Aran Sei

லட்சுமி விலாஸ் வங்கி : இலாபம் தனியாருக்கு, இழப்பு மக்களுக்கா ?

வாராக் கடன் மற்றும் மூலதன நெருக்கடி காரணமாக தத்தளித்து வரும் லட்சுமி விலாஸ் வங்கியை, அடுத்த ஒரு மாதத்திற்கு தற்காலிக கட்டுப்பாடுகளின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இக்காலகட்டத்தில் ஒரு வாடிக்கையாளர் தன் கணக்கிலிருந்து ரூ.25000/- மட்டுமே எடுக்க முடியும். லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகியாக அடுத்த ஒரு மாத காலத்திற்கு, கனரா வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் திரு.டி.என்.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் சேமிப்புகளை வங்கிகளில் வைத்திருக்கும் பொதுமக்களின் மனதில், வங்கிகளின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி முடக்கம் – வெளிநாட்டு வங்கிக்கு விற்க திட்டம்

வாசகர்களை பல அரிய புள்ளி விவரங்களைக் காட்டி குழப்ப விரும்பவில்லை. தற்போது லட்சுமி விலாஸ் வங்கியின் பிரச்சனை என்னவென்றால் பெரிய கடன்களை வாங்கிய பெருமுதலாளிகளில் சிலர், தாம் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை. அது எந்த அளவிற்கு வந்து விட்டதென்றால் கிட்டத்தட்ட வங்கி கொடுத்த ஒவ்வொரு நூறு ரூபாய் கடன் தொகையிலும் இருபத்தி ஐந்து ரூபாய் வாராக் கடனாகிவிட்டது. அதாவது மொத்த கடனில் நான்கில் ஒரு பகுதியை நாமம் போட்டு விட்டனர், நம் பிரதமர் மோடியின் நேசத்திற்குரிய கனவான்கள்.

இந்தியாவின் 16 மாநிலங்களில், மொத்தம் 569 கிளைகளுடன் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த லட்சுமி விலாஸ் வங்கியை, மூடுவிழா நடத்தி முடித்து வைத்ததில் ரிலிகேர் குழுமம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், காக்ஸ் மற்றும் கிங்ஸ் நிறுவனம், நீரவ் மோடி, காபி டே நிறுவனம், ரிலையன்ஸ் வீட்டுவசதி நிதி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியவை. இந்த பட்டியலில் காபி டே நிறுவனர் தற்கொலை செய்துகொண்டார். நீரவ் மோடி வெளி நாட்டிற்கு தப்பிவிட்டார். ரிலையன்ஸ் வீட்டுவசதி நிறுவனத்தின் நிறுவனர் அனில் அம்பானி வங்கிகள் போட்ட வழக்குகளில் ஒவ்வொரு நீதி மன்றமாக சென்று திவால் நோட்டிஸ் கொடுத்து வருகிறார். இவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்துவிட்டு, இந்த வங்கி, இவ்வளவு காலம் தாக்கு பிடித்து செயல்பட்டதே பெரும் அதிசயம்தான்.

வங்கிகள் தேசியமயத்திற்கு பிறகு நெருக்கடியை சந்தித்து, மூடப்படும் 39-வது தனியார் வங்கி இதுவாகும். கடந்த மார்ச் மாதம் யெஸ் வங்கிக்கு கட்டுப்பாடுகள் விதித்து, பின் ஸ்டேட் வங்கியும் எல்ஐசி நிறுவனமும் முதலீடு செய்து யெஸ் வங்கியை மீட்டது நினைவிருக்கலாம். கடந்த 50 வருடங்களில் ஒரு பொதுத்துறை வங்கி கூட இவ்வித பிரச்சனையை சந்தித்ததில்லை என்பது கூடுதல் செய்தி.

சரி, என்னதான் நடந்து கொண்டிருக்கிறது வங்கிகளில்?
ஏன் வங்கிகளில் நெருக்கடியில் தவிக்கின்றன??
சேவைக்கு கட்டணம் என்கிற பெயரில் வாடிக்கையாளர்களை சுரண்டுகின்றன???

