிகள் (பிராகிருதம்) தொடர்ந்து மக்களின் மொழியாக நீடிக்க, சமஸ்கிருதம் மக்களுக்கு அந்நியப்பட்டு, படித்தவர்களின் மொழியாயிற்று.

இது சமூக வாழ்க்கையின், அதாவது மதம், கலை-இலக்கியம், மற்றும் வர்த்தகம் ஆகிய அனைத்து கூறுகளிலும் கலாச்சார மாற்றத்தைக் கொண்டு வந்தது. கற்பது சில பிரிவினருக்கு மட்டுமே உரியது என குறுக்கியது ஏற்கனவே சமுதாயத்தில் பிளவை உருவாக்கி இருந்தது. சமஸ்கிருதத்தின் வேறுபட்ட பார்வை, நடை, மரபுச் சொற்கள் மற்றும் இலக்கணம் ஆகியவை அந்த பிளவை மேலும் விரிவு படுத்தியது.

 

பெண்களை அவர்களது இடத்தில் வைத்தல்

பெண்களும், சூத்திரர்களும் ஒன்று போலவே நடத்தப்பட்டனர். பெண்களை குழந்தைகளை சுமப்பவள், வளர்ப்பவள் என பெருமையாகச் பேசினாலும் அவளை அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்குக் கீழேயே வைத்திருந்தது. அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதுடன், வீட்டிற்கு வெளியே இருக்கும் எந்த நடவடிக்கையிலும் பங்கு பெற இயலாது.

ஜோதிராவ் பூலேதான் 1848-ல் புனேவில், நாட்டிலேயே பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தை துவக்கினார். அதற்காக அவரும் அவரது மனைவி சாவித்ரி பாயும் மனுநீதியாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தனர். முரண்பாடாக இந்த பள்ளிகளில் சேர்ந்த முதல் பெண் குழந்தைகள் சூத்திரர்களாகவே இருந்தனர். ஏனெனில் மற்றவர்கள் மனுநீதியைப் பின்பற்றி தங்கள் வீட்டுப் பெண்களை வீட்டிற்குளளேயே பூட்டி வைத்தனர்.

ஆங்கில கிறித்துவ சபைகளால் மேற்கு பர்கானா மாவட்டத்தில் ஒரு பெண்கள் பள்ளியை நிறுவுவதற்கான முயற்சி “பத்ரலோக்” [வங்காள தீவிர இந்துவாதிகள்- ‘நற்பண்பு கொண்டவர்கள்’ -பத்ரலோக்- என தம்மை அழைத்துக் கொண்டனர்.] இயக்கத்தினரின் அடி முதல் நுனி வரையிலான எதிர்ப்பால் தோல்வியுற்றது. இதனால் இந்த நாடு அன்றாட வாழ்க்கையின் அனைத்து கூறுகளிலும் 50% மக்கள் பிரிவினரின் பங்களிப்பை பல நூற்றாண்டுகளாக இழந்தது. இது, சதி, குழந்தைகள் திருமணம், கணவனை இழந்தப் பெண்களின் தலையை மொட்டை அடிப்பது, விதவைகள் மறுமணத்தை தடுப்பது, சுருங்க கூறின், பெண்களை வாழ்நாள் முழுவதும் பிரித்து ஒதுக்கி, அடிமைகளாகவே வாழ வைத்தது.

திரிக்கப்பட்ட வரலாறு

மனுவாதிகள்ஆவணங்களை அழித்தனர், தங்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அரக்கர்களாக்கி, அழித்தொழிப்பதையும் கூட செய்தனர். பொய்யான கடவுள்களும், கதாநாயகர்களும் தெய்வீகமாக்கப்பட்டு, பரப்புரைகள், சமூக விலக்கம், முற்றிலும் ஒதுக்கி விடுவது, படுகொலை செய்தல், கும்பல் மனப்பிராந்தி ஆகிய இவை எல்லாவற்றையும் பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவர்கள் அவ்வாறே ஒழுக வேண்டும் இல்லை எனில் ஒழிக்கப்படுவார்கள் என்ற விதிப்படி செயலாற்றினர் மனுநீதிவாதிகள்.

இத்தகைய தங்கள் வழிமுறைகளை மூடி மறைக்க திட்டமிட்டே வரலாற்றை பொய்மைப்படுத்தினர். இவை எல்லாம், ஒரு சிலர் உருவாக்கிய ஒப்புதல்கள் மற்றும் நூற்றாண்டுகளாக நிலவி வருபவை என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. ‘ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறினால் அதுவே உண்மையாகி விடும்’ என்னும் தத்துவத்தை கோயபல்ஸ் இவர்களிடமிருந்துதான் கற்றிருக்க வேண்டும்.

