Aran Sei

மங்களூர்: சிஏஏ போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – இன்றும் அச்சத்தில் வாழும் இஸ்லாமியர்கள்

 “அவர்கள் என் கணவரை என்ன செய்ய வேண்டுமென நினைத்தார்களோ, அதை செய்தார்கள். என் கணவரைக் கொலை செய்தார்கள். இப்போது எனக்கு காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் ( எஃப்.ஐ.ஆர்) இருந்து அவருடைய பெயரை நீக்க வேண்டும் அவ்வளவுதான்” என மங்களூரின் கடலோர நகரில் பேசப்படும் பியாரி மொழியில் சொல்கிறார் சயீதா. அவருடைய மூத்த மகள் ஷிஃபானி அவர் சொல்வதை மொழிபெயர்த்துச் சொல்கிறார். 

ஒரு வருடத்திற்கு முன், இதே நாளில், சயீதா, தன்னுடைய கணவர் அப்துல் ஜலீலை  (49) இழந்தார். பக்கத்தில் இருந்த அஸ்ர் நமாஸுக்கு போய் கொண்டிருந்த வழியில், காவல்துறை அவர் சுட்டுக் கொன்றது. கண்ணில் தோட்டா பாய்ந்த உடன், அப்துல் நொடியிலேயே உயிரிழந்தார். 

டிசம்பர் 19,2019 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரண்டு பேரில் ஒருவர் ஜலீல். மீன் சந்தையில் வேலை செய்து கொண்டிருந்தவர். அந்நகரில் நடந்த போராட்டத்திற்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனவும், காவல்துறை தங்கள் குற்றங்களை மறைக்கவே முதல் தகவலறிக்கையில் ஜலீல் பெயரை சேர்த்திருப்பதாகவும் அவருடைய குடும்பம் சொல்கிறது. ஆனால், காவல்துறையோ, வன்முறையில் ஈடுபட்ட கும்பலைக் கட்டுப்படுத்தவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சொல்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுவதற்கே மக்கள் மங்களூரு நகர் முழுக்க கூடியிருந்தனர். 

இந்த வன்முறையின் காரணமாக, மாநில அரசு தக்‌ஷினா கன்னடா மாவட்டத்தில், ஐந்து நாட்கள் ( டிசம்பர் 23 வரை) இண்டர்நெட்டை தடை செய்து, அம்மாவட்டத்தில் ஊரடங்கு போடப்பட்டது. காவல்துறையினரின் அராஜகத்தை மறைக்கவே இதையெல்லாம் செய்தார்கள் என உள்ளூர் மக்கள் சொல்கின்றனர். 

ஜலீலின் இழப்பிற்காக வருந்த கூட நேரம் இல்லாமல், காவல்துறை குற்றவாளிகள் என பெரிய பட்டியலை குறிப்பிட்டு பதிவு செய்த முதல் தகவலறிக்கையில் இருந்து அவர் பெயரை நீக்குவதற்காகதான் ஒரு வருடமாக அவர் குடும்பம் போராடிக் கொண்டுள்ளது. நிவாரணத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

“அந்த நிகழ்விற்கு பிறகு, முதலமைச்சர் எடியூரப்பா குடும்பத்திற்கு என பத்து லட்சம் நிவாரணத்தொகை அறிவித்தார். ஆனால், என் கணவர் கலவரம் செய்ததாக காவல்துறையினர் கூறினர். கொஞ்ச நாட்களிலேயே முதலமைச்சர் நிவாரண உதவி திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்” என்கிறார் சயீதா. அப்போதிருந்து, ஒவ்வொரு நாளும் அலைக்கழிப்புதான். ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மறுநாள் காவல் நிலையம், பிறகு மாஜிஸ்திரேட்டின் விசாரணை குழு என ஒவ்வொரு இடத்திற்கும் நீதி கிடைக்கும் நம்பிக்கையில் செல்கிறார். 

தன்னுடைய 15 வயது மகள் ஷிஃபானி மற்றும் 11 வயது மகன் சபில் உடன் பந்தர் பகுதியில் இருந்த பழைய வீட்டில் இருந்து வேறு வீட்டிற்கு மாறியுள்ளார் சயீதா. ஆனால், இயல்பு வாழ்க்கை என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத தொலைவில் உள்ளது.  “சில உறவினர்களும், குழு உறுப்பினர்களும் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு உதவி செய்தார்கள். இன்னமும் அவர்கள் உதவியை நம்பித்தான் வாழ வேண்டியதாக உள்ளது” என ஷிஃபானி தி வயரிடம் தெரிவித்தார். 

