Aran Sei

மதுரை எய்ம்ஸ் : மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை – சீ. நவநீத கண்ணன்

மதுரை எய்ம்ஸ்

குறைவாக நிதி ஒதுக்கப்படுவதால், ஆமை வேகத்தில் நடைபெறும் மதுரை எம்ய்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள்

2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2014-15 மற்றும் 2015-16 ஆகிய இரண்டு நிதியாண்டுகளுக்கான பட்ஜெட்டிலும் சேர்த்து “தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் உள்ள 17 நகரங்களில் எம்ய்ஸ் மருத்துவமனை மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு. அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் மறைந்த அருண் ஜேட்லி.

அவற்றில் 6 மருத்துவமனைகள் கட்டிமுடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. ஆனால் “கடந்த 3 நிதியாண்டுகளாக (2017-18, 2018-19, 2019-20) தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தின் ‘தோப்பூரில்’ அமையவுள்ள எம்ய்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை வெறும் ரூ 7.89 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக” மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் ‘பிரதம மந்திரி ஆரோக்கிய நலவாழ்வு திட்டம் (PMMSY)’ அமைப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் மற்ற எம்ய்ஸ் மருத்துவமனைகளுக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், அவற்றின் பணிகள் துரிதமாக நடைபெறுவதும், மதுரை தோப்பூர் எம்ய்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் அறிவிக்கப்பட்ட மொத்த நிதி குறைவாகவும், அதைவிட சொற்பமான அளவிலேயே தற்போதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், கட்டுமான பணிகள் சுத்தமாக நடைபெறாததும் வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.

2015-16-ம் நிதியாண்டு பட்ஜெட்டிலேயே மதுரை எம்ய்ஸ் அமைப்பதற்கான ஒப்புதல் அறிவிக்கப்பட்டாலும், மதுரையில் எங்கு அமைப்பது என்ற குழப்பத்தாலும் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றில் ஏற்பட்ட சிக்கலாலும், கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 224 ஏக்கர் நிலப்பரப்பில் தோப்பூரில் எம்ய்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அப்போது அவர் “ரூ 1264 கோடி செலவில் நவீன கருவிகள், கட்டமைப்பு வசதிகள், 750 படுக்கைகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சகிச்சை அளிக்கக்கூடிய இம்மருத்துவமனை, 45 மாதத்திற்குள் (அதாவது 2022 அக்டோபருக்குள்) கட்டிமுடிக்கப்பட்டு மருத்துவ சேவைக்காக நாட்டு மக்களுக்கு அர்பணிக்கப்படும்” என்று தமிழக மக்களுக்கு அறிவித்தார்.

ஆனால் மதுரை எம்ய்ஸ் மருத்துவமனைக்கு மட்டும், பிற எம்ய்ஸ் மருத்துவமனைகளுக்கு செய்ததைப் போல மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்யாது; வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மூலமாக கடனுதவி பெறப்பட்டு இந்த மருத்துவமனை அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அந்தக் கடனுதவியைத் தர, ஜப்பான் நாட்டின் நிறுவனமான ஜிகா (JICA – Japan International Cooperation Agency) என்ற நிறுவனம் முன்வந்தது.

அடிக்கல் நாட்டியவுடன் தோப்பூரில் மத்தியக் குழுவின் மண் பரிசோதனை, ஜிகா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழுவின் ஆய்வு என கடந்தாண்டு வேகமாக வேலைகள் சிறிது காலம் நடைப்பெற்றன. அதன்பிறகு மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான பிரம்மாண்ட சுற்றுச்சுவர் அமைப்பது, துணைமின் நிலையம், குடிநீர் வசதி ஏற்படுத்துவது, மருத்துவமனை அமையவுள்ள இடத்தைச் சுற்றி நான்குவழிச் சாலைகள் அமைத்து மாநில நெடுஞ்சாலையாக தரம்உயர்த்தும் பணிகள் மேற்கொள்வது ஆகியவற்றிற்காக 21.20 கோடி ரூபாய் செலவுசெய்யப்பட்டு இப்பணிகள் ஓரளவிற்கு முடிவுப்பெற்றுள்ளன. மருத்துவமனை அமையவுள்ள இடம் பெங்களூரு – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் 3.5 கி.மீ தொலைவிலேயே உள்ளதால் சாலையை தரம் உயர்த்தும் பணி அவசியமாகிறது.

ஆனால் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் மட்டும் இன்னும் எந்த கட்டிட கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படாமல், வெறும் பொட்டல் காடாகவே அப்பகுதி காட்சியளிக்கிறது. இதற்குக் காரணமாக சொல்லப்படுவது “ஜிகா நிறுவனம் அதிகாரிகளோடு வந்து ஆய்வு செய்ததோடு சரி, இன்னும் மருத்துவமனை கட்டுமான பணிக்காக ஒரு ரூபாய்கூட கடனாக நிதி அளிக்கவில்லை” என்பதே. மத்திய அரசு மட்டும் மிக மிக குறைவாக 7.84 கோடி ரூபாய் மட்டும் கட்டுமான பணிக்காக நிதி ஒதுக்கியுள்ளது; ஆனால் அதுவும் இன்னும் செலவு செய்யப்படவில்லை என்பதே உண்மை நிலவரம்.

