Aran Sei

பொலிவியாவின் புதிய அதிபர் லூயி ஆர்சே – பொருளாதார வளர்ச்சியின் சிற்பி

மீபத்திய தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த மாதம் பொலிவியா நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்கிறார் பொருளாதார வல்லுநரான லூயி ஆர்சே.

பொலிவியா தேர்தல் – ‘ ஈவோ மொரேல்சுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு தோற்கடிக்கப்பட்டது ‘

லூயி ஆர்சே-ன் அரசியல் பார்வையின் மீது ஈவோ மொரேல்சின் சோசலிசத்தை நோக்கிய இயக்கம் (MAS) கட்சி செல்வாக்கு செலுத்தியது என்கிறது ராய்ட்டர்ஸ் கட்டுரை.

”என் பதினான்காவது வயதில் காரல் மார்க்ஸைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதிருந்து என் அரசியல் கொள்கைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இனியும் அதை மாற்றிக்கொள்ள மாட்டேன்.” என்கிறார், லூயி ஆர்சே.

பொலிவியாவின் முன்னாள் அதிபர் ஈவோ மோரலஸின் கீழ் நிதியமைச்சராக இருந்த லூயிஸ் ஆர்ஸ், பத்தாண்டுகளுக்கு மேலாக நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்திச் சென்றிருக்கிறார். கடந்த ஆண்டு , பொய்யான தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளால் ஈவோ மோரல்ஸ் பதவி விலகி நாட்டை விட்டே வெளியேற நேர்ந்தது.

தென் அமெரிக்காவின் மிகவும் வறுமையான நாடு என்று பெயர் பெற்றிருந்த பொலிவியாவை, ஈவோ மொரேல்ஸ் ஆட்சியின் போது நிதி அமைச்சராக இருந்த லூயி ஆர்சே வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச்சென்றார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். மேலும் லூயி ஆர்சேவை `பொலிவியா வளர்ச்சியின் சிற்பி’ என்று அழைக்கின்றார்கள்.

பொருளாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, நாட்டின் இயற்கை வளங்கள் உள்ளிட்டு பல துறைகளை நாட்டுடமையாக்க முயற்சி செய்தார். இது முதலீட்டாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தினாலும், நாட்டு மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தி பொருட்களுக்கான தேவையை அதிகரித்தது. இது பொலிவியாவின் சராசரியான ஆண்டு வளர்ச்சியை 4.6 சதவீதமாக உயர்த்தியது. இந்த வளர்ச்சி லத்தீன் அமெரிக்க நாடுகளில் இதுவரை நிகழாத சிறந்த வளர்ச்சியாகும் என்கிறது ராய்ட்டர்ஸ் கட்டுரை.

லூயி ஆர்சே, லா பாஸில் உள்ள நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பொலிவியாவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான மேயர் சான் ஆன்ரெஸ் பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்திலும் பொருளாதாரம் பயின்றவர் என்கிறது ராய்ட்டர்ஸ் கட்டுரை.

கொரோனா தொற்றுநோயின் தாக்கம் பொலிவியாவில் இந்த ஆண்டு 6 சதவீதப் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று உலக வங்கிகள் கணிப்பு தெரிவித்தன. மொரேல்ஸின் ஆட்சியின் கீழ் கூட, எரிவாயு ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு இருப்புகள் குறையத் தொடங்கின.

நாட்டில் செலவினங்களில் சில சிக்கன நடவடிக்கைகள் தேவைப்படும் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், பொது செலவினங்களுக்கான தொகையைக் குறைக்க மாட்டேன் என்று லூயி ஆர்சேஉறுதியளித்துள்ளார். பொலிவியாவின் வளர்ச்சியின் ராஜபாட்டை முடிவடையவில்லை என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

“எங்களால் பல்வேறு வழிகளில் செயல்பட்டு, அதில் சாதித்துக்காட்ட முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்துக்காட்டியுள்ளோம்.” என்று லூயி ஆர்சே தெரிவித்தார்.

ரிச்சர்ட் வுல்ஃப் என்ற அமெரிக்கப் பொருளாதாரவியல் அறிஞர், “பொலிவிய வாக்காளர்கள் 20% வாக்கு வித்தியாசத்தில் ஒரு சோசலிச அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். லூயி ஆர்சே பெற்ற இந்த வாக்குகள் சென்ற ஆண்டு ஈவோ மொரேல்சுக்கு எதிராக நடத்தப்பட்ட வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை  நிராகரித்திருக்கிறது.

அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையேயான பிரச்சனைக்கு எதிர்வினையாக பொலிவியா சோசலிசத்துக்கு வாக்களித்துள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார்.

தற்போது அர்ஜென்டினாவில் வாழ்ந்து வரும் ஈவோ மொரேல்ஸ், “சகோதர சகோதரிகளே, மக்களின் விருப்பம் நிலைநாட்டப்பட்டுள்ளது. MAS-IPST-க்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. நமது அரசியல் இயக்கத்துக்கு இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இப்போது நாம் மக்களின் கௌரவத்தையும் சுதந்திரத்தையும் மீட்கப் போகிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்