ஷிஃபானி வீட்டிலிருந்து ஒரு கிமீ தொலைவில் இருக்கும் நௌசீனின் குடும்பமும், துயரத்தை கடந்ந்து செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். நௌசீன், 22, ஜலீலை போலவே கொலை செய்யப்பட்டவர். அவருடைய நண்பர் மொஹமது ஹனீஃபும் அவரும் வேலை செய்துகொண்டிருந்த பட்டறையில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது, நௌசீனின் நெஞ்சில் ஒரு தோட்டா பாய்ந்தது.   “பட்டாசு” வெடிப்பது போல இருந்தது என அப்போது அந்நிகழ்வை குறித்து ஹனீஃப் தெரிவித்திருந்தார். 

“காவல்துறை கண்ணீர் புகை குண்டு ஒன்றை வீசியிருந்தது. எனக்கு அந்தப் புகையில் எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. சில நொடிகளிலேயே நௌசீன் தரையில் விழுந்தான். அவன் வயிற்றில் தோட்டா பாய்ந்திருந்தது” என கடந்த வருடம் தி வயரிடம் ஹனீஃப் தெரிவித்தார். 

இப்போது, நௌசீனின் மூத்த சகோதரர், 30 வயதான நௌஃபல், நௌசீனின் பெயர் முதல் தகவலறிக்கையில் இருந்து நீக்கப்படும் எனும் நம்பிக்கையே போய்விட்டது என்று சொல்கிறார். “காவல்துறையினர் இதை தனிப்பட்ட பிரச்சினையாக எடுத்துக் கொண்டனர். அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்கள் தவறு செய்ததாக ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்” என்கிறார் குத்ரோலி கோவிலில் அலங்கார வேலைகள் செய்யும் நௌஃபல். 

அந்த வன்முறைக்கு பிறகு, மங்களூருவில் எதாவது மாறியுள்ளதா? என்றால் இல்லை என்கிறார் நௌஃபல். “நான் இன்னமும் குத்ரோலி கோவிலில் அலங்கார வேலைகள் செய்து கொண்டு தான் இருக்கிறேன். பணியிட உறவுகள் எல்லாம் அப்படியே தான் இருக்கின்றன. மக்கள் இணைந்து வாழ தயாராகவே இருக்கிறார்கள். காவல்துறைதான் இங்கே நஞ்சை விதைக்கப் பார்த்தது” என்கிறார். 

கடந்த வருடம் தக்‌ஷினா கன்னடாவில் வன்முறை வெடித்த அதே சமயத்தில், நாட்டின் பிற பகுதிகளிலும், குறிப்பாக டெல்லியில் இதே போன்ற ஒரு சூழல் இருந்தது. டிசம்பர் 19 அன்று, அந்நகரின் பல பகுதிகளில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அனுமதிகளும் வழங்கப்பட்டன. ஆனால், போராட்டத்திற்கு முந்தைய நாள் இரவு, திடீரென போராட்டத்திற்கு அளித்த அனுமதியை ரத்து செய்தது காவல்துறை. அனுமதி ரத்தான செய்தி போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு தெரிவதற்கு முன்னரே, அவர்கள் சாலைகளில் இறங்கி விட்டார்கள். மதியம் ஆன போது, ஏறத்தாழ 150-200 பேர் நகரின் மையத்தில் ஒன்று கூடி, கோஷம் போடத் தொடங்கிவிட்டார்கள். உடனேயே காவல்துறையினர் அவர்களை லத்தியால் தாக்கி, துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். 

ஒரு வீடியோவில், மங்களூரு காவல்துறையின், காவல் கண்காணிப்பாளர் சாந்தாராம் குந்தர் தன்னுடைய உதவியாளர்களிடம் “ இத்தனை தோட்டாக்களை விரயமாக்கியுள்ளீர்கள் ஆனாலும் போதுமான ஆட்களை கொலை செய்யவில்லை” என்று சொல்வதை பார்க்க முடிந்தது. 

இதற்கு மக்கள் கண்டனம் தெரிவித்ததும், அவர் கிழக்கு மங்களூரின் இருக்கும் கத்ரி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போதைய காவல்துறை கமிஷனர் பி.எஸ்.ஹர்ஷா நிலைமையை முறையாக கட்டுப்படுத்தாதற்கும், ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் விமர்சிக்கப்பட்டார். ஆனால், அவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; விசாரணையும் நடத்தப்படவில்லை. 

