Aran Sei

ஊரடங்கு நீக்கம் – அரசு செய்ய வேண்டியது என்ன?

நன்றி : https://indianexpress.com

ந்தியப் பிரதமர் மோடி மார்ச் 24 அன்று 3 வார ஊரடங்கை முதல் முறையாக அறிவித்தார். அன்று முதல் பல முறை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் மத்திய அரசாலும், மாநில அரசுகளாலும் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாத இறுதியிலும் ஊரடங்களு தளர்வு பற்றிய அறிவிப்புகள் வெளி வருவது வாடிக்கையாகி விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அக்டோபர் மாதம் பிறக்கவிருக்கும் சூழ்நிலையில் என்னென்ன மாற்றங்கள் பொருளாதார மீட்சிக்கு தேவையாக உள்ளது என்று பார்ப்போம்.

வாகனப் போக்குவரத்து தொடக்கம், இபாஸ் முறை ரத்து, மெட்ரோ ரயில் தொடக்கம் என்று பல தளர்வுகள் சென்ற மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது. என்றாலும் பேருந்தில் பயணம் செய்வதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டு இருக்கைகள் கொண்ட பேருந்தில் ஒரு இருக்கை விட்டு ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதன் காரணமாக அதிகபட்சமாக ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்ப முடியும். இவ்வாறு ஒரு பேருந்தினை இயக்கினால் நட்டம் தான் வரும் என்று கருதி தனியார் ஆம்னி பேருந்துகள் இன்னும் தமது இயக்கத்தை தொடங்கவில்லை.

முதலில் விமான சேவை தொடங்கிய பொழுது இதைப் போன்ற கட்டுப்பாடுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. ஆனால் அவ்வாறு விமானத்தை இயக்க முடியாது என்று விமான நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தன. அதனை ஏற்று அது போன்ற கட்டுப்பாடுகளை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இப்பொழுது விமானத்தில் அனைத்து இருக்கைகளையும் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அது போன்ற தளர்வுகளை ஆம்னி பேருந்துகளுக்கும் வழங்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பல மேலை நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. அதன்படி மத்திய அரசும் ஒன்பதாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளையும் மாநில அரசுகள் திறந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் தனது அறிவுரையாக வழங்கியுள்ளது. அதனை ஏற்று ஆந்திரம், டெல்லி, உத்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் போன்ற மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகள் இந்த வாரம் முதல் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் அக்டோபர் மாதம் முதல் பள்ளிகள் திறப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அனைத்து வகுப்புகளும் திறக்கப்படா விட்டாலும் ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் திறப்பதற்கு வாய்ப்புள்ளது. கல்லூரிகளும் படிப்படியாக திறக்கப்படலாம். கல்லூரிகளில் அரியர் தேர்வு தேர்ச்சி பற்றிய பல குழப்பங்கள் இன்னும் உள்ளன. இதைப் பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் உள்ளது. இதற்கு விரைவாக தீர்வினைக் கண்டு கல்லூரிகளை திறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

மேலும் திரைத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு இந்த மாதத்தில் அனுமதித்துள்ளது. என்றாலும் பெரிய நட்சத்திரங்களின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத சூழ்நிலையே நிலவுகிறது. திரையரங்குகளை நம்பி பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திரையரங்குகளை திறப்பது தான் அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்பதற்கு வழிவகுக்கும். அதனால் அக்டோபர் மாதம் முதல் திரையரங்குகளை திறக்க அனுமதிப்பது பொருளாதார செயல்பாடுகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான முக்கியமான தேவையாக உள்ளது.

மேலும் பல பெரிய ஷாப்பிங் மால்கள் திறப்பதற்கு தமிழக அரசு இந்த மாதம் முதல் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அந்த மால்களில் இன்னும் திரையரங்குகள் மட்டும் திறக்கப்படவில்லை. மால்களுக்கு பெரும்பாலும் வருபவர்கள் திரைப்படம் பார்ப்பதற்காகவே வருவார்கள். அவ்வாறு அவர்கள் வரும்பொழுது பார்க்கிங் முதல் ஷாப்பிங் வரை செய்து விட்டுச் செல்வார்கள். அதன் மூலம் மால்களுக்கு வருமானம் கிடைத்தது. இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் பெருவாரியான மால்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை போன்ற வார இறுதி நாட்களில் கூட மக்கள் கூட்டம் குறைவாக இருக்கிறது.அதனால் திரையரங்குகளை திறப்பது மால்களில் உள்ள பல கடை உரிமையாளர்களின் தேவையாகவும் உள்ளது.

எனவே, அரசு திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்பது பொதுவான தேவையாக உள்ளது.

மேலும் வெளி நாடுகளுக்கு முழுமையான விமான சேவை இன்னும் திறக்கப்படவில்லை. வந்தே பாரத் என்ற மத்திய அரசின் திட்டத்தின் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டாலும் முழுமையான விமான சேவை தொடங்காதது பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அதனால் முழுமையான விமான சேவை தொடங்க அனுமதிப்பது விமான நிறுவனங்களும் அதனைச் சார்ந்து வாழும் பிற நிறுவனங்களும் இயல்பான செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவை.

மேலும் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்து கொள்வதில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால் திருமணத்தை சார்ந்து தொழில் புரிந்து வரும் திருமண மண்டபங்கள், அழகு நிலையங்கள், மெல்லிசை கச்சேரி நடத்துபவர்கள், திருமண கேட்டரிங் நடத்துபவர்கள் போன்ற பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த கட்டுப்பாடுகளில் அரசு என்ன மாதிரியான தளர்வுகள் வெளியிட போகிறது என்று காத்திருக்கின்றனர்.

மேலும் கடைகள் அனைத்தும் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் நடைமுறையில் உள்ளது. இதில் மேலும் தளர்வுகள் செய்வது என்பது வணிகர்களுக்கு அவசியமாக உள்ளது.

மேலும் பேருந்து சேவை இரவில் தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் வார இறுதி நாட்களில் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்கள் இரவு நேரத்தில் பயணம் செய்வது அவசியமாக உள்ளது. இந்த இரவு பிரயாணத்திற்கு உள்ள தடையானது பலருக்கு பிரச்சனையாக உள்ளது. இதில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் சங்கிலித்தொடர் கொண்ட சக்கரம் போன்றதாகும். அனைத்து சங்கிலிகளும் முழுமையாக இயங்காமல் முழுமையான பொருளாதார இயக்கத்தை அடைய முடியாது.

என்றாலும் கொரோனா நோய்த் தொற்று பரவலிலிருந்து இன்னும் முழுமையாக நாம் விடுபடவில்லை. தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்கள் மனதில் கொரோனா குறித்த அச்சம் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

அதனால் எல்லா விஷயங்களையும் கருத்தில் கொண்டு அரசு வெளியிடவிருக்கும் அறிவிப்புகள் பொருளாதார செயல்பாடுகளை மீட்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன.

– ஷ்யாம் சுந்தர்
(கட்டுரையாளர் ஐ.டி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உடையவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்