என நம் கண்முன் எழும் சர்வ கேள்விகளுக்கும் ஒரே பதில் வாராக்கடன் தான். பொதுத்துறை வங்கிகளின் பிரதான பிரச்சனை வாராக் கடன்கள் தான். ஒரு கடன் 90 நாட்களுக்கு மேல் எந்த வருவாயையும் ஈட்டவில்லையெனில் அது வாராக் கடன் எனப்படும். சரி திவாலாகும் அளவிற்கு யாருக்குதான் இவ்வளவு கடன் கொடுத்து உதவியிருக்கின்றன வங்கிகள் என்றால், மொத்த வாராக் கடனில் 84% கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களே. எந்த ஒரு பெரு நிறுவனத்திற்கும் பெரும் கடன்களை இயக்குனர் குழு ஒப்புதலின்றி வழங்கிட இயலாது. எனவே அரசுக்கு தெரியாமலோ, அரசின் அதிகாரக் குறுக்கீடு இன்றியோ பெரிய கடன்கள் கொடுக்கப்பட வாய்ப்பில்லை. அப்படி கொடுக்கப்பட்ட கடன்கள் தான் வாராக்கடன்களாக மாறுகின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டதின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, 2014 முதல் 2019 வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக இந்திய வங்கிகள் ரூ 6.35 லட்சம் கோடி மதிப்புள்ள வாராக் கடன் தொகையை தள்ளுபடி செய்துள்ளன. வங்கிகள் தங்கள் நிதி அறிக்கைகளை மேம்படுத்துவதற்காகவும், வரிச் சுமைகளை குறைப்பதற்காகவும் வாராக் கடன்களை தமது கணக்கிலிருந்து நீக்குகின்றன. இதையே தள்ளுபடி என்று சொல்கிறோம். பின்னர், அந்தக் கடன்களிலிருந்து ஏதெனும் தொகை வசூலிக்கப்பட்டால், அத்தொகை இலாபமாக சேர்க்கப்படும்.

ரிசர்வ் வங்கி வழங்கிய தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் கிட்டத்தட்ட 90% கடன்கள் ஒருபோதும் வசூலிக்கப்பட்டதில்லை என்பது தெரிய வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரான கே சி சக்ரவர்த்தி, கடன் தள்ளுபடி செய்யும் நடவடிக்கையை ஒரு மோசடி என்று விவரித்துள்ளார். இவ்வாறு தள்ளுபடி செய்யப்படும் கடன்களில் பெரும்பாலானவை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் பெரிய கடன்களே என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

திவாலான குளோபல் டிரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் என்கிற பொதுத்துறை வங்கியால் மீட்கப்பட்டது. காரட் வங்கியை, பாங்க் ஆப் இந்தியா வங்கியும், யுனைடெட் வெஸ்டர்ன் வங்கியை, ஐடிபிஐ வங்கியும் மீட்டது. இவ்வாறு நெருக்கடிக்குள்ளாகும் தனியார் துறை வங்கிகள் அனைத்தும் பொதுத்துறை வங்கிகளால் மீட்கப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கிதான் யெஸ் வங்கியை மீட்டது. ஒருபுறம் அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறை நிறுவனங்களுக்கு மீட்பராகப் பயன்படுத்துகிறது, மறுபுறம் பொதுத்துறையை தனியார்மயமாக்குவதற்கு முயல்கிறது. இந்த நடவடிக்கைகளை “இழப்புகளை தேசியமயமாக்குதல் மற்றும் இலாபங்களை தனியார்மயமாக்குதல்” எனலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ல் இருந்து 1968 வரையிலான காலகட்டத்தில் ஏறக்குறைய 736 தனியார் வங்கிகள் செயல்பட முடியாமல் திவாலாகி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சேமிப்பை இழக்கும் அவலநிலை ஏற்பட்டது. 1969 வங்கிகள் தேசியமயமாக்கலுக்கு பின்னர், நஷ்டத்தில் சென்ற அனைத்து தனியார் வங்கிகளும் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டுதான் மக்களின் பணம் காப்பாற்றப்பட்டது. தேசியமயமாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை மக்களின் பணம் ஓரு ரூபாய் கூட நஷ்டம் என்றோ, திவால் என்றோ வங்கிகளால் அபகரிக்கப்படவில்லை.

எனவே அனைத்து தனியார் வங்கிகளையும் அரசுடமையாக்க வேண்டும். மோசடி செய்த தனியார் வங்கி நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்கு தொடர்ந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாராக் கடன்களை வசூல் செய்ய கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இவையாவும் செய்தால் ஒழிய வங்கித்துறையை சரிவில் இருந்து காப்பாற்ற இயலாது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்