ஒட்டுமொத்தமாக, நகர் முழுவதும் (பெயர் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும்) பல எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் மதத்தை மட்டும் யூகித்து, மேலோட்டமாக சில காரணம் சொல்லி முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது, தி வயர்,  எஃப்.ஐ.ஆர் பிரதிகளை பார்த்த போது தெரிய வந்தது. “இஸ்லாமிய ஆண்களின் கும்பல்” ஒரு கடையை தாக்கியிருந்தார்கள், “50-60 இஸ்லாமிய இளைஞர்கள்” நகைக்கடையில் இருந்து திருடினார்கள் என்பது போன்ற வாக்கியங்கள் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வன்முறைக்கு பிறகு பதின்பருவத்தில் இருந்த சிலர் உட்பட, 22 இஸ்லாமிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.. “ அவர்கள் ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார்கள். கீழ் நீதிமன்றங்களில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு தான், அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்” என்கிறார் இனவெறுப்பு குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் பிரச்சார குழுவான கர்வான் – ஈ – மொஹாபாத்தை சேர்ந்த ஷபீர் அஹமது. அஹமது தொடர்ந்து இவ்வழக்குகளை கவனித்துக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுக்கப்படுவதையும், முதல் தகவலறிக்கைகளில் பெயர்கள் நீக்கப்படுவதையும் உறுதி செய்ய செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

இரண்டு பேர் கொலை செய்யப்பட்டது தவிர, போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டும், போராட்டத்தை பார்த்துக் கொண்டும் நின்ற இஸ்லாமியர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

அப்படி ஒருவர் தான் 41 வயதான அபூஸ் சலி. அவருடைய வலது கையில் தோட்டா பாய்ந்ததில், கையின் முக்கியமான சதைப்பகுதியை  இழந்துள்ளார்; பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமை தூக்கும் வேலை செய்பவரான சலி, தன்னால் இப்போது செய்ய முடியாத அந்த வேலைக்கு மறுபடியும் சென்றுள்ளார். “இப்போது பெரிய சுமைகளை தூக்க முடியாது. ஆனால், எனக்கு வேறு வழி இல்லை” என தி வயரிடம் அவர் தெரிவித்தார். 

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வரும் சலியின் வருவாயை நம்பி தான் மொத்த குடும்பமும் உள்ளது. சலி இரண்டு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். 

“எனக்கு காயம் பலமாக பட்டு, நான் ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்ததால் காவல்துறையினர் என்னைவிட்டு வைத்துள்ளார்கள்.ஆனால்,  நான் முன் ஜாமீன் எடுத்து வைக்க வேண்டும். எனக்கு அதற்கு பணம் இல்லை” என்கிறார் சலி. இவருக்கு உதவி செய்யும் நோக்கில் ஒரு லட்ச ரூபாய் திரட்டி கொடுக்கப்பட்டது, அடுத்தடுத்த மாதங்களில் ஃபிசியோதெரபி செய்யவே போதுமானதாக இல்லை. 

“வழக்கை ரத்து செய்து விட்டு, என்னையும் என் குடும்பத்தையும் நிம்மதியாக வாழ விட்டால் போதும்” என்கிறார். 

டிசம்பர் 19, 2019 அன்று மங்களூருவில் காவல்துறையினரின் அராஜகம் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் நகர் முழுவதும் இஸ்லாமியர்களோடு மோசமாக நடந்து கொள்வதையும், அவர்களை கொடூரமாக தாக்குவதையும் பார்க்க முடிந்தது. அப்படி ஒரு வீடியோவில், ஒரு நபர் தன்னுடைய மூன்று வயது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு போலீசுக்கு எதிராக போராடுவதை பார்க்க முடிந்தது. 

போலீஸ் அராஜகம் என அப்பட்டமாக தெரியும் இந்த வழக்கு, “கலவர” வழக்காக மாற்றப்பட்டது. காயிலான் கடை நடத்தி வந்த, 32 வயதான இப்ராஹிமின் பெயர் ஒரு முதல் தகவலறிக்கையில் உள்ளது. இது குறித்து முதன்முறையாக தி வயர் 2019 ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டது. இந்த செய்தியாளர் இப்ராஹிமின் குடும்பத்தை சந்திக்க கடந்த வாரம் சென்ற போது, அவர் வேலைக்காக வெளியே சென்றிருந்தார். அவருடைய மனைவியும், இரண்டு மகள்களும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். இப்ராஹிமின் மனைவி குப்ரா, காவல்துறையினர் தொடர்ந்து இப்ராஹிமை துன்புறுத்துவதாகவும், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், தாக்கப்படலாம் எனும் அச்சத்தோடு அந்த குடும்பம் வாழ்வதாகவும் தி வயரிடம் தெரிவித்தார். 

இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான காவல்துறையினரின் இன வேற்றுமை மன நிலை தான் அந்த முதல் தகவலறிக்கையில் தெரிகிறது என்றார் அஹமது. “இந்த முதல் தகவலறிக்கை  எல்லாம் நீதிமன்றத்தில் செல்லாது. சூழல்கள், சாட்சிகள் என எல்லாமே போலியானவையாக இருக்கிறது, ஆனால், அவை மக்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் வீரியம் உள்ளவையாக இருக்கிறது” என முன்னாள் நகர மேயர் கே.அஷ்ரஃப் சொல்கிறார். 