பிற்போக்கான மனப்பாங்கு

ஒரு சில மாதங்களுக்கு முன் ஒரு பார்ப்பன நீதிபதி, ஒரு பார்ப்பனர் மாநாட்டில் பேசும் போது பார்ப்பனர்களின் சில மரபுகளைப் பட்டியலிட்டு, அவரைப் பொறுத்தவரை, அவைதான் பார்ப்பனர்கள் மட்டுமே நாட்டை ஆளும் தகுதி உடையவர்கள் ஆக்குகிறது என்று கூறினார். சில நாட்கள் கழித்து, குஜராத்தின் பார்ப்பன ஆளுநர் இதே கருத்தை வலியுறுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், புனேவில், ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய தற்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர், சாதி அமைப்பு முறையை ஆதரித்து, நான்கு சாதிகள் இன்றி, ஒரே ஒரு சாதி மட்டும் இருந்தால் நாடு சீரழிந்திருக்கும் என கூறினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்போ, பாஜகவோ சாதி அமைப்பை எதிர்த்து இதுவரை பேசியதில்லை. வெற்று கண்டனம் மட்டும் தெரிவிப்பார்கள். அது கூட்டத்தை உற்சாகப்படுத்தும். மனுநீதியை உயர்த்திப் பிடித்து நமது அரசியலமைப்பை எரிக்கச் செய்யும். அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டு எழுபது ஆண்டுகள் ஆகியும் நாட்டின் பல பாகங்களிலும் மனுநீதியே ஆட்சி செய்கிறது.

வேறுபாடின்றி அனைவரும் சமமாக முன்னேறும் போதே சாதியத்தை வேரறுக்க முடியும். கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக வாய்ப்புகள் அனைவருக்கும் சமமானதாகவும், அனைவரும் இவையாவற்றையும் நேர்மையாக அடையும் நிலை உருவாக வேண்டும். மனுநீதியால் புகுத்தப்பட்ட சாதி அமைப்பு முறை பூதாகரமானதாக, ஆழமாக வேரூன்றி இருப்பதுதான் நமது முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் அசைக்க முடியாத பெரும் தடையாக உள்ளது. அதுவே ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்திற்கும் நிரந்தர தடுப்புச் சுவராக நிற்கிறது. இருந்தாலும் இந்த மனுநீதிவாதிகள் அதனை பாதுகாக்கவும், வலிமையாக்கவும் முயற்சிக்கின்றனர். இதனடிப்படையில் யார் தேசப்பற்று அற்றவர்கள்? யார் தேசத் துரோகிகள்? என்று கேட்பது இங்கு பொருத்தமானதாகவே இருக்கும்.

உடனடி தேவை

நமது நாடு மிகப் பெரியது. இது பல சாதிகளை, பல இனங்களை, பல மதங்களை, பல மொழிகளை, பல கலாச்சாரங்களை கொண்டது. நமது அரசியலமைப்பு மனிதத்துவமான, பொதுப்படையான, முற்போக்கான, அறிவியல் பூர்வமான பார்வையை நம்முன் வைத்துள்ளது. அதன் நோக்கம் ஒற்றுமை, பிரிவினை அல்ல. அது ஆண்- பெண் அனைவரையும் வலிமையுடையவர்களாக மாற்ற விரும்புகிறது. அது அனைவருக்கும் சம உரிமையையும், வாய்ப்பையும் தர விரும்புகிறது. மனிதநேயமற்ற, சமத்துவமற்ற, அநீதியானவற்றை உள்ளடக்கி உள்ள பழங்கால மனுநீதி, நமது அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைக்கும் நோக்கத்திற்கும் நேரெதிரானதாகும்(anathema) 1927 ல் அண்ணல் அம்பேத்கர் மனுநீதியை எரித்தார். இன்று நமக்கு மனுநீதிக்கு எதிராக நிற்கும் துணிவு இருக்கிறதா?

அரசியலமைப்பு சட்டத்தின் எழுத்திற்கும் ஆன்மாவிற்கும் உண்மை உடையவர்களாக இருக்க வேண்டும் எனில், நமக்கு விரிந்த மனமும் பரந்த இதயமும் வேண்டும். இதற்கு மாறாக நாம் மக்களுக்கு ஒருவரை ஒருவர் வெறுக்கவும், எதிர்ப்பையும் வேற்றுமையையும் தூண்டி விடுவதற்கான வழியையும் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். உயர்சாதியினர், மக்களை பிரித்தாளுவதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக வைத்துள்ள சாதி அமைப்பு முறை இன்றும் உயிரோடு, நலமாக உள்ளது‌.

மக்களிடையே வெறுப்பையும், நம்பிக்கையின்மையையும் விதைப்பவர்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள். தொலை நோக்கும் அறிவும் அற்றவர்கள். அவர்கள் பிறப்பு என்பது வாழ்க்கையில் நடக்கும் தற்செயலான நிகழ்வு என்ற அடிப்படை உண்மையைக் கூட உணராதவர்கள்.

யாரும் விரும்பி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்கவில்லை. எனவே ஒருவரை போற்றுவதற்கும் மற்றொருவரைத் தூற்றுவதற்கும் எந்த காரணமுமில்லை. மறுபிறப்பில் நம்பிக்கை உள்ளவர்கள், எந்தக் குடும்பத்தில், எங்கு அடுத்த பிறவியில் பிறப்பார்கள் என நமக்கு கூறுவார்களா? ஒவ்வொருவரும் அமைதியான, பாதுகாப்பான, கண்ணியமான வாழ்க்கையையே வாழ விரும்புகின்றனர். நாம் ஒருவருக்கு ஒருவர் உறுதியேற்போம். ‘வாழு வாழவிடு’.

(www.thewire.in இணையதளத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்