இந்திலையில் இந்தாண்டு மார்ச் மாதம் மதுரை வந்த, ‘சுகாதாரத்துறை ஒன்றிய இணையமைச்சர் அஸ்வின் குமார் சௌபே’, மத்திய அரசிற்கும் – ஜப்பான் நிறுவனத்திற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் செப்டம்பர் மாதத்தில் கையெழுத்தாகும் என்றும், பிறகு கட்டுமான வேலைகள் வெகு விரைவாக மேற்கொள்ளப்பட்டு 2022 செப்டம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் சமீபத்தில் ஆகஸ்ட் மாதத்தில் திரு.பாண்டியராஜா என்ற தென்காசியைச் சேர்ந்த சமூக ஆர்வலரால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், “கொரோனா பெருந்தொற்று காரணமாக இன்னும் ஜிகா நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை” என்றும்; இந்தாண்டு டிசம்பர் மாதத்தில்தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றும் பதில் அளித்துள்ளது.

மேலும் இந்த ஆர்.டி.ஐ-யின் கீழ் பதில் தந்துள்ள எம்ய்ஸ் மருத்துவமனை தலைமை நிர்வாகம், “தமிழக அரசு தோப்பூரில் மருத்துவமனை கட்டுமானத்திற்காக ஒதுக்கிய 224 ஏக்கர் நிலத்தை இதுவரை அதிகாரபூர்வமாக மத்திய அரசின் பெயருக்கு மாற்றித் தரவில்லை” என்றும்; அதனாலேயே பணிகள் துவங்குவதில் தாமதம் நிகழ்வதாகவும், “அதே நேரத்தில் எம்ய்ஸ் மருத்துவமனைக்கான தனிச்சிறப்பு நிர்வாக முகமை (Executive Agency) மதுரையில் இன்னும் அமைக்கப்படவில்லை” என்றும் மாறுபட்ட தகவலைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதமரும் சுகாதராத்துறை இணையமைச்சரும் அறிவித்தது போல, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு இன்னும் 23 மாதங்களிலே உள்ள நிலையிலும், ஜப்பான் நிறுவனம் டிசம்பரில்தான் கடனுதவு அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், குறிப்பிட்ட காலநேரத்திற்குள் மதுரை தோப்பூர் எம்ய்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டு, மக்கள் சேவைக்கு வருமா? என்ற மிகப்பெரிய ஐயம் எழுந்துள்ளது.

சுற்றுவட்டார பகுதி மக்களின் கருத்துகள்:

இதுதொடர்பாக மதுரை தோப்பூர் அருகிலுள்ள மறவாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,

“மதுரை தோப்பூரில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைவதாக அறிவித்தபோது அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியும் மனநிம்மதியும் அடைந்தனர். ஏனெனில் மதுரை இராஜாஜி அரசுப் பொதுமருத்துவமனையில் அளவுக்குமேல் பெருமளவு மக்கள் சிகிச்சைக்காக வருவதால் போதிய இடவசதி இன்றி பாய்களில் எல்லாம் நோயாளிகள் படுக்க வைக்கப்படுகின்றனர்.”

மேலும் “எம்ய்ஸ் போன்ற மருத்துவமனை அமைவதால் தனியார் மருத்துவமனைகளைவிட பலமடங்கு குறைந்த கட்டணத்தில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை கிடைக்க வாய்ப்பிருப்பதால் இதை அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதினர். ஆனால் அறிவித்த பின் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாக ‘கிணற்றில் போட்ட கல்’ போன்று கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது” என்று தெரிவித்தார்;

மேலும், “எம்ய்ஸ் மருத்துவமனை அறிவித்தபின், தோப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டமும் வர்த்தகமும் கூடும் என்பதால் பலர் சிறு தொழில்கள் தொடங்கினர். சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிலங்கள் 2 மடங்குவரை விலை கூடியது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மதுரையில் எம்ய்ஸ் போன்று உயர்தர மருத்துவமனை அமைவது, சென்னைக்கு அடுத்து மருத்துவத் தலைநகராக மதுரையை உயர்த்தும் தன்மை கொண்டது. ஆனால் அறிவித்து 5 ஆண்டுகள் கடந்த பின்பும், அடிக்கல் நாட்டப்பட்டு வரும் ஜனவரி மாதத்துடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும், குறிப்பிடத்தக்க எந்தப் பணிகளும் நடைபெறாமல் இருப்பதும், மற்ற மாநிலத்து எம்ய்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு, தமிழகத்திற்கு மட்டும் வெளிநாட்டு கடனுதவி பெற்று மருத்துவமனை கட்டுவதும், மத்திய அரசின் தமிழகத்தின் மீதான மாற்றந்தாய் மனப்பான்மையைக் காட்டுவதாகவே அமைகிறது.

மேலும் மத்திய அரசு எம்ய்ஸ் தமிழ்நாட்டில் அமைப்பதாக அறிவித்த இடைப்பட்ட இந்த 5 ஆண்டுகளில், தமிழக அரசின் சார்பில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டிமுடிக்கப்பட்டு, அதில் 3-ல் ஏற்கனவே மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருவதும், இந்தாண்டுமுதல் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதும், 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டை தமிழக அரசு எடுத்துக்கொண்டு சேர்க்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

– சீ. நவநீத கண்ணன்
(கட்டுரையாளர் மருத்துவ இளநிலை மாணவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்