காவல்துறையினரின் தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களில் அஷ்ரஃபும் ஒருவர். அவருடைய மண்டை ஓட்டில் ( skull) தோட்டா உரசிச் சென்றதனால், பல வார காலம் மருத்துவமனையில் இருந்தார். 

கலவர வழக்குகளுடன், சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும்படியாக பதிவிட்டதாக “அடையாளம் காணப்படாத” நபர்களுக்கு எதிராகவும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமீபத்தில், இளைஞர் ஒருவர் அபுதாபியில் இருந்து சொந்த ஊரான மங்களூருவிற்கு வரும் போது, அவர் விமான நிலையத்தில் இருந்து காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறை, தேசவிரோத வழக்கொன்றில் தொடர்பிருப்பதாக அவருடைய பாஸ்போர்ட்டை கைப்பற்றியுள்ளது.  “அவர், குற்றவாளியென சந்தேகிக்கப்படும் நபர் கூட அல்ல. குற்றவாளியென சந்தேகிக்கப்படும் நபரின் உறவினர். ஒரு நாள் காவலில் வைத்த பிறகு தான் அவரை விடுவித்தார்கள். ஆனால், உறவினரை கொண்டு வந்து நிறுத்தினால் தான் பாஸ்போர்ட்டை கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் அநியாயமான துன்புறுத்தல் முறைகள்” என்கிறார் அஹமது. 

இதைப் போலவே நிறைய இளைஞர்களின் வழக்குகளும், சிவில் சர்வீஸ் பணிகளுக்கு போக விரும்புவர்களின் கதைகளும் இருக்கின்றன. முன் கூட்டியே திட்டமிட்டு,  துப்பாக்கியால் சுடப்பட்ட சிலர், இதற்கு மேலும் கொடூரமாக காவல்துறை நடந்து கொள்ளும் என அஞ்சி ஊடகத்திடம் பேசுவதில்லை, பொதுவெளிகளில் வருவதில்லை. 

நீதிக்காக போராட வேண்டுமென நினைப்பவர்களுக்கு, போதுமான ஊக்கம் இல்லை. “ஏற்கனவே வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது, இஸ்லாமியர்களுக்கு வேலைகள் கொடுக்கப்படுவதில்லை. அரசுக்கு எதிராக போராடுவது என்றால், எதிர்காலத்தில் கிடைக்கும் அத்தனை வேலை வாய்ப்புகளையும் நாசம் செய்தது போல ஆகும்” என்கிறார் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஐ.டி ஊழியர் ஒருவர். டிசம்பர் 19 அன்று, அவர் மீது பாய்ந்த தோட்டா இன்னமும் உடலுக்கு உள்ளேயே தான் இருக்கிறது,பல சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்தால் மட்டும் தான் அதை வெளியே எடுக்க முடியும். 

பாதிக்கப்பட்டவர்களும், செயற்பாட்டாளர்களும், காவல்துறையின் தாக்குதல் முன் கூட்டியே திட்டமிடப்பட்டது என்கின்றனர். இஸ்லாமியர்களை  “கட்டுப்பாட்டில்” வைத்திருக்கவே காவல்துறை இப்படி செய்தது என்கின்றனர். இந்த நிகழ்விற்கு பிறகு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டை குறித்து விசாரிக்க,  மாநில அரசு, உடுப்பி துணை கமிஷனர் ஜி ஜெகதீஷை ஒரு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு தலைமை தாங்க நியமித்தது. அந்த விசாரணை குழு,  துப்பாக்கி சூடு குறித்து ஒரு அறிக்கையை தயாரித்து உள்துறை அமைச்சகத்துக்கு சமர்பிக்க ஒரு வருடகாலம் ஆனது. 

50 பக்கங்களும், 2500 துணை ஆவணங்களும் உள்ள அந்த அறிக்கை இன்னும் பொது மக்களுக்கு வெளியிடப்படவில்லை. தி வயரால் ஜெகதீஷை தொடர்பு கொள்ள முடியவில்லை. மாநில சிறுபான்மைகள் குழுவின் முன்னாள் தலைவர் ஹஜி மொஹமத் மசூத், இந்த அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என்று மாநில அரசிடம் முறையீடு செய்துள்ளார். “ கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது குறித்து மாநில அரசு எவ்வளவு நேர்மையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள அது தான் ஒரே வழி” என மசூத் தி வயரிடம் தெரிவித்தார். 

(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்) 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்